அக்டோபர் 5 ஆம் தேதி திரு ரா.கி.ரங்கராஜன் அவர்களின் பிறந்தநாள். வாழ்நாளில் ஒரு மனிதர் இவ்வளவு எழுதிக் குவிக்க முடியுமா என்று மலைக்க வைக்கும் எழுத்தாளர், பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர் ! பதினாறு வயதில் எழுத ஆரம்பித்த இவர் அறுபத்தி ஐந்து வருடங்கள் – தன் வாழ்நாள் இறுதி வரை எழுதிக்கொண்டே இருந்திருக்கிறார் – எளிமையாக, சுவாரஸ்யமாக, உண்மையாக, சிரிப்பாக, சிந்தனையைத் தூண்டும் விதமாக, இன்னும் விதம் விதமாக எழுதியுள்ளார்.
அந்த நாட்களில், கண்ணதாசனின் வனவாசம், மனவாசம், அர்த்தமுள்ள இந்துமதம் போன்ற புத்தகங்களை வாசிப்பது, என் மனதுக்கு இதமாக இருந்தது. வனவாசத்தில், தன்னை ‘அவன்’ என்று படர்கையில் வரித்துத் தன் சுயசரிதையை, மிகவும் வெளிப்படையாக எழுதியிருப்பார்.
அக்டோபர் 2004ல் நான் வாங்கிய புத்தகம் “அவன்”. கங்கை புத்தக நிலையம் வெளியீடு. எப்படித் தோன்றியது என்பது நினைவில் இல்லை. வாங்கியவுடன் ஒரே மூச்சில் வாசித்து முடித்தது நினைவிருக்கிறது! கண்ணதாசனைப் போலவே ‘அவன்’ என்று படர்கையில் தன் தனிப்பட்ட வாழ்க்கைக் கதையை ரா.கி.ர எழுதிய புத்தகம் அது. ‘உத்தியைப் பொறுத்த மட்டில் கண்ணதாசனின் வனவாசம் எனக்கு வழிகாட்டி. ஆனால் உண்மைகளை ஒப்புக்கொள்வதில் அவருக்கு இருந்த தைரியமும், துணிச்சலும் எனக்குக் கிடையாது. அவரது ஒப்பற்ற கவிதை நடையும் எனக்குக் கைவராது’ என்கிறார் தன் முன்னுரையில் ரா.கி.ர.!
1500 க்கும் மேற்பட்ட சிறுகதைகளும், 50 நாவல்களும், ஏராளமான கட்டுரைகளும், மொழிபெயர்ப்பு நாவல்களும், நகைச்சுவை நாடகங்களும் ‘மட்டும்’ எழுதியுள்ள ரா.கி.ர., ‘இலக்கிய வரலாறு என்று எனக்கு ஏதும் இல்லை’ என்கிறார்! மூன்று நாவல்கள் திரைப்படங்களாக வந்துள்ளன.
அவன் புத்தாத்தின், 334 பக்கங்களையும், தொடர்ந்து வாசிக்க வைக்கும் அற்புதமான எழுத்து அவருடையது. எத்தனை மனிதர்கள், நிகழ்வுகள், அனுபவங்கள் – கையில் பத்து ரூபாய் இல்லாத நேரம், கண்ணதாசனுக்கு அவசரமாக சேலம் செல்ல, தன் கை வாட்சைக் கழற்றிக் கொடுத்ததும், பின்னர் ஒரு நாளில் அவரிடமிருந்து திரும்பப் பெற்றுக் கொள்வதும் ஒரு சிறுகதை போல சொல்லுகிறார். தந்தை மகோபாத்யாய ஆர்.வி. கிருஷ்ணமாச்சாரியார் முதல் எம்.வி.வெங்கட்ராம், கு.ப.ரா., தேவன், டி.கே.சி., ராஜாஜி, எஸ்.ஏ.பி. (நாற்பத்தி இரண்டு வருடங்களுக்கும் மேலாக குமுதத்தில் எஸ்.ஏ.பி. யின் கீழே பணி புரிந்த அனுபவங்கள் சுவாரஸ்யமானவை!), வ.ரா. கி.வா.ஜ., நாடோடி, கண்ணதாசன், வானதி திருநாவுக்கரசு, டைரக்டர் ஶ்ரீதர், மாலன் (அவருக்கு ஸ்பெஷல் நன்றி சொல்கிறார், இந்தப் புத்தகத்தை எழுதத் தூண்டியதற்காக!)வரை அவரது அனுபவங்களின் திகட்டாத தொகுப்பு இந்தப் புத்தகம்.
