பல வருடங்களுக்கு முன்னால் இந்த சிறுவனை என்னிடம் ஒரு மனோதத்துவ மருத்துவர் அனுப்பி வைத்தார். அவர் வெளிநாடு போக வேண்டியதாக இருந்ததால் தானே சிகிச்சை தர முடியவில்லை..
வந்தவனுக்கு ஆறு வயது என அம்மா குறிப்பிட்டாள். அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு இருந்தாள். அவனோ அப்படியே கண்கொட்டாமல் என்னை முறைத்துப் பார்த்தபடி இருந்தான். இடது பாதத்தால் ஆதி தாளம் போட்டுக் கொண்டு இருந்தான். தலை வாராமல் இருந்தது, இன்றைய சர்ஃப் விளம்பரம் போலச் சட்டை மண்ணில் புரண்டதைக் காட்டியது. அந்த வயதில் இப்படி இருப்பது இந்த வயதினருக்கு இயல்பு. என்றாலும் அவனின் உடல்மொழி அவனைப் பற்றி பலவற்றைச் சொல்லியது.
பெயரைக் கேட்டதும், உடனடியாக, “ராமு” என்றான். அம்மா அவன் தோளை அழுத்தி, “ஸாரி மேடம், இவன் எப்போதும்…” முடிப்பதற்குள் நான் அவர்களை நிறுத்தி, “ராமுவை பெயரைக் கேட்டேன், சொன்னான். ஸாரீ எதற்கு?” என்று அம்மாவைப் பார்த்துச் சொன்னதும், ராமு அம்மாவைப் பார்த்து என்னைப் பார்த்தான்.
அம்மா, ஸைக்காட்ரிஸ்ட் கொடுத்த ரிபோர்ட்டை என்னிடம் தந்தாள். ராமுவை வெளியூரிலிருந்து ஒருத்தர் அந்த ஸைக்காட்ரிஸ்டிடம் அனுப்பி இருந்தார். அதில் ராமு முரட்டுத் தனமாக இருப்பதாகவும், பள்ளியில் பல சேட்டை செய்வதாகவும், எப்போதும் மறு பேச்சு பேசுவதாலும் அவனுக்கு “அடங்காமல் எதிர்க்கும் கோளாறு” (Oppositional Defiant Disorder) என்று ஆங்கிலத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
ராமுவின் பக்கத்து வீட்டில் யாரோ இதைப் படித்து “செல்வி அக்கா ! இது, உருப்படாதுனு சொல்லி இருக்காங்க” என்றதை ராமு முன்னால் சொல்லியிருந்தார்கள்.
நான் தாளைப் படிக்கும் போதே அவள் ராமுவின் மாற்றத்தைப் பற்றிச் சொல்ல வேண்டும் எனக் கூறி, பட்டியலிட ஆரம்பித்தாள். குழந்தை முன்னால் அவர்களைப் பற்றிச் சொல்வதை நான் என்றுமே அனுமதிப்பதில்லை என்று விளக்கம் அளித்தபின் ராமுவை வெளியில் அமரச் சொன்னேன். அதோடு, அம்மா சொல்ல ஆர்வமாக இருப்பதால், அவர்களிடம் பேசின பின்னே அவனிடமும் பேசப் போவதாகச் சொன்னேன்.
அவன் தோளைச் சுற்றி கையை அணைத்து, வெளியில் உட்கார வைத்து வந்தேன். ஏனோ இந்தக் குழந்தை பல சங்கடங்களைச் சந்தித்தவன், தவிப்பவன் எனத் தோன்றியது.
கடந்த ஆறு மாதங்களாகத் தான் ராமுவிடம் மாற்றம் தெரிந்ததாகச் செல்வி சொன்னாள். எது சொன்னாலும் மறு பேச்சு என்றாள், சொல்வதைச் செய்ய மறுப்பதும், பல சமயங்களில் மற்றவர்கள் மேல் பழி போடுவதும் உண்டாம், மற்றும் கோபம் அதிகமானதாம். இவையெல்லாம் வீட்டில். பள்ளியில் படிப்பில் கவனம் சிதறுகிறது என்று அடிக்கடி ஆசிரியரின் புகார். சில நண்பர்களின் புகார்:எறும்பை, பூச்சிகளைக் கொல்வதாக, பார்த்துப் பயந்தார்கள் என்று.
