தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

தாகூரின் கோரா – தேசம், தேசியம், மனிதம்! – நரேன் | சொல்முகம் வாசகர் குழுமம்

( இந்த நாடகம்  மகான்  தாகூர் அவர்கள்  எழுதித் தயாரித்த   நாட்டிய நாடகம். NATIR PUJA என்பது அதன் பெயர். 1932 இல்  ஒரு திரைப்படமாகவும்  தயாரிக்கப்பட்டது . தாகூர் அவர்கள் இயக்கி நடித்தும் இருந்தார். துரதிர்ஷ்டவசமாக  அந்தப் படத்தில் படச் சுருள் நெருப்புக்கு இரையாகிவிட்டது என்ற செய்தி நாம் மனதில் வருத்தத்தை வரவழைக்கிறது. குவிகத்தில் இதன் தமிழாக்கத்தை வெளியிடுவதில் பெருமை கொள்கிறோம்) )

கதை நிகழுமிடம்

Natir Puja: A Tale of Devotion and Sacrifice as Opposed to Jealousy and Tyranny

புத்தபிரான் ஒருமுறை மகதநாட்டரசன் பிம்பிசாரனின் அரண்மனைத் தோட்டத்தில் ஒரு அசோகமரத்தடியில் அமர்ந்து தமது உபதேசங்களைச் செய்தருளினார். அவருடைய பக்தனாகிவிட்ட அரசன் அந்தப் புனிதமான இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்தான்; தனது அரண்மனையைச் சேர்ந்த இளவரசிகள் ஒவ்வொரு மாலைநேரமும் தங்கள் வழிபாட்டுப் பொருள்களை அங்கு சமர்ப்பிக்க ஏற்பாடு செய்தான்.

பின்னொரு நாளில் தனது மகனான இளவரசன் அஜாதசத்ரு அரியணையில் அமர விரும்புகிறான் என அறிந்த அரசன் பிம்பிசாரன், மனப்பூர்வமாகத் தன் அரியணையை அவன்வசம் ஒப்புவித்துவிட்டு, அந்த நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்து வரலானான்.

அரசி லோகேஸ்வரி, முதலில் இந்தப்புதிய மதத்தைச் சார்ந்தவளாக இருந்தாள். ஆனால் இப்போது தனது கணவன் நாட்டைத் துறந்ததையும், அதனை மகனுக்குக் கொடுத்து விட்டதையும் தவறெனக் கருதியதனால் புத்தருடைய உபதேசங்களுக்கும் அந்த மதத்துக்கும் எதிராகச் செயல்படத் தலைப்பட்டாள்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

தொடக்கக் காட்சி:

உபாலி எனும் புத்தபிட்சு, பாடிக்கொண்டே வருகிறார்.

உபாலி: யாரேனும் உள்ளீரா? தருமம் செய்யுங்கள், புத்தபிரானின் பெயரால் தருமம் செய்யுங்கள்!

ஸ்ரீமதி, அரண்மனையைச் சேர்ந்த ஒரு நாட்டிய மங்கை, காட்சியில் நுழைந்து அவரைப் பணிகிறாள். பிட்சு அவளை ஆசிர்வதிக்கிறார்.

(ஸ்ரீமதியிடம்) குழந்தாய், நீ யாரோ?

ஸ்ரீமதி: வணக்கத்திற்குரியவரே, நான் இந்த அரண்மனையின் நாட்டியமங்கை, தங்களுக்குப் பணிவிடை செய்ய வந்துள்ளேன்.

உபாலி: இந்த நகரில் நீ மட்டுமே விழித்துக் கொண்டுள்ளாயா?

ஸ்ரீமதி:  இளவரசிகள் இன்னும் உறங்கிக் கொண்டுள்ளனர்.

உபாலி: நான் கடவுளின் பெயரால் யாசகம் வேண்டி வந்துள்ளேன்.

ஸ்ரீமதி: வணக்கத்திற்குரியவரே, உள்ளே சென்று இளவரசிகளை அழைத்துவர எனக்கு  அனுமதி கொடுங்கள்.

உபாலி: நான் யாசிப்பது உன்னிடமிருந்தே!

ஸ்ரீமதி: அந்தோ ஐயா! நான் ஒரு அபாக்கியவதியான ஜீவன். கடவுளுக்காகத் தாங்கள் பெற்றுக்கொள்ளும் காணிக்கைகளில் என்னுடையது மிகவும் நாணத்திற்குரியதாக அமைந்துவிடும். எனக்கு உத்தரவிடுங்கள், தங்களுடைய பாத்திரத்தில் நான் எதனை இடுவது?

உபாலி: உன்னிடமுள்ள உயர்வான பொருளையே தானம்செய்.

