மகாத்மா காந்தி ஐந்து வினாடிகள் -இரண்டாவது வினாடி – ஜெர்மன் மூலம் -தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி

 

தோட்டா   :        முதல் வினாடி அது காந்தி! உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முற்றுப் பெற்று விட்டது. மார்புக்கூட்டை போர்த்தியிருக்கும் தோலில் வலி ஏற்படுத்தாமல், மிருதுவாக நுழையக் கூடிய ஒரு மெல்லிய இடம் எங்கிருக்கிறது என்று கண்டுபிடிக்கும் வரைதேடிக் கொண்டிருப்பேன். நான் இதமாகத்தானே நுழைகிறேன் காந்தி?           

காந்தி      :        நீ மிகவும் இதமாகத்தான் நுழைகிறாய், என் அருமை தோட்டாவே! 

தோட்டா   :        உனக்கு அளிக்கப்பட்டு இன்னும் எஞ்சியிருக்கும் அடுத்து வரும் நான்கு வினாடிகாலத்திலும் நான் அப்படித்தான் இருப்பேன்.      

பூமி :        இன்னும் நான்கே வினாடிகாலம்தான் உனக்கு இருக்கிறது. உனக்கு அளிக்கப்பட்ட ஐந்து வினாடிகளில் முதல் வினாடி முடிந்து விட்டது.   

நதி   :        உன் விலைமதிக்க முடியாத வாழ்வில் ஐந்தில் நான்கு பாகம் இன்னும் உள்ளது, காந்தி    

காற்று      :        ஆனந்தமயமான உன்  வாழ்க்கையின் ஐந்தில் நான்கு பகுதிகள்.      

காந்தி      :நீங்கள் என்னைவிட புத்திசாலிகள் அல்ல என்பதை என்னால் உணர முடிகிறது. இந்த சிறிய வாழ்க்கையைத் தொடர்ந்து, பெரிய, அமைதியான நித்யம் ஒன்று தொடர்ந்து வரப்போகிறது  என்று உங்களுக்குத் தெரியாது.    

காற்று      :        நேசத்துக்குரிய காந்தி, நீ பிறர் கூறும் புளுகுகளை நம்பி ஏமாந்து விடாதே! மரணம் என்ன என்பதை நன்கு அறிந்தவர்கள் நாங்கள்.      

பூமி  :      நித்யம், நிரந்தரம் என்பதை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதே. உனக்கு இருப்பதெல்லாம் இந்த ஒரு ஜென்மம்தான். புனர்ஜென்மம் என்று ஏதும் இல்லை .   

காந்தி :         எதையும் செய்வதற்குச் சக்தியற்று ஆடாமல் அசையாமல் படுத்திருக்கும் நிலையில், மேலே இருக்கும் . வானத்தைத் தவிர ஒன்றையும் காண இயலாத நிலையில் நீங்கள் புகழும் இந்த ஜென்மத்தை வைத்துக் கொண்டு நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள், என் இனிய நண்பர்களே!     

பூமி :        எண்ணங்களுக்கு உண்டு ஆயிரம் கண்கள். நீங்கள் சிவன் என்று பெயரிட்டு உங்களில் பலரால் கோயில்களில் ஆராதிக்கப்படும் கடவுளுக்கு இருப்பதுபோல் எண்ணங்களுக்கும் ஆயிரம் கைகள் உண்டு!     

காற்று      :        அவற்றைப் பயன்படுத்திக் கொள் காந்தி!     

பூமி :         உயிரைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்.    

காற்று            (அருகில் வந்து, மிக்க கெஞ்சிக் கேட்கும் குரலில்) உன் வாழ்க்கை எவ்வளவு உன்னதமாக இருந்தது என்பதெல்லாம் உனக்கு நினைவில் இல்லையா, காந்தி?      

காந்தி :        நண்பர்களே, வாழ்க்கையைப் பற்றி என்னிடம் ஏதும் பேச வேண்டாம். விருந்தாளி ஒருவன் எப்படிப்  பயணிகள் தங்கும் விடுதியிலிருந்து வெளியேறுகிறானோ அவ்வாறே நான் மிக்க மகிழ்ச்சியுடன் மீண்டும் வெளியேற விரும்புகிறேன். 

