சரித்திரம் பேசுகிறது – யாரோ

 

சங்கரவிஜயம்-2

சூரியனுக்கு வெளிச்சம் தந்த சங்கரர்

ஆதி சங்கரர்..
இந்த அவதார புருஷரது சரித்திரம், அவரது படைப்புகள், அவரது போதனைகள் என்று பல பரிமாணங்களை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
அந்த திவ்விய நிகழ்வுகள் தொடர்கிறது.

இராமனைப்பற்றி தியாகராஜ ஸ்வாமிகள் இசையோடு பாடினார்..
மானிடருக்கு இது இசையமுதாக அமைந்தது..

அதுபோல்..

சங்கரரைப் பற்றி நமது நண்பர் இலக்கியவாதி ‘அசோக் சுப்பிரமணியம்’ எழுதுகிறார்.
குவிகம் வாசகர்களுக்கு இது ஞானஅமுதாக அமையட்டும்.
இனி அசோக்கின் வார்த்தைகள்:..’யாரோவின் கண்பார்வையில்’
*************************************************************************************************************************************
சங்கர திக்விஜயம் தொடர்கிறது..

துறவை நோக்கி:

அவருக்கு எட்டுவயது பூர்த்தியாகும் காலமும் வந்தது.

சங்கரனுக்கு திருமணம் செய்யும் நோக்கத்தில் தாயிருக்க, துறவறம் ஏற்கும் எண்ணத்தில் இளம் சங்கரர் இருந்தார்.
தன்னுடைய பணி உலக நன்மைக்காக இருக்கவேண்டும் என்று அவதார புருடரான ஆச்சாரியருக்குத் தெரியாமல் இருந்திருக்குமா?
ஆனால் தாயின் முழு சம்மதமில்லாமல் துறவியாக முடியாதே!

Sri Adi Shankara – Some Incidents | Arise Bharatஒரு நாள் நதியில் நீராட இறங்குகையில் அவரது காலை ஒரு முதலைப் பற்றிக்கொண்டது. கரையில் இருந்த தாய் கலங்கித் துடித்தாள். தன்னால் காப்பாற்ற முடியாத இயலாமையில் கதறினாள். சங்கரரோ சலனமே இல்லாமல் தாயிடம், தனக்குத் துறவறத்துக்கு அனுமதி கொடுத்தால், அது இருக்கும் ஜன்மாவைத் தொலைத்துப் புது ஜன்மம் எடுப்பதற்குச் சமமென்றும், அப்போது முதலைத் தன்னை விட்டுவிடும் என்று சொன்னார். தாயும் வேறு வழியில்லாமல், எங்கோ உயிரோடு இருந்தால் சரி என்று நினைத்து அனுமதி கொடுத்துவிட்டாள். அக்கணமே முதலைக் காலை விட்டது. சங்கரர் ஆற்றில் இருந்தபடியே ப்ரைஷோசாரணம் என்னும் முறைப்படி, குருமுகமாக அல்லாமல் தானே வரித்துக்கொண்டார் துறவை! முன்னரொரு சாபத்தினால் முதலையாயிருந்த கந்தர்வனுக்கும் சாப விமோசனமாயிற்று.

ஆசானைத் தேடி:

தனக்கு முறையாக துறவறம் வழங்குதற்குத் தக்க ஆசாரியரைத் தேடி, சங்கரர் அன்னையை விட்டு அந்த சிறுவயதிலேயே கால் நடையாகவே நர்மதைக் கரையினை அடைந்து அங்கு கோவிந்தபாதரைக் கண்டார். அப்போது நர்மதையில் பெருவெள்ளம் ஏற்பட்டு கிராமங்களையெல்லாம் மூழ்கடித்துகொண்டிருக்க, அதை தன் கமண்டலத்தில் அடக்கினார்.. இதையே காவிரிக்கு அகத்தியர் செய்த புராணக்கதையொன்றும் உண்டு.
கமண்டலத்துக்கு இப்படி ஒரு பயனுண்டு போலும்!

