இளநீர் – தீபா மகேஷ்.

பைசாவா சேத்தாலே ஒன்னும் காணல! இதுல இளநீரை டெய்லி குடிக்க முடியுமா? | படக் கட்டுரை | வினவு

 

சித்திரை மாதத்து வெயிலின் உக்கிரம் அந்த ஞாயிறு பிற்பகல் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது.

ஒரு வாரம் அலுவலக வேலையாய் வெளிநாடு சென்று விட்டு அன்று அதிகாலைதான் சென்னை திரும்பியிருந்தேன். அதனாலேயே என்னவோ வெய்யில் அதிகமாக இருப்பது போல தோன்றியது.

அந்த பயணத்தின் அலுப்பும், அசதியும் உடலில் இன்னும் நிறைய மிச்சம் இருந்தது. கண்களில் கூட லேசான எரிச்சல்.

வந்தவுடன் ஒரு நல்லெண்ணைக் குளியல் போட்டிருக்கலாம். சோம்பேறித்தனம்.

கண்டிப்பாக இன்று இளநீராவது குடிக்க வேண்டும்.

நான் ஒரு இளநீர் பைத்தியம். எல்லாருக்கும் ஏதாவது ஒரு பொருளின் மேல் இருக்கும் பற்றும் பைத்தியமும் எனக்கு இளநீர் மேல்.

மழை நாட்கள், குளிர் காலம் (அது எங்கு சென்னையில் இருக்கிறது?) தவிர, நான் சென்னையில் இருக்கும் பெரும்பாலான நாட்களில் இளநீர் குடிக்கத் தவறியது இல்லை.

கோடைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். தினம் ரெண்டு இளநீராவது குடித்து விடுவேன்.

எனக்கு நினைவு தெரிந்து முதலில் இளநீர் குடித்தது ஸ்கூல் படிக்கும் போதுதான். அப்போது எனக்கு மஞ்சள் காமலை வந்திருந்தது. தினமும் காலையில் அப்பா என்னை தி நகரில் இருக்கும் டாக்டரிடம் மருந்து சாப்பிட அழைத்துப் போவார்.

கசப்பான அந்த கஷாயத்தை குடித்து விட்டு திரும்பும்போது, என்னை சமாதானம் செய்யும் விதமாக பனகல் பார்க் அருகில் இருக்கும் இளநீர்க்காரனிடம் தினமும் இளநீர் வாங்கித் தருவார்.

“தண்ணி காயா ரெண்டு இளநீர் குடுப்பா”, என்று கேட்டு, ஒன்றை எனக்கு வெட்டி தரச் சொல்வார். நான் மிகுந்த ஆவலோடு அவன் அதை வெட்டுவதையே பார்த்துக் கொண்டிருப்பேன். அவன் காயின் மேல் பாகத்தை சீவி அதில் ஒரு ஸ்ட்ரா போட்டுத் தரும் போது ஏதோ ஆஸ்கார் அவார்ட் வாங்குவது போல நான் கை நீட்டுவேன். அந்த இளநீர் பூராவும் எனக்குத் தான் என்பதில் எனக்கு அலாதி சந்தோஷம்.

“இளநீர் உடம்புக்கு ரொம்ப நல்லதுமா. ரத்தத்த சுத்தம் பண்ணும். உடம்ப குளிர்ச்சியாக்கும்”, என்று அவருக்குத் தெரிந்த இயற்கை மருத்துவத்தை சொல்லுவார். எனக்கு அதைப் பற்றி எல்லாம் பெரிதாக அக்கறை இல்லை. ஆனால், இளநீர் நீரின் சுவை தொண்டை வழியே உள்ளே போக உடம்பெல்லாம் ஒரு புத்துணர்ச்சி பரவுவது போல தோன்றும்.

வீட்டில் உள்ள மற்ற எல்லாருக்கும் அந்த இன்னொரு காயில் இருக்கும் தண்ணீர் தான், பாவம், என்று நினைத்துக் கொள்வேன்.

இளநீரை பாட்டிலில் வாங்கி வந்து ஃப்ரிட்ஜ்ல் வைத்துக் குடிப்பதில் எல்லாம் எனக்கு உடன்பாடில்லை. சில மாதங்களுக்கு முன்னால் அமெரிக்கா போன போது அங்குள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் ‘கோகநட் வாட்டர்’ என்று அழகாக பேக் செய்து வைத்திருந்தார்கள். ஏன் நம் ஊரில் கூட இப்போது இளநீர் பேக் செய்து பாட்டிலில் வந்து விட்டது. ஆனால், ஏனோ அதை வாங்க மனம் ஒப்பவில்லை.

