தில்லை நடராஜருக்கு பைக் ஓட்ட தெரியுமா?
எனக்கு நன்கு தெரியும். புராணத்தில் படித்துள்ளேன், வரை படத்திலும், திரைப்படத்திலும் பார்த்துள்ளேன் சிவனின் வாகனம் நந்தி தேவன் என்று. பின்னர் எனக்கு ஏன் இந்த சந்தேகம் வர வேண்டும். என் சந்தேகத்திற்கு காரணம் இல்லாமல் இல்லை.
சில வருடங்களுக்கு முன் திடீரென மயிலாடுதுறை சுற்றி உள்ள கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வரலாம் என முடிவெடுத்தோம். அடிக்கடி எடுக்கும் முடிவுதான். அதுபோல எப்பொழுதுமே திடீரென்றுதான் இது போன்ற முடிவுகள் எடுக்கப்படும். இது போன்ற முடிவுகளை முன் மொழிவது, எதிர்ப்பின்றி வழி மொழிவது போன்ற சிரமமான பணிகளை என் மனைவி எடுத்துக் கொள்வாள். அதை செயல் படுத்தும் சுலபமான வேலை மட்டும் எனக்கு ஒதுக்கப்படும்.
அந்த வாரம் சனி, ஞாயிறு ஒதுக்கப் பட்டது. வெள்ளிக்கிழமை மதியம் குழந்தைகள் பள்ளியில் இருந்து வந்தவுடன் கிளம்புவதாக ஏற்பாடு. வழக்கமாக தங்கும் மாயவரம் பாம்ஸ் விடுதியில் அறை ஏற்பாடாகி விட்டது.
வெள்ளிக் கிழமை மாலை வேளை, வீட்டை பூட்டி விட்டு வாசலுக்கு வந்தவுடன்தான் அலமாரியை பூட்டினோமா என்ற சந்தேகம் வந்தது. கதவை திறந்து சரி பார்த்து பூட்டை இரண்டு தடவை இழுத்து பார்த்து காரில் அமர்ந்தோம். அச்சமயம் மனைவிக்கு பூஜை அறை விளக்கை எடுத்து வைத்தோமா என்ற ஐயம். பின் அதையும் சரி பார்த்து கிளம்ப மாலை நான்கு மணியாகி விட்டது.
இடையில் சிதம்பரத்தில் இரவு உணவை முடித்துக் கொண்டு பத்து மணிக்கு மயிலாடு துறை சென்றடைய திட்டம்.
குடும்பத்துடன் இதுமாதிரி செல்கையில் நம்மையும் அறியாது மனதில் குதூகலம் வந்து விடும். பேச்சும் சிரிப்புமாக கார் போய்க் கொண்டிருந்தது.
சிதம்பரம் அருகே புவனகிரியை கார் நெருங்கும் பொழுது மணி ஒன்பதை காட்டியது. பின் சீட்டில் உறக்க நிலையில் குழந்தைகள். அன்று முட்லூர், புவனகிரி கடைவீதிகள் சற்று வித்தியாசமாக எனக்கு பட்டது. அளவிற்கு மீறிய அமைதி. வழக்கமாக எதிரிலும், போட்டி போட்டு கடந்தும் செல்லும் பேருந்துகளை காணவில்லை. அதுபோலவே எதிர் பக்கமோ, பின்னாலோ கார்களையும் காண வில்லை. ஏதாவது கூறி மனைவியை பயப்படுத்தாமல் காரை மெதுவாக ஓட்டிச்செல்கிறேன்.
புவனகிரியிலிருந்து சிதம்பரம் செல்லும் வழியில் வெள்ளார் நதி பாலத்தில் நுழைகிறேன். அங்கொன்றும் இங்கொன்றுமாக டயர்கள் எரிந்து கொண்டிருக்கின்றன. வீதியில் நடமாட்டம் இல்லை. அதை கடந்து செல்லும் பொழுது பாலத்தின் மறு பக்கம் பெரும் அளவில் தீயைப் பார்க்கிறேன். கார் நின்று விட்டது. மனதில் பயம் பற்றி எரிய ஆரம்பித்தது. முன்னும் பின்னும் யாரும் இல்லை. சற்று கூர்ந்து பார்த்தால் பல உருவங்கள் கைகளில் ஏதேதோ வைத்துக் கொண்டு நிற்பது தெரிந்தது. வழக்கம் போல மனைவியின் உதடுகள் பாசுரங்களை உச்சரிக்க ஆரம்பித்தன. திரும்பிச் செல்லவும் பயம்.
முன் பக்கம் கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த நான் என் அருகில் பைக் ஒன்று வந்து நின்றதை கவனிக்கவில்லை. ஒரு கை கண்ணாடியை தட்டும் சத்தம் கேட்டு திடுக்கிட்டு பார்த்தேன். கை கண்ணாடியை கீழ்இறக்கச் சொன்னது.
பைக்கில் அமர்ந்து இருந்தவர் வெள்ளை வேஷ்டி, பனியன், கழுத்தில் துண்டு சகிதம் இருந்தார். கண்ணாடி இறங்கியதும் காரினுள் உற்று பார்த்து “ எங்கே செல்கிறீர்கள்” என்றார். நான் “மயிலாடுதுறை” என்றேன். “ வழியில் உங்களை போலீஸ் தடுக்க வில்லையா” என்றவர் “ ஒரு பிரிவினர், வாண்டையார் ஒருவரை வெட்டி விட்டார்கள்’ சிதம்பரம் பற்றி எரிந்து கொண்டுள்ளது. போகும் வாகனங்களை அடித்து நொறுக்குகிறார்கள். நீங்கள் திரும்பியும் செல்ல முடியாது. நீங்கள் வந்த வழியில் பறங்கிப் பேட்டையிலிருந்து மற்றொரு கும்பல் வந்து கொண்டுள்ளது” என என்னை மரண பயத்தில் கொண்டு நிறுத்தினார்.
நடுக்கத்துடன் நான்” இப்ப, என்ன செய்யறதுங்க” என்றேன். அவர் “ கவலைப்படாதீங்க வண்டியை திருப்பி என் பின்னால் வாங்க என்றார்”. எனக்கு வேறு வழி ஒன்றும் தெரிய வில்லை. அவரை நம்பி பின் தொடர்ந்தேன். சந்து பொந்துகளில் நுழைந்து, நுழைந்து சென்றார். மெயின் ரோடு வந்தது. “ நாம் சிதம்பரத்தை தாண்டி விட்டோம், சீர்காழி அருகில்தான், இனி பயமில்லை செல்லுங்கள்” என்றார்.
நான் காரிலிருந்து நன்றி சொல்ல இறங்கும் முன் அவர் பைக் திரும்பி சென்று கண்களிலிருந்து மறைந்தும் விட்டது.
நம்மை வழிகாட்டி அழைத்து வந்தது தில்லை நடராஜன்தாங்க என்று என் மனைவி தீர்க்கமாகக் கூறினாள்.
“குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும்
பனித்த சடையும் பவளம் போல் மேனியில் பால் வெண்றும்
இனித்தமுடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்
மனித்த பிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே!”
என்ற அப்பரின் பதிகத்தை அவள் சொல்லும் பொழுதுதான் பைக் கார் அருகில் வந்து நின்றதாம்.
அதை மறுத்துச்சொல்லும் தைரியம் எனக்கில்லை.