பி எஸ் ராமையா
உப்பு சத்தியக்கிரத்தில் பங்குகொண்டு சிறைத்தண்டனை பெற்றவர். கதர் விற்பனையாளராகவும் தொண்டர் முகாம்கள் அமைத்து நடத்துபவராகவும் தேசிய இயக்கத்தில் பணியாற்றியவர்.
தமிழ் உரைநடை இலக்கியத்தில் ‘மணிக்கொடி காலம்’ என்று அறியப்படும் அளவிற்கு மணிக்கொடி பத்திரிகை மிக முக்கியமானதாகும். வத்தலகுண்டு சுப்ரமணியன் ராமையா என்னும் பி எஸ் ராமையா (வத்தலகுண்டு ஆங்கிலத்தில் Batlagundu என்று எழுதப்படுகிறது) ‘மணிக்கொடி’ ஆசிரியராகப் பணியாற்றிய காலம் 1935 மார்ச் முதல் 1938 ஜனவரி வரை. மணிக்கொடியிலிருந்து விலகியபின் நாடகத்திலும் திரைத்துறையிலும் கவனம் செலுத்தினார்.
“தேரோட்டி மகன்”, “பிரசிடன்ட் பஞ்சாட்சரம்”, “போலீஸ்காரன் மகள்” போன்ற மிக நாடகங்கள் மாபெரும் வெற்றி பெற்றன. பிரசிடென்ட் பஞ்சாட்சரமும் போலீஸ்காரன் மகளும் திரைப்படமாகவும் வெற்றி பெற்றன. போலீஸ்காரன் மகள் தெலுங்கிலும் எடுக்கப்பட்டது.
1940 தயாரிக்கப்பட்ட “பூலோக ரம்பை” திரைப்படத்தில் தொடங்கி, “பணத்தோட்டம்” என இருபது திரைப்படங்கள் இவரது கதை- வசனம் கொண்டு தயாரிக்கப்பட்ட படங்கள். இவற்றில் சில படங்களை அவரே தயாரித்திருக்கிறார். இயக்கியும் இருக்கிறார். ஆனந்தவிகடன் நடத்திய போட்டியில் இவரது ‘மலரும் மணமும்’ கதைக்கு பத்து ரூபாய் சன்மானமாகப் பெற்றார். ‘ஜெயபாரதி’ என்னும் இதழில் துணையாசிரியராகப் பணிபுரிந்தார். முன்னூறுக்கும் ஏற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவை ‘ஆனந்த விகடன்’, ‘தினமணி கதிர்’, ‘குமுதம்’ தவிர மணிக்கொடியில் வெளிவந்தவை.
‘ராமையாவின் சிறுகதைப் பாணி’ என்னும் நூலை சி.சு. செல்லப்பா எழுதியிருக்கிறார்.
மணிக்கொடி இயக்கத்தைப் பற்றி எழுதிய “மணிக்கொடி காலம்” என்ற இலக்கிய வரலாறு புத்தகத்திற்கு 1982ம் ஆண்டிற்கான சாகித்திய அகாதமி விருது ராமையா பெற்றார்.
* * * * * *
இவரது “மடித்தாள் பட்டி” என்னும் கதை
மதுரையிலிருந்து பழனிக்குப்போகும் சாலையிலிருந்து நாலைந்து மைல் தூரத்திலிருக்கும் ஒரு கிராமத்திற்குப் போய் விட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். ஒரு காலத்தில் காட்டோடையாக இருந்த அந்த நொடிப் பாதையில், வண்டி அடிக்கொரு தரம் குலுங்கி விழுந்து ஆடி அசைந்து கொண்டிருந்தது. திடீரென்று வண்டிக்காரன் வண்டியை நிறுத்தி, “இடது காளைக்கு ஒரு லாடம் விழுந்திருக்குதுங்க மாடு நொண்டுது” என்றான்.
என்று தொடங்குகிறது
வேறு வழியின்றி வண்டியிலிந்து குதித்து ஆலமத்தடிக்குப் போகிறார். புண்பட்ட மாட்டை மட்டும் ஒட்டிக்கொண்டு வண்டிக்காரன் செல்கிறான். அந்த இடத்தின் அழகும் கம்பீரமும் அவர் மனத்திலிருந்த எரிச்சலெல்லாம் ஒரே வியப்பாக மாற்றுகிறது. மூன்று பக்கம் குன்றுகள் சூழ்ந்த இடம். சாதாரணக் காட்டுக் கள்ளிச் செடிக்குக்கூட இடம் கொடுக்கமறுக்கும் கருங்கல் கரடு ஒரு பக்கம். இங்கொன்றும் அங்கொன்றுமாக புதர்கள் முளைத்திருந்தன.
