இன்று நான் எடுத்துக்கொண்டுள்ள பாடல் *நானும் ஒரு பெண்* என்ற படத்தில் வரும் *கண்ணா கருமை நிறக் கண்ணா* *உன்னை காணாத கண்ணில்லையே* .
இந்தப்பாடலை அறியாத, பாடலைக் கேட்டு நெக்குருகாத ரசிகர்கள் இல்லை என்றே சொல்லிவிடலாம்.
கவிஞர் கண்ணதாசன் வந்தார், கதை, சூழல் கேட்டார், கண்ணனை நினைந்தார், காவியம் புனைந்தார். As they say, rest is history.
காலத்தால் அழியாத பாடல் உருவாகிவிட்டது.
இதோ *பல்லவி* :
*கண்ணா கருமை நிறக் கண்ணா* –
*உன்னை காணாத கண்ணில்லையே*
*உன்னை மறுப்பாரில்லை கண்டு* *வெறுப்பாரில்லை* –
*என்னைக் கண்டாலும் பொறுப்பாரில்லை*
*முதல் சரணம்* :
*மனம் பார்க்க மறுப்போர் முன் படைத்தாய் கண்ணா*
*நிறம் பார்த்து வெறுப்போர் முன் கொடுத்தாய் கண்ணா*
*இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா – நல்ல*
*இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா*
“இனம் பார்த்து எனைச் சேர்க்க மறந்தாய் கண்ணா” என்ற வரி வரும்பொழுது ஒரு கோழி தன் குஞ்சுகளுடன் தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும். Only Birds of the same feather flock together என்பது தெரிந்தும் , என்னை இவர்களுடன் சேர்த்து விட்டாயே, இது நியாயமா என்று கண்ணனிடம் கேட்கிறாள். பிறகு, “நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்தாய் கண்ணா” என்று உரிமையுடன் சாடுகிறாள். உனக்கு உவப்பான தோட்டத்தில் உனக்கு மட்டும் நல்ல இடமாக நீ தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டாய். ( நல்ல இடமாக என்னை சேர்க்காமல்). நீ சிலைதானே, என் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் இருக்கிறாய் என்று ஆற்றாமையை வெளிப் படுத்துகிறாள்.
*இரண்டாவது சரணம்* :
*பொன்னான மனம் ஒன்று தந்தாய் கண்ணா – அதில்*
*பூப்போன்ற நினைவொன்று வைத்தாய் கண்ணா*
*கண் பார்க்க முடியாமல் மறைத்தாய் கண்ணா – எந்தக்*
*கடன் தீர்க்க என்னை நீ படைத்தாய் கண்ணா*
எனக்கு, பொன் போன்ற மனதை தந்தாய், பூப் போன்ற நினைவையும் ( மெல்லிய உணர்வுகளையும்) தந்தாய். ஆனால் பிறர் கண்களுக்கு என் மனமும், குணமும் தெரியாமல் செய்து, என் நிறம் மட்டுமே தெரியும்படி செய்து விட்டாயே. நியாயமா? யாரிடமாவது பட்ட கடனை அடைக்க வேறு வழி இல்லாமல் என்னை இப்படி படைத்தாயா என்று குமுறுகிறாள்.
ஒரு பெண்ணின் உணர்வுகளை ஓர் ஆண் கவிஞரால் எப்படி இவ்வளவு துல்லியமாக வெளிப்படுத்த முடிகிறது என்று கேட்டால் அதற்கு ஒரே பதில்தான் : அதுதான் கண்ணதாசன்.
இந்த பாடல் வெளிவந்தபோது, கருப்பாக பிறந்து அதனால் வேதனைப்பட்ட ஏராளமான பெண்களின் ஒட்டு மொத்த குரலாக, உள்ளக் குமுறலாக அது ஒலித்தது என்றால் அது மிகையில்லை. அதுவே பாடலின் வெற்றி.
பாடல் வெளிப்படுத்தும் சோகத்தை மனதில் கொண்டால், இதை *இனிய* பாடல் என்று சொல்லலாமா என்று தெரியவில்லை. *இதயத்தை தொட்ட* பாடல் என்பதே சரி.
