நீலக் கடலலைகளின் மேலே நீந்திச் சென்றது விக்ரம். அது கடலில் பொதுவாக ரோந்துப் பணிகளுக்குச் செல்லத் தேவையில்லை. ஆனால், இது வழக்கமான பணியில்லை. கடற் கொள்ளையர்களைப் பிடிக்க இரகசியத் தகவல்களின் பேரில் கொச்சி கடற்தளம் தாண்டி சத்தமின்றி அது இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் மேல் தளத்தில் தொலை நோக்குக் கருவியுடன் அருண், உதவி கமேண்டர் பார்த்துக்கொண்டிருந்தான். கடல், தாலாட்டும் ஒத்திசைவோடு கப்பலைச் சுமந்தது. தொடு வானில் ஆரஞ்சு வண்ணத்தில் கதிரவன் எழுந்தான். அவன் வரவை கட்டியம் சொல்லும் முகமாக ஒளித் தீற்றல்கள். அருணின் மனதில் சுதா பாடும் பாடல் ஒலித்தது. ‘உதிக்கின்ற செங்கதிர், உச்சித் திலகம், உணர்வுடையோர் மதிக்கின்ற மாணிக்கம், மாதுளம் போது’
சுதாவின் நெற்றியில் சிறு செவ்வட்டமாக மிளிரும் குங்குமம்; அவள் ஒட்டும் பொட்டை ஒரு நாளும் சூடியதில்லை. நாசியில் ஒற்றைக்கல் மூக்குத்தி, கரும் அருவியென வீழும் கூந்தலில் நுனியில் முடிச்சு, மேலே ஈரக் கூந்தலில் இரு பக்கமும், நடுவிலும் சிறு இழைகள் எடுத்துப் பின்னிய பைப் பின்னலில் சொருகப்பட்ட செண்பகப் பூ, இலேசாக மஞ்சள் பூசிய முயல் குட்டிகளென புடவையின் கீழிருந்து வெளிப்படும் வெள்ளிக் கொலுசுப் பாதங்கள். இந்தப் பாடலை முணுமுணுத்துக்கொண்டு அவள் ஏற்றும் குத்து விளக்கு. திரிக்குத் தாவிக் குதிக்கும் ஒளியில் சுடரேற்று வண்ண ஜாலங்களாய் அவள் கன்னத்தில் பரவும் மூக்குத்தியின் கார்வை; ஆம், அது தம்பூரின் ஸ்ருதி போல் இயைந்து வரும் வருடல். மணமான இந்த ஆறு மாதங்களில் தரையில் இருந்த மூன்று மாதக் காலத்தில் அவன் பார்த்துப் பார்த்து இரசித்த ஓவியம் அவள். சூரியன் கடலில் குளித்துக் கிளம்புவதைப் போல் அவள் குளித்து வருகையில் வண்ணங்கள், வாசங்கள் வெளிப்படும் அவளது இளம் மேனி. கிளர்த்தும் மஞ்சளிலிருந்து செங்குழம்பாக நீலப் பிண்ணனியில் ஆதவன் உயிரூட்ட வரும் போது அவன் அவளையேதான் இப்போதெல்லாம் நினைக்கிறான். பெண்ணை நிலவென்று சொல்லும் கவிஞர்கள், பாவம், ஆதவன் உதயத்தையும், அவன் மேலைக்கடலில் ஆழ்வதையும் பார்க்கவில்லை என அருண் சிரித்துக்கொண்டான். ஒரு நாள்,கூடிய விரைவில், அவளை அழைத்து வந்து, அவள் கண்களைக் கைகளால் பொத்தி கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி ‘உன் நெற்றியிலொன்று, வானிலொன்று என இரு மாதுளை மொக்குகளைப் பார்’ என்று காட்ட வேண்டும். அவன் அணையும் வேளையில், வானில் அவன் கலைத்துப் போடும் துகில்களை உனக்கெனக் கொண்டு தரட்டுமா என்று கேட்க வேண்டும். மனம் முழுவதும் மகிழ்ச்சி ததும்புகிறது, ஆனாலும் இனம் தெரியாத உணர்வும் வந்து போகிறதே என்று நினைத்தான் அருண்.