இரண்டு குன்றுகளுக்கிடையில் மாரிக் காலத்தில் குளமாக வேஷம் போடும் ஒரு பெரிய பள்ளத்தாக்கு அதில் அடர்த்தியாகக் கருவேலம் செடிகளும், மரங்களும் வளர்ந்து நிறைந்திருந்தன. இந்தக்குளத்தின் மூன்றாவது திசையில்தான் அந்த நீலப்பச்சைமலை நின்று கொண்டிருந்தது.
ஆலமரத்திற்கு மேற்கே கொஞ்சம்தள்ளி ஒரு பெரிய கிணறு இருந்தது. அதற்குக் கருங்கல்லால் கரை கட்டி உள்ளே இறங்கப் படிகளும் அமைக்கப்பட்டிருந்தன. கிணற்றையடுத்து ஒரு மரத்தடியில் ஒரு சிறிய காட்டுக் கோயில் மண் சாந்து வைத்துக் கருங்கற்களால் கட்டியது.
ஒரே அறைகொண்ட அந்தக் கோயிலின் முன்புறம் ஆணும் பெண்ணுமாக இரு மண் சிலைகள். மரத்தில் கட்டப்பட்டிருந்த பெரிய வெண்கல மணி. படையல் இடப்பட்டதின் அடையாளமாக அடுப்பு மூட்டி எரித்த மும்மூன்று செங்கற்கள். ரசித்துக்கொண்டே சென்றுகொண்டிருந்த கதைசொல்லி ‘முருகா’ என்று குரல் கேட்டுத் திரும்பிப் பார்க்கிறார்.
அறையில் கோவணம். மேலே உடலை மறைத்துப்போர்த்திய ஒருகாவித்துணி, மழ மழவென்று சிரைத்த தலை, நெற்றியிலும் உடலிலும் பளிச்சென்று பூசிய திருநீறு. கழுத்திலே காவித் துணிக்கு மேல் விழுந்து புரண்டு கொண்டிருக்கும் ருத்திராட்ச மாலை. வலது கையில் தண்ணிர்நிறைந்ததிருவோடு இடதுகையில் ஒரு முறுக்குத்திடி.
யாரோ சோம்பேறிப் பண்டாரம் என்று முதலில் தோன்றினாலும் அவர் முகத்தில் இருந்த தனிக்களை இவரை ஈர்க்கிறது. ’பூசை போட வந்தீர்களா’ என்று கேட்கிறார் பண்டாரம். தற்செயலாக இங்கு வரநேர்ந்ததைச் சொல்லிவிட்டு கோவிலைப்பற்றி விசாரிக்கிறார்.
பண்டாரம் அந்த கோவிலின் கதையைச் சொல்கிறார். பக்கத்திலுள்ள இந்தக் கோயில் தெய்வம் என்று அடுத்துள்ள கிராம மக்கள் நம்பினார்கள். முன்னொரு ஆண்டுகளுக்கு முற்பட்ட கோவில்.
மதுரையில் ஆண்டுவந்த திருமலைநாயக்கர் இறுதிக்காலத்தில் மைசூர் உடையார் படைகள் மதுரையைமீது படையெடுக்க வந்த வழியில் சத்தியமங்கலம் வரை மைசூர் படைகள் பிடித்துவிட்டன. மறவச்சீமை அதிபதி ரகுநாத சேதுபதி நாயக்கருக்கு உதவியாக பெரும் படையுடன் வந்தார். எதிரிளைத் துரத்தி வெகு தூரம் பின்வாங்கச் செய்துவிட்டார்.
மூன்று புறம் மலைசூழ்ந்து கோட்டைபோல இருந்தது. அதைப் பயன்படுத்திகொண்டு மைசூரில் இருந்து வரும் உதவிக்காககே காத்திருந்தன மைசூர் படைகள். சேதுபதியின் படைகளும் ஒரு காத தூரத்தில் முகாமிட்டார். பத்து நாள்வரை இரண்டு படைகளும் காத தூரத்திலேயே ஒதுங்கி இருந்தன
பத்தாம் நாள் மைசூரிலிருந்து புதிய படைகள் வந்திருப்பதாகச் சேதுபதிக்குச் செய்தி எட்டியது. அதுபற்றிய உளவு தெரிந்துகொண்டு மேற்கொண்டு யுத்தம் எப்படிச் செய்யலாம் என திட்டம் தீட்ட முடிவுசெய்தார், சேதுபதி. உளவறியத் திறமைசாலிகள் பலர் இருந்தும் தானே உளவறியச் சென்றாராம் சேதுபதி.