ஸ்ரீமதி: என்னிடம் உள்ளவற்றில் எது மிகவும் உயர்ந்ததென நான் அறியேன் ஐயா!

உபாலி: உண்மை. ஆனால் கடவுளின் கருணை உன்னிடத்தில் முழுமையாக உள்ளது. அதனால் அவருக்குத் தெரியும்.

ஸ்ரீமதி: கடவுளே மனமுவந்து என்னிடமிருந்து அதனை எடுத்துக் கொள்வாராக- இதுவே தங்களது ஆசிர்வாதமாகவும் இருக்கட்டும், வணக்கத்திற்குரியவரே!

உபாலி: அவ்வாறே ஆகட்டும், குழந்தாய். மலர்கள் நிறைந்த வனத்தில் தன்னையே ஒப்புதல்கொடுத்துள்ள பருவங்களின் அரசனான வசந்தம் விழித்தெழும்போது நீ  பூஜைக்கு அளிக்கும் மலர்களை அவர் ஏற்றுக் கொள்வார். உனது நாள் வந்துவிட்டது – இதுவே நான் தரும் செய்தி. நீ உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள்!

ஸ்ரீமதி: நான் அந்த நேரத்திற்காகக் காத்திருக்கிறேன். (குனிந்து அவரைப் பணிகிறாள்)

அவர்கள் செல்கிறார்கள்; உடனே தொடர்ந்து அரசகுமாரிகள் நுழைகிறார்கள்.

அரசகுமாரிகள்: (வாயிலைப் பார்த்தவண்ணம்) இவ்வாறு வெளியேற வேண்டாம், ஐயா. எங்கள் காணிக்கைகளை ஏற்று மகிழுங்கள்.

(ஒருவருக்கொருவர்) ஓ, என்ன துர்ப்பாக்கியம்! அவர் சென்றுவிட்டார்.

ரத்னாவளி: இதில் என்ன தாபம், வாசவி? பிச்சை எடுப்பவர்களுக்குத் தான் குறைவில்லையே. கொடுப்பவர்களே குறைந்து விட்டனர்.

நந்தா: இல்லை ரத்னா. ஒருவருடைய காணிக்கைகளைச் செலுத்த சரியானவரைக் கண்டுபிடிக்க மிகவும் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்று நாம் அந்த வாய்ப்பை இழந்துவிட்டோம்.

(அனைவரும் வெளியேறுகிறார்கள்)

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

அங்கம்-1

காட்சியிடம்: அரசியின் நந்தவனம்

அரசமாதா லோகேஸ்வரி, உத்பலா எனும் பிட்சுணி, பிட்சை எடுத்து வாழும் புத்தமத சகோதரி ஒருத்தி ஆகியோர் இவ்விடத்தில் நுழைகின்றனர்.

அரசி: ஓ! பேரரசர் பிம்பிசாரர் என்னை இன்னும் நினைவு வைத்திருக்கிறாரா?

பிட்சுணி: ஆம். அதுவே நான் கொணரும் செய்தி.

அரசி: இன்று அசோகமரத்தடியிலுள்ள வழிபாட்டு மேடையிலிருந்து காணிக்கைகளை அவர் எடுத்துக் கொள்வார் அல்லவா? அதனால்தான் என் நினைவு வந்ததோ?

பிட்சுணி: ஆம். இன்றிரவு வசந்தகாலத்துப் பூர்ணிமை!

அரசி: ஆனால் யாரை அவர்கள் வழிபடுகிறார்கள்?

பிட்சுணி: உங்களுக்கு நன்றாகத் தெரியும்! இந்த இரவில் நாம் புத்தபிரானின் பிறந்தநாளைக் கொண்டாடுவதுண்டல்லவா?

அரசி: செல்லுங்கள், எனது வழிபாடு நிறைவடைந்து விட்டதென்று என் கணவரிடம் சென்று கூறுங்கள். மற்றவர்கள் தங்கள் மலர்களையும் தீபங்களையும் அவருடைய வழிபாட்டு மேடையில் சமர்ப்பிக்கட்டும்- நான் எனது உலகத்தையே காலிசெய்து விட்டேன்.

பிட்சுணி: இவை என்ன தகாத சொற்கள், மகாராணி?

அரசி: அவர்கள் எனது ஒரே மகனான இளவரசன் சித்ராவை வஞ்சித்துக் கவர்ந்து சென்றுவிட்டனர்.    அவன் பிச்சைக்காரனின் (பிட்சுவின்) உறுதிமொழியை எடுத்துக் கொண்டான்- இன்னும் அவர்கள் எனது வழிபாட்டை எதிர்பார்க்கின்றனரா? ஒரு கொடியை அதன் அடிவேரை அறித்தெறிந்துவிட்டு, அதனிடம் என்ன தைரியத்தில் மலர்களை எதிர்பார்க்கலாம்?

