அவள் அப்படித்தான் – ரேவதி ராமச்சந்திரன்

ஒன்றும் குறையில்லை! | Dinamalar

 

                  அவள் அப்படித்தான்

ஆச்சு. பார்வதியின் பையன் ரகுராமனுக்குக் கல்யாணம் ஆகி விளையாட்டுப் போல ஒரு வருடம் ஓடி விட்டது. இல்லை இல்லை ஒட்டியாகி விட்டது.  ஆம், நல்ல நாட்டுப்பெண் ஜானகி வாய்த்தாள் அவளுக்கு. ஊரில் உலகத்தில் இல்லாத மாதிரி. இது என்னடா இது கூத்து! ஒன்றுமே என்றால் ஒன்றுமே தெரியவில்லை. ஜானகி ஒரே பெண் என்றாலும் இப்படியா வளர்த்திருப்பார்கள். நல்ல சம்பந்தி. ஒரு காபி போடுவதிலிருந்து இரவு அப்பளம் சுடுவது வரை ஒன்றிலிருந்து ஒன்றாக எல்லாமே சொல்லித்தர வேண்டியுள்ளது.

காபி டிகாஷன் போடும்போது டிகாஷனில் இரண்டு ஸ்பூன் சர்க்கரை கலந்தால் நல்ல திக்கான டிகாஷன் கிடைக்கும் என்ற விவரம் வேண்டுமானால் புதிதாக இருக்கலாம்; ஆனால் டிகாஷனே எப்படி போடுவது என்று தெரியாவிட்டால் என்ன செய்வது? பூரியுடன் சிறிது ரவையைச் சேர்த்தால் பூரி மொறு மொறுவென்று உப்பலாக இருக்கும் என்ற ரகசியம் தெரியாவிட்டாலும் பூரிக்கு மாவு பிசையக்கூடத் தெரியவில்லையே! பார்வதிக்கு தன்  பையன் எப்படி ஜானகியுடன் குடித்தனம் நடத்தப்போகிறானோ என்ற கவலை எழுந்தது. ஆனால் பார்வதியைக் கேட்டு கேட்டு அவள் சொன்ன மாதிரி ஒரு ஒரு வேலையும் அச்சுப்பிறழாமல் செய்வதில் மட்டும் சமர்த்து.ம்.

எதிர் வீட்டு பங்கஜம் கொஞ்சம் சர்க்கரை வேண்டுமென்று வந்தாள். சர்க்கரை வாங்கவா வந்தாள் மஹூம். தன் நாட்டுப்பெண் பவானியின்  சாமர்த்யத்தைக் காட்ட வந்தாள். வீட்டு வேலையும் செய்து விட்டு, ஆபீசுக்கும் போய் வருகிறாள். ‘உன் மாட்டுப்பெண் ஜானகி வீட்டு வேலைகளை உன்னை கேட்டுத்தான் செய்கிறாளாக்கும்’ என்று நொடித்தாள். ஆனால் பவானி பங்கஜத்திடம் கூட சொல்லாமல் நகை வாங்கி உள்ளே பதுக்கி வைத்து இருக்கிறாள் என்பதை பார்வதி எப்படி அவளிடம் கூற முடியும்!

அடுத்த வீட்டு அம்புஜம் அதை விட மோசம். தன் நாட்டுப்பெண் மேகலை இரண்டு இடத்தில் பகுதி நேர வேலை செய்கிறாள் என்று பீற்றல். ஆனால் அதற்காக இவள் முதுகொடிய எல்லா வீட்டு வேலைகளையும் செய்வதும், அந்த மேகலை இவளை அலட்சியப்படுத்துவதும் எல்லோர்க்கும் தெரிந்த ரகசியம்தான். இருந்தாலும் ஜானகிக்கு சமர்த்து குறைவுதான் என்று பார்வதிக்கு உள்ளூர மிக வருத்தம்.

திடீரென்று ராகுராமனுக்கு டெல்லியில் பத்து நாட்கள் வேலை வந்து விட்டது. ஜானகியிடம் அம்மாவைப் பார்த்துக் கொள்ளச் சொல்லி விட்டு பார்வதியையும் ஜானகியிடம் சண்டை போடாமல் இருக்கும்படி கெஞ்சி விட்டுப் புறப்பட்டான். அந்தக் காலத்தில் கைப்பேசி வரவில்லை. போனும் ரொம்ப புழக்கத்தில் இல்லை. ஏதாவது அவசரம் என்றால் அருகிலுள்ள கடையிலிருந்து இந்த எண்ணிற்கு போன் செய்யுமாறு தன் ஆபீஸ் நம்பரைக் கொடுத்து விட்டு, ஆனால் நீங்கள் போன் செய்யாதவரை நான் என்  வேலையைக் கவனமாகச் செய்வேன் என்று கூறிக் கொண்டே ஆயிரம் கவலைகளோட இரயில் ஏறினான்.

