நந்திவர்மன்
பிரசங்கம் பண்ணிக்கொண்டிருக்கும் போது இது என்ன அதிகப் பிரசங்கம் – என்று சொல்வார்கள்.
அது போல.. பல்லவர்களைப் பற்றி சொல்லும் போது..
திடீரென்று இது என்ன இடையில் சேரமான் பெருமாள் கதை – ஆதி சங்கரர் கதை?
குமுறுகிறார்கள் நம் வாசகர்கள்!
ஒரே வார்த்தை : மன்னிப்பு
சரித்திரத்தை நகர்த்துவோம்.
சரி..பல்லவர்களை எங்கே விட்டோம்?
சிறிய முன்கதை:
நரசிம்மவர்மன்..
இரண்டாம் மகேந்திரன்..
பரமேஸ்வரவர்மன்..
ராஜசிம்மன்..
இரண்டாம் பரமேஸ்வரவர்மன்..
இவர்களுடன் சிம்மவிஷ்ணுவின் சந்ததி முடிகிறது.
சிம்மவிஷ்ணுவின் தம்பி. பெயர் பீமவர்மன் பரம்பரையில் வந்த நந்திவர்மன் அரசனாகிறான்.
அவன் அரசாட்சி – கிபி 710 முதல் 775 வரை.
அறுபத்தைந்து வருடங்கள் அரசாட்சி!
எந்தப் பல்லவ மன்னனும் இவ்வளவு வருடங்கள் ஆண்டதில்லை!
நந்திவர்மன் .. இரண்டாம் விக்கிரமாதித்யனிடம் தோற்றாலும்..
பல்லவ பதவியைத் தக்க வைத்துக் கொள்கிறான்.
ராஷ்டிரகூட மன்னன் தந்திவர்மனுடன் கூட்டு சேர்ந்து..
சாளுக்கிய மன்னன் கீர்த்திவர்மனைக் கொன்று..
சாளுக்கிய வம்சத்தை ஒரு முடிவுக்குக் கொண்டு வருகிறான்.
இரண்டாம் பரமேஸ்வரனது மகன் சித்திரமாயன் பல்லவ அரியணைக்காகப் போராடுகிறான்.
முன் கதை முடிந்தது.
ஒரு மனிதன் தோல்விகள் பல கண்டாலும்..துவளாமல் கடுமையாக பாடுபட்டால் வெற்றிக்கு வழி உண்டு.
மக்களின் மாறாத ஆழ்ந்த அன்பும்..
மனோ திடமும்..
புத்திகூர்மையும்..
நீண்ட ஆயுளும்.. (65 வருடம் அரசனாக ஆண்டான்)
இறையருளும் ..
இருந்தால் என்ன நடக்கும் என்பதற்கு நந்திவர்மன் கதை ஒரு சிறந்த உதாரணம்.
பிரச்சினை என்ன என்று பாருங்கள்:
எட்டாம் நூற்றாண்டில்..மிகவும் கடினமான வேலை என்ன தெரியுமா?
அது.. தென்னிந்தியாவில் ஒரு நாட்டின் அரசனாக இருப்பது..
அரண்மனை உண்டு.. அறுசுவை உண்டு .. அந்தப்புரம் உண்டு.. என்று ஆனந்தமாக இருக்க முடியாது.
பகை மேகங்கள் ..நாற்புறமும் .. இடி முழக்கங்களுடன். அனு தினமும்..
சும்மா இருந்தாலும் விடாமல் வலுச்சண்டைக்கு வர பல மன்னர்கள் ..
வித விதமாகக் கூட்டணி அமைத்துக் கொல்ல வரும் எதிரிகள்..
கதைக்குச் செல்வோம்:
முதல் வில்லன் :கீர்த்திவர்மன்
(நந்திவர்மன் இன்று நமது ஹீரோ.. அதனால் கீர்த்திவர்மன் இன்று நமது வில்லன்).
அவன் கதை முடிந்தது.
சாளுக்கிய வம்சமும் முடிந்தது.
அடுத்தவன்.. சித்திரமாயன் – பரமேஸ்வரன் மகன் ..
அவன் ஒரு பெரும் கூட்டணி அமைக்கத் திட்டமிட்டான்.
விக்கிரமாதிய சாளுக்கியனுடன் கூட்டுசேர்ந்தான்..
சாளுக்கியன் நந்திவர்ம பல்லவனை வென்ற பிறகு..
சித்திரமாயன் சில மாதங்கள் பல்லவ அரியணையில் அமர்த்தப்பட்டு இருந்தான் .
நந்திவர்மன் அவனைப் படையெடுத்துத் துரத்தி விட்டான்.
சாளுக்கிய ராஜ்யம் முடிவுக்கு வந்த பின் சித்திரமாயன் பாண்டியனுடன் கூட்டு சேர்ந்தான்.
பல்லவர்க்கும் பாண்டியர்க்கும் போர் நடந்ததற்கு ஒரு காரணம்..
