பா ராகவன்
புதினங்கள், சிறுகதைத் தொகுப்புகள், அரசியல் வரலாறுகள், தனிக் கட்டுரை நூல்கள் என இவரது புத்தகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன.
முதல் கதை கணையாழியில் பிரசுரமாகியது. ‘கல்கி’யில் துணை ஆசிரியர், குமுதம் குழுமத்தில் பணி, குமுதம் ‘ஜங்க்ஷன்’ ஆசிரியர். பிறகு பதிப்புத்துறைக்கு மாறி ‘கிழக்கு’ பதிப்பகத்தின் பதிப்பாசிரியராக ஏழாண்டுகள் பதிப்புத்துறைக்கும் இலக்கியத்திற்கும் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு செய்தவர்.
தற்போது முழுநேர எழுத்தாளர். பல தொலைக்காட்சித் தொடர்களுக்கு வசனம் எழுதிவருகிறார். ‘யதி’ , ‘ஒரு பூனைக்கதை‘, ‘இரவான்’ ஆகிய புதினங்களும் ‘டாலர் தேசம்’ தொடங்கி, ‘தலிபான்’, ‘அல் கொய்தா’, ‘காஷ்மீர்’ போன்ற அரசியல் நூல்களும், ‘பேலியோ டயட்’, ‘ருசியியல்’, ‘உணவின் வரலாறு’ போன்ற உணவியல் நூல்களும் இவரது பரந்துபட்ட களங்களுக்கு எடுத்துக்காட்டு.
இவரது ‘புவியிலோரிடம்’ என்னும் புதினத்தைப் பல்லாண்டுகளுக்கு முன் படித்து ரசித்திருக்கிறேன்.
*****
இவரது 108 வடைகள் என்னும் சிறுகதை
ஆஞ்சநேயர் தயாராக இருந்தார். அலங்காரம் முடிந்துவிட்டது. ஆபரணாதி விஷயங்களை பட்டர் அமர்க்களமாகச் செய்து முடித்து, விளக்குத் திரியைத் தூண்டிச் சுடர வைத்தார். வியர்வையைத் துடைத்துக்கொண்டு சந்நிதியை விட்டு வெளியே வந்தார். ஆச்சு. நாலு வரி மந்திரம். வடைமாலை சாத்திவிட வேண்டியதுதான். இன்றைய உபயதாரருக்கு என்ன செய்யலாமென்று ஆஞ்சநேயர் எண்ணியிருக்கிறார்?
என்று தொடங்குகிறது.
ஆஞ்சநேயர் ஒரு வினோத அற்புதம் செய்து வருவதாகப் பட்டர் உணருகிறார். அதை அவர் உணர்ந்ததே தற்செயல்தான். 108 வடைகளை எண்ணிக் கோர்த்து அதனைச் சாற்றி, பின்னர் அதையே பிரசாதமாக உபயதாருக்குக் கொடுப்பதுதான் எல்லாக் கோயில்களையும்போல இங்கும் நடைமுறை.
கோக்கும் போது எண்ணுவார். சரியாக நூற்று எட்டு. உதிர்க்கும்போது எண்ணுகிற வழக்கமோ அவசியமோ அவருக்கு ஏற்பட்டதில்லை. ஒருமுறை பக்தர் ஒருவர் எண்ணிப் பார்த்து ஒன்று குறைவதாகச் சொல்ல .. அடடா எப்படி இந்தத் தவறு ஏற்பட்டது? தயாரிக்கும்போதும் ராம நாமாவைச் சொல்லி கோர்க்கும்போது சரியாகத்தானே இருந்ததாகத்தானே நினைவு? எங்கே போனது அந்த வடை? என்று குழம்புகிறார் பட்டர்.
ஆச்சரியமாக மறுநாள் காலையில் அந்த பக்தர் ஓடிவந்து தன் பிரார்த்தனை உடனே பலித்துவிட்டது (பையனுக்கு யூ.எஸ் விசா எந்தப் பிரச்சனையும் இல்லாமல் கிடைத்துவிட்டதாம்) என்று மகிழ்ச்சியோடு பட்டரிடம் சொல்கிறார். வடை மாயமானதையும் பிரார்த்தனை பலித்ததையும் தொடர்புபடுத்திப் பார்க்கவில்லை அப்போது.
தொலைந்துபோன ஒருவடை பற்றிய சிந்தனை அதன்பின் பட்டருக்கு இல்லாமலானது. மேலும் மேலும் தினமும் வடைமாலைகள் சாத்தப்பட்டன. வேறு வேறு உபயதாரர்கள். வேறு வேறு பிரார்த்தனைகள். எத்தனை பேருக்கு பலித்தன? எத்தனை பேர் இன்னும் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கிறார்கள்?
இன்னொருமுறை இதேபோல் எண்ணிக்கை 107 வருகிறது. எண்ணிப் பார்த்த பக்தரோ ஒன்றும் சொல்லாமல் எல்லா வடைகளையும் விநியோகித்துவிட்டு போய்விடுகிறார். பக்தர் மறுநாள் கோவிலுக்கு ஓடி வருகிறார். அவர் பெண்ணின் நின்றுபோயிருந்த திருமணம் நாள் குறிக்கும் வரை வந்துவிட்டது.
