அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். அந்த அடியும் ஒரே இடத்தில் சரியாக விழுந்தால்தான் பலன் கிடைக்கும் அம்மியும் நகரும். அடிப்பது பெரிதன்று.
அடிக்குமுன் பலமுறை யோசனை செய்ய வேண்டும். அதனால்தான் எளியாரை வலியார் அடித்தால் வலியாரைத் தெய்வம் அடிக்கும் என்று கிராமத்தில் பழமொழி சொல்வார்கள். ஆனால் இப்போது தெய்வம் மிகவும் தாமதமாகத்தான் வந்து அடிக்கிறது போலும். நாம்தான் பார்க்கிறோமே. அதற்கும் சோம்பல் வந்து விட்டதோ?
வலியார் யார்? எளியார் யார்? என்பதற்கும் அளவு கோலாக அடி பயன்படுகிறது. சிலநேரம் அடியால் நன்மைகளும் உண்டு. இரும்பைக் காய்ச்சிப் பழுக்க வைத்து அடி அடியென்று அடித்தால் தான் கத்தி,சுத்தி, அரிவாள், கடப்பாரை எல்லாம் உருவாகின்றன. நாம் அவற்றை எப்படிப் பயன்படுத்துகிறோம் என்பது வேறு விஷயம்.
இந்த மீட்டர் எல்லாம் வருவதற்குமுன் அடி நீட்டளலவையில் முக்கியமான பங்கு வகித்தது.12 அங்குலம் ஒரு அடி; 3 அடி ஒரு கெஜம்; 220 கெஜம் ஒரு பர்லாங்; 8 பர்லாங் ஒரு மைல் என்பது அந்தக் காலத்தில் பள்ளியில் மனனம் செய்ய வேண்டிய வாய்பாடு.
அந்த அடி வாய்பாட்டைக் குழப்பிச் சொன்னதால் நானும் அடி வாங்கியதுண்டு. அப்போதெல்லாம் ஆசிரியர்களுக்கு முழு சுதந்திரம் உண்டு. பிள்ளைகைளைப் பள்ளியில் சேர்க்கும் போதே சரியாகப் படிக்கா விட்டால் கண்ணை மட்டும் விட்டு விட்டு உரித்துவிடுங்கள் என்று சொல்வார்கள். இப்போது வகுப்பறையில் பிரம்பே இருக்கக் கூடாது என்ற விதி உண்டு. மீறிப்பையன் மேல் கை பட்டுவிட்டால் பெற்றோர் வந்து சாலை மறியல்தான்.
அடி என்பது விளிச்சொல்லாகவும் சொல்லப்படுவது உண்டு. ’அடியேய்’ என்பது மனைவியை அழைக்கும் முறையில் ஒன்றாகச் சொல்வார்கள். இபோதெல்லாம் அது மாதிரிக் கூப்பிட்டால் பெண்னிய வாதிகள் ஆணாதிக்கம் என்று அடிக்க வந்து விடுவார்கள். இப்போது கணவன் மனைவி இடையே பெயர் சொல்லிக் கூப்பிட்ட காலம் கூடப் போய் இருவருமே பால் வேறுபாடு இன்றி ‘என்னப்பா’ ’வாப்பா’ ’சரிப்பா’ தான். எப்படி அழைத்தால் என்ன? மன அணைப்பு சரியாக இருந்தால் சரி.
அடி என்பது காலால் நடந்து உண்டாக்கும் அடியையும் குறிக்கும். ”நான் வைப்பது ஒரு சிறிய அடிதான்; ஆனால் இது மனிதகுல முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியமான அடி” என்று நிலவில் முதல் முதல் நடந்த போது நீல் ஆர்ம்ஸ்ட்ராங் சொன்னது குறிப்பிடத் தக்கதாகும்.
தன் சிறிய காலால் மூன்று அடி மண் கேட்டு வாங்கிப் பின் அளக்கும்போது திருவிக்ரமனாக பேருரு எடுத்துப் பெரிய காலால் அளந்தது எந்த வகையில் நியாயம் என்பது புரியவில்லை. சரி விடுங்கள் கடவுள் என்றால் என்னவேண்டுமானாலும் செய்யலாம் போல் இருக்கிறது.
காலடி என்று ஓர் ஊரே உள்ளது. ஆதி சங்கரர் அவதாரம் செய்த ஊர்.
சில கவிதைப் போட்டிகள் பற்றிய அறிவிப்பில் இத்தனை வரிகளுக்குள் எழுதவேண்டும் என்று சொல்வார்கள். அது சரியன்று. உரைநடைக்குத்தான் வரி என்று சொல்ல வேண்டும் கவிதை, பாடல்களுக்கெல்லாம் அடி என்பதே சரி.
சிலப் படித்த பேராசிரியர்களே ‘வள்ளுவர் ஒண்ணே முக்கால் அடியில் பெரிய பெரிய கருத்துகளையெல்லாம் எழுதியிருக்கிறார் என்று மேடையிலே முழங்குகிறார்கள். திருக்குறள் இரண்டு அடிகளே பெறக்கூடிய குறள் வெண்பாவில் எழுதப் பட்டது. அதில் முதல் அடியில் நான்கு சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீர்களும் இருக்க வேண்டும். எனவே இரண்டாம் அடி முக்கால் அடியன்று. முழு அடிதான்
அடிக்கிற கைதான் அணைக்கும் என்பார்கள்; ஏன் அது அடிக்காமலே அணைக்கக் கூடாதா? என்பதுதான் இன்றைய கேள்வி. முதலில் அடிப்பானேன்? அப்புறம் அணைப்பானேன்? ஆனால் சில நேரங்களில் அடிக்கத்தான் வேண்டும் என்று சொல்பவர்கள் அடியாத மாடு படியாது என்பார்கள்.
ஓர் ஐயம்; அப்படியானால் ஆடுற மாட்டை ஆடிக் கறக்கணும் பாடுற மாட்டைப் பாடிக் கறக்கணும் என்ற பழமொழி ஏன் வந்தது?
அடிக்காமல் அணைக்கப் பழகுவோம். அதுவே அனைவர்க்கும் நல்லது.