ஒரு மணியாகும் வரை எந்தக் கப்பலும் தென்படவில்லை. உளவுச் செய்தியை கரையேறும் வரை கவனத்தில் தான் வைத்திருக்க வேண்டும். பார்த்துக்கொண்டே வந்தவனின் தொலை நோக்கியில் ஒரு கப்பல் விரைந்தோடிச் செல்வது தெரிந்தது. அவன் எச்சரிக்கை அடைந்தான். அது செல்லும் பகுதியில் அலைகளின் ஆர்ப்பரிப்பு மிகுதியோ என ஒரு கணம் நினைத்தான்; இல்லை என்று மானிட்டர் காட்டியது. அங்கே அத்தனை விரைவு என்றால் ஏதோ ஆபத்து இருக்கக்கூடும்; அந்த ஆபத்து அவர்களுக்கா, அவர்களால் மற்றவர்களுக்கா என்பது இப்போது தெரியாது. கீழே பைலட் நவீனிடமிருந்து அருணுக்கு அதே நேரம் அவசர அழைப்பு வந்தது.
‘கோலாலம்பூரிலிருந்து நமக்கு ஒரு தகவல் வந்ததில்ல ஒரு கப்பல கடத்திட்டாங்கன்னு; இப்ப சேடிலைட் தகவல் சொல்லுது அது நமக்குப் முப்பதியிரண்டு நாடிகல் மைல் தொலவில, முன்னாடி போற கப்பலாக்கூட இருக்கலாமாம்.’
“நான் டெலெஸ்ல பாத்தேன்; அது வேகமா ஓட்றது. ரேடியோல பேசிப் பாக்கலாமா?”
‘செஞ்சுட்டேன்.அவங்க ரெஸ்பான்ட் செய்யல.’
“டிஸ்ட்ரெஸ் செய்தி கூட இல்லையா?”
‘அதுதான் இடிக்குது’
“அதுல கொள்ளைக்காரங்க இருக்கலாமோ, என்னமோ? அவங்க கப்பல் க்ரூவை பிணையாக் கூட வச்சிருக்கலாம்; ‘கோட’ ஜேம் செஞ்சிருப்பாங்க. இல்லன்னா ஏன் ஓட்றாங்க?”
‘வார்னிங் ஷாட் கொடுப்போம்; நிற்காம ஓடினா துரத்த வேண்டியதுதான். என் அட்ரீனல் இப்போதே எகிறி அடிக்குது’
ரேடியோவில் மீண்டும் முயன்று பார்த்துவிட்டு இவர்கள் எச்சரிக்கை வெடியோசை எழுப்பினார்கள். அந்தக் கப்பல் விலகி ஓட ஆரம்பித்தது.சந்தேகமேயில்லாமல் அது கடத்தப்பட்ட கப்பல் தான். ஆனால் அதில் எப்படி நம்முடைய சின்னம் போல் தெரிகிறது? என்ன ஒரு அயோக்கியத்தனம்? மேல் கால் பகுதியில் நம் தேசியக் கொடி, அலையாடும் மற்ற பகுதிகளில் நம் எம்ப்ளம். அப்படியென்றால்…இல்லையே நம் கப்பல்கள் கடத்தப்பட்டதாகச் செய்தியில்லையே! மீனவப் படகுகள் பிடிபடுகின்றன, மீனவர்கள் சிறைபிடிக்கப்படுகிறார்கள்; ஆனால்,கப்பல்? இது நிச்சயமாகக் கவனத்தைத் திருப்பும் முயற்சிதான். என்ன ஒரு அராஜகம், நம் கைகளைக் கொண்டு நம்மை குத்தப் பார்க்கிறார்களே! அருணும்,நவீனும் இப்படி யோசித்துக் கொண்டிருந்தார்கள்.
வர்ஷிணி பரபரப்பாக வந்தாள். ‘இது ரெயின்போவா இருக்கலாம். அதான், ஒரு ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்தோனேஷியால கோலா தாஞ்சூங்க் போர்ட்ட விட்டுக் கிளம்பி மலாக்கா ஸ்ட்ரெட்டில கடத்தப்பட்ட ஜப்பானோட சரக்குக் கப்பல். அலுமினிய தகடுகள், குழாய்கள்,அலாய் இணைப்புகள் இருந்ததாம். கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பு’ என்றாள்.
“அந்தக் கப்பல் இந்த வழில வர சான்ஸ் உண்டு. ஆனா,அந்தக் கப்பலின் க்ரூவுக்கு என்னாச்சு?”
