“இங்க சித்த வந்து பாருங்கோ, உங்க பொண்ணு என்ன பண்ணியிருக்காள்” என வேலைக்கு கிளம்பி கொண்டிருக்கும் ராதாவின் அலறல் கேட்டு அவள் கணவர் சேகர் ஓடோடிவந்தார். அவர்களது புதுவீட்டில் சின்னதாக தோட்டம் போட்டு வைத்த செடிகள் சிலவற்றை பிடுங்கி போர்டிகோவில் போட்டு இருந்தது அவர்கள் வீட்டிற்கு வந்த மூன்று மாத நாய்க்குட்டி .
சேகருக்கு உள்ளுக்குள் ஒரே மகிழ்ச்சி நாய்க்குட்டியின் விஷமத்தை பார்த்து. ராதாவிற்கோ நாய் என்றாலே ஒரே பயம். அதனாலேயே அவள் சேகரின் நண்பர் கொடுத்த நாய்க்குட்டி ரோஸி மீது புகார் செய்துகொண்டேயிருப்பாள். “இன்று ரோஸி என் நல்ல செருப்பை கடித்துவிட்டது; இன்று செடிகளை பிடுங்கி வெளியில் போட்டுவிட்டது; இன்று தோட்டத்து மண்ணை கிளறி போர்டிகோவில் போட்டுவிட்டது” என ராதாவின் புகார் பட்டியல் நீளும். இதன் பொருட்டு ஒவ்வொரு முறையும் ராதா சண்டை போடும் போது சேகரும் ” சரி இந்த ரோஸியை இதை கொடுத்த எனது நண்பர் கணேஷிடமே திருப்பி கொடுத்து விடலாம்” என்பார். கணேஷும் அவர்கள் வீட்டிற்கு வரும்போது “சரி மேடம் இதை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாம்” என்று சொல்வாரே தவிர அதை சேகர் வீட்டிலிருந்து எடுத்துப்போகும் உத்தேசம் துளியும் அவருக்கு இல்லை.
ராதா சேகர் தம்பதிக்கு ஒரு பெண்ணும், பையனும் உண்டு. இருவரும் திருமணம் முடிந்து வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். கணவர் சேகரும் வேலை நிமித்தம் மாதம் ஒருமுறையோ இரண்டு மாதத்திற்கு ஒருமுறையோ வெளியூர் செல்ல நேரிடும். அப்போது எல்லாம் தனியாக இருக்கும் ராதாவிற்கு ரோஸிதான் துணை. சேகர் ஊரில் இருக்கும்போது நாயின் உணவை பற்றி கவலை படாத ராதா அவர் வெளியூர் செல்லும்போது தனக்கு பிடிக்காது என்ற போதும் ரோஸிக்காக முட்டை வேகவைத்து, ஓடு எடுத்து, உள்ளிருக்கும் மஞ்சள் கருவை உதிர்த்து முதலில் அதை கையால் எடுத்துக்கொடுத்து சாப்பிட செய்வாள். ராதா பூஜை செய்யும்போது, ரோஸி பூஜையறை வாசலில் படுத்து சத்தம் போடாமல் விழித்திருக்கும். இதனால் ரோஸிமீது புகார் சொல்வதை விட்டு அதன் மேல் அன்பு காட்ட தொடங்கினாள் ராதா. குழந்தைகளும், கணவரும் கூட இது விஷயமாக ராதாவை அடிக்கடி கிண்டல் செய்வதுண்டு. வருடங்கள் ஓடின ரோஸியும் அவர்களது வீட்டில் ஓர் அங்கத்தினர் ஆகிவிட்டது.
பத்து வயது ஆன போது ரோஸியின் அழகு சொல்லி மாளாது. குட்டியாக இருக்கும் பத்து வயது என்று யாரும் நம்ப மாட்டார்கள். அதன் ப்ரவுனும், கருப்பும் கலந்த நிறமும் கரு விழிகளும், சிறிய உயரமும் புஸு புஸு என நிறைய முடிகளும், இது தவிர அதன் ஓரப்பார்வையும் பார்ப்பவர்கள் மனதை கொள்ளை கொள்ள செய்யும். தினமும் அதை வெளியில் அழைத்துச் செல்லும்போது தெரு வாசிகள் அதை பார்த்து கொஞ்சுவது சேகருக்கு ஒரே பெருமை. பெண்ணினத்திற்கு உரிய குணமும் அதற்கு உண்டு. கணேஷ், சேகர், , ராதா மற்றும் அவர்கள் குழந்தைகள் தவிர வேறு யாரும் அதை தொட அனுமதிக்காது. ஒரே ஒரு முறை மேட்டிங் விடுவதற்குள் அவர்கள் பட்டபாடு அப்பப்பா! எந்த நாயை பார்த்தாலும் ஒரே பாய்ச்சல் தான்.
ரோஸி, ராதா சேகர் வீட்டிற்கு வந்து 10 வருடங்கள் ஓடி விட்டன. ஒரு நாள் காலையில் வாசல் தெளிக்கும் போது கேட்டிற்கு வெளியே ஒரு கருப்பு நாய் இருப்பதை ராதா பார்த்தாள். அது இவர்கள் ரோஸியையே பார்த்துக்கொண்டிருந்தது. ரோஸி அதன் அருகில் கூட செல்லாது. காருக்கு அடியிலேயே படுத்துக்கிடந்தது .
