காளிதாசனின் குமாரசம்பவம் எஸ் எஸ்

 

Jallandhara | Devon ke Dev... Mahadev Wiki | Fandom

டுந்தவம் புரியும் பார்வதியின் ஆஸ்ரமத்தில் சடாமுடி முனிவர் வந்தார்

தேஜஸ் கூடிய  பிரும்மச்சாரியை அதிதி பூஜைப் பொருளுடன் வணங்கினள்

பேசத் தெரிந்த அம்மனிதர் பேசும் முறைப்படிப் பேசத்தொடங்கினார் 

 

“பெண்ணே ! நீ உன் சக்திக்கு மீறாமல் சரியாகத் தவம் செய்கின்றாயா ?

உன் ஆஸ்ரமத்து  செடி கொடிகள்  உன்னைப் போல் அழகாக இருக்கின்றன

தர்ப்பையைத்  திருடும்  மானிடமும்  அன்பாய்  இருப்பாய் என எண்ணுகிறேன்

உன் கனிவான தோற்றமே சொல்கிறது நீ தவறின்றி  தவம் செய்தாய் என்று

தூய்மைத்  தவத்தால் கங்கையினும்  பெருமையைத் தந்தைக்குத் தந்தாய்   

தர்மம் அர்த்தம் காமம் இம்மூன்றில் நீ போற்றிய தர்மமே மிகச் சிறந்தது

உன் கனிவான பண்பைப்   போற்றுகிறேன் என்னை நண்பராக ஏற்றுக்கொள் 

நட்பு  முறையில்  ஒன்று கேட்க விழைகிறேன் விருப்பமிருந்தால் பதில் கூறு

நற்குடி , செல்வம், இளமை எல்லாம்  இருக்க ஏன் இப்படித் தவம் புரிகின்றாய்

கடுந்துயர்  நீங்க கடுந்தவம் புரிவர், துயர் வர உனக்கு  வாய்ப்பேயில்லை 

இமவான் இருக்க யார் உனைப் பழிக்க இயலும்? தவத்தின் காரணம் யாதோ?

இரவுப்பெண் போன்ற நீ ஆபரணம் இன்றி  மரவுரி தரித்து இருப்பது முறையா

நீயே ரத்தினம் போன்றவள் கணவனுக்காக தவமியற்றவும் தேவையில்லை

கணவனுக்கான தவமென முகமே சொல்கிறது, உனை மறுப்பவன் எவன்   

உன் அழகு முகத்தைச்  சடைகள் மறைத்தும்  வராத கடினசித்தன்  யாரோ 

உடல் மெலிய முகம் வாட தவம் புரியும் உனைக் காண வராதவன் எவன்?     

நீ விரும்பிய அந்தக்  கர்வி இன்னும் வராதது  நஷ்டம் அவனதன்றி உனதல்ல  

விரும்பும் கணவனை அடைய தவப்பலன் தருகிறேன் யாரவன் என்று சொல்

 

அறியாதது போல வந்தவர் கேட்டிட பார்வதி வெட்கித் தோழியை நோக்கினள்

தோழியும் பார்வதி உடலை வருத்தித் தவம் புரிவதன் காரணம் விளக்கினள்

 

அழகில் மயங்காத  சிவபிரானைத்  தவத்தால் அடைய விழைகின்றாள் 

மதனின் பாணம்  அவனையே எரித்தாலும் பார்வதி மனதில் ஆழத் தைத்தது   

அளவிலாக் காதல் சிவனிடம் பெருகிட  அவளுடல் அனலாய்க் கொதித்தது   

சிவனை நினத்து உருகும்  அவளைக் கண்ட தோழியர் கலங்கித் தவித்தனர்

கனவிலும் நனவிலும் சிவனையே எண்ணி  உறக்கம்தன்னை   துறந்தனள்

மனதில்  இருக்கும் எம்பிரான் காதலை ஏன் ஏற்கவில்லை எனத் தவிப்பாள்

பற்பல உபாயம் யோசித்து தவமே நல்வழி எனஎண்ணி இவ்வனம் வந்தனள்

அவளிட்ட செடிகள் மரமென துளிர்த்திடஅவள்காதல் எப்போது துளிர்க்கும்?