அந்தக்காலத்தில் அதோ இருக்கிறதே. வண்டிப்பாதை அது ஒரு காட்டோடையாக இருந்தது. இந்த மடித்தாள் பட்டி அப்போது நல்ல செழிப்பான கிராமம். பத்துப் பதினைந்து மச்சு வீடுகளும் உண்டு. இந்த எல்லை போர்க்களமாக மாறியவுடன் கிராமத்து மக்கள் ஊரைவிட்டு ஓடிவிட்டார்கள். மைசூர்க்காரர்கள் வந்த பார்த்து யாருமில்லாததால் ஊரை அப்படியே விட்டு விட்டார்கள்.
ஊரைவிட்டு ஓடிவிட்ட கிராம மக்களில் ஒருவன் கள்ளமுத்தன். பணக்காரன். பணத்தை வீட்டிலேயே ஓரிடத்தில் புதைத்துவிட்டுப் போயிருந்தான். சில நாட்களாகச் சண்டை ஏதும் நடக்காததால் புதைத்த செல்வத்தை எடுத்துப்போக வந்திருந்தான் . மனைவியும் மடியாச்சியும் பிடிவாதமாகக் கூட வந்திருந்தாள்.
புதைத்தவற்றை தோண்டி எடுக்கும்போது சேதுபதி வீட்டுக்குள் குதித்தார். கள்ளமுத்தன் பயந்து கத்தினான். சேதுபதி தான் யாரெனப் புரியவைத்தார். சேதுபதிக்குப் பதிலாக கள்ளமுத்தன் உளவறிந்து வரலாமே என்கிற யோசனையைச் சொல்கிறாள் மடியாச்சி. என்ன காரணத்தாலோ சேதுபதி அதற்குச் சம்மதித்தார். கள்ளமுத்தன் வீட்டிலிருந்து புறப்பட்டபோது சரியாகத் தானிருந்தான்.
ஆனால் போகும் வழியில் சூழ்ந்திருந்த இருளில் ஆட்சிபுரிந்த பேய்களின் குணங்கள் அவன் நெஞ்சிலும் ஆட்சிபுரிய ஆரம்பித்து விட்டன. சேதுபதிக்கு உதவி செய்வதில் கிடைக்கும் சன்மானம் எவ்வளவு இருக்கும்? ஆனால் எதிரி தளபதியிடம் சேதுபதியையே பிடித்துக் கொடுப்பதாகச் சொன்னால் ஏராளமான சன்மானம் கிடைக்கக் கூடுமல்லவா? இந்த எண்ணத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கொள்ள அவனிடம் சக்தி இல்லை. தன்னைக் கண்டு அவன் போட்ட பயக்கூச்சலைக் கொண்டே சேதுபதி இதைப் புரிந்துகொண்டிருக்கவேண்டும். ஆனால்..!
கள்ளமுத்தன் சேதுபதியைக் காட்டிக் கொடுத்து எதிரிகளிடமிருந்து பெரும் சன்மானம் பெறாலாம் முடிவு செய்கிறான். மைசூர்ப் படைகளின் தளபதியச் சந்தித்தான் அதன்படி ஐம்பது வீரர்களை உடனனுப்பினால் சேதுபதியைப் சிறைபிடித்துகொண்டு வருவதாகச் சொன்னான். ஆனால் தளபதியோ கள்ளமுத்தனைக் காவலில் வைத்துக்கொண்டு வீரர்களை மட்டும் அனுப்புகிறான். துப்பு சரியாக இருந்தால் வெகுமதியும் தவறாக இருந்தால் தண்டனையும் கள்ளமுத்தனுக்குக் கிடைக்கும் என்று ஏற்பாடு.
நூறு வீரர்கள் சேதுபதியைச் சிறப்பிடிக்கச் சென்றார்கள். சேதுபதி தப்புவதற்கு நேரம் தராமல் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே குதித்து விட்டார்கள்
“மடிச்சியாச்சியைப் பிடித்த பயம் ஒரே நொடியில் அவளை தெய்வப் பெண்ணாக மாற்றிவிட்டது. அவளிடம் இயற்கையிலே இருந்த தாய்மைதான் பொங்கி எழுந்திருக்க வேண்டும். சேதுபதியைத் தன் சொந்த மகனாக வரித்துக் கொண்ட அந்தத்தாய், அடுத்த கணம். அன்னை பராசக்தியின் ஒர் அவதாரமாகிவிட்டாள்.
