புலவர் ரவீந்திரன் அவர்கள் தலைமையில்
கோவை சுதந்திரதினக் கவியரங்கத்தில்
வாசிக்கப்பட்ட கவிதை
பேரிடி வாங்கியும் – நாங்கள்
பேசாமல் போயின
காலங்கள்!
பெண்ணியம் ஏன்
பேச வந்தோம்
பெரிய மனிதர்களே
கேளுங்கள்!
ஒரு பெண் எத்தனை எத்தனை இன்னல்களில் வாழ்கிறாள் தெரியுமா..
இங்கே இயற்கைக்கும் ஈரமில்லை
இல்லையென்றால் அடுப்பில்
பற்றவைத்த நெருப்புக்கூட
அணையாது எரியுமா?
களவு போன ஆறுபோல
கைரேகை தொலைய
பாத்திரம் தேய்த்து,
நகக் கண்கள் குருடாக
வெங்காயம் உரித்து
காய்கறி அறுத்து
கூட்டுப் பொரியலோடு
சோறு பொங்கி
பரிமாற
ஒரு கல் உப்புக் கூடியதற்காக:
ஒருவன்
ஓடிவந்து அடிவயிற்றில்
மிதிப்பான்
இன்னொருவன்
சுடு சோற்றை
முகத்தில் வீசி
மூக்கை விடைப்பான்
மற்றொருவன்
எங்கள் அம்மாக்களைக்கூட
புணரப்போவதான வார்த்தைகளை
கூச்ச நாச்சமின்றிக் கூறுவான்
அப்போது கூனிக் குறுகிப் போய் நிற்பதுதான் பெண் என்றால்
ஒப்புக் கொள்ள முடியுமா?
நாங்கள்
அடுப்பறையில் இருக்கும் போது பங்கெடுக்காதவர்கள்
படுக்கறையில் வந்து கொஞ்சும் போது
துணி களைவது தான்
பெண் என்றால்
ஒப்புக்கொள்ள முடியுமா
கொடியிடை என்பீர்கள்
குனிந்து குனிந்து கூட்டிப் பெருக்கினால்
அப்படித்தான்
சிறுத்துப் போகும் இடை
நீங்கள் வாங்கித் தரும்
வளையல்
கை விலங்கு
நீங்கள் பூட்டிவிடும்
கொலுசு
கால் விலங்கு
மற்றும் நீங்கள் அவிழ்ப்தற்காகவே
அணிவிக்கிற ஆடைகள்
ஆடைகளல்ல
அவமானங்கள்
எங்கள் ரத்தத்தை
உறிஞ்சிக் குடித்துவிட்டு
எங்கள் நரம்புகளாலேயே
எங்கள்
கழுத்தை இறுக்கிவிட்டு
நீங்கள் தூவும் பூக்கள்
எங்கள் உடலுக்கல்ல
எங்கள் பிணத்திற்கு
நீங்கள்
புத்திசாலிகள்தான்
ஆதி நெருப்பை வைத்து
சமைக்க மட்டுமே
எங்களை பழக்கிவிட்டீர்கள்
மிருகங்களோடு மிருகமாய்
பெண்களை வேட்டையாடுனீர்கள்
எங்கள் மரணமேடுகளை
பின்பொருநாள் அம்மனாக்கினீர்கள்
கலுத்திறுக்கும்
தாலிக்கயிற்றுடன்
கல்யாணச்சந்தையில்
காணாமல் போனோம்
இவைகளுக்கு நடுவே
ஆண் பிள்ளைகளையும் பெற்றுத்தருகிறோம்
எங்களுக்கு
எதிராய் திரும்பும்
குறிகளோடு..
இனி பித்தலாட்ட
இதிகாசங்களைப்
பிய்த்தெறியுங்கள்
பெண்களை இழிவு செய்யும்
பக்தி மார்க்கத்தை
புதைத்து மேடேருங்கள்
பெண்ணின் கண்ணீர்
ஆண்களின் நாக்கில்
உப்பிழந்தது போதும்
கோலமிட்ட விரல்கள் இனி
வாளின் பதம் பார்க்கட்டும்
கூறுகெட்ட ஆண்களோடே
குடும்பம் நடத்தியவர்களுக்கு
காளை மாட்டின்
கூர் கொம்பு ஒன்றும்
கொடுமையானதல்ல
காகிதம் சுற்றிச் சுற்றி
பார்சல் பண்ணுகிற
ஆடை முறையைக் கொளுத்திவிட்டு
பறக்கத் தோதான
சிறகை மட்டும் அணி
பெண் குறிக்குப் பூட்டுப்போட்ட ஆணுலகமே….
உன் வீரத்தை
மீசை வளர்த்துக் காண்பித்தாய்
அதை நாங்கள்
முகத்தில் படிந்த
ஒட்டடை என்றே
உணர்கிறோம்
சமத்துவத்துடன் வா
இல்லையேல்
வழி மறிக்காதே..
தள்ளிப் போ
காற்று வரட்டும்!