அவன் சென்ற மறு நாளே பிரியாத மகனை அருகில் காணாமலோ என்னவோ தூக்கம் தொண்டை அடைக்க லேசாகத் தலைவலி என்று பார்வதி  படுத்தாள். பின் இடைவிடாத இருமல், ஜலதோசம், காய்ச்சல், உடம்பு வலி  என்று அப்படியே கட்டையை நீட்டி விட்டாள். வீடு அவ்வளவுதான். நாறிப் போகும். போகட்டும். என்ன செய்வது. எழுந்து கொள்ளக் கூட முடியவில்லையே என்று அரற்றிக் கொண்டே தூங்கினாள்.

ஜானகி வீட்டு சமையலைச் செய்து, துளி மிளகு, சீரகம் தூக்கலாகப் போட்டு ரசம் வைத்து, குக்கரில் வைக்காமல் குழைவாக அளவாக சாதம் வடித்து, மணத்தக்காளியை நெய்யில் மணக்க மணக்கப் பொரித்து, சிறிது மோரை சுடப் பண்ணி (நிறைய பேருக்கு இது தெரியாத ரகசியம், சுட்ட மோர் வயிற்றுக்கு ரொம்ப இதம்), நாரத்த ஊறுகாயுடன் பார்வதியை கட்டாயப்படுத்தி சாப்பிட வைத்து, வெந்நீரில் உடல் முழுவதும் துடைத்து, துணி மாற்றி, படுக்கை விரிப்புகளை மாற்றி, நிதானமாக மின்விசிறியை  ஒட விட்டு, மெலிதான துணியால் போர்த்தி பார்வதியைத் தூங்க வைத்து, வெளிச்சமும், வெளிக்காற்றும் சிறிது படுகிற மாதிரி அறைக் கதவை லேசாக சாற்றி வெளி வந்தாள்.

வீடு முழுவதும் பெருக்கி, டெட்டால் கலந்த தண்ணீரால் துடைத்து, குளியலறையை சுத்தமாக அலம்பி, எல்லாத்துணிகளையும் சிறிது உப்பில்  ஊற வைத்து, துவைத்து, உதறி, நீவி விட்டு உலர்த்தினாள். பார்த்தால் பட்டுப்    போல இருந்தன துணிகள். அயர்ன் கூட தேவையில்லாமல் சுருக்கமில்லாமல் உலர்த்தப்பட்டிருந்தன. பின் குளித்து, உடை மாற்றி, ஸ்வாமிக்கு விளக்கேற்றி, மாமியாரின் நலனுக்குப் பிரார்த்தனை செய்து விட்டு, சிறிது சாப்பிட்டாள்.  மீதி சொச்ச வேலைகளையும் முடித்து விட்டு, குரோஷாவை வைத்துக் கொண்டு ஒரு சால்வையைப் பின்னினாள். இரவும் அளவான ஆகாரம் பார்வதிக்குக் கொடுத்து விட்டு, தானும் உண்டு, பார்வதியின் அறையிலேயே கூப்பிட்ட குரலுக்கு எழுந்து கொள்ள சௌகரியமாக தரையிலேயே படுத்துக் கொண்டாள்.

பக்கத்திலுள்ள வைத்தியரை ஆலோசித்து மாயத்திரை எதுவும் வேண்டாம் என்று சொன்னதால் ஆறுதல் அடைந்து, சுக்கு கஷாயம் சுட சுட வைத்துக் கொடுத்தாள். பக்கத்து வீட்டுப் பெண் தயங்கித் தயங்கி கேட்ட பாட சந்தேகங்களைத தீர்த்து வைத்து அவளுக்கு இரண்டு பாட்டும் சொல்லிக் கொடுத்தாள்.

இப்படியே பத்து நாட்கள் கழிந்தன. இதோ ரகுராமனின் குரல் கேட்கிறது. ஊரிலிருந்து வந்த அவருக்குத் தேவையானதை செய்து தந்து பார்வதியையும் மெல்ல வெளியில் கூட்டி வந்து உட்கார வைத்தாள்.

பார்வதிக்கு மூக்குக்கு மேல் ஆச்சரியம். ஆனந்தம். ஆஹா நம் ஜானகியா இப்பட!. ஒன்றும் தெரியாது என்று நினைத்தோமே. இது என்ன மாயம்! அப்போதுதான் அவளுக்கு சுரீரென்று ரகசியம் புலனாயிற்று. தன் கணவரை சிறு வயதிலேயே பிரிந்த மாமியாருக்கு மரியாதை கொடுத்து, அவருக்கு ஒரு அதிகாரத்தோரணையை காட்ட சந்தர்ப்பம் தந்து, அவளின் அன்பிற்காக இது நாள் வரை அடி பணிந்திருக்கிறாள் என்ற. மனதிற்குள் சந்தோஷ ஊற்று. அவள் அப்படித்தான்!

 

 

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.