மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் – நான்காவது வினாடி -ஜெர்மன் மூலம் – தமிழில் ஜி கிருஷ்ணமூர்த்தி

வாசிப்போம் வாசிப்போம்: முப்பத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (03.10.2019)நமக்கான காந்தி" - சுரேஷ் பிரதீப் | காந்தி - இன்றுமகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள் by வால்டெர் ஏரிஷ் ஷேபேர்காந்தியின் அகிம்சை - பார்ப்பனியமும் முதலாளித்துவமும் போற்றும் தத்துவம்

தோட்டா    :        மூன்றாவது வினாடி முடிந்துவிட்டது, மகாத்மா காந்தி! இன்னும் இரண்டு வினாடிகளுக்கு நீ உயிர் வாழமுடியும். துடித்துக் கொண்டிருக்கும் உன் இதயத்தை என் நுனி தொட்டுக் கொண்டிருக்கிறது. வலிக்கிறதா, காந்தி?       

காந்தி      :        இல்லை .     

தோட்டா          மிக்க மகிழ்ச்சி! உன் இதயம் கவலை ஏதுமின்றி என் வரவை நோக்கித் துடித்துக் கொண்டிருக்கிறது   

காந்தி      :        நீ என்னுடன் தங்கிவிட்டாய், என் தோட்டாவே இங்கே அடிப்பாகத்தில் ..     

தோட்டா   :        ஆம்! நான் உன்னுடன் தங்கிவிட்டேன்.      

குரல்       :        அது உன்னுடனேயே தங்கி இருக்கும். உன் இதயத்தினுள் இருக்கும் தோட்டா உயர்ந்த கதவு ஒன்றின் சாவியாகும்.     

காந்தி      :        அந்த கதவுக்கு பின்னால் என்ன இருக்கிறது? 

குரல்       :        (மெல்லிய சிரிப்புடன்) எத்தனை காலமாக உனக்கு இப்படி ஒரு ஆவல்? என் அருமை காந்தி?          

காந்தி      :        நான் போகவேண்டும் என்றால். நான் போகவேண்டிய பாதையைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்தானே?   

குரல் :        கொடுக்கப்படும் தண்டனைக்கு எதிராக ஏதும் செய்யக்கூடாது ஒருவன் என்று உன் ஆயுள் பூராவும் மற்றவர்களுக்கு நீ பாடம் சொல்லிக் கொடுக்கவில்லை?

காந்தி   தண்டிக்கப்பட்டிருக்கிறேன் என்றால் பயணத்தை தொடருவோமே ! மேலும் உயரமாக வந்திருக்கிறோமோ?      

                                   

குரல்       :        நாம் கடந்து வந்தது மேகத்தை! 

காந்தி      :        அதன் மேல் புறத்திலா இருக்கிறோம்?    

குரல்       :        அதோ பார்!   

காந்தி      :        என் பின் விரிந்து கிடக்கும் மேகத்தை தவிரவேறு எதையும் நான் காணமுடியவில்லை .   

குரல்       :        மீண்டும் முயன்றுபார்!     

காந்தி :      மேகம் இப்போது மறைந்து போய்விட்டது, என் குரலே! நான் இந்தியாவை காண்கிறேன், ஓ! என் குரலே! பளபளவென்று பளிச்சிட்டுக் கொண்டு என் இந்தியாவைச் சுற்றிப் பாய்ந்து கொண்டிருக்கும் கடலைப்  பார்! மணமகனைப் போல் பளபளக்கும் நதிகளில் இந்தியாவை கடல் எப்படி ஆலிங்கனம் செய்கிறது பார், என் குரலே! கிழக்கு திசையில் உள்ள மலைகள் எப்படி நிழலை வீசுகின்றன? கங்கையின் நூற்றுக்கணக்கான நதிகள் எவ்வாறு மின்னுகின்றன? என் குரலே, இந்தியாவைப் பார் அங்கே!    

குரல்    : ஆனால் நாம் பயணத்தைத் தொடர வேண்டும்! அது கட்டளை!  

காந்தி      :        கட்டளை என்றால் நாம் தொடர்ந்து பறந்து செல்ல வேண்டியது தான்! (குழப்பமான சத்தங்கள்) 

                              நில் என்குரலே, என்ன அது? நாம் கேட்கும் இரைச்சல் என்ன?            

