அநுத்தமா
எழுத ஆரம்பித்த புதிதிலேயே ராஜேஸ்வரிக்கு ‘அநுத்தமா’ என்ற புனைப்பெயர் சூட்டியவர் அவரது மாமனார். முதல் கதையான ‘அங்கயற்கண்ணி’ கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றது. ‘ஜெகன்மோகினி’நடத்திய போட்டியில் பரிசினைப் பெற்றுத்தந்த கதை ‘மாற்றாந்தாய்’.
புதினங்களுக்காகவே பெரிதும் அறியப்பட்ட அநுத்தமா அவர்களின் ‘கேட்டவரம்’ என்கிற நாவல், பெரும்பாலான பட்டியலில் இடம் பிடிக்கிறது. ஐம்பதுகளின் வாழ்வியலை இவரது படைப்புகள் பிரதிபலிக்கின்றன என்று சொல்வார்கள். திருமணத்திற்குப் பிறகு படிப்பைத் தொடர்ந்து மெட்ரிகுலேஷன் தேர்வில் சென்னை மாகாணத்திலேயே முதல் மாணவியாகத் தேர்ச்சி பெற்றவர்
ஆங்கிலம், தெலுங்கு, இந்தி, சமஸ்கிருதம், ரஷ்யன் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றவர். சுமார் 300 சிறுகதைகள், 22 புதினங்கள் தவிர வானொலி நாடகங்கள் பலவற்றை எழுதியவர். தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறப்பாக உரையாற்றும் ஆற்றல் கொண்டவர். மொழி பெயர்ப்புகளும் செய்திருக்கிறார். அகிலன், கி வா ஜ, ராஜாஜி ஆகியோரின் அன்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்.
** ** ** **
இவரது ராமய்யா என்னும் கதை
சூரியாஸ்தமன சமயம். கதிரவனின் கிரணங்கள் மேற்கு வானத்தைத் தங்க மயமாக இழைத்து விட்டன. அந்த ஒளி வீட்டின் மீதும் வீசி, எல்லா வற்றையும். இரத்தின மயமாகப் பிரகாசிக்கச் செய்தது. தூரத்தில் ஒரு சிற்றாற்றின் சலசலப்பு காதில் இன்பகரமாக ஒலித்துக் கொண்டிருந்தது.
என்று சம்ப்ரதாயமாகத் தொடங்குகிறது.
குடும்பத் தலைவர் வேலைபார்க்கும் நகரத்தின் சந்தடியைத் தவிர்க்க இருபது மைல் தொலைவில் தோட்டம் துரவுடன் வீட்டில் வசிக்கும் குடும்பம். அந்த வீடும் ஸ்டேஷனிலிருந்து ஒரு மைல். அந்த ஏகாந்தத்தையும் இயற்கை எழிலையும் மகன் மாதுவுடன் சேர்ந்து ரசித்து அனுபவிக்கும் இல்லத்தரசியின் பார்வையிலும் சொற்களிலும் நகர்த்தப்படும் கதை.
ஒரு பொன் மாலைப்பொழுதில் வெளியில் ஒரு ‘வயோதிகர்’ வந்து நிற்பதைக் குழந்தை அறிவிக்க ‘இந்தக் காலத்தில் யாரை நம்புவது?’ என்னும் எண்ணத்தோடு உள்ளே சென்று விடுகிறாள்.
அந்த நேரத்தில் கணவர் வீடு திரும்பி வந்தவரை யாரென விசாரிக்கிறார். உதவியாள் தேவைப்படுமா என்று கேட்கிறார் வந்தவர்.
அந்தக் கிழவனின் குரல் கணீரென்று, காதில் வெகு நேரம் அதிர்ச்சி உண்டாக்கும் வகையைச் செய்தது. வயது ஐம்பது இருக்கும். உடம்பு கோடிட்டு சுருங்கி காலதேவன் மனித ரூபம் எடுத்து வந்தாற் போலிருந்தது.
அந்தக்கால வழக்கப்படி ஐம்பது வயது என்றாலே கிழவன் தானே? எல்லோரையும் நம்பிவிடும் கணவர் ‘சரி’ என்று சொல்லிவிடுவாரே என்று மனைவி கவலைப்படுகிறாள். கணவர் உள்ளே வந்ததும் சொல்லவும் செய்கிறாள்.
ஆனால் அவர் சிரித்தார். “நீ இங்கே தனியாக இருப்பதற்கு ஒரு துணையாயிற்று” என்றார். இவர் இப்படிப் பேசத் தொடங்கினால் என் ஜம்பம் ஒன்றும் சாயாது என்று நெடுநாள் பழக்கத்தில் எனக்குத் தெரிந்த விஷயம்தான். அவருக்கு நான் சொல்லுவது புரியாமலில்லை. புரிந்து கொள்ள மறுப்பவர்களிடம் என்ன செய்வது? மேலெழுந்த கோபத்தை அடக்கிக் கொண்டு நான் ‘விர்‘ ரென்று உள்ளே சென்று விட்டேன்.