![Naanum oru Penn] Kanna karumai nira kanna - Lyrical Delights](https://i.ytimg.com/vi/qswSVZoQFxY/maxresdefault.jpg)

தொண்டரடிப்பொடி ஆழ்வார்,
*பச்சைமா மலைபோல் மேனி*
*பவளவாய் கமலச் செங்கண்*
என்கிறார். அதையே கண்ணதாசன், ‘திருமால் பெருமை’ படத்தில் ‘மலர்களிலே பல நிறம் கண்டேன்’ என்ற பாடலில்
*பச்சை நிறம் அவன் திருமேனி*
*பவள நிறம் அவன் செவ்விதழே*
என்று பாடுகிறார்.
அதே ஆழ்வார் வேறொரு பாசுரத்தில் *காரொளி* வண்ணனே, கண்ணனே கதறுகின்றேனே…. என்கிறார். ( காரொளி வண்ணன் = கருமேகத்தை ஒத்த மேனி நிறமுடையவன் ).
கவி மரபு என்று எடுத்துக்கொண்டால் கவிகள் பச்சை, நீலம், கருப்பு ஆகிய வண்ணங்களில் பேதம் பார்ப்பதில்லை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
( இந்த கவி மரபைப்பற்றி நான் சொல்லவில்லை, ஆழ்வார் பாசுரங்களுக்கு உரை எழுதிய உரையாசிரியர்கள் கூறி இருக்கிறார்கள் ).
கருநீலம், கரும்பச்சை, கருப்பு என்பதெல்லாம் கலந்து சொல்வது கவிகளின் மரபு.
எது எப்படி இருப்பினும் நம் கண்ணதாசன் , ஆண்டாளின் பரம பக்தர். தனது ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ புத்தகத்தில் ஆண்டாளுக்கு என தனி ஒரு அத்தியாயமே ஒதுக்கி இருக்கிறார். கண்ணனின் மேனி வண்ணத்தை பற்றி ஆண்டாள் என்ன சொல்கிறார்?
திருப்பாவையில், ” *கார்* மேனி செங்கண் கதிர்மதியம் பொல் முகத்தான்” என்றும் ,
நாச்சியார் திருமொழியில் ” கண்ணன் என்னும் *கருந்தெய்வம்* காட்சி பழகிக் கிடப்பேனை …” என்றும் கூறுகிறார்.
ஆண்டாள் வழி கவிஞர் வழி.
“கண்ணா *கருமைநிற* கண்ணா “.
அதே மாதிரி, திரைப்பாடலில், என் நிலைக்கு நீதானே காரணம் என்று சொல்லி , நீ மட்டும் நல்ல இடம் பார்த்து சிலையாக அமர்ந்து இருக்கிறாய் என்று கண்ணனை குற்றம் சாட்டும் தொனியில் பாடுவது கூட ஆண்டாளின் தாக்கம்தான்.
நாச்சியார் திருமொழியில் பெருமாளை பற்றி கூறும்போது *பெண்ணின் வருத்தமறியாத பெருமான்* என்கிறார் ஆண்டாள்.
*கண்ண னென்னும் கருந்தெய்வம்*
*காட்சி பழகிக் கிடப்பேனை*
*புண்ணில் புளிப்பெய் தாற்போலப்*
*புறநின் றழகு பேசாதே*
*பெண்ணின் வருத்த மறியாத*
*பெருமா னரையில் பீதக*
*வண்ண ஆடை கொண்டு என்னை*
*வாட்டம் தணிய வீசீரே*
பொருள் :
கண்ணன் என்னும் கருந் தெய்வத்தையே எண்ணி உருகி ,அவனோடு வாழ்வதாக கற்பனை கண்டு அந்தக் காட்சியே பழகிக் கிடப்பவளை , அவனை அடைய முடியவில்லையே என்று ஏற்கனவே மனம் நொந்து புண்ணாக இருக்க அதை மேலும் புண்ணாக்கும் விதமாக பழிப்பு காட்டாதீர்கள். (புண்ணில் புளிப்பு எய்தது போல – ஆஹா ).