குரல்       :      கல்கத்தா தொழிற்சாலையின் இரும்புப் பட்டறைகள். அங்கே மிகக் கடினமான இரும்பு தயாரிக்கப் படுகிறது. மாபெரும் குண்டுகளை கக்கும் பீரங்கிகள் செய்வதற்காக. கல்கத்தா நகரின் டம்டம் பகுதியில் இயந்திரங்கள் போடும் இரைச்சல்! அங்கே தோட்டாக்கள் தயாரிக்கப் படுகின்றன! உனக்காகக் கூட ஒரு தோட்டா அங்குதான் தயாரிக்கப் பட்டது.       

காந்தி :      ஆயுதம் உற்பத்தி செய்யும் பட்டறைகளின் இரைச்சலை மட்டும்தான் கேட்க முடிகிறது. ஏன் இப்படி, என்குரலே? வேறு எந்தவிதமான சத்தமும் பூமியிலிருந்து வராததேன்?      

குரல்       :        வன்முறையின் இரைச்சல் இப்போது மிகவும் சக்தி வாய்ந்ததாக இருப்பதுதான் காரணம்.     

காந்தி      :        என் இந்தியர்களுக்கு நான் நூல் நூற்பதற்காக இராட்டையைக் கொடுத்தேன். சுதந்திரமாகவும், சண்டைச் சச்சரவு இன்றி வாழ்வதற் காகவும்! ஆனால் அவர்கள் கல்கத்தாவில் மரணத்தை நூற்கிறார்கள். பயணத்தைத் தொடர்வோம், என் குரலே!       

                              அதோ மலைகள் ஆழ்ந்து மறைகின்றன. மலைகளின் மேல் புதிய மலைக் கூட்டங்கள் எழுகின்றன. கடல்களின் பின்னால் புதிய கடற்கரைகள். மலைகளிலிருந்து மேகங்கள் புகை மண்டலம் என எழுகின்றன.  தயவு செய்து மெதுவாகப் பறந்து செல்வோமே! என் குரலே! உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது?                  

குரல்       :        (மெல்லிய சிரிப்புடன்) மிகவும் அழகுதான்.   

                               (இரைச்சல்கள்)        

காந்தி      :        சற்றுப்பொறு! என்ன அங்கே? பீரங்கிகள் வெடிக்கும் போது எழும் வெடிச்சத்தம் போல் ஏதோ என் காதில் விழுகிறதே!

குரல்       :        உலகம் ரம்மியமாக இருக்கும். ஜாவா தீவின் மீது குண்டு பொழிகிறார்கள். மலேயா நாட்டின் காடுகளின் மீது குண்டு போடுகிறார்கள். கோபத்தினாலும், மரண பயத்தினாலும் உந்தப்பட்டு மூக்டன் நகரில் கத்துகிறார்கள்.    

காந்தி      :        என் குரலே, போரின் இரைச்சல் ஏன் நாம் இருக்கும் இடம் வரை வந்து கேட்கிறது  என்பதை விளக்குவாயா?                

குரல்       :        வெறுப்பின் குரல் இன்று மிகவும் மேலோங்கி இருப்பது தான் காரணம்.    

காந்தி :        பிறரை நேசிப்பவன் எவ்வளவு சக்தி வாய்ந்தவனாக இருக்கிறான் என்று அவர்களுக்கு நான் போதித்தேன். ஆனால் அவர்களோ ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கின்றனர்.

எவ்வளவு உயரத்தில் நாம் இருக்கிறோம். கடல்கள் முடிவடைவதில்லை என்பதுபோல, அகன்று விரிகின்றன. தங்கநிற பாலைவனத்திற்கு அப்பால் நீலக்கடல்களும் வெண்மையான கடல்களும் விரிவடைந்து பரவுகின்றன. வெள்ளை வெளேரென்று சைபீரியா விரிந்து கிடக்கிறது. அதனுடைய ஆறுகள் கறுமை இருட்டினுள் சங்கமமாகின்றன.    

                              ஓ, என் குரலே! எல்லாம் எவ்வளவு கம்பீரமாக இருக்கிறது?              

