பனை
ஒரு தொடக்கப்பள்ளியின் ஒரே ஆசிரியர் மற்றும் தலைமையாசிரியர் அகரவேலன். அன்று காலை பள்ளிக்குள் நுழைகிறார். “என்னங்கடா எல்லாரும் வந்தாச்சா” என ஒரே வாக்கியத்தில் வருகைப்பதிவேட்டை நிறைவு செய்கிறார். “பனையடியான் மட்டும் வரலைய்யா” என இளமாறன் என்ற மாணவன் உரக்கச் சொல்கிறான். “என்னடா ஆச்சு அவனுக்கு” என்கிறார். “அவுங்க அப்பா நொங்கு வெட்ட பனையில ஏறுறப்ப கீழே விழுந்து செத்துட்டாருங்கய்யா” என்றான் இளமாறன். சில நொடிகள் மௌனம் காத்த அகரவேலன் “இன்னைக்கு உங்களுக்கெல்லாம் லீவுடா… கிளம்புங்க” என்றார்.
பனையடியான் வீட்டுப்பக்கம் சென்ற அகரவேலனை அப்பகுதியில் பனைகளைக் குத்தகைக்கு எடுத்து வேலைபார்க்கிற வேங்கையன் கைகூப்பி வரவேற்கிறார். “வாங்க பனைவாத்தியரே! (அப்படித்தான் எல்லோரும் அகரவேலனை அழைப்பர்!) பண்ணையார் வீரமணி பேத்திக்கு வேர்க்குரு நிறைய இருக்கிறதால நொங்குத்தண்ணி வேணும்னு சொல்லி அனுப்புச்சாங்க. நான்தான் மருதமுத்துவ கூப்பிட்டு பனையேறச் சொன்னேன். தவறி விழுந்திட்டாங்க. கதறி அழுகிற பவளக்கண்ணிக்கும் அவ புள்ளைக்கும் எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியல. காவனம் (வீட்டின்முன் இடப்படும் கொட்டகை) போடக்கூட தென்னந்தட்டி இல்லை. இப்பதான் ரெண்டுபேரை அனுப்பியிருக்கேன்” என்றார். உடனே அகரவேலன் “தட்டி எல்லாம் எதுக்கு நம்ம ஊருக்கு. பனை ஓலைய வேஞ்சிற வேண்டியதுதானே. ஊர்ல இருக்கிற பனையை எல்லாம் குத்தகைக்கு எடுத்திருக்கிய. எதுக்கு ஊர் ஊரா அலையிறீய” என்றார். அதனைக்கேட்ட வேங்கையன் தன் ஆட்களை நோக்கி “டேய்… அவனுக பக்கமாதான் போயிருப்பாங்கே, வரச்சொல்லு. செங்கல் சூலைக்கி அனுப்பவச்சுருக்கிற லோடுல இருந்து ஓலைகளையும் சட்டங்களையும் எடுத்திட்டு வாங்கடா” என்றார். எல்லாக்காரியமும் செய்து அடக்கம் செய்துவிடுகின்றனர்.
அகரவேலன் ஆரம்பிக்கின்றார். “என்ன வேங்கையா! மருதமுத்து குடும்பத்துக்கு என்ன பண்ணலாமுன்னு நினைக்கிறே” என்று சொல்லிமுடிப்பதற்குள் “என்ன சார் இப்படிக் கேட்டுட்டீங்க! பவளக்கண்ணி என் தங்கச்சி மாதிரி. என்கிட்டதான் பதிநீ (பதநீர்) வாங்கிட்டுபோய் பக்கத்து ஊரெல்லாம் வித்திட்டு வருது. அதுக்கும் அது புள்ளைக்கும் நான் செய்யாம வேற யாரு செய்யிறது” என்ற வேங்கயனிடம் “பனையடியான் நல்லாப் படிக்கிறபய. அவன் நல்லா படிச்சு ஒரு வேலையைப் பாத்துட்டான்னா அதுவே போதும். அதுக்கு வழி பண்ணு” என்றார். “நான் பாத்துக்கிறேன் சார்” என்ற வேங்கையனிடம் விடைபெற்றுச்சென்றார் அகரவேலன்.