‘அருண், கோலாலம்பூர் ந்யூஸ் இது. பைரேட்ஸ் ‘ரெயின்போ’வின் அத்தனை க்ரூவையும் பணயமாக்கிட்டாங்க. ஒரு நாட்டுப்படகில தப்பிச்ச சாலமன்கிற சைலரை ஃபிஷர்மேன் காப்பத்தி மலேசியால ஒப்படைச்சிருக்காங்க. மீதி பதினோரு பேரும் கப்பலுக்குள்ள பிணையா இருக்கணும்.’
“என்ன கேக்கறாங்களாம்?”
‘அது தெரியல. ஆனா, பிணையா மனுஷங்கன்னாக்க,ஏதோ கொள்ள மட்டுமில்ல, தீவிரவாதி விடுதலயக் கேக்கற க்ரூப்போ என்னவோ?’
“அப்போ இது அந்த ஹைஜேக்ட் கப்பல்தான். எதுக்கும் ரொம்ப கிட்ட போ வேணாம்.நம்மோட வேகத்தை கொஞ்சம் குறப்போம்;அவங்க ரியாக்க்ஷனைப் பாப்போம்”
‘ஆனாக்க, நம்ம ரேடார்ல அவங்க இருக்கணும்;பாக் எல்லைக்குள்ள போறத்துக்குள்ள பிடிச்சுடணும்.’
காலையில் பார்த்த நீலக்கடல், மதியத்தில் கரு நீலப் பளபளப்போடு இருந்தது. அதுவும் மாறி இலேசாக செம் மஞ்சள் மினுக்க ஆரம்பித்தது. ‘சுதா,சுதா’ வென அருணின் மனம் அரற்றியது. தான் இப்போது இருக்கும் நிலை அவளுக்குத் தெரியுமா? அவள் பூஞ்சிரிப்போடும், ஆர்வத்தோடும் கேட்டுக் கொண்டிருந்த கடற்பயண அனுபவங்கள்; இரவில் கதையெனக் கேட்பவள் பகலில் அதன் அபாயங்களைப் பற்றி மட்டுமே பேசுவதும், தரையில் பார்க்கக்கூடிய வேலைகளே இல்லையா என ஆதங்கப்படுவதும் அவனின் சந்தோஷத் தருணங்கள். அதற்காக அவளை அவன் கேலி செய்கையில் மிரளும் விழிகளில் திரளும் நீர். ஆறு மாதங்களுக்கு முன் அவளை அவனோ, அவனை அவளோ அறிவார்களா? இந்த அன்பு அத்தனை வலுவானதா? சுதா, நீயும் என்னைத்தான் நினைத்துக் கொண்டிருப்பாய். எனக்கு வெற்றி வாழ்த்து சொல் என் துணையே!
வான் மகனை ஆரத்தி எடுத்து வரவேற்க அலைக்கரங்கள் செம்மை பூண்டு எழுந்தன. ‘நீ வா, என் மடியில் நீ உறங்கும் நேரம் இது. உன் தீக்கங்குகள் குளிரட்டும். மஞ்சள், குங்குமம் என சிறிது நேரம் உன் வண்ண ஜாலங்களை இந்த மானுடம் பார்க்கட்டும்.உறங்குவது விழிப்பதற்கே, என் மகனே!
இவர்கள் கப்பலின் வேகத்தைக் கூட்டினார்கள். அந்தக் கப்பலைப் பெரிதாக்கிக் காட்டும் மற்றொரு கருவி அதில் ‘மேக் தூத்’ என எழுதப்பட்டிருந்ததைக் காட்டியது. ‘என்ன ஒரு அட்டூழியம்’ என இவர்கள் இரத்தம் கொதித்தது.
சிறு படகுகளையும், நூலேணியையும் மறு பக்கத்தில் தயார் நிலையில் வைத்தார்கள். இப்போது அந்தக் கப்பல் பதினைந்து கி.மீ தொலைவில் இருந்தது. மீண்டும் எச்சரிக்கை குண்டுகளை அருண் வெடித்தான். அவர்கள் ராக்கெட் மூலம் வெடிகுண்டுகளை வீசித் தாக்கத் தொடங்கினார்கள். கீழே இறங்க நினைத்த சூரியன் செவ்வண்ணப் பந்தாக நிலை கொண்டான். காற்று அலைக்கரங்களைக் கொந்தளிக்கச் செய்தது. நவீன் கையெறி குண்டுகளை வீசினான். வெடிகுண்டு தாக்கி கப்பலுள்ளே விழுந்த அப்பாஸை வர்ஷிணி தளத்தோடு தவழ்ந்து வந்து உள் அறைக்கு இழுத்துச் சென்றாள்.
