கம்பன் சொல்லும் கதை
கவிஅமுதன்
பரசுராமன் – இராமன் :
முன்கதை:
பரசுராமன் – இராமன் இருவருமே விஷ்ணுவின் அவதாரங்கள்.
இருவரும் ஒரே இடத்தில் சந்தித்தால்?
வால்மீகி – கம்பர் இந்தக் காட்சியை நமக்கு கதையாக்கியுள்ளனர்.
இராமன் – சீதை திருமணம் முடிந்து அவர்கள் மிதிலையிலிருந்து அயோத்தி வருகிறார்கள். தசரதனும் கூட வருகின்றார். வழியில், பரசுராமன் வருகிறார்.
பயங்கரமான அவர் வரவை கம்பர் ஒன்பது பாடல்களில் வர்ணிக்கிறார்.
பரசுராமன் வரவு கண்டு தசரதன் சோர்கிரான்.
இராமன் வினவுகிறான்:
‘யாரோ? இவர் யாரோ?’?
தசரதன் பரசுராமருக்குப் பூசை செய்து வணங்குகிறான்.
முனிவன் (பரசுராமன்) முனிந்திட்டான், சினந்திட்டான்.
இராமனைப் பார்த்து: ‘மிதிலையில் நீ செய்தவற்றைக் கேட்டு அறிந்தேன்.
உன் தோள் வலி காணவே வந்தேன். வேறு ஒன்றும் விஷயம் இல்லை”- என்கிறார்.
தசரதன் அபயம் வேண்டுகிறார்.
‘என் மகன் சிறியவன். விட்டு விடுங்கள்’ – கெஞ்சுகிறார்..
பரசுராமன் தசரதனை லட்சியம் செய்யாமல், இராமனைப் பார்த்து: ‘என்னிடம் இருக்கும் இந்த வில், நீ மிதிலையில் ஒடித்த வில்லுக்கு சமானமானது. இது என் தந்தை ஜமதக்கினிக்கு, மகாவிஷ்ணு அளித்தது. இதை வளைத்து நாணேற்றுவாய். அம்பும் தருகிறேன். இதை செய்வாயேல் பிறகு நாம் யுத்தம் செய்யத் தொடங்கலாம் – வல்லையேல் என வில்லை வளை”
கம்பன் வார்த்தைகளில்: –“வல்லை ஆகின , வாங்குதி. தனுவை’.
அதாவது, என்னுடன் யுத்தம் செய்ய உனக்குத் தகுதி இருக்கிறதா என்று முதலில் பார்க்கலாம் என்கிறார்.
கம்பர் வரிகளில்:
‘இராமனும் முறுவல் எய்தி, நன்று ஒளிர் முகத்தான் ஆகி.
“நாரணன் வலியின் ஆண்ட வென்றி வில் தருக”’
தோளுற அந்த வில்லை வாங்கி சொல்லும்
இராமன் சொல்வதை – கம்பர் கவிக்கிறார்.
‘பூதலத்து அரசை எல்லாம் பொன்றுவித்தனை; என்றாலும்
வேத வித்து ஆய மேலோன் மைந்தன் நீ; விரதம் பூண்டாய்.
ஆதலின் கொல்லல் ஆகாது; அம்பு இது பிழைப்பது அன்றால்,
யாது இதற்கு இலக்கம் ஆவது? இயம்புது விரைவின்!’என்றான்
அதாவது:
மண்ணில் உள்ள மன்னர்களை கொன்று குவித்தீர்.
தங்கள் தந்தை கொல்லப்பட்டதற்குப் பழி வாங்கினீர்.
அதைக் குற்றம் என்று சொல்லலாகாது.
ஆனால்.. என்னிடம் அம்பைக் கொடுத்தீர்.
வம்பை வாங்கினீர்.
இது வம்போ? அன்றி வீம்போ? நானறியேன்!
ஆயினும், உங்கள் ஆசைப்படி, இப்பொழுது இதை நாணேற்றி விட்டேன்.
இந்த அம்பு வீணாகலாகாதே!.
எந்த இலக்கை நோக்கி இந்த அம்பைச் செலுத்துவது?
இதற்கு பதிலை, விரைந்து சொல்வீரே!
இராமனுக்கே என்ன பிரச்சினை என்றால்:
அம்பு தொடுத்த பின் – அதை எய்யாமல் இருக்க இயலாது. மேலும் அம்பைத் தொடுத்தபின் உடனே எய்தாயாக வேண்டும். தாமதம் தகாது. அதனால் அந்த வார்த்தைகளைக் கூறினான்.
இராமன் வில்லை வளைத்ததும் பரசுராமனரது தேஜஸ் வாடியது.
அவரது அவதார சக்தியும் மறைந்ததாம். இராமனைப் பற்றி அவருக்கு எல்லாம் விளங்கிவிட்டது. இராமனைப் பார்த்து கூறுகிறார்:
கம்பன் வரிகள்:
‘எய்த அம்பு இடை பழுது எய்திடாமல், என்
செய் தவம் யாவையும் சிதைக்கவே!’ என
கை அவண் நெகிழ்தலும், கணையும் சென்று, அவன்
மை அறு தவம் எலாம் வாரி, மீண்டதே
இதன் கருத்து:
பரசுராமர்: நான் பெற்ற தவம் அனைத்தும் அழிய உனது அம்பை விடுவாயாக. அது கேட்டு, இராமன் வில்லில் இருந்து அந்தக் கணை புறப்பட்டு பரசுராமர் தவத்தை எல்லாம் வாரி- திரும்பியது.
பரசுராமன்: ‘எண்ணிய பொருள் எலாம் இனிது முற்றுக’. என்று இராமனை வாழ்த்தி விடை பெறுகிறான்.
பின்கதை:
இராமன் தந்தையைத் தொழுது அவர் துயர் போக்கினான்.
தசரதன் மகிழ்ந்து மகனை உச்சி மோந்தான்.
தேவர் மலர்மழை பொழிய, வருணனிடம் பரசுராமன் வில்லை சேமிக்கக் கொடுத்து விட்டு அயோத்திக்கு சென்றடைகின்றனர்.
யாம் ரசித்த இந்த கம்பன் கதையை யாவரும் ரசிப்போமே!