நாட்கள் கழிகிறது. பனையடியானுக்கு அவன் தந்தையின் சாவு சிந்தனையைத் தூண்டுகிறது. பனையில இருந்து கீழே விழுந்து இறந்ததால்“பனை” என்ற சொல்லைக்கேட்டாலே கோபம்கொள்ள ஆரம்பித்தான். நேராக அவன் அம்மாவிடம்போய் “எனக்கு ஏம்மா பனையடியான்னு பேரு வச்சீங்க” என்றவனிடம் பவளக்கண்ணி கோபமாகப்பார்த்துக்கொண்டே “மொதல்ல வாயில அடிச்சுக்கோ. அது நம்மகுலசாமி அய்யனாரு பேருடா. அப்படிலாம் சொல்லக்கூடாது. பனையை நம்பித்தான்டா நம்ம ஊரே இருக்கு” என்றாள். ஆனாலும் அவன் மனம் சமாதானமாகவில்லை.
ஒருநாள் வகுப்பறையில் அகரவேலன் அறிவியல் தமிழை அழகுற நடத்தியபின் இளமாறனைப் பார்த்து கேள்வி கேட்கிறார். “பனையோட பயன்கள் என்னனு சொல்லுடா பார்க்கலாம்” என்றார். வகுப்பிலேயே குறும்புக்காரன் இளமாறன்தான். அவன் என்ன சொல்வான் என்றுதான் வகுப்பறையே வேடிக்கை பார்க்கும், அகரவேலன் உட்பட. “அய்யா! நீங்க எடுக்கிற பாடத்தோட சூட்டைத்தணிக்க நொங்கு சாப்பிடத் தருது. நல்லா செரிமாணமாக கிழங்கு தருது. சுட்டு சாப்பிட பனங்காய் தருது. சாப்பிட்ட பின்னாடி அதுநம்ம பனையடியான் மண்டை மாதிரி ஆயிடுது” என்றான் இளமாறன். அவ்வளவுதான்…இளமாறன் கன்னத்தில் பளாரென்று அறைந்துவிட்டான் பனையடியான். உடனே ஓ!வென அழ ஆரம்பித்தான் இளமாறன். “சரி விடுடா…அவனே அவன் அப்பன் செத்த துக்கத்திலே இருக்கான். இப்பபோய் கேலிபண்ணலாமா?” என்ற அகரவேலன் பனையடியனைப் பார்த்து “டேய் மொதல்ல இளமாறன்ட்ட மன்னிப்பு கேளுடா” என்றார். பனையடியான் இளமாறனிடம் “என்னை மன்னிச்சுருடா. எதோ ஒரு வேகத்துல அடிச்சுட்டேன்டா” என்றான். “சரி..சரி.. தொலைஞ்சுபோ, அய்யா சொன்னதால சும்மாவிடுறேன் உன்ன” என்றான் இளமாறன் சிறிது கோபத்துடன்.
வகுப்பு முடிந்ததும் அகரவேலன் பனையடியானை அழைக்கிறார். “சாயங்காலம் வீட்டுக்குப் போறப்போ, என்கூட வாடா. உன்னோட வீடு நான் போற வழியிலதானே இருக்கு” என்றவரிடம் “ஆமாங்கய்யா” என்றான் பனையடியான். இருவரும் சேர்ந்து செல்கின்றனர். பனையடியானைப் பார்த்து “இந்தாடா..சக்கரத்துல காத்து கொஞ்சமா இருக்கு. இந்த சைக்கிளைத் தள்ளிட்டு வா! பேசிட்டே போகலாம்” என்றார் அகரவேலன். பிறகு சிறிதுதூரம் கழித்து அகரவேலனிடம் “அய்யா உங்ககிட்ட ஒன்னு கேட்கலாமா?” என்ற பனையடியானைப் பார்த்து “தயங்காமக் கேளுடா” என்றார். “உங்கள ஏங்கய்யா எல்லாரும் பனைவாத்தியாருன்னு கூப்பிடுறாங்க. பள்ளிக்கூடத்துல அதிகமா பனையைப் பத்தியே பேசுரதாலயா?” என்ற பனையடியானிடம் சிரித்துகொண்டே “அடப்போடா..ஊர்ல இருக்கிற பெரிசுக எல்லாம் எங்கடா பள்ளிக்கூடம் வந்துச்சுக. பெரிசுககளுக்குத் தெரிஞ்ச கதை உன்னை மாதிரி பொடியன்களுக்கு தெரியாது. சொல்லுறேன் கேளு” என்று தன் கதையை ஆரம்பித்தார் அகரவேலன்.
