கண்ணு படப் போகுதைய்யா….
ரா கி ரங்கராஜனின் ‘நாலு மூலை’ கட்டுரைத் தொகுப்பு வாசித்துக் கொண்டிருந்தேன் – இது எத்தனையாவது முறை என்று தெரியாது – அவ்வளவு சுவாரஸ்யமான தகவல்களுடன், அவருக்கே உரித்தான கேலியும் கிண்டலும் கலந்த நகைச்சுவை விருந்து! அதில் அவர் திருஷ்டி பற்றிய வாதூலனின் கட்டுரையைக் குறிப்பிட்டு, மேலும் பல செய்திகளைச் சொல்லியிருந்தார். ரேடியோ எஃப் எம் ஒன்றில் ‘கண் படுமே, பிறர் கண் படுமே’ என்று பி பி ஶ்ரீனிவாஸ் பாடிக்கொண்டிருந்தார்.
மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்த உறவினரைப் பார்க்க அவசரமாகக் கிளம்பிக்கொண்டிருந்தேன் – நீண்ட நாட்களுக்குப் பிறகு, அந்த நண்பர் என்னைப் பார்க்க வந்திருந்தார். பொதுவாகவே அவர் பிறர் முன்னேற்றத்தைப் பார்த்துப் பெருமூச்சு விடுபவர், ஆனாலும் நல்ல மனிதர். மரியாதைக்காக ஒரு ஐந்து நிமிடம் பேசிவிட்டு, மருத்துவ மனைக்குக் கிளம்பினேன். கையில் பிளாஸ்டிக் கூடையில் இரண்டு ஃப்ளாஸ்க் – ஒன்றில் சுடுநீர், மற்றதில் காபி – மற்றும் பிஸ்கட் பாக்கெட் எல்லாம் எடுத்துக்கொண்டு கிளம்பினேன் – நண்பர் என் வீட்டை ஒரு ரவுண்ட் நோட்டம் விட்டார் – டிவி, ஃப்ரிஜ், மியூசிக் சிஸ்டம் – ‘வீட்டை நல்லாத்தான் வெச்சிருக்கே’ என்றவாறே என்னுடன் கிளம்பினார். ‘டப்’ என்ற சத்தம் கேட்டது – சுடுநீர் இருந்த ஃப்ளாஸ்க் உள்ளே உடைந்து கல கலத்தது!அவசரமாக உள்ளே சென்று, மற்றொரு ஃப்ளாஸ்கில் சுடுநீருடன் புறப்பட்டேன். வெளிக்கதவைப் பூட்டி, கிரில் கேட்டை சாத்தும்போது, பிளாஸ்டிக் பை சாய்ந்து, காபி ஃப்ளாஸ்க் உருண்டு தரையில் விழுந்து சிவலோகப் பிராப்தி அடைந்தது! வேறு வழியின்றி, கடையில் புது ஃப்ளாஸ்க், ஓட்டலில் காபி என்று மருத்துவ மனை சென்றேன்.
மனதில் ஒரு குரல் இந்த மனிதனின் ‘கண்’தான் ஃப்ளாஸ்க் உடையக் காரணம் என்றது. ஆனாலும், சூடான நீரினாலும், என் அஜாக்கிரதையாலும் பிளாஸ்க்குகள் உடைந்திருக்கலாம் என்று பகுத்தறிவு சொன்னது. அது எப்படி இவர் வந்த போது மட்டும் ஒரே சமயத்தில் இரண்டு ஃப்ளாஸ்க்கும் உடைந்தது என எதிர் வாதம் செய்தது மனது!
இதைத்தான்,“கண்ணு போடுவாங்க”, “கண்ணு வெச்சுட்டாங்க” ,”திருஷ்டி பட்டுப் போச்சு” என்றெல்லாம் சொல்லுகிறோம்! பொறாமையாலோ, அவர்களது இயலாமையினாலோ, இப்படிப் பெருமூச்சு விடுவதால் ஏதேனும் கெட்டது நடந்து விட்டால், ‘அவரது கண் பட்டதால்தான்’ என்று நம் மனம் நம்புகிறது!
புதியதாய் வாங்கிய கண்ணாடி ஃப்ளவர் வேஸ் கைதவறி கீழே விழுந்து நொறுங்கி விட,‘யார் கண் பட்டதோ’ என, பழி வேறிடம் சென்றுவிடும்! நம் அஜாக்கிரதை மறக்கப்படும்!
இப்படிக் கண் திருஷ்டி பற்றி நம்மிடையே எத்தனை நம்பிக்கைகள்!
