தமிழுக்கு கதி – கம்பர், திருவள்ளுவர்.
வள்ளுவர்:
சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை.
அதாவது.. உழவே சிறந்தது என்றார்.
நம் பாரதியோ ..’உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் – என்றார்.
கம்பர் ஏரெழுபது – என்று எழுபது பாடல்களால் உழவில் சிறப்பை அக்கு வேறு ஆணி வேறாக பாடினார். உழவின் எல்லா அங்கங்களையும் அலசியிருக்கிறார்.
ஏர்விழா, ஊற்றாணிச் சிறப்பு, நுகத்தின் சிறப்பு, நுகத்தாணியின் சிறப்பு, பூட்டு கயிற்றின் சிறப்பு, கொழு ஆணியின் சிறப்பு, ஏர் ஓட்டுதலின் சிறப்பு – என்று ஆழமாக நுழைந்து கவிக்கிறார்.
நாம் களிக்கிறோம்!
இனி கம்பனின் ஏரெழுபதைப் பற்றிப் பார்ப்போம்..
பலருக்கு கம்பராமாயணம் தெரிந்த அளவிற்கு அவனது தனிப்பாடல்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. முதல் காரணம்: தமிழ்ப்புலவர்களும் கதா காலட்சேபம் செய்கிறவர்களும் அவன் நெய்த இராமாயணம் என்னும் மிக நீண்ட பட்டுத் துணியைப்பற்றி பேசினார்களே அன்றி அவன் நெய்த ஏரெழுபது போன்ற பல சிறு வைர மணி/ துணிகளைப்பற்றி பேசவில்லை; மற்றொறு காரணம்: பள்ளியில் கற்றுக்கொடுக்கப்பட்ட தமிழ்ப் பாடங்களில் கம்பராமாயணத்தில் ஒரு பகுதியை கோர்த்த அரசு, தனிப்பாடல்களை சேர்க்கவில்லை.
ஏரெழுபது பிறந்த வரலாறு மிகவும் ருசிகரமானது. குலோத்துங்கனுக்கு தான் புவிச்சக்கரவர்த்தி என்ற அகந்தை இருந்ததாம்; நம் கம்பருக்கோ தான் கவிச்சக்கரவர்த்தி என்பதில் பெருமை இருந்தது. ஒரு சமயம் குலோத்துங்கன் கவிச்சக்கரவர்த்தியும் புவிச்சக்கரவர்த்திக்கு அடிமைதானே என சபையில் கூற, கம்பர் எப்போதும் கவிச்சக்கரவர்த்தி புவிச்சக்கரவர்த்திக்கு அடிமையாக மாட்டான் என்று கூற, தர்க்கம் முற்றியது. குலோத்துங்கன் எனது ராஜ்ஜியத்தில் தானே உமக்கு இந்த பெருமை; வேறெங்கும் கிடைக்காதே என்று கூறுகிறான் ,
கம்பன் கவியால் பதிலடி கொடுக்கிறான்:
‘கொல்லிமலைத் தேன்சொரியும் கொற்றவா
நீ முனிந்தால் இல்லையோ எங்கட்கிடம்’
அரசரால் கொடுக்கப்பட்ட அணிகலன்களை எல்லாம் கழற்றி வைத்து கம்பர் வெளியேற முற்படுகிறார்.
குலோத்துங்கன் மேலும் கம்பரை சீண்ட,
‘மன்னவனும் நீயோ வளநாடும் உனதோ’ என்ற பாடலைப்பாடி வெளியேறுகிறார் கம்பர்.
நீண்டதூரம் நடக்கிறார். நடந்த களைப்பு மேலிட, இளைப்பாறும் போது ஒரு காட்சி கண்ணில் படுகிறது. நல்ல நண்பகல். எதிரில் தெரிந்த வயல் காட்டில், ஏரோட்டிக் களைத்த கணவனுக்கு மனைவி, தான் கரைத்துக் கொண்டு வந்த மோரை கொடுக்கிறாள்.
பசியும் தாகமும் மேலிட கம்பரும் சென்று உழவனிடம் கையேந்துகிறார். உழவன் மனைவி கம்பருக்கும் தான் கொண்டுவந்த மோரில் சிறிதை கொடுக்கிறாள். தாகமும் பசியும் தணிந்தது. உடன் இந்த விவசாயத் தம்பதியினருக்கு தன்னால் என்ன கைம்மாறு செய்யமுடியும் என்று சிந்திக்கிறார்… என்னால் கவி பாடுவதைத்தவிர வேறொன்றும் செய்ய முடியாது என உணர்ந்து, அப்போதைக்கு தனிப்பாடலாய் பாடிய செய்யுள்தான்,
செட்டிமக்கள் வாசல் வழி செல்லோமே செக்காரர்
பொட்டி மக்கள் வாசல் வழி போகோமே,
முட்டிபுகும் பார்ப்பார் அகத்தை எட்டிப்பாரோமே
எந்நாளும் காப்பாரே வேளாளர் காண்
பின் நன்றியுணர்ச்சி ஏரெழுபதாக பொங்கியதாக வரலாறு. அதில் எனக்குப்பிடித்த இரண்டு செய்யுள்களை மட்டும் பார்க்கலாம். இவை இரண்டும் அடுத்தடுத்த பாக்களாகவே அமைந்தன என்பது சிறப்பு.
முதலாவது ஏரோட்டுதலின் சிறப்பு, அடுத்தது உழவனின் சிறப்பு.
கார்நடக்கும் படிநடக்கும் காராளர் தம்முடைய
ஏர்நடக்கு மெனிற்புகழ்சால் இயலிசைநா டகம்நடக்கும்
சீர்நடக்குந் திறநடக்குந் திருவறத்தின் செயனடக்கும்
பார்நடக்கும் படைநடக்கும் பசிநடக்க மாட்டாதே
அருமையான பாடல். மிகவும் இனிமையான சுலபமாக புரியும் சொற்கள் கொண்ட எளிய நடை. எந்தவிதமான விளக்கமும் தேவையில்லை…
சுருக்கமாகச் சொல்வதென்றால் :ஏரோடினால் எல்லா நற்செயல்களும் நடக்கும், ஆனால் பசி நடக்காது!
இதற்கடுத்த பாடல், இந்த காலத்து அந்தாக்ஷரியைப்போல! வள்ளுவன் சொன்ன ஒன்றரை அடிகளிலிருந்து தொடர்ந்து தன் நால்வரிக்கவியை முடித்தான் கம்பன்.
உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாருந்
தொழுதுண்டு பின்செல்வா ரென்றேயித் தொல்லுகில்
எழுதுண்ட மறையன்றோ இவருடனே இயலுமிது
பழுதுண்டோ கடல்சூழ்ந்த பாரிடத்திற் பிறந்தோர்க்கே
வள்ளுவன் வாக்கை அப்படியே உபயோகித்ததிலிருந்து கம்பர் வள்ளுவன் மீது வைத்த மதிப்பு எத்துணை என்று தெரிகிறது!
இந்தப்பாடலை ஒருவர் எனக்கு கூறியதுதான் கம்பரின் தனிப்பாடல்களை நான் படிக்கத் தூண்டுகோலாக இருந்தது. இந்த பாடலும் மிகவும் எளிமையாக புரிந்துகொள்ளும் சொற்களால் ஆனது. ஈற்றடியில் உள்ள கடைசி மூன்று சொற்கள் பொன்னெழுத்துக்களால் பொறிக்கத்தக்கவை!
இது கம்பன் உழவுக்கு செலுத்திய அஞ்சலி!