தலைப்பு சம்ஸ்கிருதத்தில் இருக்கிறதே என்று யோசிக்கிறீர்களா, கதையைப் படித்தவுடன் நீங்களே இந்த தலைப்புதான் இதற்குப் பொருத்தம் என்று எண்ணுவீர்கள். இதற்கு சமமான அன்பு, ஆசை, பாசம், நேசம், காதல் என்று எத்தனை வார்த்தைகள் இருந்தாலும் இத்தம்பதியரின் அந்நியோன்யத்தைப் ‘பிரியத்’தைத் தவிர வேறு எதனாலும் பறை சாற்ற முடியாது என்று நீங்களும் உணர்வீர்கள்.
‘கல்யாணமாம் கல்யாணம் 60 ஆம் கல்யாணம்’ என்று 20 வருடங்களுக்கு முன் 60 ஆம் கல்யாணம் முடிந்து, இதோ 10 நாட்களுக்கு முன் 80 ஆம் கல்யாணமும் ஆயிற்று அந்த தம்பதியினர் பார்வதி சங்கரனுக்கு. பெண், பிள்ளைகள் கல்யாணம் ஆகி தம்தம் குழந்தைகளோடு அமெரிக்காவில் உள்ளனர். இவர்கள் இருவரும் தற்போது சின்னதொரு வீட்டில் சிறிய சிறிய பூந்தொட்டிகளுடனும், அளவான சமையலுடனும் இரண்டாவது தனிக்குடித்தனம் நடத்திக் கொண்டிருந்தனர். மெதுவாக கோவிலுக்குச் செல்வதும், தம்தம் காரியங்களைத் தாமே செய்து கொள்வதுமாக நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தனர் .
அந்த வீட்டிற்குப் பக்கத்து வீட்டிற்குப் புதிததாக மணமுடித்த தமபதியினர் சதீஷும் ஹேமாவும் குடித்தனம் வந்தனர். துணி உலர்த்தும் போது பார்த்து பரிச்சயம் ஆன இந்த மூத்த தம்பதியினரின் பரிவும், பேச்சும், அக்கறையும் இவர்கள் இருவருக்கும் மிகவும் பிடித்துப் போய் விட்டன. அப்பப்ப கேரள ஸ்டைல் எரிசேரி, காளான், ஓலன் என்று சதீஷுக்குப் பிடித்த சமையல் ஐட்டங்களை பார்வதியிடமிருந்து கற்று வந்து ஹேமா சமைப்பாள். இப்படி அவர்களின் நட்பு நாளொரு மேனியும் பொழுதொரு சமையலுமாக வளர்ந்து வந்தது.
பார்வதி ஒரு நாள் சாயந்திரம் காபி குடிக்க சதீஷையும், ஹேமாவையும் அழைத்தார். காபி அருந்தி விட்டுக் கொஞ்ச நேரம் அளவளாவிக் கொண்டிருந்து விட்டு இவர்கள் இருவரும் வீட்டிற்கு வந்தனர். இதில் இரண்டு தம்பதியினர்க்கும் சுவாரஸ்யம் ஏற்படவே இப்பழக்கம் தொடரலாயிற்று.
சதீஷ் தினமும் காபி சாப்பிடும் நேரத்தில் ஒரு காட்சியைக் கவனித்தான். பார்வதி காபி குடுவையைக் கொண்டு வருவதும், அதைத் திறக்க முடியாமல் திணருவதும், தன் கணவர் சங்கரனை விட்டுத் திறக்கச் சொல்வதுமாக இருந்தாள். சதீஷுக்குத் தன் அம்மா நினைவு வரவே, அந்தப் பெண்மணியின் கஷ்டத்தைப் போக்க நினைத்தான். அந்தக் குடுவையை எளிதாகத் திறக்க ஒரு ஸ்பேனர் மாதிரி பொருளை வாங்கி வந்து அவர் கணவருக்குத் தெரியாமல் பார்வதியிடம் கொடுத்து ‘நீங்கள் என அம்மா மாதிரி. தினமும் குடுவையைத் திறக்கக் கஷ்டப்படுகிறீர்கள். இதன் உதவியால் திறந்து பாருங்கள். உங்கள் கஷ்டம் தீரும்’ என்று ஆதரவாகக் கூறினான். அதைக் கேட்டு பார்வதி ஒரு சிறு புன்முறுவலுடன் அதனை ஏற்றுக் கொண்டாள்.
ஆனால் இது என்ன! மறு நாள் பழையபடியே பார்வதி தன் கணவரை விட்டு குடுவையைத் திறக்கச் சொல்வதைப் பார்த்து சதீஷ் ஆச்சர்யப்பட்டான்! ஏன் நான் வாங்கிக்கொடுத்த ஸ்பேனர் சரியில்லையா அல்லது அவர்களுக்கு அதை உபயோகப்படுத்தத் தெரியவில்லையா என்று யோசித்தான். பார்வதி உள்ளே சென்றவுடன் இவனும் பின்னாலயே சென்று ‘ஏன் அம்மா ஸ்பேனர் சரியில்லையா, ஏன் அதை உபயோகப்படுத்தவில்லை’ என்று வினவினான். அதைக் கேட்டு பார்வதி ‘கண்ணா, நீ என மீது இவ்வளவு அக்கறையும் பரிவும் காட்டுவதற்கு நன்றி. என்னால் எதன் உதவியும் இல்லாமல் இந்தக் குடுவையைத் திறக்க முடியும்’ என்று சிறிது நிறுத்தினாள். அதைக் கேட்டு ஆச்சரியம் அடைந்த சதீஷ் ‘அப்ப ஏன் மறுபடியும் உங்கள் கணவரையேத் தொந்தரவு செய்கிறீர்கள்’ என்று கண்கள் விரிய, புருவம் சுருங்கக் கேட்டான். அதற்கு பார்வதி சொன்ன பதில் அவனை வியப்பின் எல்லைக்கே கொண்டு சென்றது. ‘ மகனே, என்னால் முடியாமல் நான் அவரிடம் செல்லவில்லை. இந்த மாதிரி அவரைக் கேட்பதால் அவர் மனத்தில் நான் இன்னமும் அவரைச் சார்ந்திருப்பது போலும், அவரில்லாமல் என்னால் இயங்க முடியாது என்றும், என வாழ்வின் ஆதாரம் அவர், இந்தக் குடும்பத்தின் தலைவர் அவர் என்ற உணர்வு அவர் மனதை விட்டு நீங்காதிருக்கவும் தான் நான் அவ்விதம் நடந்து கொள்கிறேன்’ என்றார். இதைக் கேட்ட சதீஷ் கண்கள் பணிக்க, மனம் நிறைக்க வியந்து மகிழ்ந்து வீடு திரும்பினான்.
பின்னால் வந்து கொண்டிருந்த சங்கரன் அவர்கள் இருவரும் அறியா வண்ணம் இதைக் கேட்டு விட்டு தனக்குள் சிரித்துக்கொண்டே ‘எனக்காகத்தான் பார்வதி இவ்வாறு நடந்து கொள்கிறாள் என்பது நான் மட்டுமே அறிந்த ரகசியம். அவள் மனம் கோணாதவாறு நானும் நடந்து கொள்வேன்’ என்று மனத்தில் நினைத்துக் கொண்டார்.
இவர்களது இத்தனைக் கால வாழ்வின் இயல்பு ஒருவரைஒருவர் சார்ந்திருக்கும் இந்தப் ‘பிரியமே’ என்று புலனாகிறது அல்லவா!