குரல்       :        (சிரித்து) எவ்வளவு கம்பீரம்? (வெகுதூரத்தில் கலைந்துபோன சோககீதங்கள்)     

காந்தி      :        என்ன அது?         

குரல்       :        “கைதிகளின் சோக கீதங்கள்” தொலைதூரத்தில் இருக்கும் கைதிகளின் வருகைக்காகக் காத்து கிடக்கும் அன்னைகளின், மனைவிகளின் சோக கீதங்கள்!

                              தாய்நாட்டை இழந்துவிட்டு எந்தவிதமான நம்பிக்கையும் அற்று புதிய தாய்நாடு ஒன்றிற்கு செல்லும் கோடிக்கணக்கானவர்கள் இசைக்கும் சோககீதம்.      

காந்தி      :        எப்படி இந்த சோக கீதத்தை இவ்வளவு உயரத்தில் நாம் இருந்தும் இன்னும் கேட்கமுடிகிறது?               

குரல்       :        சோகத்தின் குரலுக்கு எல்லைகள் இல்லாத காலம் இது!     

காந்தி :        நான் எல்லோருக்கும் சமாதானத்தைப் பற்றிய செய்தியை அனுப்பி யிருந்தேன். ஏன் அவர்கள் நான் சொன்னதைக் கேட்கவில்லை? ஏன்?       

                              பயணத்தைத் தொடருவோம், என் குரலே!      

                              உலகம் மிகவும் சிறியது. அது இருண்டிருக்கிறது. சூன்யத்தில் இருப்பது போல உலக நாடுகள் உள்ளன.

                              எல்லாம் எப்படி ஒரே அமைதியாக இருக்கிறது என்று காது கொடுத்து கேள், என் குரலே!       

                              வெறுப்பு, போர், சோகம், வலி எல்லாம் ஆழ்ந்து மூழ்கி மறைந்து விட்டன.    

                              ஆனால் . . . அதோ, என்ன அது?        

                              இருண்ட நாடுகளில் நெருப்பு ஜொலிக்கிறது, அமைதியின்றி இங்கும் அங்கும் சிவப்பாக! என்ன வித்தியாசமான தீ அங்கே!    

குரல்       :        அங்கே இருக்கும் பெரிய நகரங்கள், அங்கே உள்ள மனிதர்கள் அதிகாரம், பேராசை போன்றவற்றால் நிரப்பப்பட்டவை! நீ பார்க்கும் தீ அவைதான்!   

காந்தி      :        ஏன் இந்த உயரத்திலும் தீ நம் கண்களுக்கு புலப்படுகிறது?        

குரல்       :        அதிகாரத்தின் பிரகாசம் அப்படி சக்தி வாய்ந்ததாக இருக்கிறது இப்போது!      

காந்தி      :        நாம் இப்போது பறந்து எங்கே போகிறோம்?      

குரல்       :        என்னால் சொல்ல இயலாது!    

காந்தி      :        கடவுளிடமா, என் குரலே! 

குரல்       :        கடவுள் என்ற வளமற்ற சொல்லால் மட்டும் விவரிக்க முடியாதது. 

காந்தி      :        என்னை எங்கே அழைத்துச் செல்கிறாய் என்று உனக்குத் தெரியாதா?      

குரல்       :        நான் எப்படி அதைச் சொல்ல முடியும்? உங்கள் மொழிகள் அதற்காக ஏற்படவில்லையே? அங்கு எப்படியில்லை என்றுமட்டும் என்னால் சொல்லமுடியும்.      

                              அங்கு வெறுப்பு இல்லை, போர் இல்லை, துக்கம் இல்லை, மனவலி இல்லை. அங்கு அதிகாரம் என்று கிடையாது, செல்வங்கள் இல்லை, வன்முறை இல்லை.     

                              உங்கள் பூமியை ஆட்டிப்படைக்கும் எதுவுமே அங்கு இல்லை!  

                              எப்போதாவது அபூர்வமாக பூமியுடன் தொடர்பு கொண்ட மிகவும் உயர்ந்த பதவி வகிக்கும் கருணை உள்ளத்தால் ஆசிர்வதிக்கப்பட்ட பணியாளர்களின் ஒருவன் மேலே வருவான்.. அவனுடைய முடியிலும் உடைகளில் இருக்கும் மடிப்புகளிலும் சில சமயங்களில் பூமியின் வாசனை கடுகளகாவது பற்றிக் கொண்டிருக்கும். அதுகூட எப்போதாவது ஒருமுறைதான். 

