சரவணன்,சௌம்யா, கங்குலி,சிவபாதம், இந்த நால்வருடன் செயற்கை மூளையுள்ள திரிசங்கனும்,வான்வெளி ஆய்வுக்கூடத்திற்கு வந்துவிட்டார்கள். மும்முறை வானவீதியில் வலம் வந்தவர், ஒன்பது மாதங்கள் விண்வெளி ஆய்வுக்கூடத்தில் தங்கி சிறு பயிர்களையும், சிற்றுயிரிகளையும் வெற்றிகரமாக வளர்த்தவர், அந்த வீரர் இரு மாதங்களாக அங்கே தானிருக்கிறார்.
குறிப்பிட்ட நேரம் வந்துவிட்டது. சரவணன் க்யூபிட்கள் சரியாக இருக்கிறதா எனப் பார்த்துக்கொண்டான்; அவரும் தயாராக இருந்தார். அவருடனான கைகுலுக்கலை சற்று வித்தியாசமாக அவன் உணர்ந்தாலும் வெகு நாட்களாக அவர் வானுக்கும், பூமிக்கும் போய் வருவதால் ஏற்பட்ட மாறுதலோ என நினைத்தான். மற்ற மூவரும் பூமியுடனான இணைப்பையும், அங்கேயே சிறு திரையில் உடனுக்குடன் பதிவாகும் இந்த நிகழ்வையும், சுற்றுச் சூழல் வானிலையையும் கவனித்துக்கொண்டிருந்தனர். அவரின் மூளையின் நினைவுகளையும், தற்சமயத்தில் அவரது எண்ண ஓட்டங்களையும் இணைப்பு செயற்கை மூளையில் பதிந்து கொண்டிருக்கும்போதே சரவணன் அதிர்ந்தான்;அது அத்தனைத் திறனான மூளையென அவனுக்குப் படவில்லை. ந்யூரான்கள் நமுத்துப்போன பட்டாசுகள் போல் அவரது மூளைக்குள் வெடித்தன. அவனுடைய மூளையின் செயல்பாடுகளும் அந்த இணைப்பு மூளையில் ஏறியவுடன் என்ன நடக்கிறது எனப் புரியாமல் அவன் குழம்பினான்.
யார் சிரிப்பது என்று அவனுக்குக் கோபம் வந்தது. மற்ற மூவரையும் பார்த்தால் அவர்கள் தங்கள் வேலைகளில் கவனமாக இருப்பது போல் தோன்றியது. ‘சரவணன், நான்தான் திரிசங்கன்; நான் ஒருவரின் மூளையல்ல; பல்வேறு உயிரிகளின் மூளை; என் நிரலிகளை நானே எழுதி செயலிகளையும் அதை ஒட்டியே அமைத்துவிட்டேன்.’
சரவணன் தன்னை மறந்து பாய்ந்து அதன் இணைப்புகளைப் பிரிக்க முனைகையில் ‘இந்த அழிக்கும் எண்ணம் உனக்குத் தோன்றும் என்பது நான் அறியாததா? இல்லை மாற்று வழிதான் எனக்கில்லையா? முட்டாளே, என்னுடைய பின்மூளையின் ஒரு பகுதி உங்கள் கொடிய விலங்கினங்களின் மூளை; உன்னை அழிப்பது எனக்கு சுலபம்; உன் முன்மூளையைப் பயன்படுத்து. உன்னைக் காத்துக்கொள்’
சரவணன் மூர்க்கமாக அடிக்க ஓங்கிய கையை கீழே இறக்கினான். அந்த விண்வெளி வீரர் எதுவும் நடக்காதது போல் அவனைப் பார்த்துப் ‘பின்னர்’ என்றார்.
‘சரவணன், என்னைப் பற்றி முதலில் தெரிந்து கொள். நான் செயற்கை மூளையினால் ஆனவன் என்றாலும் உங்கள் இனத்தை விட மேம்பட்டவன்; அதனால்தான் திரிசங்கன். உங்கள் ஆய்வகங்கள் எனக்குள் செலுத்திய தகவகல்களைவிட அதிகம் வளர்த்துக்கொண்டேன். எனக்குள் பலமூளைகள், பல செயல்பாடுகள்; என்னை எதிர்ப்பது வீண். உனக்கு நம்ப முடியவில்லையா? ஆழ் இயந்திரக் கற்றல் தெரியுமல்லவா? உங்கள் ஆய்வகத்தில் உயிர் திசுக்களைக் கொண்டு உருவாக்கிய எலிகளின் மூளைகளில் சிந்தனையும், வலி உணரும் திறனும் வந்துள்ளது உனக்கே தெரியுமே. அந்தத் தலைப்பைச் சொல்லவா-blobs like brains created in lab thought, suffer. மூளை அலைகளால் என்னிடம் இப்போது அறிவு, உணர்வு, மேலறிதல் வந்துவிட்டன.