அவள் முடிப்பதற்குள் உள்ளே தடாலென கதவைத் திறந்து கொண்டு வந்தான். கண்ணீர் கொட்டியது. நான் போய் அவனை அணைத்துக் கொண்டேன். உடனே, கையை உதறிவிட்டு, “யாருக்கும் என்னைப் பிடிக்கவில்லை” என்றான். எந்த அளவிற்குக் குழந்தையின் மனம் வலித்து இருக்கிறது இப்படிச் சொல்லுவதற்கு என்ற எண்ணம் மனதில் ஓடியது!!
நான் அவனை விடவில்லை. ராமுவை அணைத்தவாறு ஆறுதல் சொன்னேன். மேலும் அவனுடைய நிலைமையை மாற்றி அமைக்க ப்ளே தெரபி அறைக்கு அழைத்துச் சென்றேன். சில பொருட்களை எடுத்துப் பார்த்தான். சில நிமிடங்களுக்குப் பின்னர், நாளை இங்கே வருகிறாயா என்று கேட்டேன். ஏன் என்றான். விளக்கினேன். வெகு நேரம் என்னையே கூர்ந்து கவனித்த பின், சரி என்றான். அம்மாவிடம் நேரத்தைச் சொல்லி அழைத்து வரச் சொன்னேன்.
சொன்னபடி வந்தார்கள். ராமு போன்ற வயதினருக்கு விளையாட்டு சிகிச்சை (play therapy) வழிமுறைகளைப் பயன்படுத்துவேன். என்னை மிஸ் என்று தான் அழைப்பேன் என்றான். இன்றும் மண் படிந்த சட்டை, கலைந்த தலைமுடி. செல்வி சங்கடப் பட்டாள். நான் செய்கையால் பரவாயில்லை என்றேன்.
பல வண்ணங்களில் பென்சில், புத்தகங்கள், காகிதங்கள், களிமண், பொம்மை வாகனம், கட்டிடக்கண்டம், எல்லாம் அறையில் இருந்ததைப் பார்த்தவுடன், ஓடி உள்ளே போனான். அவனுடன் நானும் சென்று, தாளில் வரைய ஆரம்பித்தேன், அவனும் சேர்ந்து கொண்டான். அவன் வரையும் படத்தில் உள்ளது அவனுடைய உணர்வைப் புரிய உதவியது. செல்வியிடமும் ஸெஷன்கள் ஆரம்பித்ததில் சூழலை அறிய ஆரம்பித்தேன்.
ராமு மிகச் சாதாரணமான குடும்பத்தைச் சேர்ந்தவன். இருபத்தி ஐந்து வயதான அப்பா திலகன், தொழிற்சாலையில் தொழிலாளி. கடினமாக உழைப்பவர். குடும்பத்தினருக்கு வசதிகள் செய்ய இயலாமையால் மனம் தளர்ந்தே இருந்தார். செல்வி தைரியம் சொல்வாள். அவளுக்குப் பக்கத்தில் உள்ள ஜவுளி தொழிற்சாலையில் தையல் வேலை. திலகனின் அப்பா-அம்மா இவர்களுடன் இருப்பதால் ராமுவை பார்த்துக் கொள்ள உதவினார்கள். முடிந்த வரை செல்வி எல்லா வேலையையும் செய்துவிட்டுத் தான் வேலைக்குப் போவாளாம்.
திடீரென திலகன் வேலை நீக்கம் செய்யப்பட்டான். ராமுவின் பள்ளிக்கூட மாதாந்திர கட்டணம் கட்டுவது கடினமானது. திலகன் திகைத்துப் போனான். செயலற்ற நிலையில் இருப்பது போலத் தோன்றியது. பணம் கட்டும் நேரம் கடந்தது. கட்டாததற்கு முதலில் ராமு வகுப்புக்கு வெளியே நிற்க வேண்டியதாயிற்று. மேலும் நாட்கள் கடந்தும், கட்டாமல் போக, தண்டனையாகப் பள்ளிக்கூட வாயிற்கதவில் நிற்க வேண்டி வந்தது. சில மாணவர்கள் ஏளனமாகப் பார்ப்பதும், கேலி செய்வதாலும் ராமு சங்கடப் பட்டான்.
