
அமெரிக்காவில் புலவர் கீரன் நிகழ்த்திய கம்ப ராமாயணச் சொற்பொழிவு ஒன்று ஃபேஸ்புக் நண்பர் ஒருவருடைய தயவில் கிடைத்தது. கேட்டுக்கொண்டிருக்கிறேன்.
வழக்கம்போல் உணர்ச்சிமயமான குரல் + தொனியில் மிக அருமையான பேச்சு. ஏழு நாள்களில் கம்பனை முழுமையாக விவரிப்பது சாத்தியமில்லை என்பதால், சில முக்கியமான பாடல்களைமட்டும் எடுத்துக்கொண்டு விளக்குகிறார், அவற்றினூடே கதையைச் சொல்கிறார்.
இப்படி அவர் எடுத்துக்கொண்ட ஒரு பாடல், நம் எல்லாருக்கும் நன்கு தெரிந்த ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’, மிதிலையில் கன்னிமாடத்தில் சீதையும், கீழே சாலையில் நடந்து செல்லும் ராமனும் எதேச்சையாகக் கண்கள் கலந்து காதல் வயப்படும் காட்சி.
‘சீதையும் ராமனும் வேண்டுமென்றே சைட் அடிக்கவில்லை, தற்செயலாக(Accidentally)தான் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்’ என்கிறார் புலவர் கீரன், ‘இதற்குச் சாட்சி கம்பனுடைய பாட்டிலேயே உள்ளது!’
இப்படி அவர் சொன்னதும், என்னுடைய ஆர்வம் அதிகரித்தது. காரணம், எனக்குத் தெரிந்து அந்தப் பாட்டில் ‘தற்செயல்’ என்கிற வார்த்தையோ அதற்கான குறிப்போ இல்லை, சீதையும் ராமனும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள் என்றுதான் கம்பர் சொல்கிறாரேதவிர, எது எதேச்சையாக நிகழ்ந்தது என்று அவர் குறிப்பிடவில்லை.
ஆனால், கீரன் அடித்துச் சொல்கிறார், ‘அது தற்செயலான நிகழ்வுதான், அதற்கான குறிப்பு அந்தப் பாட்டிலேயே இருக்கிறது, கொஞ்சம் பிரித்து மேயவேண்டும், அவ்வளவுதான்!’
முதலில் அந்தப் பாட்டைத் தருகிறேன், அதன்பிறகு, கீரன் தரும் அட்டகாசமான (அதேசமயம் ரொம்ப Practicalலான) விளக்கத்தைச் சொல்கிறேன்:
எண்ண அரு நலத்தினாள் இனையள் நின்றுழி
கண்ணொடு கண் இணை கவ்வி, ஒன்றை ஒன்று
உண்ணவும் நிலை பெறாது உணர்வும் ஒன்றிட
அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!
இதற்கு என்ன அர்த்தம்?
எண்ணுவதற்கே அரிய நலன்களைக் கொண்டவள் (சீதை) இப்படி (முந்தின பாட்டில் சொன்னபடி) நின்றிருக்க, அண்ணலும் (ராமனும்) அவளைப் பார்த்தான், அவளும் அவனைப் பார்த்தாள், அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன.
அவ்ளோதான். நோ விபத்து, நோ தற்செயல், கம்பர் அப்படிச் சொல்லவில்லை!
பொறுங்கள், கீரன் அவர்களுடைய விளக்கத்தைப் பார்ப்போம்.
‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ : இந்த வாசகம் முதலில் சரியா?
ஒரு கடை வாசலில் போர்ட், ‘ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்று எழுதியிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம்? ’மற்ற ஆறு நாள்களும் கடை உண்டு, கூடவே ஞாயிற்றுக்கிழமையும் கடை உண்டு’ என்பதுதானே? ‘திங்கள்கிழமையும் கடை உண்டு, செவ்வாய்க்கிழமையும் கடை உண்டு, புதன்கிழமையும் கடை உண்டு’ என்று யாராவது நீட்டிமுழக்குவார்களா?
ஒருவர் ‘தயிர் சாதமும் சாப்பிட்டேன்’ என்கிறார். அதற்கு என்ன அர்த்தம்? குழம்பு, ரசம் எல்லாம் சாப்பிட்டிருக்கிறார், அதோடு தயிர் சாதமும் சாப்பிட்டார் என்பதுதானே?
’இந்த வருஷமும் அவன் பரீட்சையில ஃபெயில்’ என்றால் என்ன அர்த்தம்? இதற்குமுன் பல வருஷங்கள் ஃபெயிலாகியிருக்கிறான் என்பதுதானே?’
இதே வழக்கத்தின்படி, கம்பர் ‘அண்ணலும் நோக்கினான்’ என்று சொல்லியிருந்தாலே போதும், அந்த ‘உம்’மில் ‘அவளும் நோக்கினாள்’ என்பதும் விளங்கிவிடும், அதைத் தனியாகச் சொல்லவேண்டியதில்லை.
ஆக, கம்பர் ‘அண்ணல் நோக்கினான். அவள் நோக்கினாள்’ என்று எழுதியிருக்கவேண்டும், அல்லது ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்திக்கொண்டிருக்கவேண்டும். இரண்டு ‘உம்’கள் இந்த வாக்கியத்தில் அவசியமே இல்லை.
ஆனால், கம்பர் வேண்டுமென்றே இரட்டை ‘உம்’ போடுகிறார். ஏன்?
இதைதான் கீரன் பிடித்துக்கொள்கிறார். ‘தமிழில் ஒரே ஒரு சூழ்நிலையில்மட்டும் இரண்டு ‘உம்’கள் தேவைப்படும்’ என்கிறார். எப்போது?
சாலையில் ஒரு விபத்து நடக்கிறது, இரு வாகனங்கள் எதிரெதிரே வந்து மோதிக்கொள்கின்றன. அதை நேரில் பார்த்த ஒருவரிடம் ‘எப்படிய்யா விபத்து நடந்துச்சு?’ என்று கேட்டால், அவர் என்ன பதில் சொல்வார்?
‘இவனும் இடதுபக்கமா வந்தான், அவனும் அதேபக்கமா வந்தான், மோதிகிட்டாங்க.’
இந்த இடத்தில் ‘இவனும் இடதுபக்கமா வந்தான்’ என்பதோடு நிறுத்தினால் செய்தி முழுமையடையாது, ‘அவனும் அதேபக்கமா வந்தான்’ என்பதை வலியச் சேர்த்தால்மட்டுமே விபத்து நேர்ந்தது புரியும். அது திட்டமிட்டு நடந்தது அல்ல, தற்செயலானது என்பதும் புரியும்.
அந்தப் ‘பத்திரிகையாளர் உத்தி’யைதான் கம்பர் கச்சிதமாகப் பயன்படுத்துகிறார். ‘அண்ணலும் நோக்கினான்’ என்பதோடு நிறுத்தாமல், ’அவளும் நோக்கினாள்’ என்பதைச் சட்டென்று அடுத்த வாக்கியத்தில் கோப்பதன்மூலம் ஒரு சிறிய பரபரப்பை உண்டாக்குகிறார், தற்செயலாக இரு பார்வைகளும் சந்தித்துக்கொண்டுவிட்டன, ஜோடி சேர்ந்துவிட்டன என்று வாசிக்கிற நமக்குப் புரியவைக்கிறார்.
அப்புறம் என்ன நடந்தது? இங்கே படிக்கலாம்: https://nchokkan.wordpress.com/2012/08/06/kv01/
(நன்றி: என். சொக்கன்)