கண் திருஷ்டியைக் குறைக்க, புதிதாய்க் கட்டிய வீட்டு வாசலில் (சில புதிதாய் வாங்கிய மிகப் பழைய வீட்டு வாசலிலும்!), ‘தொங்கும்’ நாக்குடன் விழி பிதுங்கும் காளியோ, நின்று கொண்டிருக்கும் திருஷ்டி கணபதியோ, ‘கண்ணைப் பார் சிரி’ வாக்கியமோ (உடன் கழுதைப் படம் கொசுறாக இருப்பதும் உண்டு) தொங்க விடப்படும்! அதனால் திருஷ்டி கழிகிறதோ இல்லையோ, பார்த்த குழந்தைகள் பயந்து அலறுவது நிச்சயம்!
சிலர் வீட்டு வாசலில் முகம் பார்க்கும் கண்ணாடியைப் பதித்து வைத்திருப்பார்கள் – வீட்டுக்கு வருபவர் தன் முகத்தையே பார்த்து, பயந்து நடுங்கி, திருஷ்டி போட மறந்து, வீட்டுக்குள் சென்று, காபிக்கு பதில் காய்ச்சியமோர் கேட்கும் நிலைக்குத் தள்ளப் படுவதும் உண்டு!
கடன் வாங்கி வீடு கட்டிய வீட்டு சொந்தக்காரரின் பேய் அறைந்த முகத்தைப் பார்த்தவுடன், விருந்தாளியின் கண் திருஷ்டி கழிந்து, கால் வழியே வழிந்து ஓடிவிடுவது வீட்டுக்காரரின் முகராசியாக இருக்கலாம்!
“குழந்தை அழகா ‘டிஷுக்’குன்னு இருக்கு” என்று ’சொல்ல’ வேண்டாம், அப்படிப் பார்த்தாலே போதும், வீட்டுப் பாட்டிகள் “ அவ கண்லெ காக்கா குசுவ “ என்று சபித்து, வாசலில் ‘அவள் பாதம் பட்ட மண்ணை’க் கொண்டு, குழந்தைக்குச் சுற்றிப் போடுவது கிராமங்களில் சகஜம்!
வீட்டு கிரகப்பிரவேசம், விசேஷங்கள், சில பண்டிகைகள் முடிந்த கையோடு வீட்டிலுள்ளவர்களை நிற்க வைத்து திருஷ்டி கழிப்பது வழக்கம் – குடுமியுடன் தேங்காய் மீது கற்பூரம் ஏற்றி (எரியும் கற்பூரம் கீழே விழாமலும், நெருப்பு அணைந்து விடாமலும், மூன்று சுற்று சுற்றும் மீசைக்காரர் எப்போதும் என் விசேஷ கவனம் பெறுவார் – இதயம் என் வாயில் துடிப்பதைக் காணலாம்!
டெக்னிகலாக பூசணியில் ஓட்டை போட்டு, இரத்தச் சிவப்பில் குங்குமமும், சில காசுகளும் உள்ளே சேர்த்து, பூசணி மீது கற்பூரம் ஏற்றிச் சுற்றுவதும் உண்டு!
தேங்காயோ, பூசணியோ – சுற்றிய பிறகு தெருவின் நடுவில் உடைத்து திருஷ்டி கழிக்கப்படும்!நடப்பவர்கள் காலில் தேங்காய் ஓடு கிழித்து இரத்தம் வந்தாலோ, சைக்கிள் அல்லது ஸ்கூட்டர், உடைந்த பூசணித் துண்டின் மீது வழுக்கி, வண்டி ஓட்டுபவர் கீழே விழுந்து, கபாலம் உடைந்தாலோ திருஷ்டி கழிந்து விட்டதை உறுதிப் படுத்தலாம்!