தவத்தில் வாடித் தவிக்கும் இவளுக்கு சிவபிரான் அருள் எப்போது கிட்டும்?  

 

உவகை கொண்ட பிரானும் ‘தோழி உரைத்தது உண்மையோ’ என வினவினர்

மலர்க்கரம் குவித்து வணங்கிய பார்வதி செவ்விதழ் திறந்து பேசலானாள் 

‘தோழியுரைத்தது உண்மையே! சிவனை அடையவே இத்தவம் ‘ என்றனள்

 

வந்திருந்த வணங்கா சடாமுடியர் பார்வதியிடம் மேலும் பேசலானார்

“பெண்ணே! உன் அழகை அலட்சியம் செய்த சிவனை விரும்புதல் முறையோ

பாம்பைச் சுற்றிய அவன் கரம் நின் மங்களக் கரத்தைப் பற்றுவது சரியா?

யானத்தோலுக்கும் வெண்பட்டிற்கும் பொருத்தம் எங்கேனும் உண்டோ?

உன்மலர்ப்பாதம் சுடுகாட்டின் கடுந்தரையில்  பதிவதை யார் பொறுப்பர்?

அவன் மேனிச் சாம்பல் உன் சந்தன மார்பில் படிவது தகாத செயலான்றோ?

மணவிழாவில் எருதின்மேல் நீவிர் ஊர்கோலம் சென்றால் ஊர் சிரிக்காதோ?

சிவனை அடைந்த சந்திரன் கலை இழந்தான்  நீயும் களை இழக்க சம்மதமா?   

அழகு, நற்குடி,செல்வம் இவைஏதுமில்லா சிவன் உனக்கு ஏற்றவன் அல்லன்

யாக பூஜையை மயானத்தில் செய்வது போன்ற  தகாத ஆசையை விட்டுவிடு!

 

அதிதி சொல் கேட்ட பார்வதி உதடுதுடிக்க கண்சிவக்க பதிலுரைத்தாள்

 

“ சிவபிரானின் அருமை பெருமை தெரியாத மூடரே அவரை நிந்திப்பர்    

 உலகைக் காக்கும் ஈசன் அவருக்கு எப் பொருளாலும் பயனில்லை

 பாம்பணி ஆயினும் சாந்தஸ்வரூபன் அள்ளிக் கொடுக்கும் வள்ளள் பிரான்

 உலகே உடலாய் அமைந்த சர்வேஸ்வரன் எவராலும்  அறியப்படாதவர்     

 அவர் உடல் பட்ட சுடுகாட்டுச் சாம்பலைத் தேவரும் சிரசில் கொள்வர்

யானை ஏறும் இந்திரனும் எருதில் பவனி வரும் சிவனின் பாதம் பணிவன்

பிறப்பில்லை என்ற  சொல் உண்மையுடைத்து ஆதி அந்தமில்லாதவர் அவர்

 உமது கூற்று சரியோ தவறோ பொருட்டில்லை, என்மனம் அவரையே நாடும்

தோழி, இவர் சொன்னது சொல்லவிழைவது எதுவும்எனக்குத் தேவையில்லை”   

 

கோபித்த பார்வதியை  சிவவடிவு காட்டி நகைமுகத்துடன் கரம் பற்றினார்

வெட்கமும் அச்சமும் சேர  பார்வதி மலையைச் சேர்ந்த நதிபோல் நின்றாள்

‘தவம் செய்து எனை அடைந்தாய், நான் உன் அடிமை’ என சிவபிரான் கூற

பெறர்க்கரிய பேறு பெற்ற பார்வதி செய்தவத்தின் பலன் முழுதும் பெற்றாள்  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.