அவன்:
ஆடு மாடு போற பாதையிலே
அசைந்து அசைந்து போறவளே
வட்ட சிவத்த பொட்டு இட்டவளே
வளைந்து வளைந்து போவதெங்கே?
உதடு ரெண்டும் புன்னகை காட்ட
உள்ளம் ஒன்றில் நான் இருக்க
பள்ள மேடுகளை கடந்து
மெல்ல மெல்ல நடப்பதெங்கே ?
மண் பானை கழுத்திலே
மோர் வடிய வடிய நடப்பவளே
என் தாகம் தீர்க்காமல்
மேகம்போல நகருவதெங்கே?
அவள் :
கட்டபொம்மன் முறுக்கு மீசை
கறுத்த கட்டழகா உன் மேலே
பெருக்க ஆசை நான் வச்சேன்
மனசெல்லாம் நிறஞ்ச மச்சான்
பாசமுடன் பேசும் என் மச்சான்
வாசம் செய்ய குடிசை வருவாயா?
மூச்சிறைக்க முள் பாதையில்
மோர் பானை சுமந்து கொண்டு
கிராம மக்களுக்கு நாளும்
தாகம் தணிக்க போறேன் மச்சான் !
உன் தாகம் என்னோடு
என் மோகம் உன்னோடு
சூரியக்கதிர் சுடும் பாதையில்
உன்னோட பேச்சு மச்சான்
என் பாதம் மனசு குளிந்திருக்கு !
நின்று பேச நேரமில்லை
நெனைச்சுப் பார்க்க மனசிருக்கு
ஆடி ஓடி மோர் விற்றால்தான்
அடுத்த வேளை கஞ்சி கிடைக்கும்!
பானை நிறஞ்சுருந்தாலும்
பருக மனசு வரலே மச்சான்
அக்கம்பக்கம் பார்த்தாலும்
உன் முகம்போல் யாருமில்லே!
கள்ளமில்லாமல் பேசும் மச்சான்
காது குளிர கேட்க நேரமில்லே
கீழ்வானம் சிவக்கும் முன்னே
குடிசை போய் குந்த வேணும்!
மோர் அளந்து ஊத்தையிலே
ஆசையான உன் முகம் தெரியும்
மோர் பானை காலியாகும்போது
உன் நெனைப்பு மச்சான்
என் நெஞ்சில் நிரம்பி நிற்கும் !
அவன் :
கண்டாங்கி சேலைக்காரி
கருத்த கண்ணழகியே
வெளுத்த உன் பல் அழகு
என் கண்ணை கூச வைக்க
நான் பார்க்க முடியலையே!
கருங்கூந்தலை அள்ளி
கட்டி முடிந்த கட்டழகியே!
புருவத்தை உயர்த்தி வளைத்து
கண்ணால் பேசுவது என்ன
கண் இமைகள் துடிப்பதென்ன ?
அவள் :
பாதிப்பானை பழைய சோறு
பருப்பு வைக்க காசு இல்லே
நாலு உரித்த வெங்காயம்
நான் ருசித்து சாப்பிட இருக்கு!
உன்னோட முகம் நெனைச்சு
கஞ்சி கலயத்தில் குடித்தால்
நெஞ்சமெல்லாம் நீ இருக்க மச்சான்
பஞ்சுபோல் என் மனசு பறக்குது
கொஞ்ச மனசும் துடிக்குது மச்சான்!