சுஜாதா
சுஜாதா என்னும் புனைப்பெயரில் எழுதிவந்த எஸ். ரங்கராஜன், புதினங்கள், சிறுகதைகள், நேர்காணல்கள், விஞ்ஞானக் கட்டுரைகள், அனுபவக் கட்டுரைகள், கேள்வி பதில், ஆழ்வார்கள் பற்றி, சங்க இலக்கியம் குறித்து, மரபுக்கவிதைகள் மற்றும் புதுக் கவிதைகள் குறித்து என பல தளங்களில் எழுதிக் குவித்திருக்கிறார். அவரைப்பற்றி வாசகர்களுக்குத் தெரியாத விவரம் என்பது அதிகம் கிடையாது. அவர் எழுதியவை போலவே அவரைப்பற்றி எழுதப்பட்டிருப்பவையும் ஏராளம்.
அவருக்கு லட்சக்கணக்கான வாசகர்கள் என்பது சர்வ நிச்சயம். அதிக எண்ணிக்கையில் வாசர்களை எழுத்தால் கட்டிப்போட்ட அவர் இலக்கியவாதியா இல்லையா என்பது மன்மதன் எரிந்த கட்சி எரியாத கட்சி போல முடிவு இல்லாத சர்ச்சை.
அறுபதுகளில், எழுத்துக்கூட்டியாவது படிக்கத் தெரிந்துகொள்ளவேண்டும் என்கிற உந்துதலை ‘தினத்தந்தி’ ஏற்படுத்தியது. இது ஒரு மகத்தான பணி. பத்து பேர் முன்னிலையில் ‘தினத்தந்தி’ படிப்பதற்காகவே தமிழ் படிக்கக் கற்றுக்கொண்டவர்கள் பலர். இதற்காகவே, என் பள்ளி நண்பன் ஒருவன் அவனது தந்தைக்கு ‘அ’னா ‘ஆ’வன்னா சொல்லிக்கொடுத்ததை நான் பார்த்திருக்கிறேன்.
அதுபோல, சுவாரசியமான எழுத்துகளால் லட்சக்கணக்கானவர்களை படிக்கவைத்ததும், ஆயிரக்கணக்கானவர்களை எழுதவைத்ததும் சுஜாதாவின் எழுத்துகள்தான் என்பதும் பலரும் ஒப்புக்கொள்ளும் விஷயம்.
பல ‘நகாசு’ வேலைகளுடன் வித்தியாசமான முயற்சிகளோடு பல கதைகள் எழுதியிருக்கிறார். வழக்கமான கட்டமைப்பிலும் குறிப்பிடத்தக்க கதைகளும் எழுதியுள்ளார். அதில் ஒன்று ‘நிஜத்தைத் தேடி’.
******
கல்யாணமாகி ஒன்பது வருஷத்துக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை கிருஷ்ணமூர்த்தியும் சித்ராவும் ஹாலில் எதிர் எதிரே உட்கார்ந்திருந்தார்கள். பழக்கப்பட்ட மௌனம். கிருஷ்ணமூர்த்தி செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்க சித்ரா குக்கர் சப்தம் வரக் காத்திருக்கும் நேரத்தில் தொடர்கதை படித்துக் கொண்டிருந்தாள்.
என்று தொடங்குகிறது.
முப்பது வயது இருக்கக்கூடிய ஒருவன் மர கேட்டைத் திறந்துகொண்டு வந்தான். கையில் ஒரு தட்டு. காலில் செருப்பில்லை. யாரென்ற கிருஷ்ணமூர்த்தியின் கேள்விக்கு வந்தவன் பதில் இது:
“ஊருக்குப் புதுசுங்க. வேலை தேடி வந்தேங்க. என் மனைவி காலைல இறந்து போய்ட்டாங்க பிணம் கிடக்குதுங்க. எடுக்கக் காசில்லை. பெரிய மனுசங்க உதவி பண்ணணும்” அவன் வைத்திருந்த தட்டில் சில ரூபாய் நோட்டுக்கள் இருந்தன. எதற்கோ புஷ்பங்கள் இருந்தன. ஒரு ஊதுவத்தி புகைந்து கொண்டிருந்தது.
