தலைமுறை மாற்றங்கள்
நாளை நடக்கப் போகும் அவனது குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்காக வீடே விழாக்கோலம் பூண்டிருந்தது. வீடு முழுக்க பல வண்ணங்களில் பலூன்களும், கண்ணைப் பறிக்கும் நிறங்களில் காகிதப் பூக்களும் நிரம்பி வழிந்தன. வீட்;டு வாசலில் மாவிலைத் தோரணங்கள்.
முதல் நாளன்றே, அவனது பெற்றோர், மாமனார், மாமியார், மற்றும் உறவினர்களின் வருகையால் வீடே களைகட்டியிருந்தது.
அவனது மனைவி தெய்வானையின் முகம் முழுக்க மகிழ்ச்சிக் குவியல். அவள் தன் அன்புக் கணவனின் முகத்தையும், அன்பு மகனின் முகத்தையும் பார்த்துப் பார்த்து பூரித்துப் போயிருந்தாள்.
தெய்வானைக்கு இது தலைப்பிரசவம். குடும்ப வழக்கப்படி முதல் பிரசவமும், குழந்தையின் பெயர் சூட்டுவிழாவும் மாமனார் வீட்டில்தான் நடக்கவேண்டும். மாறாக மாமனாரிடம் இரண்டையும் தானே பார்த்துக் கொள்வதாக விரும்பி வேண்டி கேட்டுக் கொண்டான் அவன். அவரும் மாப்பிள்ளை விருப்பத்திற்கிணங்க மறுப்பேதும் தெரிவிக்காமல் இதற்கு சம்மதம் தெரிவித்திருந்தார்.
“மாப்ளே சாப்பாட்டுக்கு ஆர்டர் கொடுத்துட்டீங்களா? காலை டிபனுக்கும், மதியச் சாப்பாட்டுக்கும் என்னென்ன அயிட்டம்?“ வெங்கடாசலம்
அவன் ஹோட்டலில் இருந்து வாங்கி வந்த மெனுப் பட்டியலை மாமனாரிடம் கொடுத்தான். பட்டியலைப் பார்த்த அவர் முகத்தில் திருப்தியும் கூடவே மகிழ்ச்சியும் இருந்ததைப் பார்த்து, “என்ன மாமா ……………?“ கேள்வியை முடிக்கும் முன்பே “எல்லாம் சூப்பர் மாப்ளே! சொன்னதோடு
“மாப்ள கொஞ்சம் இப்படி வாங்க“ தனியாக கூட்டிச் சென்று பணம் கொடுத்ததை, சற்றும் எதிர்பார்க்காத வேலாயுதம்,
“மாமா பிரசவத்தையும் அதோட குழந்தைக்கு பெயர் வைக்கிற விசேசத்தையும் நாந்தான் செய்யணும்னு விருப்பப்பட்டேன். அதுக்கு நீங்களும் ஒத்துக்கிட்டீங்க தான“.
“அதுக்காக செலவு முழுக்க நீங்க ஏத்துக்கணுமா?“ .
“மாமா நீங்க ரிடையர்டு ஆயாச்சு. உங்க சக்திக்கு மீறி. எங்க கல்யாணத்தையும் ஆடம்பரமா நடத்துனீங்க. இன்னும் மாப்ள சிவாவோட ஒரு வருச படிப்பு இருக்கு. அவன் வேலைக்குப் போற வரைக்கும் உங்களோட பென்சன் பணத்தை வச்சுத்தான் எல்லா செலவையும் பார்த்துக்கணும். இதையெல்லாம் நினைச்சுத்தான் இப்படி ஒரு முடிவுக்குவந்தேன்.“
மாப்பிள்ளை ஒரு கறார்ப்பேர்வழி. பிடிவாதக்காரர் என்று அவருக்குத் தெரியும். இருப்பினும், தாத்தா பேரனுக்கு செய்ய வேண்டிய முக்கியமான கடமை என எடுத்துச்சொல்லியும் அவர் கேட்காதது மனசுக்கு வருத்தமாகத்தான் இருந்தது..