பிட்சுணி: நீங்கள் அவனைக் கொடுத்து விட்டீர்கள், இழக்கவில்லை. ஒருகாலத்தில் அவனை நீங்கள் உங்கள் கரங்களில் ஏந்தியிருந்தீர்கள்; இப்போது இந்த உலகத்தின் நன்மைக்காகக் கொடுத்துள்ளீர்கள்.

அரசி: நல்ல பெண்மணியே, உனக்கென்று ஒரு மகன் உள்ளானா?

பிட்சுணி: இல்லை.

அரசி: எப்போதாவது இருந்தானா?

பிட்சுணி: நான் இளமையிலேயே விதவையானவள்.

அரசி: அப்படியானால் மௌனமாக இரு. உன்னால் புரிந்துகொள்ள இயலாதவற்றைப் பற்றிப் பேசாதே.

பிட்சுணி: மகாராணி, இந்த உண்மை மதத்தை அரண்மனைக்குள் முதன்முதலாக வரவேற்றது தாங்களே! பின் எவ்வாறு இன்று…….

அரசி: ஆ! அவர்கள் இன்னும் அதனை நினைவில் வைத்துள்ளனரா? உங்கள் தலைவர் அதனை மறந்துவிட்டார் என எண்ணியிருந்தேன். தினமும் நான் எனது உணவை உண்ணுவதற்காகத்       தொடும் முன்பு பிட்சுவான தர்மருசி என்பவரை மதநெறி சம்பந்தமான புத்தகத்திலிருந்து சில பகுதிகளைப் படிக்க வேண்டிக் கொள்வேன்: தினமும் நான் எனது உபவாசத்தை முடித்துக்கொள்ளும் முன்பு நூறு பிட்சுக்களுக்கு உணவளித்தேன். வருடந்தவறாமல், சங்கத்தின் அத்தனை உறுப்பினர்களுக்கும் மழைக்காலம் முடிவடைந்ததும் மஞ்சள்நிற ஆடைகளை வழங்குவதனை எனது கடமையாகக் கொண்டிருந்தேன்.   புத்தரின் எதிரியான தேவதத்தனின் துர்ப்போதனைகளால் மக்களின் மனங்கள் அலைக்கழிக்கப்பட்டபோது, எனது நம்பிக்கையில் உறுதியாக நின்று, புத்தரை எங்களது நந்தவனத்திற்கு அழைத்துவந்து, அசோகமரத்தடியில் அமர்ந்து புனிதமான சொற்களைக் கூறுமாறு செய்வித்தேன். ஓ! கொடூரமான நன்றிகெட்டவனே!   இதுவா எனக்கான பரிசு? – விஷம்! எனக்கெதிராக         வெறுப்பில் எரிந்துகொண்டிருந்த பெண்களுக்கு, எனக்கு விஷம்வைக்கத் துணிந்தவர்களுக்கு என்னவாயிற்று? ஒன்றுமேயில்லை! அவர்களுடைய மகன்கள் இப்போதும் கூட அரசபோகத்தை அனுபவிக்கின்றனர்.

பிட்சுணி: மகாராணி! உண்மையின் மதிப்பை உலகின் வழக்கமான அளவுகோல்கொண்டு மதிப்பிடாதீர்கள்.     பொன்னுக்கும்  பகலின் ஒளிக்கும் விலை ஒன்றேதானா?

அரசி:  இளவரசன் அஜாதசத்ரு தனது விசுவாசத்தை தேவதத்தனிடம் ஒப்படைத்தபோது, நான் ஒரு முட்டாளைப்போல் நகைத்தேன். “அது ஒரு ஓட்டைக்கப்பல், ஏமாந்தவர்கள் மட்டுமே அதில் ஏறிச்சென்று கடலைக் கடக்க நினைப்பார்கள்,” என்றேன் நான். தேவதத்தனின் மந்திரதந்திரங்களின் துணைகொண்டு தன் தகப்பனார் உயிரோடு உள்ளபோதே அவரது அரியணையை அடைய எத்தனித்தான்     இளவரசன்; நானும், எனது நம்பிக்கைகளின் மீதுகொண்ட பெருமையால்  எனது  ஆசானின்  பெருமதிப்பு    இளவரசனின் அந்தஆசையைத் தடைசெய்துவிடும் எனக்கருதினேன். அத்தகைய அப்பழுக்கற்ற நம்பிக்கையால் நான் சாக்யசிங்கா எனும் புத்தபிரானை இங்குவர வேண்டினேன்- இந்த அரண்மனைக்கு வந்து  எனது கணவருக்குத் தன் ஆசிகளை அளிக்க வேண்டினேன். இருந்தும் கடைசியில் வென்றது யார்?