பாண்டி காய், பொள்ளாச்சி காய், செவ்வெளநீர் என்று நமக்கு இப்போது ‘சாய்ஸ்’ அதிகம். மேலும், நம் ஊரில் இளநீர் வாங்கி குடிப்பதே ஒரு தனி அனுபவம்.

“நல்ல தண்ணி காயா லேசா வழுக்கையோட குடுங்க,” என்று கேட்டு வாங்கி, கடைக்காரர் அதை அழகாக மேல் பக்கம் சீவி, லாவகமாக நடுவில் நெம்பி துளை போட்டுத் தரும் அழகை ரசித்துக் குடிக்க வேண்டும்.

நான் இளநீர் ஸ்ட்ரா போட்டு குடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகி விட்டது. ஸ்ட்ரா ப்ளாஸ்டிக் பொருள், சுகாதாரம் கிடையாது என்று காரணம் எல்லாம் தாண்டி, இளநீரை இரு கைகளில் பிடித்து, அதன் வாயோடு வாய் வைத்து, கடைசி சொட்டு வரை ரசித்துக் குடிப்பதில் ஒரு தனி சுகம் இருக்கத்தான் செய்கிறது.

இளநீர் கனவில் மூழ்கி இருந்தவளுக்குத் தாகம் அதிகமாகி எடுத்து ஏதாவது குடித்தால் தேவலை என்று தோன்றியது.

ஜில்லென்று கொஞ்சம் பானைத் தண்ணீர் குடித்தேன்.

டீ வி பார்த்துக் கொண்டிருந்த மகனிடம், ‘டேய், அம்மாக்கு இளநீர் வாங்கிட்டு வாடா’ என்றேன்.

அட போம்மா, உனக்கு வேற வேலை இல்லை என்பது போல என்னைப் பார்த்தான். ‘என்னால போக முடியாது, அப்பாவ போக சொல்லு,’ என்று அவரைக் கோர்த்து விட்டான்.

இதுதான் பிள்ளைகளின் சாமர்த்தியம். அவர் பாவமாக என்னைப் பார்த்தார்.

“கொஞ்ச நேரம் கழிச்சு டூ வீலெர்ல போய்ட்டு வரலாம்.  இப்ப வேணாம். ரொம்ப வெயிலா இருக்கு,” என்றார்.

இது நடக்கும் கதையாக எனக்குத் தோன்றவில்லை. ‘தெருமுனைதானே, நானே நடந்து போய் குடிச்சிட்டு வரேன்’, என்று வீம்பாக கிளம்பினேன்.

தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்ததும் வெயில் கொஞ்சம் குறைந்திருப்பது போல தோன்றியது. காற்று கூட கொஞ்சம் அடித்தது.

நிழலில் நிறுத்தியிருந்த கார்களையும் என்னையும் தவிர தெரு வெறிச்சோடி இருந்தது.

எங்கள் தெருவின் இரு பக்கமும் நெடிந்து வளர்ந்து கிளை பரப்பியிருந்த குல்மொஹர் மரங்கள், சாலை முழுதும் மஞ்சள் பூக்களை இறைத்திருந்தன.

அவற்றை மிதிக்க மனமில்லாமல் சாலையின் நடுவில் நடந்தேன்.

தெரு முனையை நெருங்கும் போதே ஏமாற்றம் காத்திருந்தது.

எப்போதும் இருக்கும் இளநீர் வண்டி அங்கில்லை.

ஞாயிற்று கிழமை கூட இருப்பானே, ஏன் காணோம்? ஊருக்குப் போயிருப்பானோ? அவன் ஊரில் இல்லை என்று இவருக்கு முன்னாடியே தெரியுமோ? அதனால்தான் டூ வீலர்ல போலாம்னு சொன்னாரோ? என்றெல்லாம் யோசித்தபடி எனது அவசர குடுக்கைத்தனத்தை நானே திட்டிக் கொண்டேன்.

ஆனாலும் ‘இளநீர் தாகம்’ விடுவதாய் இல்லை. என்ன ஆனாலும் சரி. எவ்வளவு தூரம் நடந்தாலும் சரி. இன்று இளநீர் குடித்துவிட்டுதான் மறுவேலை, என்று முடிவு செய்துக் கொண்டேன்.

மெயின் ரோடில் கோயில் எதிரே ஒரு இளநீர்கடைக்காரர் இருப்பது நினைவுக்கு வந்தது.