ரா.கி.ர தனது பதினாறாவது வயதில் எழுத ஆரம்பிக்கிறார். முதல் கதை எழுதியதை சுவாரஸ்யமாகச் சொல்கிறார். படிப்பு முடிந்ததும், அண்ணனுடன் சென்னைக்கு வந்து, முதன் முதலாக திரு வாசனை அவர் வீட்டில் சென்று சந்திக்கிறார். வயது பத்தொன்பது இருக்கலாம். “ரொம்பச் சின்னப் பையனா இருக்கியேப்பா, கதையெல்லாம் எழுதுவியா? ஏதாவது இருந்தா எழுதிக் கொண்டு வா, பார்க்கலாம்” என்கிறார் வாசன். தன் தந்தையிடம் சமஸ்கிருதம் படித்த தேவன் அப்போது ஆ.வி.யில் முக்கியப் பொறுப்பில் இருந்தார். அவரிடம் இவர் எழுதிய கதையைக் கொண்டு கொடுக்க, ‘நன்றாக இருக்கிறது, பிரசுரிக்கிறேன்’ என்கிறார். பல மாதங்கள் கழித்து, 1946ஆம் வருடம் திடீரென்று அது விகடனில், ராஜுவின் கார்டூனுடன் பிரசுரமாகிறது! “என் முதல் சிறுகதை, முதன் முறையாக விகடனில் வெளியாகி, நானும் ஒரு எழுத்தாளன் என்று பிறவியெடுத்தது அன்றைய தினம்தான்” என்கிறார் ரா.கி.ர.!
‘சக்தி’ மாத இதழ், ‘காலலச்சக்கரம்’ வார இதழ், ‘ஜிங்லி’ சிறுவர் இதழ், ஆ.வி., ‘குமுதம்’ போன்ற பத்திரிகைகளில், இவரது படைப்புகள் வெளியாகியுள்ளன. ’அண்ணாநகர் டைம்ஸ்’ ‘மாம்பலம் டைம்ஸ்’ போன்ற வட்டார இதழ்களில் வெளியான கட்டுரைகள் ஆறு , ஏழு தொகுப்புகள் வெளிவந்துள்ளன. நாலு மூலை, சும்மா இருக்காதா பேனா, ரா.கி.ர. டைம்ஸ் போன்றவை அதிக அளவில் வரவேற்பையும், வாசிப்பையும் பெற்றவை. நாலு மூலை புத்தகத்தை 2005ல் படித்த போது, இப்படியும் இவ்வளவு விஷயங்களை, இவ்வளவு சுவாரஸ்யமாக எழுத முடியுமா என வியந்திருக்கிறேன்.
‘நான் கிருஷ்ணதேவராயன்’ வித்தியாசமாக எழுதப்பட்ட இவரது வரலாற்றுப் புதினம் – அதன் ஆடியோ சிடி ரிலீஸ் ஆழ்வார்ப்பேட்டை ‘டேக்’ செண்டரில் நடந்தபோது, இவரது எழுத்து மற்றும் படைப்புகளின் வீச்சும், இவரது மனிதநேயப் பண்புகளும் அன்று பேசிய எழுத்தாளுமைகளின் மூலம் தெரிய வந்தது.
பட்டாம்பூச்சி, தாரகை, ஜெனிஃபர், டுவிஸ்ட் கதைகள், காதல் மேல் ஆணை போன்ற மொழிபெயர்ப்பு நாவல்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. “நன்றி கூறும் நினைவு நாள்” – ரா.கி.ர. டைம்ஸில், மொழிபெயர்ப்பு மற்றும் மொழிபெயர்ப்பவர்களைப் பற்றிய, வாசிக்க வேண்டிய சுவாரஸ்யமான கட்டுரை!
ஹாஸ்யக் கதைகள், திக்-திக் கதைகள், கன்னா பின்னா கதைகள் (எல்லாக் கதைகளும், கடிதங்கள் மூலமே சொல்லப்பட்டிருக்கும்!), எப்படிக் கதை எழுதுவது? (கதை எழுதுவதற்கான பல உத்திகளை, கதை போல சொல்லியிருப்பார்) போன்றவை ரா.கி.ர. வின் வித்தியாசமான படைப்புகள்!
குமுதத்தில் ‘லைட்ஸ் ஆன்’, கல்கியில் ‘சைட்ஸ் ஆன்’, துக்ளக்கில் ‘டெலி விஷயம்’ போன்றவை மிகவும் பிரபலமான கட்டுரைகள் – இவற்றில் வரும் செய்திகளின் விறுவிறுப்பும், கேலியும், நகைச்சுவையும் ஏராளமான வாசகர்களைக் கவர்ந்திருக்கின்றன! இவை புத்தகமாக வரவில்லையே என்கிற வருத்தம் ரா.கி.ர. வுக்கு இருந்ததாகக் கூறுகிறார் சுஜாதா தேசிகன்.