பிறகு பட்டர் கவனமாகக் கவனிக்கத் துவங்குகிறார்,
பட்டருக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. நிஜமா? அப்படியும் இருக்குமா? யாருக்காவது உடனடியாக அருள் பாலிப்பது என்று முடிவு செய்துவிட்டால் ஆஞ்சநேயர் நூற்று எட்டில் ஒரு வடையை அதற்கான டோக்கன் அட்வான்ஸாகத் தானே சாப்பிட்டுவிடுகிறாரா என்ன?
இந்தக் கோயிலைக் கட்டிய செட்டியாரிடம் பகிர்ந்து கொள்கிறார். இருவரும் சேர்ந்து கவனிக்கத் துவங்குகிறார்கள். ஆரம்பத்தில் யாரிடமும் சொல்லவில்லை என்றாலும் மெள்ள மெள்ள பிராந்தியத்தில் இந்த விஷயம் பிரபலமாகிறது. தினத்தந்தியில் வர வேண்டியதுதான் பாக்கி.
அதற்கும் ஏற்பாடு செய்ய செட்டியாரிடம் பட்டர் சொல்லியிருக்கிறார். இதை உலகுக்கு அறிவித்துவிட்டால் தான் என்ன? கோயில் பிரபலமாகும். பெரிதாகும். வருமானம் சேரும். எண்ணிப் பார்க்க முடியாத என்னென்னவோ நடக்கக்கூடும்.
கோவிலைக் கட்டிய செட்டியாருக்கு ஒரு பரீட்சை பண்ணிப் பார்த்துவிட வேண்டுமென்று தோன்றுகிறது. கொஞ்சம் பயமாகவும் இருந்தது. கடவுளிடம் விளையாடலாமா? கோபித்துக்கொண்டுவிட்டால்?
கட்டாயம் கோபித்துக்கொள்ள மாட்டார். அதுவும் கோவிலைக் கட்டியவரிடம் நிச்சயம் கோபித்துக்கொள்ள மாட்டார். செட்டியாருக்குத் தைரியம் வருகிறது. இவர் ஒரு வேண்டுதலுடன் ஒரு வெள்ளிக்கிழமை வடைமாலை சாற்றுகிறார்.
ஆஞ்சநேயா, நான் உன்னிய டெஸ்டு பண்றேன்னு தப்பா எடுத்துக்காத. இது டெஸ்டுக்கு டெஸ்டு. வேண்டுதலுக்கு வேண்டுதல். கேட்டது, கேக்காதது எல்லாத்தையும் அள்ளிக்குடுத்திருக்கே. ஊர் மதிக்கிற வாழ்வு. ஒண்ணுத்துக்கும் குறைச்சல் இல்லே. ஆனா எம்பொண்டாட்டி என்னோட பேசி ஆறு வருசம் ஆச்சி. என்னிக்கோ சபலப்பட்டு செஞ்ச தப்புக்கு இப்ப வரைக்கும் தண்டிச்சிக்கிட்டிருக்கா. வெச்சிக்கவும் முடியாம விடவும் முடியாம நாம்படுற பாடு ஒனக்குத்தான் தெரியும். என்ன செய்யணுமோ பாத்து செய்யி. இதுக்குமேல நான் என்ன சொல்றது?
வடை சாற்றப்படுகிறது. மனமுருக வேண்டிக்கொண்டு, கற்பூரம் தொட்டுக் கண்ணில் ஒத்திக்கொள்கிறார். பட்டர் வடையை எண்ணிப் பாத்திரத்தில் போடுகிறார். ஆர்வம் தாங்கமாட்டாமல் செட்டியார் அவசரமாக சந்நிதிப் படியேறி வந்து எட்டிப் பார்த்து, “எண்ணிட்டிங்களா?” என்று கேட்கிறார்.
பட்டர் மேனி நடுங்க எழுந்து ஆஞ்சநேயரைப் பார்த்தார். அவர் கரங்கள் தன்னிச்சையாக உயர்ந்து வணங்கின. கண்களிலிருந்து நீர் பெருக்கெடுத்தது.
‘சொல்லுங்க ஐயரே. எவ்ளோ இருக்கு?
‘புரியல செட்டியார்வாள். நூத்தி ஒம்போது இருக்கு‘ என்றார் பட்டர்.
என்று முடிகிறது.
** * * * *
முழுநேர எழுத்தாளன் லௌகீக உலகில் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது என்கிற பொதுவிதிக்கு இன்றிருக்கும் ஒருசில விதிவிலக்குகளில் ஒருவர். (தான் வாங்கிய காருக்கு ‘ராயல்டி’ பெயரிட்டவர் இவர்.)
இது அவரது ஆரம்பகாலத்துக் கதைகளில் ஒன்று. புனைவுகளிலும் அபுனைவுகளிலும் வெகுதூரம் பயணித்துவிட்டார் திரு ராகவன். இன்னும் தொடவேண்டிய சிகரங்கள் பல இருக்கின்றன..