                              அப்படிப்பட்ட வர்ணனைக்கு எட்டாத அளவிற்கு அமைதி நிலவுகிறது, நாம் போக இருக்கும் இடத்தில்.  

காந்தி      :        அங்கு போவதற்கு விருப்பமில்லை எனக்கு. 

குரல்       :        என்ன, விருப்பமில்லையா?   

காந்தி      :        எனக்கு நிச்சயமாக விருப்பமில்லை. நான் என் பூமிக்கு திரும்பச் செல்லவேண்டும். மீண்டும் பிறவி எடுத்து என் சகோதரர்களுடம் துயரங்களை எல்லாம் நானும் அனுபவிக்க வேண்டும்.      

                              சிப்பாயாகப் பிறந்து ஜாவாவிலுள்ள காடுகளில் சூரிய வெளிச்சதிற்கடியில் காயமுற்று கிடக்க வேண்டும். எரியும் நகரங்களில் நான் பிச்சைக்காரனாக இருக்கவேண்டும். சைபீரியாவில் கைதியாக இருந்து, இழந்துவிட்ட தாய்நாட்டை நினைத்து மனவலியை முழுமையாக பிரதிபலிக்கும் பாடல்களை பாடவேண்டும். தள்ளாடும் கால்களினால் தாய் நாட்டைவிட்டு வெளியேறும் கிழவியாக இருக்க வேண்டும். தன் பிள்ளையை நினைத்துக் கல்லறையின் அருகில் பெருமூச்சு விடும் தாயாக நான் இருக்கவேண்டும்.  நான் சொல்வதைக் கேள் குரலே,

என்னைத் திரும்பிப் போகவிடு, என் குரலே!    

குரல்       :        திரும்பிச் செல்வதற்கான வழி ஏதும் இல்லை!       

காந்தி      :        அப்படி என்றால் என்னை கீழ்நோக்கி விழவிட்டு விடு. தேவை யென்றால் கடுமையாகச் சபிக்கப்பட்டு நரகத்தில் இருக்கவிடு! எனக்குப் பெரும் அமைதியினுள் செல்ல விருப்பமில்லை! அதுவும் என் சகோதரர்கள் துக்கத்தை அனுபவிக்கம்போது!   

குரல்       நீ பேசவில்லை காந்தி! உன்னுள் இருக்கும் குழம்பிய குரல்கள், இன்னும் பேசுகின்றன. நீ மேலே போய்த்தான் ஆகவேண்டும் என்பது நியதி!      

காந்தி      :        நீ எவ்வளவு கடுமையாகப் பேசுகிறாய், என் குரலே!    

குரல்       :        அன்பு கடுமையாகவும் இருக்க வேண்டும், காந்தி!       

காந்தி      :        நீ மிகவும் அதிகாரப்பித்து உடையவனாய் இருக்கிறாய்,             

குரல்       :        நல்லதைச் செய்யவேண்டும் என்றால் அன்புகூடத் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள வேண்டியதாக இருக்கும், காந்தி!      

காந்தி      :        அன்பினால்தான் என்றால், ஏன் இப்படி என்னிடம் கடுமையாக நடந்து கொள்கிறாய்-சரி, நாம் நம் பயணத்தை தொடர்வோம், என் குரலே!   

                              (மணி ஓசை)    

தோட்டா            நான்காவது வினாடி முடிவடைந்து விட்டது, காந்தி. இன்னும் ஒரு வினாடி காலம் தான் நீ உயிர் வாழமுடியும்.. நான்.உள் இதய அறையில் தங்கி உறங்குவதற்குச் சிறந்த இடம் எங்கே என்று தேடிக் கொண்டிருக்கிறேன். உணர்ச்சி வசப்படாமல் இரு காந்தி! ஆறுதல் அடைந்து விடு. மகாத்மா! இன்னும் ஒரு விநாடியில் நாம் இருவருமே அமைதியில் ஆழ்ந்து விடுவோம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.