“எனக்கு சின்னவயசுல இருந்தே பனைமேல ஒரு விருப்பம்டா. அதைப்பத்தின ஆய்வுக்கட்டுரைகள்கூட எழுதி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியிருக்கேன்டா. நல்லா படிச்சவங்கிறதால நம்ம பண்ணையாரு வீரமணி அவரோட மூத்தபொண்ணு கலையரசியைக் கல்யாணம் பண்ணிவச்சாரு. சீர்வரிசைகூட எனக்கு பனையில செஞ்சதாத்தான் இருக்கணும்னு சொல்லிக் கேட்டுவாங்கினேன்டா. படுக்குற பாயில இருந்து, விசிறி, சொளகு (முறம்), வெத்தலைப்பொட்டி, கடையப்பொட்டி, கூடை, குழந்தை பொறந்தா அதுக விளையாட பந்து, கிளுகிளுப்பை – இப்படி எல்லாமே பனையாலதான்டா. ஒருநாள் மத்தியானம் நல்லமழை. வீட்டுக்குப் பக்கத்துல வரிசையா இருந்த பனைகள்ல தூக்கணாங்குருவி அழகழகா கூடுகட்டியிருந்துச்சு. அடிக்கிற காத்து-மழைக்கு ஒரு குஞ்சு கீழே விழுந்துருச்சு. என்னோட கலையரசி இளகுன மனசுக்காரி. அதை எடுக்க பனைப்பக்கம் போனவ இடிவிழுந்து….என்னைத் தவிக்கவிட்டுட்டு போய்ட்டாடா (துக்கம் தொண்டையை அடைக்க சிறிது நேரம் கழித்துத் தொடர்ந்தார்). போய் பாத்தப்போ பனை கருகினமாதிரி என் கலையரசியும் கருகிட்டாடா. மகளோடவே எல்லாம் முடிஞ்சுபோச்சுன்னு சொல்லி பண்ணையாரும் உறவை முறிச்சுக்கிட்டாரு. இப்போ நான் தனிக்கட்டை” என்ற அகரவேலனிடம் “ஏங்கைய்யா! பனைக்குப் பக்கத்துல போனதாலதானே அவுங்க இறந்தாங்க. உங்களுக்கு பனைமேல வெறுப்பு வரலயா?” என அப்பாவியாகக் கேட்டான்.
அகரவேலன் புன்சிரிப்புடன் தொடர்ந்தார். அட மடையா! உங்கப்பன் பனையில இருந்து விழுந்ததால ஒனக்கு பனைமேல வெறுப்பு வந்தமாதிரி எங்கிட்ட கேட்கிறியா? அப்படியில்லடா. இடிவிழுந்ததுக்கு பனை என்னடா செய்யும்? அதுவுந்தானே கருகிப்போச்சு. பனையோட அருமை-பெருமை தெரியணும்னுதான்டா நான் அடிக்கடி அதைப்பத்தியே பள்ளிகூடத்துல சொல்லிட்டே இருக்கேன். நாம இன்னைக்கு இலக்கியம், இலக்கணம்னு படிக்கிறதுக்கே அந்தப் பனைதான்டா காரணம். பனை ஓலைகள்ல அன்னைக்கு எழுதிவைக்கலன்னா இன்னைக்கு சங்ககால இலக்கியங்கல்லாம் ஏதுடா? அவ்வளவு ஏன்…உலகப்பொதுமறையா இருக்கிற திருக்குறள் எப்படி நமக்குக் கிடைச்சிருக்கும். வள்ளுவரை ஓலையும் எழுத்தாணியுமாத்தானேபள்ளிகூடத்துல வரைஞ்சு வெச்சிருக்கோம். நம்ம தமிழ்மண்ணோட அடையாளம்டா அது” என்றார். பனையடியானுக்கு அன்றிலிருந்து பனையின்மேல் உள்ள கோபம் தணிகிறது.