அருணின் தொடர்ந்த தாக்குதல் அந்தக் கொள்ளையர் கப்பலின் பின் பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. கப்பல் மூழ்கும் அபாயமும் ஏற்படலாம். அவர்களிடமிருந்து செய்தி வந்தது.
“நாங்கள் இந்தக் கப்பலை வெடித்து சிதறச் செய்துவிடுவோம். அதனுடன் பதினோரு ஜப்பானிய மாலுமிகளும், தொழில் வல்லுனரும் அழிந்துவிடுவார்கள்.”
‘என்ன பயமுறுத்துகிறாயா? சரண்டர் ஆவதைத் தவிர உங்களுக்கு வேறு வழியில்லை’
“இந்தியர்கள் புத்திசாலிகள்.”
‘கப்பலைச் சிதறச் செய்தால் நீங்களும், நீங்கள் கடத்திய சரக்கும் கூடவே அழியும். நீங்கள் அப்படிச் செய்ய முடியாது. சரணடையுங்கள். இது இறுதி எச்சரிக்கை’
“முட்டாள்.சரக்குகள் பாதி ஏற்கெனவே கள்ளச் சந்தைக்குப் போய்விட்டன. மீதியும், நாங்களும் செல்ல விமானம் மேல்தளத்தில் உள்ளது. என்ன, நீங்கள் எங்களை விட்டுவிட்டால்,அவர்களை, அந்த ஜப்பானியர்களை கராச்சியின் அருகே விட்டுவிடுகிறோம்.”
‘…..’
“எங்களுக்குத் தெரியும். நீங்கள் நேரம் கடத்துகிறீர்கள்.இதோ, பாவம், இந்த ஜப்பானியனைச் சுடப் போகிறேன். ஒன்று, இரண்டு …”
‘ஸ்வாங்கை எடுக்க வேண்டும். வேறு வழியில்லை’
“அருண், உனக்கு மட்டும் தான் தெரியும்.ஆனா, உன்னை அனுப்பணுமா?”
நவீன் தடுத்தும் அருணும், ஆறு சிப்பாய்களும் வானிலிருந்து அந்தக் கப்பலைச் சுற்றி வளைத்தார்கள். அவர்கள் எதிர்க்க முடியவில்லை; அனைத்துக் கொள்ளையரையும் பிடித்துவிட்டதாக நினைத்தார்கள். பரிதாபகரமான நிலையில் ஜப்பானியக்கப்பலின் க்ரூ ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கப்பலின் அடித்தளத்தில் அடைக்கப்பட்டிருந்தார்கள். இருள், குளிர், குழப்பமான ஒலிகள், கட்டவிழ்க்கையில் கண்ணீருடன் கட்டிப்பிடித்தார்கள். ‘ப்ரேவ் இன்டியன், க்ரேட் இன்டியா’ என்று முழந்தாளிட்டு வாழ்த்தினார்கள். ஜப்பானிய மாலுமி மிகத் திறமையாக அடிப்பாகம் சிதைவுண்ட கப்பலைச் செலுத்தி விக்ரத்தின் அருகே கொண்டு செல்கையில் மறைந்திருந்த கொள்ளையன் ஒருவன் அருணை துப்பாக்கியால் சுட தடுமாறி அவன் அலைகளில் விழுந்து எங்கோ இழுத்துச் செல்லப்பட்டான். காற்று சுழன்று வேகம் கூட்டியது. விக்ரம் விலகி விலகித் தள்ளாடியது. ஒரு நாள், கூடிய விரைவில், அவளை அழைத்து வந்து, அவள் கண்களைக் கைகளால் பொத்தி கப்பலின் மேல் தளத்தில் நிறுத்தி ‘உன் நெற்றியிலொன்று, வானிலொன்று என இரு மாதுளை மொக்குகளைப் பார்’ என்று காட்ட வேண்டும்.அவன் அணையும் வேளையில்,வானில் அவன் கலைத்துப் போடும் துகில்களை உனக்கென கொண்டு தரட்டுமா என்று கேட்க வேண்டும்.’
“கடலோ,நிலமோ,பாலையோ எங்கோ அருண் இருக்கிறார். அவரைக் காற்று வழியில் சென்று நான் தேடி அடைவேன்.” மணற் குன்றின் மேல் அகல் விளக்குடன் நிற்பவளை அலைகள் போய் அருணிடம் சொல்லாதா என்ன?