

*மெல்லியலாள் பாதம்*
*திருவள்ளுவர்*:
*அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்*
*அடிக்கு நெருஞ்சிப் பழம்* .
தினம் ஒரு குறள் அனுப்பும் நண்பர் ஒருவர் மேற்கண்ட குறளை, சில நாட்கள் முன்பு அனுப்பியிருந்தார். படித்தேன்.
குறளின் பொருள்:
முகர்ந்தாலே வாடிப்போகும் மென்மையான அனிச்ச மலரும் ( மோப்பக்குழையும் அனிச்சம்) , அன்னப் பறவையின் மெல்லிய இறகுகளும் – இரண்டுமே ( காலில் பட்டால் ) நெருஞ்சி முள் தைத்தது போல துன்புறுத்தக்கூடிய அளவுக்கு என் காதலியின் காலடிகள் மென்மையானவை.
( அடேயப்பா).
சரி, வள்ளுவர் எடுத்து தந்ததை மற்றவர்கள் (நமது கண்ணதாசன், வாலி உட்பட) விட்டு விடுவார்களா என்று தோன்றியது. உடனே ஆராய்ச்சி தொப்பியை மாட்டிக்கொண்டேன். ( Research cap).
கிடைத்தது ஒரு அரிய பொக்கிஷம். அதை *மெல்லியலாள் பாதம்* என்ற தலைப்பில் உங்களுடன் பகிர்வதில் மகிழ்கிறேன்.
*2*.
முதலில் மாட்டியவர்கள் *அம்பிகாபதி, கம்பர்*.
*இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க*
கம்பரின் மகன் அம்பிகாபதி சோழ மன்னனின் மகள் அமராவதியை காதலிக்கிறான். இது சோழ மன்னனுக்கு பிடிக்கவில்லை. ஒருநாள் அரண்மனையில் அனைவருக்கும் விருந்து அளிக்கும் பொழுது மரியாதை நிமித்தமாக மன்னன் தன் மகளை உணவு பரிமாற சொல்கிறான். சாப்பிட உட்கார்ந்திருந்த அம்பிகாவதி, அமராவதியை கண்டவுடன் சிருங்கார ரசம் பெருக,
*இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க வட்டில் சுமந்த மருங்கசைய*
என்று பாட ஆரம்பித்து விடுகிறான். அதாவது அவள் காலடி வைத்த உடன் அவள் கால் வலிக்க, வைத்த காலை எடுக்கும்போது கால் கொப்பளித்து விடுகிறதாம். அவ்வளவு மென்மையானவளாம். கையில் தட்டை சுமந்த அவள் இடை ( மருங்கு) அசைகிறதாம்.
இதைக் கேட்டவுடன் சோழமன்னன் சும்மா இருப்பானா , கம்பரை தீப்பார்வை பார்க்கிறான். வெலவெலத்துப் போகிறார் கம்பர். சமாளித்தாக வேண்டுமே, இல்லாவிட்டால் மகன் தலை போய்விடுமே, அதனால் அம்பிகாபதி பாடிய பாடலை அவர் தொடர்ந்து முடிக்கிறார்:
*கொட்டிக் கிழங்கோ கிழங்கு என்று* *கூவுவாள் – தன்நாவில்*
*வழங்கோசை வையம் பெறும்*
முழுப்பாடலின் பொருள்:
உலகம் முழுதும் கேட்குமாறு தெருவில் கொட்டிக்கிழங்கு கூவி விற்பவள், நல்ல வெயிலில், தன் கிழங்குத்தட்டுடன் அசைந்து நடந்து வருகிறாள். அவள் கால் வலித்து, கொப்பளித்துவிட்டது.
அதாவது அம்பிகாபதி பாட ஆரம்பித்தது வெளி வாயிலில் கொட்டிக்கிழங்கு விற்கும் பெண்ணைப் பற்றித்தான் என்று கம்பர் சமாளிக்கிறார்.