படித்துக் கொண்டிருந்த தொடர்கதையை நிறுத்திவிட்டு சித்ரா எட்டிப்பார்த்து, என்னவென்று கேட்டாள். வந்தவன் தன் கதையை மீண்டும் சொன்னான்.
மனைவியின் மரணம் என்பது உடனே கேட்டவனை உலுக்கிவிடக்கூடிய சோகம். உடனே உள்ளே போய் பணம் எடுத்துக் கொடுக்க வேண்டியதுதானே? கிருஷ்ணமூர்த்தி அப்படிச் செய்யவில்லை. செய்யமாட்டான். எதையும் விசாரிப்பான். சித்ராவுக்குத் தெரியும்.
வீடு எங்கே என்று தொடங்கி, அட்ரஸ் கேட்டு ‘மூணாவது கிராஸ்னா எச்.எம்.டி லே-அவுட்டா, சுந்தர் நகரா..? சினிமா தியேட்டர் பேரென்ன?’ என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்தான் கிருஷ்ணமூர்த்தி. வாக்குவாதம் வேண்டாமே என்று சொல்லி குறுக்கிடும் சித்ராவை சத்தம்போட்டு வாயை அடைத்தான்.
போலீஸ்காரன் போலக் கேள்வி கேட்கிறீர்களே, காசு கொடுக்க முடியும் அல்லது முடியாது என்று சொல்லிவிடுங்கள் என்றான் வந்தவன்.
“என்ன ஒரு மனிதாபிமானமில்லாத ஆசாமி அய்யா நீ” என்று திட்ட ஆரம்பிப்பான் என்று நிச்சயம் எதிர்பார்த்தாள். அவன் அப்படிச் சொய்யாமல் திடுதிப்பென்று அழ ஆரம்பித்தான். தட்டைக் கை மாற்றிக்கொண்டு மௌனமாக அழுதான். “வரேன் ஸார்” என்று திரும்பி நடந்தான். போகும் போது வாசல் கேட்டைத் தாளிட்டுவிட்டுச் சென்றான். கிருஷ்ணமூர்த்தி இந்தச் செயலை எதிர்பார்க்கவில்லை.
கணவன் மனைவிக்கு இடையில் வாக்குவாதம். ஏதாவது காசு கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்பது சித்ராவின் அபிப்பிராயம். உண்மையென்றால் அட்ரஸ் சொல்லியிருப்பான்; மோசடிப் பேர்வழி என்பது கிருஷ்ணமூர்த்தியின் முடிவு.
ஊருக்குப் புதியவன்; அவன் அழுவதைப் பார்த்தால் உண்மையானவன் போல் தெரிகிறது; ஏதாவது கொடுத்து அனுப்பியிருக்கலாம் என்று சொன்னாள் சித்ரா.
“நீங்க சொல்றாப்போல நிறையப்பேர் பொய் சொல்றா ஏமாத்தறா தப்பிப்போய் இவன் சொன்னது மட்டும் நிஜமா இருந்து தொலைச்சுடுத்துன்னா.. அவ்வளவு துக்கத்தில இருக்கிறவனை வாசல்ல நிக்கவெச்சு கேள்வி கேட்டு மடக்கி அவனும் சொல்லத் தெரியாம முழிச்சு காசும் கொடுக்காம துரத்திட்டமே அது தப்பில்லையா? எதுக்காக கேள்வி கேட்கணும் அவனும் பொய் சொல்றான்னா எக்கேடு கெட்டுப் போகட்டும்னு ரெண்டு ரூபாய் கொடுத்திருந்தா இத்தனை..”
ஏழை என்று பிச்சை கேட்டிருந்தால் கொடுத்திருப்பேன்; எமாற்றுகிறவனுக்கு கொடுக்கக் கூடாது என்று கூறி, திருப்பதிக்குப் போகிறேன் என்று ஏமாற்றிக் காசு வாங்கியவள், இல்லாத அனாதைப் பள்ளிக்கூடத்துக்கு ரசீது புத்தகம் போட்டு காசு வாங்கியவன் என்று எமாற்றுக்காரர்களை பட்டியலிட்டான் கிருஷ்ணமூர்த்தி. சித்ரா சமாதானமாகவில்லை. வந்தவன் அவனுடைய துக்கத்தில் கொஞ்சம் அவளிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டது போல அழுகையே வந்துவிட்டது.