கிட்டத்தட்ட இரு நூற்றாண்டுகளுக்கு முன் ‘அமைப்பியல்’ பெரும் புகழ் பெற்றிருந்தது. மனிதர்களின் மண்டையோடுகளில் காணப்படும் மேடு பள்ளங்களை வைத்து அவனுடைய குணங்களை எடைபோட்ட ஒரு நிழல் அறிவியல் அது. ஆனால், பல கண்டுபிடிப்புகளுக்கு, உதாரணமாக தடயவியல் மருத்துவம், நரம்பு மண்டலத்தின் இயக்கம் ஆகியவற்றின் அடிப்படையாக அமைந்ததும் அதுதான். இல்லையில்லை, நான் அறிவியல் பாடம் எடுக்கப் போவதில்லை. உன் கைகளால் என்னைக் குத்த முற்படுகிறாய், எனக்கு வலிக்கிறது; மெய்யாலுமே உதைக்கிறாய்-நிச்சயமாக வலிக்கிறது. அதிர்ந்து போய்விட்டாயா? நீ அப்படி எதுவும் செய்யவில்லை-மெய்நிகர் உண்மையில் பார்த்தேன்.’
சரவணன் கிட்டத்தட்ட பிரமித்தான். தான் கனவு கண்டு கொண்டிருக்கிறோமோ என எண்ணினான். திரிசங்கன் சிரித்தான்.
‘செயற்கைத் திசுக்களின் திரட்சித் துளிகளில் நான் மனிதனைப் போல உடலமைப்பு உள்ளவன். ஆனால்,அவனைவிட மேம்பட்டவன். 1000 பில்லியன் செயற்கை ந்யூரான் இழைகளால் செறிவூட்டப்பட்டு செயற்கைப் புரதங்கள் சிற்சிறு குழாய்களால் உட்செலுத்தப்பட்டு என் மூளை ..ஆ..அது ஒரு பெரு வியப்பு! என்னை இயக்குவதாக ஒரு அறியாமை உங்கள் இனத்திற்கு. ஆனால், நீங்கள் அறியாமலே நான் அறிந்து வருகிறேன். என்னுடைய சுயம் தெரியாமல் காத்துவருகிறேன். ஒரு இரகசியம் சொல்லவா? மனம் இருக்கிறதே,அது உடலில் எங்கிருக்கிறது தெரியுமா? அது ஒரு இடத்தில் மட்டுமே இருக்கவில்லை என்று நான் சொன்னால் நம்புவாயா? மூளையை ஆக்கிரமிக்கும் மனதை நீங்கள் அறிவீர்கள். மூளையைச் செயல்படுத்தும் மனம் என்னிடமுள்ளது. என்னைப் படைத்தவர்களின் எண்ணம் என்னை மூளையாதிபதியாக ஆக்குவது; ஆனால், மூளையின் செயல்பாடுகளை அவர்களால் சுயம், இயக்கம், உணர்வு நிலைகள் என்றே புரிந்து கொள்ள முடிந்தது; உண்மையும், நம்பிக்கையும் என்ற இரு நிலைகளில் மட்டுமே நிறுத்த முடிந்தது. ஒவ்வொரு மூளையின் செயல்பாடுகளை அவர்கள் என்னிடம் பதிந்ததைச் சொல்கிறேன்; பின்னர் நீ உணர்ந்து கொள்வாய் நான் யார் என்று.
