நடுப்பக்கம் – சந்திரமோகன்

Madras High court orders status quo over PHC construction | Chennai News - Times of India

வழக்கு எண் 207 of 2019

‘ வீடு பரபரப்புடன் காணப்பட்டது’ என கதைகளில் படிப்போமே அது போலத்தான் அன்று மதியத்திற்கு மேலேயே வக்கீல் கணேசனின் வீடு இருந்தது. ஐந்து மாத காலமாக வீட்டில் முடங்கிக்கிடந்தான். காலையும், மாலையும் நன்றாக தூங்கி இரவு நேரங்களில் வாட்ஸ் அப்பில் மெஸ்ஸேஜும், வீடியோவும் பார்த்துக் கொண்டே லாக் டவுன் நாட்களை நகர்த்திக் கொண்டிருந்தான் கணேசன்.

அதற்கு வந்த சோதனை போல மதியம் வந்த மெயிலில் அடுத்த நாள் முதல் கோர்ட் வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலம் நடக்கும் என்ற செய்தி.
அவனுக்கு அடுத்த சோதனை. அவன் வாதாட வேண்டிய வழக்கு எண் 207 of 2019 ம் லிஸ்டில் இருந்தது. சோதனை மேல் சோதனை என்பது போல அந்த வழக்கை நீதியரசர் தமிழரசன் விசாரிக்க உள்ளார்.
தமிழரசன் நீதிபதி முன் சரக்கில்லாமல் நிற்க முடியாது. மற்ற நீதிபதிகள் வழக்கறிஞர்கள் செய்யும் தவறை கண்டும் காணாமல் விட்டு விடுவார்கள். இவர் அப்படி விட மாட்டார்.
அப்படித்தான் பாண்டிச்சேரி யிலிருந்து ஒரு கேஸ் கணேசனிடம் வந்தது. கோர்ட்டில் விவாதித்துக் கொண்டிருந்த பொழுது எதிர் தரப்பு வக்கீல் எழுந்து “ கணம் நீதிபதி அவர்களே வாதியின் வழக்கறிஞர் அடிக்கடி லா பாண்டி, லா கஃபே (La Pondy, La cafe) என சட்டத்தை காட்டி மிரட்டுகிறார். அவர் விவாதத்தின் பொழுது ‘லா’ என்ற வார்த்தையை உபயோகிக்க கூடாது என்றார். நீதிபதி கணேசனை பார்த்தார்.
நம் கணேசனுக்கு சிரிப்பை அடக்க முடிய வில்லை. சிரித்தால் கோர்ட்டை அவமரியாதை செய்த குற்றமாகி விடும். கைகளால் வாயைப் பொத்திக் கொண்டு “ எதிர் கட்சி வக்கீல் சென்னை தாண்டி சென்றதில்லை போலும் கணம் கோர்ட்டார் அவர்களே. அது பாண்டிச்சேரி இங்கிலீஸ். பாண்டிச்சேரியில் காபி கடையை ஆங்கிலத்தில் லா கஃபே என்றுதான் எழுதியிருப்பார்கள்” என்றான்.
கணேசன் வாயை பொத்திக் கொண்டே பேசியதால் நீதிபதிக்கு ஒன்றும் புரியவில்லை ‘ அப்ஜெக்‌ஷன் ஓவர் ரூல்ட்” என்பதோடு முடித்துக்கொண்டார். அதுவே நீதிபதி தமிழரசனாக இருந்திருந்தால் இரண்டு பேரையும் கிழித்துப் போட்டிருப்பார் என மற்ற வழக்கறிஞர்கள் கூறக்கேட்டு நடுநடுங்கி விட்டான் கணேசன்.மெயிலை பார்த்தவுடன் அவன் அறைக்கு சென்று கேஸ் கட்டுகளையும் சட்ட புத்தகங்களையும் தூசி தட்டினான். நல்ல வேளை வீட்டின் அழையா விருந்தாளிகளான எலிகள் எதையும் ருசிக்க வில்லை. நாளைய தினத்திற்கான கேஸ் கட்டு தேடின உடனேயே கிடைத்து விட்டது. கேஸை படிக்க ஆரம்பித்தான். கடந்த நாட்களில் அடுப்படி வரை சென்று தன் மனைவியிடம் ஒரு காஃபி கிடைக்குமா என மெதுவாக கேட்கும் கணேசன், இன்று உட்கார்ந்த இடத்திலிருந்தே ‘ கமலா! ஒரு காஃபி கொண்டு வா’ என கூவினான்.