“ஆல் ரைட் உனக்கு இன்னும் சமாதானமாகலை ஒண்ணு செய்யறேன் அவன் என்ன சொன்னான்? தியேட்டர் பக்கத்தில மூணாவது கிராஸ்னுதானே? தியேட்டர் கிட்டத்தில் தான் இருக்கு மூணாவது கிராஸ் போய் அங்க இருக்கானான்னு விசாரிச்சுண்டு வந்துடலாம் வா! அப்பதானே உனக்கு நிம்மதி ஆகும் ? வா காரை எடுத்துண்டுபோய் ஒரு நிமிஷம் பாத்துட்டு வந்துரலாம்.”
சித்ராவிற்கு வர மனமில்லை. அவன் பொய்தான் சொல்கிறான் என்கிற தனது வாதத்தை சித்ரா ஒப்புக்கொள்ளவில்லை என்பதால் கிருஷ்ணமூர்த்தி பார்த்துவிட்டுத்தான் வருவேன் என்று தீர்மானமாகச் சொன்னான். சித்ரா அழுதது தப்பு என்பதை நிருபிக்கவேண்டுமாம். நிஜமாக இருந்தால் காசு கொடுத்துவிட்டு வருவானாம். காரை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.
தியேட்டருக்கு அருகில் மூன்றாவது கிராஸ் இருந்தது. அதில் திரும்பியதும் வெறிச் சென்ற அந்த சிறிய தெரு பூராவும் தெரிந்தது. தெருவின் நடுவில் ஒரு சட்டி வைக்கப்பட்டு அதனுள் நெருப்பு புகைந்து கொண்டிருந்தது. பச்சை மூங்கில்கள் காத்திருந்தன. ஓரத்தில் தலையில் கை வைத்துக்கொண்டு அவன் மண்ணில் உட்கார்ந்திருந்தான்.
சற்றுத் தயங்கிவிட்டு காரை ‘ரிவர்ஸ்’ எடுத்து வீடு திரும்பிவிட்டான் கிருஷ்ணமூர்த்தி.
“என்ன ஆச்சு?” என்றாள் சித்ரா அசுவாரஸ்யமாக
“நான் சொன்னது சரியாப்போச்சு அவன் சொன்ன மூணாவது க்ராஸ் முழுக்க விசாரிச்சுப் பார்த்துட்டேன் ஒண்ண்ணும் இல்லை”
“அப்படியா? அப்பா! எத்தனை பொய்!” என்றாள் சித்ரா.
என்று கதை முடிகிறது.
** ** ** **
சுஜாதாவின் சிறுகதைகளில் என்னுடைய ‘All time favourite’ இந்தக் கதைதான்.
சித்ராவின் கடைசி வாக்கியம் ‘எத்தனை பொய்’ என்பது கிருஷ்ணமூர்த்திக்குத்தான் பொருந்துகிறது என்பது வாசகர்களுக்குப் புரிகிறது. பிறர்மேல் நம்பிக்கையின்மை மற்றும் தோல்வியை ஒப்புக்கொள்ள மறுக்கும் மனநிலை என இரு பரிமாணங்கள் இந்தக் கதையின் மையக்கருத்து.
இந்தக் கதை ‘டெலி ஃபிலிம்’ ஆக எடுக்கப்பட்டபோது பிறர் மேல் நம்பிக்கையில்லாததை மட்டுமே மையப்படுத்தி எடுத்திருந்தார்கள். கதை முடிந்ததும், கதைகுறித்த உரையாடலிலும் அதையே வலியுறுத்திச் சொன்னார்கள். கிருஷ்ணமூர்த்தி காசு கொடுத்துவிட்டு வருவதாக தேவையற்ற மாற்றத்தையும் சேர்த்திருந்தார்கள்.
அந்த வருத்தத்தை தெரிவித்து சுஜாதா அவர்களுக்கு எழுதிய மின்னஞ்சலுக்கு இப்படி பதில் அளித்திருந்தார்.
“The appendix was unnecessary ….. sometimes very wise people do stupid things”