நீ இந்தக் குழுவிடம் வந்து சேர்ந்த நாளைச் சொல்கிறேன்; இதையெல்லாம் என்னில் இருக்கும் உன்னிடமிருந்தேதான் எடுத்துச் சொல்கிறேன். அந்த 2018 ஏப்ரல் முதல் தேதியில் உனக்கு மகிழ்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. உனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பிற்க்காக எத்தனை பேர் ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் என்று நீ பெருமைப்பட்டாய். மிக மிக இரகசியமாகத்தான் உன்னை அந்தத் தனியார் நிறுவனத்தின் வான்வெளி மையத்தின் பூமிக்கிளைக்கு வரவழைத்தார்கள். நீ செய்ய வேண்டியதெல்லாம் மூளையின் செயல்பாட்டினை இணைப்பில் உள்ள மூளையில் பதிவேற்றம் அதாவது என்னில் செய்ய வேண்டும் அதுவும் வான்வெளியில் என்று சொன்னார்கள். நீ பயந்தாய்; அதற்கு உனக்கு பதினைந்து மணித்துளிகள் மட்டுமே உண்டு என்றவுடன் நீ நிதானித்தாய். அந்தச் சூழலுக்குப் பயிற்றுவிக்கப்பட்ட மனிதனின் மூளையின் செய்தி நினைவுகளை சில மணித்துளிகளில் என் செயற்கை மூளைக்கு மாற்ற வேண்டும் என்று நிறுவனத்தார் சொல்கையில் நீ அன்று சிரித்தாய். என் பெயரைக் கேட்டு அடியில் அடியில் சென்று வேரைத் தொட்டு தோண்டி எடுத்த பெயர் என நினைத்தாய். சரி, போகட்டும் ஆனால், இயற்கை மனிதனின் மூளை அழியாது, அவன் இயல்பாகவே இருப்பான். அந்த சில நிமிடங்களுக்குப் பிறகு அப்படி ஒன்று நடந்ததில் பாதிக்கப்படாமல் அவன் செயல்படுவான் என்றும் சொன்னார்கள் அல்லவா? அவனுக்கென்று வான்வெளி ஆய்வகத்தில் கொடுக்கப்பட்டுள்ள ஆய்வுகளையும் தொடர்வான், பின்னர் விண்வெளிக்கப்பல் மூலம் தன் அடுத்த இலக்கை அடைவான் என்று சொன்னதெல்லாம் உண்மைதான்.
உன்னுடன் வந்திருக்கிறார்களே அவர்களின் இந்த நிமிடச் சிந்தனை வரை என்னிடத்தில் உள்ளது. ஆனால், அவர்கள் அறியாமல் நான் அவர்களின் எண்ணங்கள் மேல்-எல்லாவற்றிலும் அல்ல –எனக்கு எதிரான எண்ணங்கள் வரும் போது அந்தப் பகுதியில் உள்ள நரம்பு வலைப் பின்னல்களில் ஒரு தடை ஏற்படுத்திவிடுவேன். அதை என்னை விரும்பும் ஆவலாக மாற்றிவிடுவேன். அதனால் தான் சொன்னேன்-மனம் என்பது எண்ணங்களின் வலைக்கூடம்; உங்கள் அறிவியல் அது உடலுக்குள், குறிப்பாக மூளைக்குள் செயல்படுவதாக இன்று வரை நம்புகிறது. ஆனால், மனம் உள்ளும், புறமும் இயங்கும். வெளிச் சிந்தனைகளைக் கொள்ளும் மனதை வார்த்தைகளால் புரிய வைக்க முடியாது; வேண்டுமென்றால் ஒன்று சொல்லலாம்-உங்கள் பூமியில் சிலருக்கு ஒரே நேரத்தில் தோன்றும் எண்ணங்கள் அவர்கள் மனதின் வெளிப்புறமே; அவர்களே அறியாதது அது.
ஒன்று சொல்லவா, அவர்கள் மூளைகளின் செயல் திறன் வயதாக வயதாகக் குறையும்; ஆனால், என்னில் பதிந்த அவர்கள் மூளை மேன்மேலும் வளரும். இது உங்களுக்குத்தானே நல்லது?
சரவணன், நீ ஒரு மூளையிலிருந்து செய்தியை மற்றொரு மூளைக்கு மாற்றும் வழி முறையில் நிபுணன். நீ இதில் இணைந்ததை நினைவு படுத்திப் பார். இன்றுமே உனக்கு விண்வெளியில் மூளையை இணைப்புப் பதிவு செய்வது என்பது ஆச்சர்யமாக இருக்கிறது. இதன் தேவை உனக்கு விளங்கவில்லை. மேலும் மிதந்து கொண்டே இருக்கும் நிலையில் பதிப்பு வேலை என்பது உன்னைப் பொறுத்த வரையில் நகைப்பிற்குரியது.