 

குரு கோவிந்தபாதர் | Dinamalarசமாதி கலைந்து எழுந்த கோவிந்தபாதர் எதிரில் நின்றுகொண்டிருந்த சிறுவனைப் பார்த்து, “யார்நீ” என்று வினவவும், அதற்குப் பதிலாக, அந்தகால, பி.யூ.சின்னப்பா, எம்.கே.டி பாகவதர் காலப் படங்கள்போல பாட்டாலேயே பதில் சொன்னார் சங்கரர். அவர் சொன்ன விடைப் பாடல் பத்தும் நிர்வாண தசகம் எனப்படும். அது சொல்லும் உயரிய கருத்து, “நான் உடம்பல்ல; இதிலுள்ள எதுவுமல்ல; நான் அகண்ட சச்சிதானந்த பிரம்மமே” என்பதாகும். குரு பரம்பரைக்கே மூலவரான தக்ஷிணாமூர்த்தியே சாட்சாத் சங்கரராக அவதாரம் பண்ணியிருக்கையில் அவருக்கு குரு தேவையா என்று கேள்வி எழும்.. கிருஷ்ண பரமாத்வுக்கு சந்தீபனி குருவாக இருக்கவில்லையா? பரமசிவனுக்கே முருகன் குருவாக இருக்கவில்லையா? குருவின் மகிமையை உலகுக்கு உணர்த்தப் பரமனே நடத்திய நாடகம்தான் எல்லாம். அவரின் உத்திரவால் பிரும்ம சூத்திரம், உபநிஷத்துக்கள், கீதை, விஷ்ணு சகஸ்ரநாமம் இவற்றுக்கெல்லாம் பாஷ்யம் எழுதினார் சங்கரர். கங்கைக்கரையில் முதியவர் உருத்தாங்கி தன்னோடு வாது புரிந்த வியாசராலேயே இவருடைய உரைகளுக்கு அங்கீகாரமும் பெற்றார்.

ஒருமுறை நான்கு நாய்களுடன் சண்டாளன் வடிவில் வந்த பரமசிவனை, யாரென்று அறியாமல், “விலகிப்போ” என்றார். அவ்வடிவில் இருந்த சிவனாரோ சிரித்து, “ஊருக்குத்தான் உபதேசம் போலிருக்கிறதே! நீர் விலகிப் போ என்றது, உடலையா, ஆன்மாவையா” என்று கேட்கவும், விக்கித்து, வந்திருப்பது சண்டாள உரு தாங்கிய பரமசிவனாரே என்று உணர்ந்து “மனீஷா பஞ்சகம்” என்ற ஐந்து சுலோகங்களைச் சொல்லவும், சிவனார் தன் வேடத்தை நீங்கி அவருக்கு காட்சியும், அருளும் தந்து மறைந்தார்.

72 மதங்களைச் சுருக்கி ஆறாக்கி ஆறு தந்த வரலாறு:

சங்கரின் காலத்தில் 72 மதங்கள் இருந்தனவாம். இவையெல்லாம் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டு, பல தீய சடங்குகளைக் கொண்டு, ஸனாததர்மத்தைச் சீர்குலைப்பதாக இருந்ததால் ஆச்சாரியர் அவதாரம் செய்து, அவற்றில் பலவற்றையும் கண்டனம் செய்து, நெறிசெய்து ஷண்மதத்தை நிர்மாணித்தார். இவற்றை
கணபதியை வழிபடும் காணாபத்யம்
முருகனை வழிபடும் கௌமாரம்
சக்தியை வழிபடும் சாக்தம்
சிவனை வழிபடும் சைவம்
விஷ்ணுவை வழிபடும் வைஷ்ணவம்
மற்றும் சூரியன் உள்ளிட்ட நவக்ரஹ தேவதையரை வணங்கும் சௌரம் என்பர்.

வந்த சீடர்களும் பெற்ற சீடர்களும்:

Adi Shankara With Disciples - Arsha Drishtiசோழ தேசத்தைச் சார்ந்த சனந்தனர் என்பவர் சங்கரர் பதினாறு வயது பாலத் துறவியாக காசியில் இருந்தபோது, அவரிடம் சீடராக வந்து சேர்ந்தார். ஒரு சமயம் சங்கரரது சீடர்களில் யாருக்கு அவரிடம் மிகுந்த ஈடுபாடு என்பதில் ஒரு போட்டி இருந்தது. இதை ஊகித்து உணர்ந்த சங்கரர், சனந்தரின் மேன்மையைக் காட்டவேண்டி, ஆற்றின் மறுகரையில் இருந்தவரை அழைக்க, அவர் அப்படியே ஓடிவர, அவரது ஒவ்வொரு அடிக்கும் கீழ் ஒரு பதுமம் தோன்றி அவரைத் தாங்கிற்றாம்! அந்த அளவுக்கு அவருடைய குருபக்தி இருந்ததாம். ஒரு கணமும் சிந்தியாமல் ஆற்றிலே இறங்கிவிட்டார். அன்றிலிருந்து அவருக்குப் பத்மபாதர் என்று பெயர். மற்றொரு சமயம் சங்கரரை நரபலியிட இருந்த காபாலிகனிடமிருந்து காப்பாற்ற, அவரது இஷ்டதெய்வமான நரசிம்ம மூர்த்தியே அவர்மேல் இறங்கியதாகவும் ஒரு கதையிருக்கிறது. இவரைச் சிருங்ககிரியின் முதல் ஆசாரியராகக் கருதுகிறார்கள்