” எங்கே, எனக்கு கேட்கவில்லையே, யாரும் கொட்டிக்கிழங்கு விற்பதாக ” என்று சொல்லும் மன்னன் எல்லோருடனும் வெளியே வந்து பார்க்கிறான்.
கம்பன் வாக்கு பொய்க்கக்கூடாது என்று சரஸ்வதியே அங்கு திருவடிகளில் பாதரட்சை இல்லாமல் கடும் வெயிலில் கிழங்கு விற்று போகிறாள் என்பது கர்ணபரம்பரைக் கதை,.
Well, நான் எடுத்துக்கொண்ட விஷயத்திற்கு ( மெல்லியலாள் பாதம் ) *இட்ட அடி நோக எடுத்த அடி கொப்பளிக்க* என்பது எவ்வளவு பொருத்தம்.
*3*
அடுத்து, *கம்பர்* இயற்றிய கம்ப ராமாயணத்திலிருந்து ஒரு துளி பருகுவோம் .
இராமன் சிவதனுசை முறித்தபின் , தசரதன் வசிஷ்டர் உள்ளிட்ட அயோத்தி மகாஜனங்கள் மிதிலைக்கு வந்து சேர்ந்த பின், சீதையை அந்தப்புரத்திலிருந்து அலங்காரம் செய்து அரசவைக்கு அழைத்து வருகின்றனர். அப்போது கம்பன் பாடிய பாடல்:
*வல்லியை உயிர்த்த நிலமங்கை இவள் பாதம்*
*மெல்லிய உறைக்கும் என அஞ்சி வெளி எங்கும்*
*பல்லவ மலர்த் தொகை பரப்பினள் என தன்*
*நல் அணி மணிச் சுடர் தவழ்ந்திட நடந்தாள்*
*பொருள்* :
ஜனகன் பொன் ஏர் பூட்டி உழுதபோது, நிலத்தில் கிடைத்தவள்தான் சீதை. எனவே சீதை பூமாதேவியின் மகள். வல்லி என்பது கொடி.
கொடி போன்று இருக்கும் சீதையின் மென்மையான பாதங்கள் வெறும் தரையில் நடந்தால் உறுத்தி அவளை வருத்தக்கூடும் என்று அஞ்சி, சீதை நடந்து செல்லும் தடம் முழுவதும் மென்மையான தளிர்களையும் மலர்களின் தொகுதிகளையும் மண்மகள் பரப்பிவைத்தாளோ என்று தோன்றும் அளவிற்கு,
தான் அணிந்திருக்கும் சிறந்த அணிகலன்களில் பதிக்கப்பட்டிருக்கும் பல்வேறு இரத்தின, மாணிக்க மணிகளின் வண்ண ஒளிச்சுடர்கள் முன்னே பரவிச் செல்ல சீதை நடந்தாள்.
தலைப்புக்கான தொடர்பு:
*இவள் பாதம் மெல்லிய உறைக்கும் என அஞ்சி..*
*4*.
அடுத்து *இளங்கோவடிகள்*.
*மண்மகள் அறிந்திலள் – இவள்*
*வண்ணச் சீறடி* . –
கண்ணகி பற்றி இளங்கோவடிகள் – *சிலப்பதிகாரம்* காப்பியத்தில் :
மாதவியைப் பிரிந்த கோவலன், புது வாழ்வைத் தேடி கண்ணகியுடன் மதுரை நோக்கிப் புறப்படுகிறான். கோவலனும் கண்ணகியும் செல்லும் வழியில் கவுந்தியடிகள் எனும் சமணத் துறவியைச் சந்திக்கின்றனர். மூவரும் மதுரை நோக்கிச் செல்கின்றனர். மதுரை நகருக்குள் கோவலன் செல்லும்போது கண்ணகி பாதுகாப்பாக இருக்க , எல்லையில் மாதரி என்னும் இடையர் குல பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாகத் தருகின்றார் கவுந்தியடிகள். கோவலன் வரும்வரை இவளை பத்திரமாக பார்த்துக்கொள் என்று கூறி கண்ணகியின் பெருமையையும் அவளை பேணும் முறையையும் ( பார்த்துக்கொள்ளும் விதத்தையும்) மாதரிக்கு விளக்குகிறார். அப்போது சொல்கிறார் :
*ஈங்கு,*
*என்னொடு போந்த இளங் கொடி* *நங்கை-தன்*
*வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்*
அதாவது , மதுரைக்கு வருவதற்கு முன்னால் இவள் ( கண்ணகி ) நடந்தே அறியாதவள் என்பதால் இவளின் வண்ணமிகு அழகான பாதங்களை நிலமகள் கண்டதே இல்லை. நடக்க ஆரம்பித்த உடனே புண்பட்ட அடிகளையே மண்மகள் அறிந்திருப்பதால், *வண்ண* ச் சீர் அடியை நில மடந்தை அறிந்தாள் இல்லை.