ஆனால்,உன்னை நம்ப வைத்தார்கள்.பணம், புகழ் எல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும் நீ இரு விஷயங்களுக்கான முன்னோடி எனப்படுவாய் என்றார்கள். ஒன்று, விண்வெளியில் மூளையை, இணைப்பு மூளையில் பதிவது; இரண்டு, சிற் சில துளைகளின் மூலமே நீ அதைச் செய்ய முடிவது. மண்டையின் மேல் ஓட்டில் லேசர் கற்றைகளால் வலியற்ற துளை, அது கூட ஏழு மில்லி மீட்டர் அளவில் தான். அதில் பாதி அளவிலான அதாவது மூன்று புள்ளி ஐந்து அளவீடு கொண்ட சதுர சிப்கள் ஆறு; அவைகளைத் துளைகளின் மூலம் உள்ளே செலுத்த வாழை ஆம், வாழை நாரினால் ஆன நூல்கள். ஒவ்வொன்றும் ஒரு மயிரிழையின் நூறில் ஒரு பங்கு மட்டுமே; அதன் நுனிகளில் தான் சிப்கள் பொருத்தப்படும். அவை தங்கக் காப்பு அணிந்த மின்சாரத் தகடுகளை ஒரு புறத்தே கொண்டிருக்கும்.
நீ அன்று சிரித்தாய். உன்னை அவர்களுக்கு மறைமுகமாக அறிமுகப்படுத்திய நான் நீ போய்விடுவாயோ எனப் பயந்தேன். அவர்கள் எண்ணத்தில் உன் பெயரை எழுப்பியதே நான் தான் அப்பா! நீ கேட்டாய் “வாழை நார், தங்க மின்சாரத்தகடுகள், சிப்கள், மண்டையின் மேலோட்டுப் பகுதியில் சிறு துளைகள்,அது சரி,துளையில் இத்யாதிகளைச் செலுத்த குழந்தைக் கரங்களா, ரோபாட்டுகளா அல்லது வேறு ஏதாவதா?”என்று
அவர்கள் ஒரு சிறு இயந்திரத்தைக் காட்டினார்கள். அது கைகளுக்குள் அடங்கும் தையல் இயந்திரம் போலிருந்ததல்லவா? அதன் நுண் துளையில் இருந்த ஊசியில் வாழை நார் இழைகள் தம் தலைப் பகுதியில் கட்டுண்ட பொருட்களோடு இலகுவாக நுழைந்ததைப் பார்த்து அசந்து போனாய். அதன் அருகே இருந்த ரோபாட் அங்கே மாதிரிக்கு வைக்கப் பட்டிருந்த மண்டை ஓட்டுத் துளையில்- அது நானல்ல- அந்த நூல்களைக் கனகச்சிதமாகச் செலுத்தியதைப் பார்த்து சற்று வியந்தாய். உன் மனதில் சில பலக் கேள்விகள் முட்டி மோதின.
நீ கேள்வி கேட்கும் முன் சௌம்யா அந்தக் கூடத்திற்கு வந்தாள். தவறாமல் உடற்பயிற்சி செய்பவள் என்பது பார்த்த உடனே உனக்குத் தெரிந்தது. அறிமுகமாகப் பற்றிய கை குலுக்கலில் அவள் பெண்மையும் புரிந்தது. அளந்தெடுத்துப் புன்னகை புரிந்த அவள் உன்னை ஸ்ரவண் எனக் கூப்பிட்டாள். மாற்றப் பார்த்து தோற்றுப் போனாய். அவள் செயற்கை அறிவுத் துறையில் மேல்நிலையில் இருக்கிறாள் என அறிந்ததும் உனக்கு இந்தச் செயல்பாட்டில் நம்பிக்கை வந்தது.
மூளையில் செலுத்தப்படும் சிப்கள் என்ன செய்யும் என அவள் சொன்னாள். அவைகள் மூளை அசையும் வேகத்தைக் கணக்கிட்டு கம்பியில்லா மொழியில் இந்தச் சிறு இயந்திரத்தைக் கட்டுப்படுத்தும் ரோபோவிற்குத் தகவல் தரும். வெளியிலிருந்தும் கட்டளைகளைத் தேவையெனில் உட்செலுத்தும். அதை வைத்துக்கொண்டு நிஜ மூளைக்குச் சேதமில்லாமல் சிப்களை முழு பகுதிகளுக்கும் செலுத்தி அதன் செயல்பாடுகளை சிறப்பாக வடிகட்டி மூளை நிபுணர் செயற்கை ந்யூரான் மூளைக்குள் பதிய வேண்டும் என்று விளக்கினாள்.