“ஒரே கணத்தில் அந்தக்கூடத்துக்காட்சியை மாற்றி அமைத்தாள். ஒருபக்கத்தில் கிடந்தபாயைக்கொண்டுவந்து நடுக்கூடத்தில் விரித்தாள். முற்றத்தில் தோண்டிப் போட்டிருந்த மண்ணில் கொஞ்சம் அள்ளிக்கொண்டு வந்தாள். பானையிலிருந்த தண்ணிரில் மண்ணைக் கலந்து சேதுபதியின் நெற்றியிலும், கன்னங்களிலும், மூக்கின்மேலும்பூசினாள்.பாயின்மேல் உட்கார்ந்து சேதுபதியைத் தன் மார் மேல் சாய்த்துக்கொண்டு மகாராஜா, நீங்கள்தான் என் கணவர். உங்களுக்கு உடம்பு சரியில்லை என்று ரகசியமாகச் சொல்லிவிட்டு, உரத்த குரலில், ‘என் சாமியில்லே! கொஞ்சம் தூங்குங்க. உடம்பு நெருப்பாக கொதிக்குதே காளியாத்தா என் தாலிக் கவுத்தைக் காப்பாத்திக் குடு தாயே! ஒனக்கு ரெண்டு கடா வாங்கி வெட்டச் சொல்றேன் என்று பிரலாபிக்க ஆரம்பித்தாள்.
கணவனைத் தவிர வேறு யாரையும் ஒரு பெண் மார்போடு அணைத்துக்கொள்ள மாட்டாள் என நம்பினார்கள். மடியாச்சியும் வீர்கள் கேட்ட கேள்விகளுக்கு நம்பும்படியான பதில்களைச் சொன்னாள். வீரர்கள் திரும்பிப் போய்விட்டார்கள்.
தளபதி கள்ளமுத்தன் மூக்கை அறுத்துவிட்டான். கள்ளமுத்தன் கோபத்துடன் திரும்பிவந்து மனைவியின் மூக்கையும் அறுத்ததோடு, கண்டம் துண்டமாக வெட்டிப் போட்டான்.
சேதுபதி தாமே போய் உளவு அறிந்துகொண்டு மறுநாளே மைசூர்ப் படைகளைத் தாக்கி மைசூர் வரையில் துரத்திக் கொண்டு போனார்.. மடிச்சியாச்சியின் மூக்குக்கு பதிலாக மைசூர் தளபதியின் மூக்கையே வாங்கிப் பழி தீர்த்துக்கொண்டார். அதனால்தான் அந்த யுத்தத்துக்கு மூக்கறுத்தான் சண்டை என்று பெயர் ஏற்பட்டது என்கிறார் அந்தப் பண்டாரம்..
சேதுபதி திரும்பி வரும் வழியில், இங்கே இதே இடத்தில்தான் தண்டடித்துத் தங்கினார். மடிச்சியாச்சியை அடக்கம் செய்திருந்த அந்த இடத்தில் கோவிலைக் கட்டுவித்தார். அவளுக்கு மடி கொடுத்ததாய் என்று பெயரும் வைத்தார். மடிகொடுத்ததாய் மடி கொடுத்த அம்மனாகி இப்போது மடித்தாளம்மனாகிவிட்டாள்.
நானும் கூடவே எழுந்து, “இது நிஜக் கதையா ஸ்வாமி” என்றேன். பண்டாரம், “அவ்வளவும் கல்லிலே பொறித்து வைத்திருக்கிறது. கல் அந்தக் கிணற்றுக்குள்ளே கிடக்கிறது. உற்சாகமுள்ளவர்கள் தேடி எடுத்தால் பார்க்கலாம்” என்றுபுறப்பட்டார்.
அவர்போவதையே பார்த்துக்கொண்டு, அரை நாழிகைவரை நான் சிலைபோல் நின்றிருந்தேன் என்பது வண்டிக்காரன் சொல்லித் தான் எனக்குத் தெரியும்.
என்று கதை முடிகிறது.
*******
ஒரு செவிவழிக் கதையினை சுவாரசியமான சிறுகதையாகப் படைத்திருப்பது வியக்க வைக்கிறது.
எப்போதோ படித்த ஒரு செய்தி. மணிக்கொடியின் இதழ் அச்சாவதற்குமுன் பக்கங்கள் குறைந்தால் ‘இந்தா பிடி’ என்று ஒரு அருமையான சிறுகதையை தேவையான பக்க அளவிற்கு எழுதித் தந்துவிடுவாரம் ராமையா.
ஒருமுறை கு.அழகிரிசாமியின் ‘கவிச்சக்கரவர்த்தி” நாடகத்தையும், பி.எஸ். ராமையா எழுதிய தளவாய் குமாரப்பிள்ளை நாடகத்தையும் ‘சேவா ஸ்டேஜ்‘ தயாரித்து பம்பாயில் அரங்ககேற்றம் செய்ததாம். அது குறித்த சுவையான செய்திகளை ‘கோமல்’ சுவாமிநாதன் ‘பறந்துபோன பக்கங்கள்’ பகுதியில் சுபமங்களாவில் எழுதியிருக்கிறார்.