அந்தக் காலத்தில் வீட்டுப் பாட்டிகள், விசேஷ நாட்களில் ஓர் ஆழாக்கில் (ஒழக்கில் என்றும் சொல்லலாம் – இவை எல்லாம் என்ன என்பவர்கள் பாட்டியைக் கேட்கலாம் அல்லது சின்ன படி, பெரிய படி என்ற கொள் அளவைகள் குறித்துப் படிக்கலாம்!) இரண்டு காய்ந்த மிளகாய், நாலு மிளகு, கொஞ்சம் கல் உப்பு போட்டு, வலது உள்ளங்கையால் மூடிக்கொண்டு குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் திருஷ்டி கழிப்பதை – க்ளாக்வைசில் மூன்று முறை, ஆண்டி க்ளாக்வைசில் மூன்று முறை சுற்றி, தலை முதல் கால் வரை மூன்று முறை ஏற்றி, இறக்கி ,மிகவும் வேகமாகவும், நளினமாகவும் சில பாட்டிகள் பக்தியுடனும், நம்பிக்கையுடனும் செய்வது அழகு! – பார்த்திருக்கிறேன். திருஷ்டி கழிக்கப் பட்டவர்கள் உடனே அந்த இடத்தை விட்டுச் சென்று விட வேண்டும் – ஆழாக்கில் இருப்பவற்றை அடுப்பில் போட, வெளியேறும் நெடி அதிகமாகவோ, குறைவாகவோ இருப்பதைப் பொறுத்து, திருஷ்டியின் அளவு கணிக்கப் படும்!
நாய்க் கண்ணு, நரிக் கண்ணு, காக்காய்க் கண்ணு, பேய்க் கண்ணு, கொள்ளிக்கண்ணு என்று நிறைய கண்களைச் சொல்லி, எல்லாம் போக பிரார்த்தனையுடன் திருஷ்டி கழிக்கப் படும்!
துடைப்பத்துடன் பாட்டி அருகில் வந்தால் அச்சம் கொள்ளத் தேவையில்லை – மூன்று முறை உங்களைத் துடைப்பத்தால் சுற்றி, திருஷ்டி கழித்து, அனுப்பி விடுவார் (பாட்டி இந்த நேரத்தில் உங்கள் மீது கோபம் ஏதும் இல்லாமல் இருப்பது மிகவும் அவசியம் – ‘அடி’த்துதிருஷ்டி கழித்துவிடும் பாக்கியம் கிடைத்து விடலாம், உங்களுக்கு!). பின்னர் துடைப்பத்தை நுனியிலிருந்து எரித்து விடுவார்.
கருப்பு உல்லன் கயிற்றில், இரண்டு மிளகாய், ஒரு எலுமிச்சம் பழம், படிகாரக் கல் ஆகியவற்றைக் கட்டித் தொங்க விடுவது ஒரு வகை திருஷ்டி தடுப்புதான்! வீட்டு நிலைப் படி, கடைகளின் வாசல், நாலு சக்கர சிற்றுண்டி வண்டி, கார், லாரி எல்லவற்றிலும் தொங்கும் இந்த கலைடாஸ்கோப் ஊஞ்சல் மிகவும் உயர்ந்தது, விலையிலும்!ஒரு முறை எனக்கு திருஷ்டி என்று வீட்டு வாசலில்இந்த மாதிரி திருஷ்டிக் கயிறு கட்ட ஒருவர் வந்த போது, நிற்காமல் திரும்பத் திரும்ப விழுந்து கொண்டிருந்தது – ‘எவ்வளவு திருஷ்டி உங்களுக்கு’ என்றவரிடம், ஒரு ஸ்டூலைக் கொடுத்து அதன் மேல் ஏறி நின்று கட்டச் சொன்னதும் சரியானது. வந்தவர் குள்ளமாயிருந்தது, என் வீடு கட்டியவரின் குற்றம் அல்ல!
திருஷ்டியைப் போலவே சகுனம் பார்ப்பதுவும் நம் பாரம்பரியப் பெருமை சொல்வது! நாய், பூனை, நரி, காக்கை, கழுதை என எல்லா பிராணிகளுக்கும் இதில் பங்குண்டு. நாய் ஊளையிட்டால் கெடுதல், கழுதை ஊளையிட்டால் (கழுதை ஊளையிடுமா, பாடுவது போல கத்துமா?) நல்லது, பூனை குறுக்கே போனால் – இடமோ, வலமோ – ஒரு பலன் என ஏராளமான நம்பிக்கைகள் – தனி வியாசம்தான் எழுத வேண்டும்! பல்லி விழும் பலன், கண் துடிப்பது, கனவுகளின் பலன்கள் என நீள்கிறது பட்டியல்.
சிறிது யோசித்தால், இவை யாவும் நமது நம்பிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு இயங்குபவை என்று புரியும். மனதை சமாதானம் செய்யும் எதுவும், பிறர் நலன் கெடுக்காத வரையில், நல்லவையே என்று நினைக்கத் தோன்றுகிறது.
இப்போது எஃப் எம்மில் இளையராஜா பாடிக்கொண்டிருக்கிறார் – கண்ணு படப் போகுதைய்யா…..