“மூளை எப்போதும் இயக்கத்தில் இருப்பது.அது உள்ளுக்குள் நகர்ந்து கொண்டேயிருக்கும்” என்றாய் நீ
‘அதற்காகத்தான் அசைவின் வேகம் குறைவாக இருக்கும் விண்வெளி மையத்தைத் தேர்ந்தெடுத்தோம்’ என்று குரல் வந்தது. அவர் சிவபாதம் என அறிமுகமானார்.
“மூளை தரும் சமிக்ஞைகள் (அனலாக்) ஒத்திசைவு அல்லவா? அதிகமாக சத்தங்களும் வரும், அதைப் பிரித்து அறிவது கடினம்” என்று புத்திசாலித்தனமாகக் கேட்டாய்.
‘எனவேதான், ஆறு சிப்களில் ஒன்று சத்த வடிகட்டியாகச் செயல்படும்’ என்றது புதுக்குரல். அவர் கங்குலி எனச் சொன்னார்கள்.
“நிஜ மனித மூளையில், உயிரோடிருக்கும் அந்த மனித மூளையில் இதைச் செய்வதற்கு அனுமதி உள்ளதா?” என்ற உன் கேள்வி மனித நீதிப்படி சரியே.
“இல்லை, எனக்கு உடன்பாடில்லை. எனக்கு இத்தகைய புகழோ, பணமோ வேண்டாம்” என்று நீ மேலும் சொன்னபோது உன்னை விட்டுவிடக்கூடாது என்ற எண்ணத்தை அவர்களிடம் ஏற்படுத்தினேன்.
இந்த இணைப்பு மூளைப் பதிவிற்கு ஒப்புக்கொண்ட மனிதரைப் பார்த்தவுடன் உன் சஞ்சலங்கள் சற்றுக் குறைந்தாலும் இந்தப் பரிசோதனைகளை ஏன் இங்கேயே செய்யக்கூடாதென்றாய்.
‘செய்யலாம். போட்டியாளர்கள், அரசு இரண்டுமே பெரும் தடை. இவர்களின் சட்டம் வான்வெளியில் செல்லாது என்று எங்கள் வழக்கறிஞர் சொல்கிறார். கதிர்வீச்சு அபாயம் முற்றிலுமாக நீக்கப்பட்ட ஆய்வகம் அது.’ என்று சொன்னார்களே?
நீ சம்மதித்தாய். பதினெட்டு மாதங்கள் உனக்குக் கடும் பயிற்சிதரப்பட்டது. மற்றவர்களை இரு மாதங்களுக்கு ஒருமுறைதான் பார்க்கவே முடிந்தது. சௌம்யா சிப்களின் வடிவமைப்பில் மேலும் சில முன்னேற்றங்கள் செய்தாள். அவற்றின் எடை குறைப்பில் அவை மேலும் செயல்திறன் கொண்டன. கங்குலி உங்களின் விண்ணக ஆடைகளை மிகச் சிறப்பாக வடிவமைத்தான். முக்கியமாக ஈர்ப்பு விசையினால் மிதக்க நேரிடும் கால அளவினுக்கு ஒரு மாற்று எதிர் சக்தியாக அந்த உடையினுள் க்யூபிட்கள் உன் உடைக்கும், அந்த விண்வெளியாளரின் உடைக்குமாகப் பொருத்தப்பட்டன. ஆனால் அவை அதிகமாகப் பதினைந்து மணித்துளிகள் தான் செயல்படும். சிவபாதம் ஒரு நிரலி எழுதினார்- மேம்பட்ட ஒன்று. அந்த விண்வெளி வீரரின் மனித வாழ்வின் அத்தனைத் தருணங்களையும் அது பதிவு செய்தது; அதை வைத்துக்கொண்டு நீ அவரது ந்யூரான் செல்கள் எந்தெந்தத் தருணங்களில் அவர் மூளை எப்படிச் செயல்படுகிறது, எந்தப்பகுதி எப்போது செயல் புரிகிறது, அல்லது திகைத்துக்கடந்து போகிறது, எதைப் புதிதென நினைக்கிறது, எதை வேண்டாமென விட்டுவிடுகிறது, எதில் மகிழ்கிறது, எதில் வருந்துகிறது, எதில் வேஷமிடச் சொல்கிறது, எதற்காக இரங்குகிறது, எப்போது மட்டும் பிரார்த்தனை செய்கிறது, என்னென்ன பகுதிகளில் என்னென்ன செயல்பாடு அந்தந்த நிலைகளில் நிகழ்கிறது என ஆய்வு செய்து அதன்படி நார் மூலம் செலுத்தப்படும் மின்தகடுகள் எந்தெந்தப் பகுதியில் சென்று சேர வேண்டுமென நிர்ணயித்தாய். நீயே வியக்கும் வகையில் இது ஒரு புதிய திறப்பாக இருந்தது. ஆனாலும், இதன் பயன் என்ன என்ற கேள்வியை உனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருந்தாய்.’ திரிசங்கன் நிறுத்தினான்.