கண்ணகியின் மெல்லிய பாதங்களை, அவள் எவ்வளவு மென்மையானவள் என்பதை இங்கு காண்கிறோம்.
*5*.
அடுத்து சிக்கியவர் நமது *கவியரசு கண்ணதாசன்*.
*சித்திரத்தாள் அடிச்சுவட்டைத் தேடிப் பார்த்தான்*
*தென்றல் வந்து போனதற்கு சுவடு ஏது*?
கவிஞரின் தனித்தொகுப்பான ” மாங்கனி ” என்ற குறுங்காவியத்தில் வரும் பகுதி இது.
காதலியைத் தேடி காதலன் வருகிறான். அதற்குள் அவள் போய்விடுகிறாள். எந்தப் பக்கம் போனாள் என்று தெரியவில்லை. அவள் காலடிச் சுவட்டை வைத்து எந்தப் பக்கம் போனாள் என்று பார்த்து, அந்த வழியே போகலாம் என்று தரையில் அமர்ந்து அவளின் காலடிச் சுவட்டைத் தேடுகிறான். சுவடு தெரியவில்லை.
*தென்றலைப் போல மென்மையானவள்* அவள். அதனால்தான் அவள் போனதற்கான காலடிச் சுவடு தெரியவில்லை என்று சொல்கிறார்.*சித்திரத்தாள்* என்பதில் ‘தாள்’ என்பது பாதம். அதற்கு உரிச்சொல்லாக ( adjective) சித்திரம் என்று கொள்ளலாம். அதாவது ஓவியம் போன்ற பாதத்தை உடையவள்.அல்லது ‘சித்திரத்தாள்’ என்ற முழு சொல்லையும் ஒரு உருவகமாக ( metaphor) கொள்ளலாம் – அவளையே ஓவியம் என்று கொள்ளலாம்.தமிழின் அருமையை என்ன சொல்ல !!*6*.
*கண்ணதாசன்* திரைப்பாடல் ஒன்று – எல்லோரும் அறிந்தது.
படம் : *புதிய பறவை*
ஆஹா மெல்ல நட மெல்ல நட மேனி என்னாகும்
*முல்லை மலர் பாதம் நோகும்*
உந்தன் சின்ன இடை வளைந்தாடும்
வண்ண சிங்காரம் குலைந்துவிடும்
ஓ..ஓ…ஓ…ஓஹோ…ஹோ…
இதற்கும் தலைப்புக்கும் ( மெல்லியலாள் பாதம் ) உள்ள தொடர்புக்கு விளக்கம் தேவையில்லை.
*7*.
வந்தாரையா *வாலி*.
படம் : *உலகம் சுற்றும் வாலிபன்*
*பச்சைக்கிளி முத்துச்சரம்*
*முல்லைக்கொடி யாரோ*
பாடல் அறிவோம்.