பிரயாகையில் இருந்த மீமாம்சை என்னும் கர்மமார்க்க வித்தகரான குமாரிலபட்டரைச் சென்றவருக்கு, அவரோ, ஒரு பிராயச்சித்ததின் காரணமாக, உமித் தீயில் தன்னையே சுட்டுப் பொசுக்கிக்கொண்டு உயிர் தியாகம் செய்ய முனைந்திருந்ததைக் கண்டு, வருந்தினார். அவரோ சங்கரரின் ஒளியைப் பார்த்து, உண்மையின் தரிசனத்தைக் கண்டவராகத், மாஹிஷ்மதி நகரில் மீமாம்ஸை போதகராக இருக்கும் தன்னுடைய சீடரான மண்டன மிசிரரைச் சென்று, அவரை ஞானமார்க்கமான அத்வைதத்திற்குத் திருப்பும் படி வேண்டினார்.

சங்கர் மண்டனமிசிரோடு வாது புரிந்ததும், மண்டனரின் மனைவியாம் சரசவாணியே அதற்கு நடுவராக இருந்ததும் பெருங்கதை! எழுதினால் இரண்டு குவிகம் இதழே தேவைப்படும்! அதனால் அந்த வாதிலே மண்டன மிசிரரை வென்று அவரைத் தன்னுடைய சீடராக சுரேஸ்வரர் என்ற நாமகரணம் சூட்டி ஏற்றுக்கொண்டார். இவரை காஞ்சி, சிருங்ககிரி, மற்றும் துவாரகை மடங்களின் சரித்திர நூல்கள் தங்கள் ஆசார்ய பரம்பரையில் சொல்லிக்கொண்டாலும், இவர் மூன்றுக்குமே இப்போது ஒரு “கன்சல்ட்டண்ட்” என்ற முறையில் இயங்கியிருக்கலாம்! தவிரவும் கிருஹஸ்தராக இருந்ததால் மடத்தின் ஆச்சாரியராக நியமிக்கப்பட்டிருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. சங்கர மடங்களின் ஆச்சாரியர்கள் எல்லோருமே நைட்டிகம் எனப்படும் முழு பிரம்மச்சாரிகளே!

ஹஸ்தாமலகர், ஒரு ஊமை அந்தணச் சிறுவனாக சங்கரரிடம் அழைத்துவரப்பட்டார். அவரைப் பார்த்து, “நீ யாரப்பா” என்று சங்கரர் வினவ, அவரோ, உடனடியாக வாய் மலர்ந்தார் – “ நான் மனிதன் இல்லை; யட்சனில்லை; பிரும்மச்சாரியில்லை; கிருகஸ்தனும் இல்லை; துறவியுமில்லை. ஆனால் ஞானமே வடிவான மெய்ப்பொருள்” என்ற பொருளில் பனிரெண்டு சுலோகங்களாக. அவரைச் சீடராகக் கொண்டதுமல்லாமல், அவருடைய சுலோகங்களுக்கு சங்கரரே பாஷ்யம் எழுதினார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்.. குருவே மெச்சிய சீடன்! அதற்கு “ஹஸ்தாமலகீய பாஷ்யம்” என்று பெயர்.

பின்னாளில் தோடகர் என்று அறியப்பட போகிற “கிரி” படிப்பில் சுமார்! ஆனால் குரு பக்தியில் உச்சமாக இருந்தவரைக் கண்டால் மற்ற மாணவர்களுக்கு இளக்காரம். அவனுடைய மகிமையை அவர்கள் உணர்ந்துகொள்ள ஒருநாள் அவர் வரும் வரை பாடம் எடுக்காமல் இருந்தாராம் ஆசாரியர். என்ன இந்த மக்கு மாணவனுக்காகவா ஆசாரியர் காத்துக்கொண்டிருப்பது, என்று மற்றவர்கள் நினைக்கும்போதே, ஆசாரியரைப் பற்றி தோடக விருத்தமாகப் பாடிக்கொண்டு வந்தாராம் அவர். மற்றவர்களைப் பார்த்து ஆச்சாரியர் பார்த்த பார்வையிலேயே அவர்கள் உணர்ந்திருக்க மாட்டார்களா என்ன! அவரைத் தோடகர் என்றே அழைக்கலானார்.