இன்னும் கொஞ்சம் நடந்தால் அங்கே போய் குடிக்கலாம் என்று என்னை நானே உற்சாகப்படுத்திக் கொண்டு மறுபடியும் நடக்கத் தொடங்கினேன்.

மெயின் ரோடில் வெய்யில் அதிகமாகத் தெரிந்தது. வாகனத்தில் போய் பழக்கப்பட்ட அந்த ரோடில் நடக்கும் போது ரொம்ப தூரம் நடப்பது போல் தோன்றியது.

கொஞ்ச நேரத்திற்கெல்லாம் இது என்ன முட்டாள்த்தனமான பிடிவாதம் என்று தோன்ற ஆரம்பித்தது.

ஒரு வேளை அந்த கடையும் இல்லை என்றால்? இந்த வெய்யிலில் இவ்வளவு தூரம் நடப்பது ரொம்ப அவசியமா, அதுவும் ஊரிலிருந்து வந்தவுடனே? ஒரு நாள் இளநீர் குடிக்காவிட்டால் என்ன ஆகிவிடும்? என்றெல்லாம் என் சுய விமர்சனம் தொடர்ந்தது.

நல்ல வேளை தூரத்தில் கோவிலுக்கு எதிரே ஒரு பெரிய மரத்தின் நிழலில் இளநீர்க் கடை இருப்பது தெரிந்தது.

சட்டென்று நடையில் ஒரு சுறுசூறுப்பும் உற்சாகமும் வந்து ஒட்டிக்கொண்டன.  

ஒரு பெரிய தள்ளுவண்டி முழுதும் பெரிதும் சிறிதுமாய் காய்கள். வண்டிக்கு அருகில் ஒரு ப்ளாஸ்டிக் சேரில் கடைக்காரர்.

ஒரு அழுக்கான கரையேறிய லுங்கியில் தன்னுடைய பருத்த சரீரத்தை மறைத்திருந்தார். அவரது கண்கள் மூடி, வாய் லேசாக திறந்திருந்தது. நல்ல தூக்கத்தில் இருந்தார்.

அவர் மூச்சின் சீரான தாளத்திற்கேற்ப அவரது வயிறு மேலும் கீழும் ஏறி இறங்கியது.

வெப்பமோ, வாகனங்களின் இரைச்சலோ அவரை தொந்திரவு செய்ததாக தெரியவில்லை.

ஐயா என்று அழைத்து அவரை எழுப்பலாமா என்று தோன்றிய யோசைனையை சட்டென்று மாற்றிக் கொண்டேன்.

இந்த வெயிலில், சத்தத்தில் இப்படி தூங்குகிறார் என்றால் எவ்வளவு களைப்பு இருக்க வேண்டும். பாவம் என்ன அசதியோ, இரவு தூங்காமல் வேலைப் பார்த்தாரோ என்னவோ? யாருக்குத் தெரியும் இவர்களுடைய உழைப்பும், வாழ்க்கையும்?

என் மனம் தனக்குத் தெரிந்த விதத்தில் அவருடைய வாழ்க்கையைக் கற்பனை செய்து கொண்டது.

அவர் நிம்மதியாக தூங்குவதைப் பார்த்து ரசித்தபடியே, இளநீர் குடித்தத் திருப்தியோடு வீட்டை நோக்கி நடக்கத் தொடங்கினேன்.

 

5 responses to “இளநீர் – தீபா மகேஷ்.

  1. அருமை. யதார்த்தப் பதிவு. உடனடியாக இரண்டு இளநீரை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது. அதிலும், முடிவு, இளநீர் குடித்தால் கிடைக்கும் குளிர்ச்சியை விட மனதிற்கு இதமாக இருந்தது. மொத்தத்தில், எழுத்தில் எளிமை, நடையில் இளமை, கருத்தில் முதுமை.

    Like

  2. அருமை. யதார்த்த ப் பதிவு. உடனே இரண்டு இளநீரை அருந்த வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தியது அதிலும், முடிவு, இளநீரை குடித்தால் கிடைக்கும் குளிச்சியைவிட மனதிற்கு இதமாக இருந்தது. மொத்தத்தில், எழுத்தில் எளிமை, நடையில் இளமை, கருத்தில் வலிமை.

    Like

  3. பல நாட்கள் பிறகு தமிழில் ஒரு அழகான கதை படித்தேன். மறுபடியும் படிக்கும் ஆசையை தூண்டும் எழுத்து திறன் எங்கள் இனிய தீபாவுக்கு ! சீக்கிரம் ஆசையை நிறைவு செய்யுங்கள் .

    Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.