தினமும் ஏதோ தண்டனை. அதனால் அவமானப் படுவதால் வீட்டில் அம்மாவைப் பைசா கட்டச் சொன்னான். அம்மா எதுவும் செய்ய முன் வரவில்லை (அவன் கண்களில்).
அன்றிலிருந்து, அவள் எதைச் சொன்னாலும் கேட்பதை நிறுத்திக் கொண்டான். செல்வியுடன் ஸெஷன்களில் இதைப் பற்றிப் பேச, அவள் மெதுவாகப் புரிந்து கொண்டாள், ராமுவின் நடத்தையால் அவனுடைய ஆதங்கத்தைக் காட்டினான். அவளை அவமானப் படுத்த இல்லை என்று உணர்ந்தாள். இது புரிந்த பிறகே அவளுக்கு ராமுவின் மேல் இருந்த ஆத்திரம் குறைய ஆரம்பித்தது.
ராமுவின் கோபம் ஆரம்பமானதை அவன் போட்ட வரைபடத்தின் மூலம் அறிய வந்தேன். ப்ளே தெரபி போது எதை எடுத்தாலும் கரடுமுரடாக உபயோகிக்கும் விதத்தில் அவனுடைய மனதின் கொந்தளிப்பு புரிய வந்தது.
அதேபோல, ராமு தான் நிராகரிக்கப் படுவதாக உணருகிறான் என்பது பல பரிமாணங்கள் மூலம், அவன் செய்யும் விதங்களில், படங்களில், மற்றவர்களைப் பற்றிப் பேசுவதில், செய்வதை விவரிப்பதில் புரிய வந்தது. உதாரணத்திற்கு, விளையாட்டு மைதானத்தை அமைக்கும் போது தன்னை எங்கேயோ வைத்தான்.
ப்ளே தெரப்பீயிலும் சரி அவன் சொன்னதை வைத்து எனக்குப் புரிந்தது, அவன் எதையும் செய்வான். எழுத மட்டும் மறுத்தான்.
ராமுவின் எதிர்மறை உணர்வுகளால் வகுப்பில் தண்டனை பெற்றான். விளைவு, வகுப்பில் என்ன நடக்கிறது என்று புரிந்து கொள்ளக் கடினமானது. பாடப் புத்தகம் வாங்கியாவது சரி செய்து கொள்ளலாம் என்றால் பகிர யாரும் முன்வரவில்லை. ஆசிரியர்கள் அதிக தண்டனை தர, நண்பர்கள் விலக ஆரம்பித்தார்கள்.
இதை விவரிக்கும் போது, கையில் உள்ளதை முறுக்கி உடைப்பது போலச் செய்கை செய்தான். முதல்முறை அவன் கவனத்தைத் திசை திருப்பி பொருளைக் கையிலிருந்து வாங்கி விட்டேன். வகுப்பு சம்பந்தப்பட்ட தகவல்களைப் பகிரும் போது, திரும்பவும் அவ்வாறே பொருளை இப்படி அப்படிச் செய்வதைக் கவனித்தேன். அவனுக்கு அந்நேரத்தில் நேர்ந்ததைப் புத்தகத்தில் உள்ள ஒரு கதை வடிவமாகக் காட்டினேன். அழ ஆரம்பித்தான். மறு செஷன்களிலிருந்து, உடை கிழிந்து இருந்தது, மண் இல்லை.
உள்ளுக்குள் ஏற்படுவதைச் சொல்ல, வெளிப்படுத்த, தத்தளிப்பில் இந்த மாதிரி உடைப்பார்கள். மற்றவர் தன்னைப் பார்த்துப் பயந்து போகும்படி செய்வார்கள். அப்படி என்றால், தன்னை நிராகரிக்க வில்லை. பயந்து போகிறார்கள் என்று ராமு தன்னைச் சமாதானம் செய்து கொண்டான். பலன்? நண்பர்கள் சிதறி ஓடினர். அவர்கள் கவனத்தைக் கவர, எறும்பை மிதிப்பது.