சற்று நேரம் சென்று வழக்கம் போல் செடிகளுக்குத் தண்ணீர் விடுவதற்காகப் பின்புறம் செல்கையில் ஜலம் இழுத்துக் கொட்டும் வேலையில் முனைந்திருந்த அந்தப் புதிய நபரைப் பார்க்கிறாள். அதிருப்தியுடன் முகத்தைச் சுளுக்கிக் கொண்டு திரும்பிவிடுகிறாள்.
என் கணவர் சமையலறைக்கு வந்தார். “ராமய்யா எங்கே சாப்பிடுவான்? பாவம், அவனுக்கும் சேர்த்து சாதம் வடித்து விடு” என்றார்.
“ஆகா!” என்றேன், நான் எரிச்சலுடன்.
இரவு சாப்பிட்டானதும் பின் கதவைத் தாளிடும்போதுதான் அந்தக் கிழவரைக் கவனிக்கிறாள். அவருக்கும் உணவு இடுகிறாள்.
காலையில் எட்டு மணிக்குள் பாத்திரங்கள் கழுவி, குளித்து சமையல் முடிக்கவேண்டும். அதற்கு முன்பே மாட்டை வெளியில் கட்டி, சாணம் திரட்டி, வாசல் தெளித்து, வீட்டைப்பெருக்கி என பல கடமைகள்.
இன்றோ எழுந்து புழக்கடை வரும்போதே, மாடு வெளியில் கட்டப்பட்டு, கொட்டில் சாணம் எடுக்கப்பட்டு, தரை சுத்தமாக்கப்பட்டு …. அந்தக் கிழவனுக்கு தானே எஜமானன் என்ற எண்ணமோ என்று கறுவிக்கொண்டே மற்ற வேலைகளைக் கவனிக்கிறாள்.
காட்டிலிருந்து சுள்ளிகளை வெட்டி எடுத்துவருகிறார் ராமய்யா. எதற்கு என்ற கேள்விக்கு, ‘வேலிகட்ட’ என்பதுதான் பதில். எதையும் சட்டை செய்யாமல் முட்களைக் கழித்து குச்சிகளைச் சீராக்கி மும்மரமாக வேலையைத் தொடர்கிறார்.
அவனிடம் ஒரு மரியாதை, அவனது உதாசீனத்தில் ஒரு கோபம், அவன் மீது அனுதாபம், இரக்கம் இவை யெல்லாம் ஒருங்கே தோன்றி என் மனதில் ஆரவாரம் செய்தன. ‘நான்-இந்த வீட்டு எஜமானி – ஒரு கேள்வி கேட்டால், ஏதோ பதில் சொல்லி விட்டுத் திரும்பிக் கொள்கிறானே‘ என்று என் அகந்தை கர்ஜனை செய்தது. ‘முன் பின் அறியாத ஒருவன் உன் வேலை பூராவும் தனது கடமையெனச் செய்திருக்கிறானே,’ என்று என் உள்ளத்தில் இருக்கும் தெய்வாம்சம் எடுத்துக் காட்டிற்று.
வந்தவரை வீட்டை விட்டு அனுப்பி விடும்படிக் கணவரிடம் கண்டிப்பாகச் சொல்ல ஆரம்பிப்பதற்குள், ராமய்யா அங்கே வந்துவிடுகிறார். மாலையில் வரும் போது கயிறும் ஆணிகளும் வாங்கி வர ஆக்ஞாபிக்க, கணவரும் எதற்கு என்று கூடக் கேட்காமல், ‘சரி’ என்று தலையை ஆட்ட ‘கிழவன்’ அவளுடைய சுதந்திரத்தையே பறித்துக் கொண்டு போய் விட்டதாகக் கருதிப் பொருமுகிறாள்.
வந்து இரண்டு மாதங்கள் கழிந்து வீட்டு மனிதன் போலாகி விடுகிறார். கேட்பதற்குப் பதில் தவிரப் பேச்சு கிடையாது. முக்கால்வாசி நாள் அவர் இருப்பதே ஞாபகம் வராது
நமக்கு இரண்டு கைகள் இருக்கின்றன வென்று நமக்குப் பிரத்தியேகமாகக் கவனமிருக்கிறதா; மூக்கு, கண் என்று தனியாக உணருகிறோமா? அதே போல் ராமய்யா எல்லோருக்கும் ஒரு கை அதிகமானது போல் வீட்டில் ஓர் இன்றியமையாத பொருளாக விளங்கினான்.