பிட்சுணி: வெற்றி தங்களுடையதே. வெளியுலகினை வெல்வதற்காகத் தங்கள் உள்ளத்தின் வெற்றியைப்   (ஆத்ம வெற்றியை) புறந்தள்ளாதீர்கள்.

அரசி: வெற்றி? என்னுடையாதா?

பிட்சுணி: தங்களுடையதே ஆகும். தன் மகனுக்காக மகாராஜா பிம்பிசாரன் என்று அரியணையை விட்டுக்கொடுத்தாரோ அன்றே அவர் வேறொரு அரியணையை அடைந்தார்.

அரசி: வேறொரு அரியணை? அது ஒரு மாயை, ஒரு க்ஷத்ரிய அரசனுக்கான அவமதிப்பு! என்னைப்பற்றி  எண்ணிப்பார்! இன்று நான் யார்? – கணவன் உயிரோடிருந்தும் ஒரு விதவை, ஒரு மகனைப் பெற்றிருந்தும் மலடி, எனது அரண்மனையிலேயே நான் நாடுகடத்தப்பட்டவள். இது நிச்சயமாக மாயையல்ல.  உனது மதத்தைச் சேராதவர்களால் நான் இகழப்படுபவளல்லவா? செல், இதனை உனது எஜமானரிடம் சென்று சொல் – உங்கள் இடிமுழக்கம் போலும் சக்தியான அவரிடம் சொல்! அவர் இப்போது எங்கே? அந்த ஏமாற்றுப் பேர்வழிகளை ஏன் அவருடைய மின்னலொளி தாக்கவில்லை?

பிட்சுணி: மகாராணி, இவையனைத்திலும் உண்மை எங்கே? நீங்கள் கடந்துசெல்லும் ஒரு கனவைப்பற்றிப்     பேசுகிறீர்கள். ஏமாற்றுக்காரர்கள் வேண்டுமளவு மட்டும் சிரிக்கட்டும்.

அரசி:  இது கனவாகவே இருக்கட்டும்; ஆனால் நான் விரும்பும் கனவல்ல. மற்ற கனவுகள் அனைத்தும் என் மனதில்  நாள்தோறும் குடியிருப்பவை- அவை செல்வங்கள், எனது மகன், அரசபோகம், பெருமை என்பன.    நீ,    தங்களது தலைகளைக் கர்வமாக உயர்த்திக்கொண்டு நடமாடும் மற்ற பெண்களிடம் சென்று உரையாடு, செல். அவர்கள் தாங்கள் காணும் கனவுகளின் மகிழ்ச்சியில் திளைக்கின்றர்களல்லவா? அவர்கள்  வழிபாட்டிற்கான பொருட்களைச் சமர்ப்பிக்க வரட்டும், பார்க்கலாம்.

பிட்சுணி: அப்படியானால் நான் சென்றுவருகிறேன்.

அரசி: சென்றுவா, ஆனால் அவர்கள் முட்டாள்களல்ல என நினைவிலிருத்திக்கொள்; நான்தான் முட்டாளாக       இருந்தேன். அவர்களிடம் இழப்பதற்கு ஒன்றுமில்லை; ஏனெனில் அவர்கள் புத்தபிரானை நம்பவில்லை. சாக்யசிங்கரின் கருணையால் அவர்கள் தீண்டப்படவில்லை; அதனால் அவர்கள் பாதுகாப்பாக,  ஆம் பாதுகாப்பாக உள்ளனர். ஏன் மௌனமாக நிற்கிறாய்? இதுவே உனது பொறுமை என நீ பாசாங்கு செய்கின்றாயா?

பிட்சுணி: நான் சொல்ல என்ன இருக்கிறது? எனது உள்ளம் கோபத்தின் வயப்பட்டுவிடுமோ என்று என்னையே பற்றி நான் அச்சங்கொள்கிறேன்.

அரசி: இன்னும் உனது இரக்கம்கொள்வது போன்ற நடிப்பும் மன்னிப்பும் என்னைப்போன்றவளிடமா? உன் அமைதியான வறட்டுக் கர்வம் என்னால் தாங்க முடியாதது. என்னை விட்டுச்செல்.

உத்பலா செல்ல எத்தனிக்கிறாள்; ஆனால் அரசி அவளைத் திரும்ப அழைக்கிறாள்.

 

(தொடரும்)

One response to “தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -முதல் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ்

  1. Pingback: தாகூரின் “நாட்டியமங்கையின் வழிபாடு” -இரண்டாம் பகுதி – மொழியாக்கம்: மீனாக்ஷி பாலகணேஷ் | க

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.