ஒரு புதிய கவிகைத் தொடர் உங்கள் உள்ளத்தைக் கொள்ளையடிக்கப் போகிறது.!
குண்டலகேசியின் கதையை சங்கப் பாடலுக்கு இணையாக புதிய காப்பியமாகப் படைக்க வந்திருக்கிறார் தில்லை வேந்தன். வாழ்த்துக்கள் !
குண்டலகேசியின் கதை
தமிழின் ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான குண்டலகேசி, பௌத்த சமயத்தைச் சார்ந்த நூலாகும். இந்நூல் முழுமையாகக் கிடைக்கப் பெறவில்லை… இதில் 19 பாடல்கள் மட்டுமே கிடைத்துள்ளன.
இப்பாடல்களைக் கொண்டு காப்பியத் தலைவியின் வரலாற்றை அறிய இயலாது.
எனினும், பொதுவாக நாட்டிலும், இலக்கியத்திலும் வழங்கி வரும் கதையில் கற்பனையும் கலந்து “குண்டலகேசியின் கதை”யைப் படைத்துள்ளேன்.
வணிகர்க் குலப் பெண்ணான குண்டலகேசியின் கதை, உள்ளத்தை உருக்குவது; ஊழின் வலிமையை உரைப்பது; உலக உண்மைகளை உணர்த்துவது.
இனி நூலுக்குள் நுழைவோம்:

புத்தன் வணக்கம்
முற்றும் தன்னை உணர்ந்தானை,
முழுதும் அமைதி நிறைந்தானை,
குற்றம் மூன்றும் களைந்தானை,
கூடும் வினைகள் தடுத்தானை,
பற்று நீங்கி உயர்ந்தானை,
பான்மை உணர்ந்து பகர்ந்தானை,
வெற்றுப் பிறவி அறுத்தானை
வீழ்ந்து திருத்தாள் பணிவோமே
( குற்றம் மூன்று — மனம்,மொழி,மெய்களால் உண்டாகும் குற்றம்)
தமிழ்த்தாய் வாழ்த்து
குழலோடு யாழும் முழவோடு சேர்ந்து
கொண்டாடும் இன்பத் தமிழே
அழலோடு புனலும் அழித்தாலும் அழியா
அழகான தொன்மைத் தமிழே
நிழலோடு வெயிலும் விளையாடும் சோலை
நிகரான தண்மைத் தமிழே
எழிலோடு விளங்கும், புகழோடு துலங்கும்
இந்நாட்டின் அன்னைத் தமிழே!
பூம்புகார் சிறப்பு
முற்றத்தில் உலர்நெல்லை உண்ப தற்கு
முனைகின்ற கோழியினை விரட்ட வேண்டிக்
கற்றிகழும் காதணியைக் கழற்றி வீசும்
கயல்விழியார் உறைகின்ற அகன்ற வீட்டில்
மற்றந்தக் கனங்குழையும் சிறுவர் தேரின்
வழியடைத்து விளையாட்டைத் தடுத்தல் அன்றி
உற்றிடுமோர் பகைத்தொல்லை எதுவும் இல்லா
ஓங்குபுகழ் கொண்டிருக்கும் பூம்பு காரே
உப்பளங்கள் வெண்மணலாய்ப் பரந்தி ருக்கும்
ஓவியமாய்க் காட்சிதரும் பொய்கை, ஏரி,
அப்புறமும், இப்புறமும் சிறந்தி ருக்கும்.
அறம்நிலைக்கும் அட்டில்களின் சோற்றுக் கஞ்சி
எப்புறமும் வடிந்தோடும் வீதி தோறும்
எருதுகளின் சண்டையினால் சேறாய் மாறும்.
செப்பரிய தவப்பள்ளி, வேள்விச் சாலை,
திகழ்மருங்குப் பெரும்புகழின் பூம்பு காரே!