சில வருடங்கள் கழித்து அகரவேலன் வீட்டு வாசலில் கார் வந்து நிற்கிறது. காரைக் கண்டவுடன் ஊர் கூடுகிறது. “அட நம்ம பண்ணையாரு பேத்தி கனிமொழி வந்திருக்கு. அது யாரு அந்தப்பக்கம், பனையடியான் மாதிரில்ல இருக்கு. மெட்ராசுக்கு போயில்ல படிச்சுட்டு வந்திருக்காக” எனப் பேசிக்கொள்கிறார்கள். வீட்டுக்குள்ளிருந்த அகரவேலனை ஒரு பொடியன் வெளியே அழைத்துவருகிறான். இருவரும் காலில் விழுந்து வணங்குகின்றனர். “நல்லா இருங்கப்பா. எனக்கு யாருன்னு தெரியலையே!”என்ற அகரவேலனிடம் “அய்யா! நான் பனையடியான் வந்திருக்கேன். ஐ.ஏ.எஸ். எழுதி பாஸ்பண்ணி கதர்கிராமத் தொழில்வாரியத்துக்கு ஆணையாளரா ஆகியிருக்கேன். நீங்க ஆசைப்பட்டமாதிரி பனைத்தொழிலை பாதுகாக்கிற வேலை. இது யாருன்னு தெரியுதா?” என கனிமொழியைக் கைகாட்டினான் பனையடியான். “நானே சொல்றேன்” எனக் கனிமொழி பேச ஆரம்பித்தாள். “பெரியப்பா! நான் உங்க கொழுந்தியா மக கனிமொழி. பண்ணையார் வீரமணியோட பேத்தி வந்திருக்கேன். உங்களைப்பத்தி பனையடியான் நிறையச் சொல்லுவான். எனக்கு நொங்குத்தண்ணி வேணும்னு பனையேறப்போயிதான் பனையடியான் அப்பா இறந்திட்டாரு. அது தெரிஞ்சும்கூட எங்கிட்ட அவன் நட்பா பழகுறதுக்கு உங்களோட வார்த்தைகள்தான் காரணம். நாங்க ரெண்டுபேரும் ஒன்னாதான் பரீட்சை எழுதினோம். நான் நம்ம மாவட்டத்துக்கு சப்-கலெக்டரா வரப்போறேன்” என்றாள். “ரொம்ப மகிழ்ச்சியா இருக்கும்மா. நம்ம மண்ணுக்கு நிறைய நல்லதுபண்ணுங்க, அது போதும்” என்ற அகரவேலனிடம் இருவரும் விடைபெற்று புறப்படுகின்றனர். சாலைகளின் ஓரத்தில் வரிசையாகக் காட்சி தரும் பனைகளைப் பார்த்தபடியே பழைய நினைவுகளுடன் பனையடியான் சென்றான்.
மறுநாள் நான்கைந்து புல்டோசர்கள் சாலையின் இருபுறமும் உள்ள பனைகளைச் சாய்த்துக்கொண்டே நகர்கின்றன. ஒரு பெரியவர் கேட்கிறார்,“ஏம்ப்பா… ஏன் இப்படி பனையை எல்லாம் சாய்க்கிறீங்க!”. அதற்கு “அதுவா பெரிசு, இந்த வழியா நான்குவழிச்சாலை வரப்போகுதுல்ல. அதுதான் வேரோடு பிடுங்கிறோம்” என்ற புல்டோசர் டிரைவரிடம் “அடப்போங்கடா… புடிங்கிகளா!…” எனச் சொல்லிவிட்டு பெரியவர் நகர்ந்தார்.