விடமாட்டேன் விடமாட்டே னுன்மலர்ப்
பாதங்கள் பணிவதையே விடமாட்டேன்
நான்வைக்கும் வேண்டுதலை யருளாமல்
உன்னையே நகரவே விடமாட்டேன்!
எப்போது மென்நாவு முன்நாமம்
தப்பாது தேவியுன் புகழ்பாடும்
என்னுள்ளில் பேரொளியா யுன்னுருவம்
பொன்போன்று கண்குளிர வொளிவீசும்!
சோதனைமேல் சோதனைகள் செய்தாலும்
நித்தமொரு பிரச்னைநீ தந்தாலுமென்
மனம்நொந்து உடல்நொந்து அழுதாலும்
உன்பாதம் தொழுவதையே விடமாட்டேன்!
குறைதீர வுனையண்டி வருபவரின்
குறைகள்நீ தீர்த்திடவே வேண்டாமோ
மனச்சுமை யிறக்கிடவே வருபவர்க்கு
மனச்சுமை யதிகமாக விடலாமோ!
சோதனைகள் செய்வதுன் விளையாட்டோ
அதற்குமோ ரெல்லையும் வேண்டாமோ
மனம்நொந்து அருள்வேண்டி வருபவர்க்கு
மனக்கவலை யதிகமாக்கல் முறைதானோ!
ஆத்திகம் நாத்திகம் இருசொற்கள்
‘ஆ’நீங்கி ‘நா’சேர்ந்தால் நாத்திகம்
‘ஆ’வதுவும் பிறழாமல் காப்பதுவும்
தேவியே மகாசக்தி உன்கையில்!
மனமுருகி வேண்டுகின்ற பக்தர்க்கு
மனம்குளிர வேண்டுதலை யருளிவிடு
அமைதியை வேண்டுகின்ற பக்தர்க்கு
அமைதியை நிறைவாக வளித்துவிடு!
திக்கெட்டு முன்நாமம் பரவட்டும்
இக்கட்டு இல்லாமல் இருக்கட்டும்
பக்தியின் பரவசத்தில் மூழ்கட்டும்
சக்தியுன் புகழெங்கும் பரவட்டும்!