“என்ன அத்தான் மருமகங்கூட பேச்சு சூடா இருக்கு?“ வேலாயுதத்தின் அப்பா
வெங்கடாச்சலம், மருகமனிடம் பேசியதை சம்பந்தி வேதாச்சலத்திடம் சொல்லி முடித்தார்.
“அத்தான் இது உங்க கடமைதான் எனக்கும் புரியுது. நம்ம காலத்தப்போலவா இப்போ சடங்குகள் சம்பிரதாயங்கள் நடந்துக்கிட்டிருக்கு? காலச் சுழற்சியில் உடுத்துற உடையில இருந்து, சாப்பிடுற சாப்பாடு வரைக்கும் எல்லாமே மாறிடுச்சு. அதுக்கேத்தமாதிரி நாமும் மாறிக்க வேண்டியதான். நாங்க எதிர்பார்த்ததுக்கும் மேல நீங்களும் கல்யாணத்துக்கு செஞ்சுட்டீங்க. .அவனோட குழந்தைக்கு அவன் செய்யணும்னு பிரியப்படறான். விட்டுடுங்க.“
அப்பா பிள்ளை இருவரின் மனசும் ஒருசேர இருப்பதை நினைத்துப் பார்த்தார் வெங்கடாச்சலம். இப்படி பெருந்தன்மையுள்ள மனிதர்களும் இந்த பூமியில் இருக்கத்தான் செய்கிறார்கள். தனக்குள் சொல்லிக் கொண்டார்
ஆனாலும் சம்பந்தி சொன்னதை ஏற்றுக்கொள்ள மறுத்தது அவர் மனம். இந்தப் பணத்தை பேரன் பெயரில் அஞ்சலகத்திலோ, வங்கியிலோ .டெபாசிட் செய்தால் அவன் படிப்புச் செலவுக்கு ஆகும். அதை ஊர் போய் சேர்ந்ததும் செய்துவிடவேண்டும் என்றும் மனதிற்குள் தீர்மானித்துக் கொண்டார்.
மாலை மணி ஆறு. விளக்கேற்றி விட்டு ஹாலிற்கு வந்தாள் தெய்வானை. சொந்தங்களிடம் பேசிக் கொண்டிருந்த தன் கணவனிடம் “என்னங்க நம்ம குழந்தைக்கு என்ன பெயர் வைக்கிறது. இன்னும் முடிவு பண்ணலையே?“
“ஞாபகம் இருக்கு. முதல்ல பூஜைக்கு வாங்கவேண்டிய சாமான்களை வாங்கிட்டு வந்துடுறேன். ராத்திரி சாப்பாடு முடிஞ்சதும் முடிவு பண்ணிருவோம்.”
நாளைக்கான வேலைகளையும் இரவு சாப்பாட்டையும் முடித்து தெய்வானையோடு மொட்டை மாடியில் அமர்ந்திருந்தான் வேலாயுதம். குளிர்ந்தகாற்றுடன் .நிலா வெளிச்சமும் சேர்ந்து இப்படி ஒரு ரம்யமான சூழலில் மகனின் பெயரை தேர்வு செய்வது இருவருக்கும் ஒரு புதிய அனுபவத்தையும், மனசுக்குள் மட்டற்ற மகிழ்ச்சியையும் கொடுத்தது..
தெய்வானை, பத்து பெயர்கள் எழுதிய பேப்பரை கணவனிடம் கொடுத்தாள். அதில் அவனுடைய தகப்பனார் பெயரும் இருந்தது. அதைப் பார்த்த வேலாயுதம், மனைவியை நன்றிப் பெருக்குடனும், பெருமை பொங்கப் பார்த்தும் அவளை உச்சி முகர்ந்தான். தெய்வானையின் முகம் பூரிப்பால் சிவந்து போனதை தன்னை மறந்து பார்த்துக் கொண்டிருந்தான். இருவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்
அவனது திருமணத்தின் போதும் அதற்குப் பின்னரும் ‘நீ குடுத்து வச்சவன்டா என்று நண்பர்களும், ஒம்மனசுக்கேத்த மாதிரி அழகும் கூடவே அன்பும் நிறைஞ்ச மனைவி கிடைச்சிருக்காப்பா‘ என்று உறவினர்களும் சொன்னதை நினைத்துப் பார்த்தான் வேலாயுதம்,
“நீ எழுதிவச்சிருக்குற எல்லாமே நல்லாருக்கு தெய்வானை. ஆனா இதுல எது உனக்குப் பிடிச்சிருக்குன்னு சொல்லு.“
“எனக்கு பிடிச்சத சொன்னா நீங்க ஒத்துப்பீங்களா. அதுக்கு சரின்னு சொன்னா சொல்றேன்.“
“எனக்கு பிடிச்சிருந்தா ஒத்துக்கிறேன் சொல்லு“
“வேதா வெங்கட்“
தெய்வானையின் புத்திசாலித்தனத்தை மனசுக்குள் மெச்சினான். ஆனால் என்ன பதில் சொல்வது…..?