அதில் சரணத்தில் வரும் வரிகள் :
” *தத்தை போலத் தாவும் பாவை*
*பாதம் நோகும் என்று*
*மெத்தை போல பூவைத் தூவும்*
*வாடைக் காற்றும் உண்டு*
மெல்லியலாளான, கிளி போல தாவிச்செல்லும் தலைவியின் பாதம் வலிக்குமே என்று , காற்று வீசி , செடி, கொடி, மரங்களிலிருந்து பூக்களை உதிர வைத்து அவைகளை மெத்தை போல படியவைத்து , தலைவிக்கு வலிக்காமல் பார்த்துக் கொள்கிறதாம்.
இந்த கற்பனைக்கான உந்துதல் வாலிக்கு மேலே 3 வது புள்ளியில் குறிப்பிட்ட கம்ப ராமாயணம் பாடலாக இருக்கலாம் என்றால் ஏற்புடையதே..
–
*8*
*வாலி* யின் வேறொரு வித்தியாசமான பாடல்..
இதுவரை பார்த்ததில் எல்லா கவிஞர்களும்,
மெல்லியலாள் , அவள் பாதம் நோகும் , கொப்பளிக்கும், அவள் பாதச்சுவடு பதிந்த இடம் தெரியவில்லை என்று பாடினார்கள்.
வாலி ஒருபடி மேலே போய் சொல்கிறார்: தலைவி தன் தாமரை மலர் போன்ற மெல்லிய பாதங்களால் அடியெடுத்து நடந்தால் , காதலனின் உள்ளம் புண்ணாகி விடுமாம்.
படம்: *பணம் படைத்தவன்*
*பவளக்கொடியிலே முத்துக்கள் பூத்தால்
புன்னகை என்றே பேராகும்*
என்ற பாடலின் சரணத்தில் :
“பூ மகள் மெல்ல வாய் மொழி சொல்ல
சொல்லிய வார்த்தை பண்ணாகும்,
*காலடி தாமரை நாலடி நடந்தால்*
*காதலன் உள்ளம் புண்ணாகும்* –
இந்த காதலன் உள்ளம் புண்ணாகும் “
என்பதாக வருகிறது.
ஆஹா, என்ன ஒரு கற்பனை – மெல்லியலாளான தலைவி அடியெடுத்து வைத்தால் அவள் பூம்பாதம் படப்போகும் துயரங்களை எண்ணிப் பார்த்து ( அவள் இன்னும் நடக்கவில்லை; அப்படி நடந்தால் என்று எண்ணிப்பார்த்து ) காதலன் படும் வேதனையை என்ன அழகாக சொல்கிறார் !
————
*9*
இறுதியாக, என்னதான் கவிதைகளை ரசித்து படித்தாலும், *காணும் இன்பம்* என்பது வேறுதானே!
*படகோட்டி* படத்தில் வாலி அவர்கள் எழுதிய ஒரு பாடல் :
*நான் ஒரு குழந்தை நீ ஒரு குழந்தை*
*ஒருவர் மடியிலே ஒருவரடி*
இப்பாடலில் முதல் சரணம் முடிந்து இரண்டாம் சரணம், *ஊரறியாமல் உறவறியாமல்* ஆரம்பிக்கு முன் வரும் பின்னணி இசையின் போது,
ஒரு நீர் நிறைந்த தடாகத்தில், தாமரை இலைகள் வரிசையாக இருக்கும். அதன்மேல் கால்களை மாற்றி மாற்றி வைத்து சரோஜாதேவி கடந்துவிடுவார்.
அதன்பின் MGR அதே மாதிரி செய்ய முயற்சிப்பார். முதல் இலையில் கால் வைத்ததுமே கால் தண்ணீருக்குள் சென்று விழுந்து விடுவார்.
ஏன் ?
ஏனென்றால், கதாநாயகியின் பாதம்,
*மெல்லியலாள் பாதம்*.
காணொளியின் லிங்க் தனியே கீழே கொடுத்திருக்கிறேன்.
இலக்கிய சுவை மேலும் காண்போம்..
அருமையான கட்டுரை. சுவாரசியமான இலக்கியக் கூறுகள். படித்து ரசித்தேன். மிக்க வந்தனம்.
LikeLike
அருமையான இலக்கிய ரசனை. வாழ்க தமிழ்!
LikeLike