                              நண்பர்களே, போய்விடுங்கள் இங்கிருந்து! நான் அமைதியாக இருந்த சில மணி நேரங்கள், ஆழமான தியானத்தில் வாழ்ந்த காலங்கள், இவற்றைத் தவிர என் வாழ்க்கையில் வேறு எவ்விதமான நல்லவையும் நடக்கவில்லை . நான் உங்களை வேண்டிக் கொள்கிறேன். என்னைத் தனியாக விட்டுவிட்டுப் போய் விடுங்கள். அப்போதுதான் நான் தியானத்தில் ஆழமுடியும்.      

                              (குரல்கள் காந்திக்கு மிக பக்கத்தில்)      

பூமி :        உன் வாழ்க்கை எப்படி பெருமைக்குரியதாக இருந்தது என்பதெல்லாம் மறந்து விட்டாயா?  

நதி           கோடிக்கணக்கான இந்தியர்கள் உன் இடது சிறுவிரல் அசைவிற்காக ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தார்களே, மறந்து விட்டதா உனக்கு? |           

காற்று      :        நீ வந்த ஒவ்வொரு முறையும் “காந்தி”, “காந்தி” என்று இந்துக்களும், முஸ்லிம்களும் உரக்கக் கூவி உன்னை வரவேற்றது  எல்லாம் மறந்து போய்விட்டதா உனக்கு?           

பூமி :        “நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள் வக்கீல் காந்தி அவர்களே!” என்று கண்களைச் சிமிட்டியவாறே ஜெனரல் ஸ்மட்ஸ் பிரிடோரிய நகரில் கூறினாரே அதையும் மறந்து விட்டீர்களா?         

காற்று      :        பிரிட்டிஷ் முடி ஆட்சியின் நீதிபதிகள்  உங்களுக்கு  மரியாதை புரிந்தது கூட ஞாபகம் இல்லையா?     

நதி   :        நீ உன் இடது சிறுவிரல் அசைவினால் மட்டுமே உத்தரவு இட்டபோது 10,000 இந்தியர்கள் பிரிட்டிஷ் ஆட்சியின் சிறைச் சாலைகளுக்குச் சென்றார்களே, அது கூடவா ஞாபகம் இல்லை உனக்கு?               

பூமி        மந்திரிகளும், அந்தணர்களும், பெண்களுடனும், பிச்சைக்காரர் களுடனும் ராட்டையில் நூல் நூற்றார்களே காந்தி, ‘ அவ்வாறு செய்’ என்று  நீ கூறியதால், இதுவும் ஞாபகம் இல்லையா?                 

பூமி :        இந்தியா சுதந்திரம் அடைந்ததாவது உன் நிலைவில் இருக்க வேண்டுமே! காந்தி! முஸ்லிம்களும் இந்துக்களும் பார்ஸி இனத்தவரும் சீக்கியரும் உன் ஆணைப்படி எப்படி ஒரே இனமாக ஒன்றுசேர்ந்து நின்றார்கள் ! 

நதி   :        மகாத்மா!      

காற்று      :        மகாத்மா காந்தி!     

காந்தி      மீண்டும் வந்து விட்டீர்களா, குழம்பிப் போயிருக்கும் குரல்களே! ஆசாபாசங்களுக்கும் மாயைகளுக்கும் அடிமைகளாக, உள்ளத்தையும் உடலையும் பற்றிக் கொண்டு இருக்கும்  குரல்களே, உங்களை நான் மாய்த்து விடவில்லையா?! என்  வாழ்நாள் முழுதும் வேண்டிய அளவிற்கு உடலைவாட்டி உள்ளத்தின் ஆசைகளை அடக்கியது போதாதா? ஓ! தெய்வமே! நான் எவ்வளவு பலஹீனமானவன் என்று நீ பார்ப்பதற்காக பிரார்த்தனையில் நான் என் ஆன்மாவை  மறைக்காமல் உன் முன்னால் விரித்து வைக்க வில்லையா?  ஆசாபாசங்களிலும், காம இச்சைகளிலும் முழுமையாக ஆழ்ந்து கிடக்கும் என் ஆன்மா எவ்வளவு திமிர் பிடித்தது, எவ்வளவு சாமானியமானது  என்று உன் கண்களுக்கு எதிரிலேயே நான் ஒப்புக் கொண்டேனே!   