கொங்குநாட்டு உரிமை!
கொங்குநாடு ஒருகாலத்தில் பாண்டியரிடமும் பிறிதொருகாலத்தில் பல்லவரிடமும் கைமாறிவந்தன.
நந்திவர்மன் கொங்குநாட்டைப் பிடிக்க முயன்றான்.
அதற்காகப் பாண்டிய அரசன் போரிட வேண்டியவன் ஆனான்.
அடுத்த காரணம்..
சித்திரமாயன் (பரமேசுவரன் மகன்) பாண்டியனைச் சரணடைந்திருந்தது.
இவ்விரண்டு காரணங்களாலும், பாண்டியன் அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 710-765) நந்திவர்மனைத் தாக்கச் சமயம் பார்த்திருந்தான்
சம்பவத்திற்கு வருவோம்..
கும்பகோணத்திற்கு அருகில் உள்ள ‘நாதன் கோவில்’ என்னும் இடம்.
அது அந்தக் காலத்தில் பல்லவரின் தென்புறக் கோட்டையாக இருந்தது.
அதற்கு நந்திபுரம் என்பது பெயர்.
அந்த நந்திபுரக் கோட்டைக்குள் பல்லவன் தங்கியிருந்தான் – சிறிய காவல் படையுடன்.
பல்லவ பெருஞ்சேனை காஞ்சியில் இருந்தது.
வழிவழியாகப் பல்லவர்க்குப் படைத்தொண்டு செய்துவந்த ‘பூசான்’ மரபில் பிறந்த உதயசந்திரன் – பல்லவப் படைத்தலைவன்.
அந்த தளபதி உதயசந்திரனோ காஞ்சியிலே!
பல்லவன் சிறுபடையுடன் நந்திபுரத்தில் இருப்பதை ஒற்றர்கள் மூலம் அறிந்தான் பாண்டியன்.
அது அவனுக்கு இனித்தது.
பாண்டியன் தன் துணைவரான சிற்றரசர் பலருடனும், பெருஞ் சேனையுடனும் போருக்கு வந்தான்.
பாண்டியன் படையெடுப்பை நந்திவர்மன் எதிர்பார்க்கவில்லை.
பாண்டியன் சில இடங்களில் வெற்றி பெற்றான்.
சிறிய பல்லவ சேனை சிதறியது.
நந்திவர்மன் நந்திபுரத்தில் நுழைந்தான்.
பாண்டியன் நந்திபுரத்தை முற்றுகை இட்டான்.
நந்திவர்மன் கோட்டைக்குள் அகப்பட்டுக்கொண்டான்.
சேதி கேட்ட சித்திரமாயன்..
தனது எதிரி நந்திவர்மன் தோற்று அழிவதைக் காண ஆசை கொண்டான்.
கியூரியாசிட்டியால் பூனைக்கு அழிவு என்று சொல்வார்கள்!
மதுரையிலிருந்து நந்திபுரம் செல்லக் குதிரையைத் தட்டினான்.
நந்திவர்மனது நிலை – ஓலை வடிவில் புறா ஒன்று உதயசந்திரனுக்குக் கொண்டு சென்றது.
படைத்தலைவன் உதயசந்திரன் பல்லவப் படையுடன் உடனடியாக நந்திபுரம் செல்ல படையெடுத்தான்.
உதயசந்திரன் வந்த பின் போரின் நிலைமை மாறியது.
பாண்டியர்கள் இரு பல்லவப் படைகளுக்கு நடுவே மாட்டிக்கொண்டு திணறினர்.
பாண்டியன் சித்திரமாயனிடம்:
“உன்னை மதுரையை விட்டு வர வேண்டாம் என்று தானே சொல்லியிருந்தேன்?
என்ன தலை போகிற காரியமாக.. இந்தப் போர்க்களத்துக்குப் புறப்பட்டு வந்தாய்?“ – என்றான்.
அவன் கேள்வி நியாயம் தான் போலும்..
அன்று நடந்த போரில் ..
உதயசந்திரன் தன் வாளால் சித்திரமாயன் தலை கொண்டான்.. கொன்றான்..
பாண்டியன் சொன்னது சரியாயிற்று..
சித்திரமாயனுக்கு அது தலை போகிற காரியமாகியது.
முடிவில் பல்லவர்கள் போரில் வெற்றி பெற்றனர்.
பாண்டியப்படை மதுரைக்கு திரும்பியது.
இருதரப்பினரும் தாங்கள் வென்றதை மட்டும் கல்வெட்டுகளில் பதித்தனர்.
(இவ்வளவு சரித்திரம் படித்தோமே,
எந்த மன்னனாவது எப்போதாவது தனது தோல்வியை..
கல்வெட்டுகளில் குறித்திருக்கிறானா என்ன?
நமக்கு எதற்கு இந்த குசும்பு)
நந்திவர்மன் கதை தொடரும்..(65 வருட ஆட்சியாயிற்றே).
விரைவில் சந்திப்போம்..