மனம்நொந்து உனைநாடி வருகின்ற பக்தரிடம்
முன்பிறவி கர்மாவென சொல்வதுவும் சரிதானோ?
பாவங்கள் செய்தவன் செழிப்போடு வாழ்ந்திட்டான்
அப்பாவி பக்தனை அல்லல்பட விடலாமோ?
பாவச்சுமை ஏற்றியவன் சுகமாகப் போய்விட்டான்
பாவவினை விலையென்ன அவனுக்குத் தெரியாது
பாவம்செயா இவனுமே அல்லல்பல படுகின்றான்
தப்பென்ன செய்தோமென இவனுக்குப் புரியாது!
பாவங்கள் செய்தவன் சுகமாகச் சென்றுவிட
அப்பாவி மனிதனுக்கு இத்தனை தண்டனையா?
தர்மநெறி நிற்பவன் நிலைகுலைய மாட்டானா?
‘அறநெறி நல்வழி’யெனும் நம்பிக்கை போகாதா?
தப்புகளைச் செய்தவன் மனம்வருந்த தண்டனையை
அப்பிறவியில் கொடுத்துவிடு அவன்கணக்கைத் தீர்த்துவிடு
பிற்பிறவி மனிதனையே மகிழ்வோடு வாழவிடு
பிறவியின் விதிகளை யதற்கேற்ப மாற்றிவிடு!