சிறுவாணி வாசகர் மையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள ‘ரா.கி.ர. டைம்ஸ்’ ஒரு சுவாரஸ்யமான கட்டுரைத் தொகுப்பு. அதில் “Disciplined, Beautiful writing என்று தொடங்கி, ‘ரா.கி.ர.வின் எழுத்தின் ரசிகன். சென்னையில் அவரைச் சந்திக்கும்போதெல்லாம், முதுகில் ஒரு ஷொட்டுக் கொடுத்து,’ ராட்சஸன்யா நீ’ என்று பாராட்டும்போது, அதில் துளிக்கூடப் பொறாமை இருக்காது. காரணம், அவரே ஒரு சக ராட்சஸர்” என்று சுஜாதா பாராட்டுகிறார்.
“தேவை பழி போட ஒரு ஆள்’ கட்டுரையில்:
தன் மீதுதான் தப்பு என்று ஒப்புக்கொள்ளும் தைரியம் கொண்ட தலைவர், அமெரிக்க ஜனாதிபதி ட்ரூமன் ஒருவர்தான். உலகமெங்கும் கெட்ட பெயர் வாங்கிக்கொண்டவர் அவர் ஜப்பான் மீது அணுகுண்டு போட்டதின் மூலம். இந்தியாவுக்கு என்றுமே நண்பராக இருந்தது கிடையாது. அவருடைய மேஜையின் மீது, ’The buck stops here’ என்று ஒரு பலகையில் எழுதி வைத்திருந்தார். ‘எல்லாப் பழியும் என் தலைமீதுதான் விடியும்’ என்பது அதன் பொருள்.
“வாரீர் பிரார்த்தனை செய்வோம்” கட்டுரையில்:
டோரதி ஹோகன் என்ற பெண்மணி தன் தாயைப் பற்றி எழுதிய கவிதை ஒன்றில் “அம்மா! நீ மட்டும் இப்போது இங்கே இருந்தாயானால், நன்றி அம்மா நன்றி என்பேன் – என்றைக்கு என்னைப் பெற்றெடுத்தாயோ அன்று தொட்டு, உன் உடலிலிருந்து உயிர் பிரியும் வரை, தியாகங்களையும், வேதனைகளையும், தனிமைகளையும், கண்ணீர்களையும், விரக்திகளையும் நீ தன்னலமற்றுத் தாங்கிக் கொண்டதிற்காக. (ஆதி சங்கரரின் ‘மாத்ரு பஞ்சகம்’ நினைவுக்கு வந்தது – அவர் எழுதிய உணர்ச்சிகளைக் கொட்டும் ஒரே ஸ்லோகம் – தன் அம்மாவைப் பற்றியது.)
“தன்னம்பிக்கை வளர” கட்டுரையில்:
ஒரு குட்டிக் கதை: சத்திரத்தில் படுத்திருந்த ஒருவன், தன் அருகே படுத்திருந்தவனிடம் ‘நான் இரண்டு பெண்டாட்டிக்காரன்! ஆஹா, என்ன ஆனந்தமான வாழ்க்கை!’ எனத் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டிருந்தான்.
மற்றவனுக்கு அதைக் கேட்டு ஆசை ஏற்பட்டது. ஊருக்குப் போய் இரண்டு பெண்களை மணந்தான். ஆனால் வாழ்க்கை துன்ப மயமாயிற்று. நரக வேதனை தாளாமல், சத்திரத்துக்குத் திரும்பி வந்தான். அங்கிருந்தவனிடம், ’உன் பேச்சைக் கேட்டு நான் படாத துன்பமில்லை. எதற்காக என்னிடம் பொய் சொன்னாய்?’ என்று கோபித்தான்.
‘ரொம்ப நாளாய் நான் ஒண்டியாகவே இங்கே கிடக்கிறேன். ஒரு துணை இருந்தால் நல்லது என்று தோணியது.’ என்றான் அந்த மாஜி இரண்டு பெண்டாட்டிக் காரன்.
ஆழ்ந்து, விரிந்த வாசிப்பும், நகைச்சுவை கலந்த எழுத்து நடையும், புத்திசாலித்தனமான செய்தி விவரணைகளும் ரா.கி.ர. வின் படைப்புகள் எங்கும் விரவியிருக்கும். நாலு மூலை, ரா.கி.ர டைம்ஸ் வாசிக்க வேண்டிய கட்டுரைத் தொகுப்புகள்.
ஜெ.பாஸ்கரன்.ச்ர்