இவரே கைலைக்குச் சென்று முக்தி அடைந்தார் என்று சிலர் கூறுவர்; காஞ்சியிலே சர்வக்ஞ பீடம் ஏறி அம்மடத்தின் முதல் ஆச்சாரியராக இருந்தார் என்று காஞ்சிமடச் சரித்திரக் குறிப்புகளும் தெரிவிக்கின்றன.

இவருடை 32 வயதிற்குள் இவர் எழுதிக் குவித்த சுலோகங்கள் ஏராளம். குறிப்பாக அழகு வெள்ளமாகிய சௌந்தர்ய லஹரி, சுப்ரமணிய புஜங்கம், பஜகோவிந்தம், மனீஷா பஞ்சகம், கணேசபுஜங்கம், மீனாக்ஷி பஞ்சகம், என்று பிரபலமாக அறியப்பட்ட சுலோகங்களோடு, மொத்தமாக 80க்கு மேற்பட்ட சுலோகத் தொகுப்புகளை அளித்திருக்கிறார் ஆச்சாரியர். விளக்கவுரைகளென (பாஷ்யங்கள்) பிரம்ம சூத்திரம், விஷ்ணு சஹஸ்ரநாமம் என்று அந்தப் பட்டியல்வேறு.. அப்பப்பா! அந்த ஞானக்கடல் பயணிக்காத ஞானப் பாதையே இல்லை. ஆச்சாரியப் பரம்பரையின் முதற்புள்ளி.. முற்றுப்புள்ளியும் அவரேதான்! ஆதியும் அவரே! அந்தமும் அவரே!

ஆதிசங்கரரின் உபதேசச் சுருக்கம்:

இவருடைய உபதேச பஞ்சகம் என்ற நூலே இவர் விட்டுச்சென்ற உபதேசங்களின் சுருக்கமாகக் கருதப்படுகிறது. இவ்வைந்தும் சுருக்கமாக:

  1. வேதம் படிக்கப்படட்டும்; கர்மாக்கள் செய்யப்படட்டும்; அதனால் ஈசன்மேல் பக்தி வளரட்டும்
  2. ஆத்மாவைக் காணும் விருப்பம் உண்டாகட்டும்
  3. சாதுக்கள் சேர்க்கையும் பரம்பொருள் நாட்டமும் உண்டாகட்டும்
  4. “நான் பிரும்மமாயிருக்கிறேன்” என்ற தியானம் இடையறாது இருக்கட்டும்
  5. தனியிருந்து பரம்பொருளானது அறியப்படட்டும்!

அவருடைய அத்வைத சித்தாந்தத்தின் சாரமே, “ஆத்மா ஒன்று; அதுவே சத்தியம்; மற்றவையெல்லாம் மித்தியை” என்பதே!

ஆதி சங்கரரின் சரித்திரத்தை ஆழமாக அறிய ஒரு சிலப் பக்கங்கள் நிச்சயமாகப் போதாது; அந்த ஞானக்கடலில் மூழ்கி முத்தெடுக்க முனைவது, முத்தின் முளையாவது கிட்டாதா என்ற நப்பாசையில்தான்.

மேலும் அறிய விரும்பினால், நஜன் அவர்கள் எழுதி பிரதிபா பிரசுரம் வெளியிட்ட “ஹரிஹர ஆச்சார்யர்கள்” என்ற புத்தகத்தையோ, அல்லது தெய்வத்தின் குரல் ஐந்தாவது பாகத்தையோ நாடுங்கள்.

சம்ப்ரதாயமாக சங்கரர் சம்பந்தமாக எழுதியோ, பேசியோ முடிக்கும்போது, “ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!” என்பது வழக்கம்..
அவ்வழக்கப்படி, “ஜெயஜெய சங்கர! ஹரஹர சங்கர!”

*************************************************************************************************************************************
அசோக்கின் எழுத்துக்கு நன்றி.

சரித்திரம் ‘ஆதி சங்கரர்’ என்ற இந்த யுக புருஷரைப்பற்றி எழுதியதால் புனிதம் அடைகிறது. இனி வேறு கதைகளுடன் விரைவில் சந்திப்போம்..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.