தனிமைப் படுத்தப் பட்ட வேதனை. பல விளையாட்டு மூலமாக இந்த ஆதங்கத்தை வெளியில் கொண்டு வர முயன்றேன். ராமு புதுமையான விளையாட்டு யோசிப்பதில் வல்லவன் எனப் புரிந்தது. அதேபோல், விளையாட்டின் விதிகளைச் சிரத்தையுடன் கடைப் பிடிப்பவன். இந்த இரண்டை பல்வேறு தருணத்தில் பார்த்த பின் இவனுக்கு அப்போஸிஷனல் டிபைஃயன்ட் டிஸ்ஸார்டர்” (Oppositional Defiant Disorder) தான என்பதே சந்தேகமானது.
இந்த சிந்தனை என் மனதில் ஓட, ஒரு கட்டத்தில் அன்று முடித்துச் செல்லும் போது, என் கழுத்தைக் கட்டிக்கொண்டு, கண்கள் தளும்ப “மிஸ் தாங்ஸ்” என்று சொல்லிக் கொண்டே ஓடிப்போனான். ஸ்தம்பித்தேன். அவனுக்கு அந்த கோளாறு இருப்பதாகக் கருதிய மருத்துவருக்கு இதுவரையில் பார்த்ததைப் பதிவு செய்து, அவருடன் பகிர்ந்து கொண்டேன்.
ராமுவின் நிலைமைக்குப் பள்ளிக்கூடமும், ஆசிரியர்களின் அணுகுமுறையும் காரணிகளாக இருந்ததால் அவர்களைச் சந்தித்தேன். தலைமை ஆசிரியரிடம் சூழலை விளக்கி, அவன் வகுப்பு, ஆசிரியர்களுக்குக் குழந்தை உளவியல் பற்றிய பயிற்சியின் அவசியத்தை எடுத்து விளக்கினேன். முதலில் மறுத்தார். பிறகு அவர்களாகவே அழைத்து, ஒப்புதல் தந்தார்.
ராமு, செல்வி ஸெஷன்கள் இல்லாத நாட்களில், இந்தப் பள்ளிக்கூடப் பயிற்சி செய்ய ஆரம்பித்தேன். முதல் மாற்றம் எட்டிப்பார்க்க, ஒரு மாதம் தேவையானது. இதன் பிறகு செல்வி, திலகன், மற்ற பிள்ளைகளின் பெற்றோர்களையும் இதில் சேர்த்துக் கொண்டேன். தனியாக மாணவர்கள்-ஆசிரியர்கள்-பெற்றோர் என, அதன் பிறகு ஆசிரியர்-மாணவர்கள், மாணவர்கள்-பெற்றோர், பெற்றோர்-ஆசிரியர் என்று.
வெவ்வேறு குழுவிற்கு பொதுவாக மனநலம் பற்றிய பயிற்சிகள் நடத்தினேன். இதனால் தான் ஆசிரியர்களின் அணுகுமுறையில் மாற்றம் தெரிய ஆரம்பித்தது.
ராமுவின் சக தோழனான அப்துல் அவன் எப்போது வருவான் எனக் கேட்டான். இந்த விஷயத்தை மையமாக வைத்து வகுப்புக்கு மன-சமூக நிலையைப் பற்றிய வர்க்ஷாப் தொடங்கியதில் இந்த முதல் வகுப்பு மாணவர்களின் இயல்பான அன்பு வெளிப்பட்டது. அவர்கள் வகுப்பில் உள்ள ராணி அவன் வீட்டுப் பக்கத்தில் இருப்பதால் சிலர் அவளுடன் ராமுவின் வீட்டிற்கு சென்றார்கள்.
ஒரே ஆரவாரம். அன்பு, நெகிழ அவனுக்குப் பாடங்களைச் சொல்லித் தருவதாகச் சொன்னார்கள். ராமு கட்டணம் கட்டப் படாததற்கு காரணங்கள் பல இருக்கலாம் என்பது மாணவர்களுக்குப் புரிந்தது. நிலமையை அவனுக்குப் புரிய வைக்க, அவன் மிகப் பிரியப்படும் களிமண்ணால் செய்த புத்தர் மற்றும் ஸ்வாமி விவேகானந்தர் பொம்மைகள் வைத்து ஆரம்பித்தேன். முதல் முறையாக இவர் இருவரையும் பார்ப்பதாகச் சொன்னான். சுத்தம் செய்யும் பெண்மணி இவற்றைப் பார்த்துப் பார்த்து துடைத்து வைத்ததில் இவர்கள் மட்டும் ஜொலிப்பார்கள். ஒருவேளை அதனால் தானோ என்னவோ, ராமு இவர்களை மட்டும் உடைக்காமலிருந்தான்.