அவன் உடனே பதில் சொல்லாதது அவளுக்கு ஏமாற்றத்தை தந்தது.
“பிடிக்கலைன்னு சொல்றதுக்கு இவ்வளவு நேரமா?“
“அவன் சிரித்துக்கொண்டே பிடிச்சிருக்கு, இத அடுத்த குழந்தைக்கு வச்சுக்கலாமே“
“அதுக்கு. எதுக்கு எங்கிட்டயும் கொடுத்து, என்னோட நேரத்தையும் வீணாக்கிக்கிட்டு….,“
“உனக்கும் ஒரு ஆசை இருக்கும் இல்லையா. அதுக்காகத்தான்…..“
“நானு ஆசைப்பட்டதும் உங்களுக்கு பிடிக்கலையே. குழந்தை முழிச்சிருவான்.“
“உனக்கும் அந்த பேரு பிடிக்கும்.“
அவன் சொன்ன பெயரும், அதை தேர்வு செய்ததற்கான காரணத்தையும். அவனது நன்றி உணர்வையும், புத்திசாலித்தனத்தையும் பாராட்டியதோடு,
“ரொம்ப சந்தோசமா இருக்குங்க. மாமாவும் அத்தையும் அப்பவே கேட்டாங்க. சொல்லிடுறேன். அவங்களும் ரொம்பவே சந்தோசப்படுவாங்க.“
“நாளைக்கி நம்ம குழந்தை காதுல இந்த பேரைச் சொன்னதுக்கு அப்புறந்தான் சொல்லணுமாம். அதுதான் ஐதீகமாம். ஐயர் சொன்னாரு. அதானால…….“
“சரிங்க.“ அவனின் கன்னத்தை திருகிவிட்டு…. வலிக்குதா‘ செல்லமாக அவன் காதருகில் சொல்லிவிட்டு “வாங்க போகலாம்“
‘‘அந்தக் காலத்துல, பிறக்குற ஆணுக்கும், பெண்ணுக்கும் அவங்க அவங்க தாத்தா ஆச்சி பெயர வச்சி சந்தோசப்பட்டாங்க. இப்ப அதெல்லாம் மலையேறிப் போச்சு.. இப்பல்லாம் மாடர்னால்ல பேரு வைக்கிறாங்க. அதுவும் கம்யூட்டர்ல தேடறாங்களாம். இத பெத்தவங்களுமே பெரிசா எடுத்திக்கிறதில்ல. காலம் மாறிப்போச்சு.“
உறவுகளின் பேச்சைக் கேட்ட இருவருக்குமே, மனசுக்குள் ஒரு தடுமாற்றம். இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. ஆனாலும் ‘அப்பாவும், அம்மாவும் நிச்சயம் என்னைப் பாராட்டுவார்கள்‘ தனக்குள் சொல்லிக் கொண்டான் அவன்.
மறுநாள் காலை எல்லோருமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த பெயர் சூட்டுவிழா கணபதி ஹோமத்துடன் ஆரம்பமாகியது. ஐயரின் மந்திரச்சொற்கள் வீடு முழுக்க ஒலித்துக் கொண்டிருந்தது.
உற்றார், பெற்றோர், நண்பர்கள் சூழ, புத்தாடை உடுத்தி மடியில் குழந்தையோடு தன் கணவன் அருகில் அமர்ந்திருந்தாள் தெய்வானை.. இருவரின் முகங்களிலும் சந்தோசம் பொங்கி வழிந்தது. மடியில் வைத்திருந்த குழந்தை தூங்கியபடி சிரித்த அழகை தன் கணவனோடு சேர்ந்து ரசித்தது தெய்வானையின் முகத்தில் தெரிந்தது….