கொஞ்சம் கொஞ்சமாக மாது ராமய்யாவின் தோழனாகி விட்டான். தாய் செல்லங் கொடுத்தால் அவனுக்கு கௌரவக் குறைவாகப் படும் என்கிற சந்தேகமும் வருகிறது
இப்பொழுது நான் என் குழந்தையை இழந்து விட்டேன். ராமய்யா இல்லா விட்டால் நான் என்ன செய்திருப்பேனோ? மாதுவின் விளையாட்டுத் தோழன் – குரு; என் வலக்கை; என் கணவரின் ஊன்று கோல்; என்றெல்லாம் நான் அவரைப் பற்றி நினைப்பதுண்டு.
எதற்கெடுத்தாலும் பிடிவாதம் பிடிக்கும், சாபிடப்படுத்தும் ஒரே குழந்தை, அவன் தன் வேலைகளைத் தானே செய்து கொள்ளும் அளவிற்கு வளர்ந்து விடுகிறான். துணி தோய்க்கக் கூட கற்றுக் கொண்டு விடுகிறான்.
இல்லத்தரசி மீண்டும் சூலுற, தண்ணீர் தூக்காதே; இருட்டில் வெளியே போகாதே. பால் சாப்பிடு, பழம் சாப்பிடு” என்றெல்லாம் ராமய்யா அதிகாரத்துடன் விரட்டியடிப்பது இவளுக்கு வியப்பாக இருக்கிறது.
ஏன்? எனக்கு மாதம் முதிர்ந்து, என் தாயார் என்னை அழைத்துப் போக வந்ததும், அவளையும் அப்படியே அதட்டினார்!
“ஊருக்குப் போனவுடன் ஒரு தரம் எண்ணெய் கொடுங்கள் ” என்று ஆக்ஞாபித்தார். அம்மா இப்பொழுதும் அதைச் சொல்லிச் சொல்லி சிரிப்பாள்.
மாதுவிற்குத் தங்கை தங்கத்துடன் வீடு திரும்புகிறாள். எல்லோரும் இறங்குவதற்கு முன்னேயே வண்டியிலிருந்து இறங்குகிறாள். அவர் காலில் விழுந்து நமஸ்கரித்து அவரது மனப்பூர்வமான ஆசீர்வாதத்தைப் பெற்ற பிறகே அமைதி குடி கொண்டது.
இப்போதெல்லாம் மாதுவும் ராமய்யாவும் தங்கத்துடனே பொழுது போக்குகிறார்கள். ராமய்யாவின் சந்தோஷத்தைக் கலைக்க மனமின்றி, பெரும்பாலான வீட்டு வேலைகளைக் கணவரும் மனைவியுமே பகிர்ந்துகொள்கிறார்கள்.
அதற்கும் ஒரு முடிவு வருகிறது. ராமய்யா நோய்வாய்ப்படுகிறார்.
“ஏன் மனங்கலங்குகிறாய்? நான் எல்லோரையும் இழந்து விட்டு பரதேசியாக வழியில் திரிந்து, அநாமதேயமாகச் சாக வேண்டியவன். பிள்ளையும், பெண்ணும், பேரனும், பேத்தியும் என்னைத் தாங்க, நான் செல்வது எவ்வளவு சந்தோஷம் என்று யோசித்துப் பார்.”
என்கிறார்.
எப்படிக் குடும்பத்தில் அமைதியாக நுழைந்தாரோ, அதே அமைதியுடன் வேறு உலகமும் போய்விடுகிறார்.
அவர் வந்த புதிதில் அவர் இருந்ததையே மறந்த நான், இப்பொழுது அவர் இங்கு இல்லாததை மறந்து விடுகிறேன். இப்பொழுது மாதுவுடன் தங்கம் விளையாடு கிறாள். ஆனால் அவளுக்கு ராமய்யா தாத்தாவின் போஷணை இல்லாமல் போய்விட்டதே என்பதுதான் எனக்குக் குறை.
என்று முடிகிறது கதை.
** ** ** **
‘அவன்’, ‘அவர்’ என்று மாறிமாறிச் சொல்லப்படுவது கதை சொல்லியின் அந்தந்த நிகழ்வில் இருக்கும் மனநிலையையும் உணர்வுகளையும் வெளிப்படுத்துகிறது. உளவியலும் மனிதநேயமும் கதை முழுவதும் ஊடுருவி இருக்கிறது.
சிக்கலில்லாத எளிய கதை; கதையோட்டமும் நடையும் இதமாக இருக்கின்றன.
எஸ். கே என்