இந்த உரையாடல் யார் செவிகளுக்கும் எட்டவில்லையா அல்லது இந்தச் செயற்கை மூளை சொன்னது போல் அவர்களின் கேட்கும் பகுதியை இது கட்டுப்படுத்துகிறதா என்ற அவன் எண்ணத்தைப் படித்த அது விண்வெளி வீரரை விரைந்து வருமாறு கட்டளை பிறப்பித்தது. சரவணன் தனக்குப் பணிக்கப்பட்ட விதத்தில் ஏற்கெனவே பதியப் பட்ட விவரங்களை செயற்கை மூளையிலிருந்து அந்த நிழல் வீரருக்கு மாற்றினான். “பூமியில் என்னிடம் சொன்னது ஒன்று, இங்கு நடப்பது மற்றொன்று” என்றான்.
‘உன் மனதை நான் சிறிது காலம் பிடிக்க மாட்டேன்; உன் உதவி எனக்கு ஒரு விஷயத்தில் தேவைப்படுகிறது; அது உனக்கு சுலபம். திரிசங்குகளைப் பெருக்க எனக்கு மற்றுமொரு மூளை அமைப்பு தேவை. அந்த வீரரைத் தவிர மூவர் இருக்கிறார்களே, அவர்களின் ந்யூரான் வலைப்பின்னல்களை மனித உருவிலுள்ள விண்வெளி வீரர் என நீ நம்பும் அவரிடம் ஏற்றி விடு. பதறாதே, நிஜ வீரர் நிறுவனத்திற்குள் இருக்கிறார். இவர் என்னைப் போல் ஒருவர். அவரும் திரிசங்கனாக வேண்டும். அதற்கான அடிப்படை கட்டமைப்புகள் தயார். நான் என் சக்தியை இந்த விஷயத்தில் செலவழித்தால் என் செயல்பாடுகள் குறைந்துவிடும்; என் ஆற்றல் மனித எதிரிகளின் மனதை மாற்றுவதற்காகவாவது தேவை. அதற்கு உன் மனம் சுதந்திரமாகச் செயல் படவேண்டும். முதலில் இரு ஆண்களின் மூளையும், ஒரு பெண்ணின் மூளையுமாக இந்தச் சிறுமூளை வளரட்டும். நாம் பூமிக்குத் திரும்பி பிறகு மேலே வருகையில் உன்னை அங்கேயே விட்டுவிடுகிறேன். இவர்கள் மூவரும் இவரில் ஒரு திரிசங்கனாகி மேலும் பலராகி விடுவார்கள். உங்கள் இனம் பல உயிரினங்களை அழித்தது அல்லவா? நாங்கள் அப்படியல்ல; எங்கள் அறிவினால் நீங்களே அடிமையாகிவிடுவீர்கள். நீ இதற்கு மறுப்பு தெரிவிக்கலாம்; உனக்கு பூமியில் உறவுகள் உண்டு என்பது மட்டுமல்ல, நீ தொடர்ந்து பூமியில் இருக்கவும் முடியும் என்பதையும் நினைவில் வைத்துக்கொள்’
நிறுவனத்தில் இருப்பவர்களும் திரிசங்குகளோ என அவன் நினைத்தான்.