“பார்வதி எங்கண்ணே பட்டுரும் போல இருக்கு. இன்னிக்கு உம்மகன், மருமக, ஒம் பேரனுக்கும் மறக்காம திருஷ்டி சுத்திப் போட்டுரு.“ வேதாச்சலம்
அனைத்து பூஜைகளையும் முடித்த ஐயர் “இரண்டு பேரும் மூணு முறை குழந்தை காதுல பெயரை சொல்லுங்கோ“
இருவருமாக குழந்தையின் காதுகளில் சொன்னார்கள்.
“மற்றவாளுக்கும் குழந்தைக்கு வச்ச பெயரை சத்தமா சொல்லுங்கோ“
வேலாயுதம் “தெய்வநாயகம்“ என்று உரக்கச் சொன்னான். ஆனந்தம் கண்களில் பொங்கிப் பெருக, கூட்டத்தின் பின்னால் அமர்ந்திருந்த அவரை பார்த்து இருகரம் கூப்பி வணங்கினான். அவனுடைய செய்கை, அவருடைய பெயரைத்தான் அவன் குழந்தைக்கு வைத்திருப்பதை உறுதிப்படுத்தியது.
அனைவரும் திரும்பிப் பார்க்க. நெற்றி நிறைய விபூதியும், குங்குமப் பொட்டுமாக, தெய்வகடாட்சத்தோடு மனைவியுடன் அமர்ந்திருந்தார் அவர். எளிமைக்கு இலக்கணமாய், கூட்டத்தில் ஒருவராய் அமர்ந்திருந்த அவர்தான் அவனது முதலாளி என்று யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை தான். அவர் விழா ஆரம்பித்த பின் வந்ததால் அவரை அறிமுகப்படுத்தவும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது வேலாயுதத்திற்கு. அவனது திருமணத்தின்போதும் அவர் வெளிநாடு சென்றிருந்ததால் அதிலும் கலந்து கொள்ளவில்லை. அவரை வந்திருந்த அனைவரும் அறிந்திராதிருக்க அதுவும் ஒரு காரணமாயிற்று.
வேலாயுதம் அவரை தனது முதலாளி என்று அனைவருக்கும் அறிமுகப்படுத்திவைத்தான்.
“பட்டப் படிப்பு என்ற தகுதியோடு மட்டுமே வந்த என்னை அவருடைய நிறுவனத்தில் எழுத்தராகச் சேர்த்தார்.. குறுகிய காலத்திலேயே எனது உழைப்புக்கும் நேர்மைக்கும் கைமாறாக நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பையும் கொடுத்தார். இந்த வீடு, கார் என்று நானே நினைத்துப் பார்க்க முடியாத உயரத்திற்கு எனது வாழ்க்கையை உயர்த்திய அவருக்கு நான் செய்யும் நன்றிக் கடன் இதை விட வேறு என்னவாக இருக்கமுடியும்?.“
தனது மகனின் செயலை நினைத்துப் பெருமை பொங்கப் பார்த்த அவனது பெற்றோர். கண்ணீர் மல்க பாராட்டிய அவனது மாமனார், மாமியார். அவனது நன்றி உணர்வை பாராட்ட வார்த்தைகள் வரவில்லை என்று உற்றாரும், நண்பர்களும் வாழ்த்தியபோது,
“இதில் பெரும்பங்கு இவளுக்குந்தான்“ அருகிலிருந்த தெய்யவானையை காட்டி, மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று அவள் காதுகளில் கிசுகிசுத்தான்.
எல்லாவற்றிற்கும் சிகரம் வைத்தார் போல் இருவரும் தன் குழந்தையோடு, முதலாளி அவர் மனைவி இருவரின் பாதங்களையும் தொட்டு வணங்கினார்கள். அவரும் “என்னோட பேரை உம் மகனுக்கு வச்சிருக்க. அவன் பேர் புகழ் நீண்ட ஆயுளோட வாழ்வாம்பா.“ வாழ்த்திய தெய்வநாயகம் மட்டுமல்ல அனைவரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர்.