( அட்டில்கள் — சமையற் கூடங்கள்)
பூம்புகாரின் தெருக்கள்
கடல்வழியே வந்திறங்கும் குதிரைக் கூட்டம்,
கால்வழியே வருகின்ற மிளகு மூட்டை,
வடமலையின் பொன்மணிகள்,மேற்கில் உள்ள
மலைவிளைந்த சந்தனமும்,அகிலும்,தெற்குக்
கடல்பிறந்த ஒண்முத்தும், கங்கை மற்றும்
காவிரியின் நீர்வளத்தால் விளைபொ ருட்கள்
இடமெங்கும் குவிப்பதனால் தவித்துப் போகும்
ஈடில்லாப் பூம்புகாரின் பெருந்தெ ருக்கள்
( கால்— சக்கரம்– இங்கு வண்டிகளைக் குறிக்கும்)
பல்வகை வீதிகள்
பட்டு விற்கும் வீதிகளும்
பவளம் விற்கும் வீதிகளும்
பிட்டு விற்கும் வீதிகளும்
பிறங்கு பாணர் வீதிகளும்
கொட்டிக் கிடக்கும் பல்பொருட்கள்
கூவி விற்கும் வீதிகளும்
மட்டில் தொழில்செய் வீதிகளும்
வயங்கும் வளமார் புகார்நகரில்.
அங்காடியில் விற்கும் பொருட்கள்
வண்ணமும் விற்பர், சுண்ணமும் விற்பர்,
மணங்கமழ் புகைப்பொருள் விற்பர்,
உண்பொருள் கூலம், ஒண்ணிறப் பூக்கள்,
உப்பு,மீன், கள்ளுமே விற்பர்.
வெண்கலம், இரும்பு, செம்பினில் செய்த
விதவிதப் பொருட்களும் விற்பர்
கண்கவர் ஆடை, பொன்மணி அணிகள்
கலையெழில் கொஞ்சிட விற்பர்.
( கூலம் — தானியம்)
. வணிகர் இயல்பு
நடுநிலை பிறழா நெஞ்சர்
நவில்வது யாவும் வாய்மை
கொடுபொருள் குறைக்க மாட்டார்
கொள்பொருள் மிகையாய்க் கொள்ளார்
வடுவிலா வாணி கத்தில்
வரவினை வெளியே சொல்வார்.
கெடுநிலை இல்லாக் கோல்போல்
கேண்மையோர் வணிக மாந்தர்.
( கோல் – துலாக்கோல்/தராசு)
( கேண்மையோர் – நட்புக் கொள்பவர்கள்)
பத்திரை பிறப்பு
பெருங்குடி வணிக னுக்குப்
பிறந்தனள் பத்தி ரையாள்
அருங்குணப் பண்பு மிக்காள்
அழகுடன்.நெஞ்சில் அன்பும்
ஒருங்கவே இயைந்த நல்லாள்
உரைத்திடும் இனிய சொல்லாள்
சுருங்கிய இடையு டையாள்
சுந்தர வடிவு டையாள்.
( இவளுக்குப் பெற்றோர் இட்ட பெயர்
பத்தா தீசா. பத்ரா என்றும் அழைக்கப்பட்டாள்)
(தொடரும்)
Very nice and easily able to follow thillaivendan Sir
LikeLike
ஆஹா! தெள்ளு தமிழ்ச்சொல் லெடுத்து தென்றலைதைத் தூதுவிட்டு அள்ளுகின்ற நெஞ்சம்போல் தில்லையூர் எங்கள் அண்ணன் செப்புமொழி கேட்க வந்தோம்! இல்லை இனி உறக்கம்!
LikeLike
ஆரம்பமே அருமை. வாழ்த்துக்கள்.
LikeLike
சபாஷ். பாராட்டுகள்.
LikeLike
ஆரம்பமே அட்டகாசம். அருமை. கவிவேந்தன் என்னும் சிறப்பினை நான் உந்தனுக்கு வழங்குவதில் பெருமிதம் கொள்கின்றேன். வாழ்த்துக்கள்.
LikeLike
Excellent start with simple writing. At the outset I thank “kuvikam publishers” for providing this 0opportunity to raed ur kavidai which is really easily understandable and enjoyable.U r God gifted. Best wishes for a bright future.
LikeLike
Free flow and easy to follow. Great start.
LikeLike
Easy way to read and learn this piece of literature! super
LikeLike
அற்பு தமான எழுத்துகள்
LikeLike