பூமி  :      உன் ஆன்மா பலஹீனமானதா, சாமானியமானதா என்பதைப் பற்றியல்ல இப்போது நாம் பேசிக்கொண்டிருப்பது. உன் மக்களைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். இந்தியாவைப் பற்றி நீ உன் மக்களுக்கு செய்தது எல்லாம் என்ன என்பதைப் பற்றியே, காந்தி! 

நதி   :        உன் மக்களிடம் உன் புகழ் எப்படி பரவிக் கிடக்கிறது என்பதைப் பற்றி.      

காற்று      :        உன் மக்களில் மிக உன்னதமான மனிதனைப் பற்றி, மகாத்மா காந்தி.       

பூமி :        நீ இந்தியாவை அடிமைத் தளையிலிருந்து விடுவித்திருக்கிறாய்.  

 காற்று     :        காந்தி, பிரம்மாண்டமான அமைதியினுள் நீ ஓடிப் போனால் நீ எழுப்பிய கட்டடம் தூள்தூளாக சிதறிப் போய்விடும் என்று உன்னால் தெரிந்து கொள்ள முடியவில்லையா?             

நதி   :      புலிகளின் கண்களைப் போன்ற கண்களினால் ஹிந்துக்களும் முஸ்லிம்களும்  உன் பூத உடலின் மேல் ஒருவரை ஒருவர் வெறித்துக் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ!     

காற்று              உயிரை விட்டுக் கொண்டிருக்கும் பசுவைச் சுற்றி வட்டமிடும் பிணம் தின்னிக் கழுகுகளைப் போன்று அவர்கள் உன் உடலைச் சுற்றி உட்கார்ந்து இருக்கிறார்களே?      

பூமி :        காந்தி, ஓடிப்போய்விட விரும்புகிறாயே அமைதியினுள்?     

நதி   :        ஆதோ அந்தத்   தீண்டத் தகாதவர்களைப் பார்! ஓநாய் வரும்போது துடிக்கும் ஆட்டுமந்தையைப்  போன்று நடுங்குகிறார்களே!     

காற்று      :        தங்களை இதுவரை பாதுகாத்து வந்த தந்தை இறந்தவுடன் இனி என்ன ஆகுமோ என்ற பயத்தில் ஒருவரோடு ஒருவராக நெருக்கியடித்துக் கொண்டு ஒன்று சேர்கிறார்களே!    

நதி   :        நீ நிர்மாணித்த கட்டடத்தை விட்டு வெளியேறப் போகிறாயா, காந்தி?           

காந்தி :      பயங்கர குரல்களே! என்னை என்ன செய்து விட்டீர்கள்? என் ஆன்மா எழுச்சி அடைகிறது! ஏன் என் மனது மீண்டும் எழுச்சி பெறுகிறது! விதி எனக்கு அளித்திருக்கும் முடிவை ஏன் நான் இப்போது ஏற்றுக் கொள்ள மறுக்கிறேன்? என் மார்பில் ஏன் துப்பாக்கியின் தோட்டா வலியைக் கொடுக்கிறது?             

                              (இசையை மெலியதாக உட்புகுத்தவும்)  

                              ஓ! என் குரலே! என்னை ஏன் கைவிட்டு விட்டாய்? நான் ஏன் என் குரலை, பொன்வண்டின் மெல்லிய ரீங்காரத்தை போன்ற என் குரலை ஏன் நான் கேட்க முடியவில்லை? இரும்பைப்போன்ற உறுதியான என்குரலை ஏன் கேட்க முடிவதில்லை? என் வாழ்நாள் முழுவதும் என்னை நல்ல முறையில் அழைத்துச் சென்ற அந்தக் குரல் எங்கே? என் குரலே, ஏன் நான் உன்னைக் கேட்கமுடிவதில்லை?                

                              (மணி ஓசை)    

தோட்டா   :        இரண்டாவது வினாடி முடிந்து விட்டது காந்தி! எலும்புத் தசையில் நுழைகிறேன் நான் இந்தக் கணத்தில். என் நுனி உன் இதயத்தைத் தொடுகிறது! வலிக்கிறதா? 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.