ஐந்தாம் சர்க்கம்
மதன் எரிந்தது தன் அழகின் தோல்வியென பார்வதி கலங்கி நின்றனள்
சிவனின் அன்பு பெறத் தவமே நல்ல வழி எனத் திடமாய் நம்பினள்
தாய் மேனையோ மகளின் தவ எண்ணத்தை மாற்ற விழைந்தாள்
பார்வதியின் தளிர்மேனி தவத்தைத் தாங்காதென நயந்து சொல்லினள்
மன உறுதி கொண்ட பார்வதியின் முன் தாயவள் தோற்றுப் போனாள்
தவவாழ்வில் தான் செல்ல தந்தையிடம் அனுமதியை வேண்டி நின்றாள்
மகளின் மனமறிந்த இமயவன் ஆசிதர மயிலுறையும் சிகரம் சென்றாள்
மாலைகளை நீக்கி மரவுரியைத் உடல் அணிந்து தவக் கோலம் பூண்டாள்
அலங்காரம் இன்றி பார்வதி இருந்தாலும் அழகில் குறைவின்றி இருந்தாள்
முப்புரிக் கயிற்றை கட்டிய அவளிடை மேலும் கன்னிச் சிவந்தது
அழகையும் ஆட்டத்தையும் நீக்கி தர்ப்பையும் ஜபமாலையும் கொண்டனள்
தரையிலே படுத்து கைகளையே தலையணையாய்க் கொண்டாள்
அசைவைக் கொடியிடமும் பார்வையை மானிடத்தும் அடைக்கலம் தந்தனள்
தவ இல்லம் சுற்றி மரங்கள் நட்டு நேசமுடன் அதற்கு நீரையும் வார்த்தனள்
மான்களின் அச்சம் போக்கிட அவளும் அன்புடன் அவற்றைப் போற்றினள்
பனிமலை தன்னில் மும்முறை குளித்து நாள்முழுதும் ஜபத்தில் இருந்தனள்
பார்வதி அமைத்த ஆஸ்ரமத் தூய்மை தவத்திற்கே கிடைத்த பெருமையை
தவத்தின் பலனை விரைவில் பெற்றிட கடுந்தவம் புரியவும் தலைப்பட்டாள்
தங்கத் தாமரை மேனி தவத்தின் கடுமைகளைத் தாங்கும் வலிமை பெற்றது
கோடையில் நெருப்பின் மத்தியில் சூரியனை நோக்கித் தவமிருந்தாள்
சூரியன் சுட்டெரித்தும் தாமரை மலர் போல சோபையுடன் இருந்தாள்
மேக மழையும் சந்திர கிரணங்களும் அவள் உண்ணும் உணவாயின
பஞ்சாக்னி தகித்த அவளது உடலில் மழைநீர் தெறிக்க ஆவிதெறித்தது
நிஷ்டையில் பார்வதி அமர்ந்திட மழையும் அவளுடள் பொங்கி வழிந்தது
பெருமழை நாளிலும் குளிர்ந்த பாறையில் அமர்ந்து கடுந்தவம் புரிந்தனள்
கடும்பனிப் பொழுதும் கழுத்தளவு நீரில் நின்று கோரத்தவம் செய்தனள்
தாமரைகள் அருகிய குளத்தில் தாமரை மலரென தவமேற் கொண்டனள்
தாமே விழும் இலைகளையும் உண்ணாது அபர்ணா என பெயரும் பெற்றாள்
தளிர் மேனியாள் பார்வதி தவவலிமையில் மகரிஷிகளையும் வென்றனள்
கடுந்தவம் புரியும் பார்வதியின் ஆஸ்ரமத்தில் சடாமுடி முனிவர் வந்தார்
தேஜஸ் கூடிய பிரும்மச்சாரியை அதிதி பூஜைப் பொருளுடன் வணங்கினள்
பேசத் தெரிந்த அம்மனிதர் பேசும் முறைப்படிப் பேசத்தொடங்கினார்