நான்காம் சர்க்கம்
கணவனை இழந்த ரதியை பொல்லா விதியே மயக்கம் தெளியவைத்தது
தீப்பொறி பிறக்கும்போதே மயங்கிய ரதியின் கண்கள் மதனைத் தேடின
‘எங்கே என் நாதன்?’ எனக் கேட்ட ரதி மனித வடிவில் சாம்பலைக் கண்டாள்
கணவன்இறந்தனன் என்றறிந்ததும் தரையில் விழுந்து துடித்து அழுதனள்
“அழகன் நீ எரிந்த பின்னும் சிதறாமல் உயிர்வாழும் என் காதல்மனம் எங்கே
உடைந்த அணை நீர் போல எனை விடுத்துச்சென்றீர் ,சென்றவிடம் எங்கே
பிழை ஒன்றும் செய்யாத நமக்கேன் இப்பிரிவு பரிவுகொண்ட மனம் எங்கே
ஊடலில் கோபித்த எனை விடுத்துப் போனாயோ ? போனவிடம் எங்கே
நீ மட்டும் எரிந்துபட உன் மனதில் நானிலையோ? நான் இங்கே நீ எங்கே
உனைத்தேடி நானும் உடன்வருவேன் நீயில்லா உலகில் இனி இன்பம் எங்கே
காதலன் காதலியை சேர்க்கும் என்மதன் என்னைத் தன்னிடம் சேர்க்கட்டும்
மதன் இல்லா உலகில் மதுவருந்தும் பெண்ணின் பரவசம் பறந்து போகும்
மதன் இல்லா வானில் சந்திரனும் காதலுக்குத் துணை போக மாட்டான்
குயில்கூவி பறை சாற்றும் மாம்பூவின் பாணத்தை யார் இனி தொடுப்பார்
பாணத்தில் நாணாக காட்சிதரும் வண்டினமும் சோகத்தில் புலம்புதுகாண்
பொன்னுடல் தான்பெற்று எனக்குச்சுகம்தர எழுந்துவர மாட்டாயா
ஆட்கொண்ட உன்னை தொட்டுத்தழுவிடத் துடிக்குது என்மனம்
மலர்களால் அலங்கரித்த என்னுடல் வாடிவதங்கிட எங்கே நீ சென்றாய்
காதல் களிப்பில் நாமிருவர் கலந்திருக்க பாதியில் பிரித்தது முறையாமோ
உன்னழகைக் கண்டு தேவமாதர் மயங்குமுன் உன்னிடம் நான் வரவேண்டும்
எனைநீ பிரிந்தும் நான்மட்டும் இங்கிருக்க என் அன்பில் குறையுளதோ
என்னுயிர் பிரியுமுன் உனக்கிறுதி அழகு செய்ய பொன்னுடல் தான் எங்கே
கையில் வில்லுடன் கண்ணில் காதலுடன் எனை நோக்கும் பார்வை எங்கே
வில்லினை செய்துதரும் தோழன் வசந்தன் எங்கே அவனும் எரியுண்டானா
ரதியின் படுதுயரம் விஷப்பாணாமாய்த் தைத்திட வசந்தன் வெளிவந்தனன்
வசந்தனைக் கண்டரதி அணை வெடித்தாற்போல் மேலும் புலம்பலானாள்
“ வசந்தனே! காற்றும் சிதைக்கும் சாம்பலாய் மாறிய உன் நண்பனைப் பார்
மதனா! காதலியைவிட நண்பன் உயர்ந்தவன் அவனைக் காண எழுந்து வா
அம்பெய்தது நீயேதான் ஆயினும் அதன் செயலைச் செய்தவன் அவனன்றோ
காற்றடித்த விளக்கென கணவன் மறைந்திட புகையும் என் நிலையைப் பார்
மரத்தை முறித்த யானை அதனுடன் இணைந்த கொடியை விட்டது சரியோ
மதனை நான் விரைவில் அடைந்திட நீ எனக்குத் தீ மூட்டித் தந்திட வேண்டும்
மேகம் மறைய மின்னலும் மறைவது போல நானும் மறைந்திடல் வேண்டும்
மதன் உடல்சாம்பல் தழுவி அனலில் நான் மகிழ்வுடன் விழுந்திட வேண்டும்
வணங்கிக் கேட்கிறேன் வசந்தா !, மதனிடம் நான் சேர சிதை ஒன்று தந்திடு
மூட்டிய சிதையினில் நானும் எரிந்துபட தென்றலை வேகமாய் வீச வை
இருவருக்கும் சேர்த்து கைநீரை தர்ப்பணமாய் ஒருசேர நீயே தந்தருள்வாய்
மதன் விரும்பும் மாம்பூவை அந்திமக் கிரியையில் மறக்காமல் சேர்த்துவிடு
மடியும் மீனுக்கு பெய்திடும் மழை போல புலம்பும் ரதிக்கு அசரீரி பேசிற்று
“கவலை விடு ரதியே ! நின் ஆசைக் கணவன் விரைவில் நின் கண்படுவான்
முன்னாளில் பிரும்மரிடம் மலரம்பு எய்ததின் சாபமே இத்துயரம்
சிவ பார்வதி மண நாளில் மன்மதன் சாபத்தின் விமோசனம் பெறுவான்
மங்கள ரதியே! நல்லுடல் கிட்டும் வரை சாம்பல் உடலைப் பாதுகாத்து வை”
அசரீரி கேட்டரதி மயங்கிநிற்க, வசந்தனும் ரதியிடம் நம்பிக்கை வளர்த்தான்
நிலவு ஒளிபெற இரவுக்கு ஏங்குதல்போல் ரதியும் துயர் விடிய காத்திருந்தாள்