கமலா அவன் அறைக்குள் நுழையும் பொழுது எதையோ தேடிக் கொண்டிருந்தான் கணேசன். ‘ என்னங்க தேடுறீங்க’ என்றாள் கமலா. “ சுப்ரீம் கோர்ட் தீர்ப்புகள் அடங்கிய புத்தகங்கள் ஒன்றையும் காண வில்லையே” என சத்தமிட்டான்.
அருகிலிருந்த கமலா” உங்க அம்மா தலையனை உயரம் பத்தலைன்னு சொல்லி சில புத்தகங்களை அடியில வச்சுருக்காங்க, அதில இருக்கான்னு பாருங்க” என கூறி அவனை ஓட வைத்தாள்.
ஒரு வழியாக சில குறிப்புகள் எடுத்தவுடன் நெட் கனெக்‌ஷனை சரி பார்த்துக் கொண்டு படுக்கப் போகும் பொழுது இரவு வெகு நேரமாகி விட்டது.
காலை எழுந்து அவசரம் அவசரமாக குளித்து ரெடியானான். காலை உணவு சாப்பிடும் பொழுதே மதியத்திற்கும் கட்டி வாங்கிக் கொண்டான் கணேசன். எல்லாம் முன் ஜாக்ரதைதான். ஒரு வேலை விவாதம் நீண்டு கொண்டே சென்றால் ஜட்ஜ் பார்க்காத பொழுது வாயை கைகளால் மூடிக் கொண்டே சாப்பிட்டு விடலாம் என்ற ஏற்பாடு.
பின்னர்தான் கணேசனுக்கு கருப்பு கோட் பற்றிய ஞாபகம் வந்தது. கோட்டை எடுத்துப் பார்த்தான். அதிலிருந்த தூசியாவது சில தடவைகள் உதறினால் போய் விடும். சுருக்கங்களை என்ன செய்வது. கோட்டை எடுத்துக் கொண்டு தெரு முனைக்கு தேய்ப்பவரை தேடி ஓடினான். அவன் கெட்ட நேரம் வண்டி இருந்தது, ஆனால் தேய்ப்பவர் இல்லை. வீட்டிற்கு வந்து இந்த மாதம் ஒரு அயன் பாக்ஸ் வாங்கி விட வேண்டும் என்ற முடிவுடன் தன் பலம் அத்துனையையும் காட்டி பாத்திரத்தில் நீவி சுருக்கங்களை எடுத்தான். கேமிராவில் சுருக்கங்கள் அவ்வளவாக தெரியாது என உறுதி படுத்திக் கொண்டான். கமலா கூட “ ஏங்க! வீட்லதானே இருக்ப் போறீங்க, அதற்கு எதுக்கு இவ்வளவு ஆர்ப்பாட்டம்” என கேட்டாள். “ உனக்கு தெரியாது, இந்த ஜட்ஜுக்கு டிஸிப்ளின்தான் முக்கியம்” என்றான்.
தன் அறைக்கு செல்வதற்கு முன் பூஜை அறையில் சாமி கும்பிட்டுவிட்டு, மனதில் சீனியர் அட்வகேட் ராகவாச்சாரியையும் கும்பிட்டுக் கொண்டான். ஈசன் சட்டநாதரை கூட கணேசன் சீர்காழி பக்கம் செல்லும் பொழுதுதான் நினைத்துக் கொள்வான். ஆனால் சட்ட புத்தகத்தை தொடும் பொழுதெல்லாம் ராகவாச்சாரியை கும்பிட்டுவிட்டுதான் படிக்க ஆரம்பிப்பான். அவ்வளவு ஏன்? கோர்ட்டில் எதிரே ராகவாச்சாரி வந்தால் தலை குனிந்து கரம் கூப்பி பின்னால் இரண்டடி சென்று அவருக்கு வழி விடுவான் அவ்வளவு மரியாதை அவர்மேல்.
அவர் எந்த கோர்ட்டில் வாதாடினாலும் கணேசன் உட்கார்ந்து கேட்பான்.
ஒரு தடவை பெரிய இடத்து வழக்கு ஒன்று இவனுக்கு வந்தது, கட்சிக்காரர் அரசாங்கத்திற்கு பத்து கோடி ரூபாய் ஒரு ஒப்ந்தத்திற்காக கட்ட வேண்டி இருந்தது. ரூபாய் ஆறு கோடி கட்டி விட்டார். மீதம் நான்கு கோடி ரூபாய் கட்டுவதற்கு இரண்டு மாதம் அவகாசம் கேட்டார். அரசோ அவகாசம் மறுத்ததுடன் இரண்டு கோடி ரூபாய் அபராதமாக பிடித்துக் கொள்வதாக கூறியது. வழக்கு கணேசனிடம் வந்தது. சற்று சொதப்பினாலும் கட்சிக்காரருக்கு பெருத்த நஷ்டமாகிவிடும். எனவே அவன் ராகவாச்சாரியை சரணடைந்தான்.வழக்கு விசாரனைக்கு வந்தது, ராகாவாச்சாரி தன் வாதத்தை துவக்கினார். “ பத்து கோடி ரூபாய் ஒரு பெரிய தொகை. என் கட்சிக்காரரால் குறுகிய காலத்தில் ரூபாய் பத்து கோடியை கட்ட இயலவில்லை” என்ற தோரனையில் வாதாடிக் கொண்டிருந்தார். கணேசன் தலையில் கை வைத்து விட்டான். இந்த மனுஷன் ஆறு கோடி ரூபாய் கட்டியது பற்றி மூச்சே விட வில்லையே, மறந்து விட்டார் போல, இடையே யாராவது எடுத்துச்சொன்னாலும் புடிக்காது. கேஸ் போனதுதான் என்ற முடிவிற்கு வரும்பொழுது ஒரு அதிசயம் நிகழ்ந்தது.