ராமு இவர்களுடன் மட்டும் மிக அக்கறையோடு விளையாடுவான். அவர்களை பற்றிய பல தகவல்கள் கேட்டான். இரண்டு மூன்று புத்தகங்கள் வாங்கி வந்து விளக்கினேன். தன்னைப் போல் கோபம், நிராகரிப்பு அவர்களுக்கும் ஏற்பட்டதா என்றதைக் கேட்டான். அவர்களின் வாழ்க்கையில் சந்தித்த சிலவற்றைச் சொன்னேன்.
அத்துடன், அவனுடைய நிலையைப் பற்றி காகிதப் பொம்மை (ஓரிகாமி) மூலம் பேசினோம். நிலமையும் பரிந்தது. தன் விரல்களால் செய்யக்கூடிய விரல் பொம்மை, கைப்பாவை வல்லவன் போல் செய்தான். இந்தப் பொருட்களையே பல ரோல் ப்ளே செய்ய உபயோகித்தேன்.
மாற்றங்கள் தோன்ற, போகப் போக, அவனிடம் தன் வகுப்பு, வீடு, நண்பர்கள் பற்றிக் கேட்டேன். இப்போது எதிர்மறை இல்லாமல் பதில் வந்தது. தற்செயலாக வந்த நபர் ஒருவர் நன்கொடை தர, ராமு பள்ளிக்கூடக் கட்டணம் கட்ட உதவியது. இதுவெல்லாம் நடந்தும், எதற்காக இந்த நிலை நேர்ந்தது என்பது என் மனதைக் குடைந்தது.
இது கேட்டது போல, மறு வாரம் ரெவ்யூவிற்கு ராமு வந்தான். செல்வி வேலையிலிருந்ததால் திலகன் வந்து இருந்தான். திலகன் இப்போது வேலைக்காக வெளியூரில் இருப்பதாகச் சொன்னான். சோர்வு அதிகம், வேலை குறைவாகச் செய்யப் பாதி சம்பளம் தான் என்றதையும் சொன்னான். அவனிடம் விஷயங்களைக் கேட்கத் தெளிவு பெற முடிந்தது. வேலை போனதில் திலகன் மன உளைச்சலுக்கு ஆளானான்.
நான் ஸைக்காட்ரிக் ஸோஷியல் வர்கர் என்பதால் நாங்கள் மருந்துச் சீட்டுத் தரக் கூடாது. ஸைக்காட்ரிஸ்டைப் பார்த்து, மாத்திரை சாப்பிட ஆரம்பித்தான். திலகன் போன்ற சிலருக்கு மாத்திரை தேவை. சில மாதங்களுக்கு. குறிப்பிட்ட நேரத்தில் மருத்துவர் சொல்வது படி மாத்திரையை எடுத்துக் கொள்ள வேண்டும். அறிகுறிகள் குறையக் குறைய, மாத்திரையும் குறையும்.
பெற்றோரின் மனநலன் சரிவதில், அதன் பிரதிபலிப்பு குழந்தைகளிடம் தெரிய வாய்ப்பு உண்டு. அதுதான் ராமுவிற்கு ஆனது. இப்போது எனக்கு இன்னும் ஊர்ஜிதம் ஆயிற்று, அவனுக்கு ” அப்போஸிஷனல் டிபைஃயன்ட் டிஸ்ஸார்டர்” (Oppositional Defiant Disorder) இல்லை என்று. சிறுவர்களை (ஏன் எல்லோரையும் தான்) நாம் ஓர்வகை எடை போட்டு நடத்தி வந்தால், அதனாலேயே அவர்களின் நிலைமை மேலும் மாறக் கூடும். கவனமாக இருக்க வேண்டும்.