வாதிட்டு கொண்டிருந்தவரை பார்த்து ஜட்ஜ் “ சரி, உங்களால் இப்பொழுது எவ்வளவு கட்ட முடியும்?” என்றார். ஏற்கனவே ரூபாய் ஆறு கோடி கட்டி விட்டோம் மை லார்ட்” என்றார் ராகவாச்சாரி. “ ஓ! மீதம் உள்ளதை கட்ட எவ்வளவு அவகாசம் வேண்டும்” எனக் கேட்டார் ஜட்ஜ். “ ஆறு மாதங்கள் போதும்” என எதிர் பார்ப்புக்கு மேல் கேட்டு வாங்கினார் ராகவாச்சாரி.
வெளியே வந்த ராகவாச்சாரியிடம் “ நீங்கள் அந்த ஆறு கோடி குறித்து பேசாததால் பயந்து விட்டேன்” என்றான். அதற்கு “ நான் முதலிலேயே கூறி இருந்தால் மீதம் கட்ட வேண்டிய நான்கு கோடியில் எவ்வளவு கட்ட முடியும் என்று ஜட்ஜ் கேட்டிருப்பார். ஒரு கோடி ரூபாயாவது கட்ட வேண்டி வந்திருக்கும்” என்றார் ராகாவாச்சாரி.
அந்த ஒரு கேஸிலேயே கணேசன் பைக்கிலிருந்து காருக்கு தாவினான். அதன் பின் ராகாவாச்சாரியை தெய்வமாகவே பார்க்க ஆரம்பித்து விட்டான்.
ஒரு வழியாக லிங்கை கிளிக் செய்து உள்ளே நுழைந்தான். திறக்கப்படும் வரை காத்திருக்கவும் என திரையில் வந்த செய்தியை கண் இமைக்காமல் மாலை வரை பார்த்துக் கொண்டிருந்தான். மாலை ஐந்து மணியளவில் அவனுடைய கேஸுக்காக லிங்க் திறக்கப்பட்டது. எதிர்கட்சி வக்கீல் லிங்க் வழியே உள்ளே நுழைய சிரமப் பட்டுக் கொண்டிருந்தார். பின்னர் சப்தம் வர வில்லை.
நீதி அரசரை பார்த்தவுடன் கணேசன் எழுந்து நின்று கொண்டான். கணேசன் உட்காருங்கள் என்றார் ஜட்ஜ். பரவாயில்லை மைலார்ட் என்றான் கணேசன்.
ஜட்ஜ்” உங்க லுங்கிதான் தெரியுது, நீங்க தெரியல. உட்காருங்கள்” என்றார் சற்று கடுமையாக.
இந்த சடங்குகள் முடிவு பெருவதற்குள் மணி ஆறு ஆகிவிட்டதால் வழக்கு எண் 207 of 2019, மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப் பட்டது.

 


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.