ராதா சேகரை கூப்பிட்டு அந்த கருப்பு நாயை விரட்டச்சொன்னாள். சேகரும் அதை விரட்ட, நாயும் சிறிது தூரம் சென்று, அவர்கள் உள் சென்றவுடன் பழையபடி அதன் இடத்தில் வந்து படுத்துக்கொள்ளும். எவ்வளவு முறை விரட்டி அடித்தும் திரும்பத்திரும்ப வந்து விடும். மற்ற நாய்களையும் வர விடாது கடித்து குதறிவிடும். சண்டையில் கருப்பு நாய்க்கும் காயம் உண்டாகும். அதை பற்றி சிறிதும் கவலை கொள்ளாமல் ரோஸிக்காக தவம் கிடப்பதை நிறுத்தவில்லை. இத்தனைக்கு பிறகும் ரோஸி துளியும் அதை லட்சியம் செய்யாது. இது எல்லாவற்றிலும் கொடுமை மழை பெய்தபோதுதான். மழை பெரிதாக வந்த போதும் மழையில் நனைந்து நின்றதே தவிர அதன் இடத்தை விட்டு துளியும் நகரவில்லை.
அதை அகற்றும் நோக்கத்தில் இருந்ததால் ராதாவும், சேகரும் பரிதாபப்பட்டாலும் உண்பதற்கு ஆகாரம் கொடுக்கவில்லை. ஆனாலும் ரோஸியின் மீதுள்ள காதலால் வெளியிலேயே இருக்கும். சேகர் ரோஸியை வெளியில் இரு நேரமும் கூட்டி செல்லும்போது இடைவெளி விட்டு பாதுகாப்பாக அதை பின்தொடரும் .
பல நாட்கள் காத்திருந்தது ரோஸி தன்னிடம் மசியவில்லை தனக்கு கிடைக்காது என நினைத்து கருப்பு நாயும் எங்கோ சென்று விட்டது.
இதைப்பார்த்த சேகருக்கும், ராதாவுக்கும் பக்கத்து வீட்டில் சில வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் நினைவில் வந்தது.
அவர்கள் பக்கத்து வீட்டில் காலேஜ் படிக்கும் இளம்பெண் ஸ்வாதி இருந்தாள். அவளுக்கு நன்கு படித்து கலெக்டர் ஆகி நாட்டிற்கு சேவை செய்யும் எண்ணம் இருந்தது. இதை அவள் பெற்றோர் பெரிதும் ஊக்குவித்தனர். அவள் அனைவரிடமும் நட்புடன் பழகுவாள். அதே போல் தான் அவளுடன் படிக்கும் ராஜேஷிடமும் நட்பு காட்டினாள்.
ராஜேஷின் கெட்ட சகவாசத்தையும், கெட்ட பழக்கங்களையும் தாய் தந்தையுடன் மதிக்காமல் சண்டைபோடும் குணத்தையும் அறிந்த ஸ்வாதியின் அப்பா அவனுடன் பழகுவதை விட்டு விடச்சொன்னார்.
ஸ்வாதி செல்லமகளாக இருந்தாலும் தந்தை சொல்லுக்கு முக்கியத்துவம் கொடுப்பவள். அதனால் ராஜேஷ் பேச வந்தபோது, தன்னுடன் பேசுவதை விட்டு விடும் படியும் கூறினாள்.
ஆனால் ராஜேஷோ “நான் உன்னை மிகவும் விரும்புகிறேன் நீ இல்லாமல் எனக்கு வாழ்க்கை இல்லை. இருவரும் மேஜர் திருமணம் செய்துகொள்ளலாம்” என நச்சரிக்க ஆரம்பித்தான்.
“என் பெற்றோர் சொல்லை என்னால் மீற முடியாது அதுவும் இல்லாமல் என் குறிக்கோள் நன்கு படித்து கலெக்டர் ஆவதுதான் . நீயும் உன் வருங்காலத்தை உத்தேசித்து திருத்திக்கொள்” என்றாள் ஸ்வாதி.
ஆனால் ராஜேஷின் ஆத்திரம் அடங்கவில்லை. “நீ எப்படி நன்றாக வாழ்கிறாய் பார்க்கிறேன்” என கறுவிக் கொண்டிருந்தான். ஒரு நாள் இரவில் ஸ்வாதியின் தந்தை ஒரு துக்க காரியத்திற்கு சென்று வந்ததால் வாசலில் கை, கால் அலம்ப ஸ்வாதியை தண்ணீர் கொண்டு வரச்சொன்னார்.
ஸ்வாதி தண்ணீருடன் வெளியே வருவதை மறைந்திருந்து பார்த்த ராஜேஷ் தன் கையில் இருந்த ஆசிட் பாட்டிலை அவள் முகத்தில் வீசி அடித்தான். “எனக்கு இல்லாத நீ எப்படி நிம்மதியாக வாழ்வாய்” என கத்திவிட்டு ஓடிவிட்டான். அவள் அலறலைக் கேட்டு அக்கம் பக்கத்தினர் அனைவரும் ஓடி வந்தனர். அனைவரும் தவித்த தவிப்பிற்கு வார்த்தையே இல்லை.
அங்கு இருந்த அனைவரும் அவளை ஆஸ்பத்திரியில் சேர்த்து அவள் உயிரை காப்பாற்றினர் .
பல வருடங்களுக்கு பிறகு ஸ்வாதியின் தாய் தந்தையரின் கவனிப்பினால் அவள் முகத்தின் வடுக்கள் மறைவதற்கும் அவள் கலெக்டர் ஆவதற்கும் அவர்கள் செலவழித்த பணமும், அடைந்த மனவேதனையும் அங்கிருந்த ராதாவும் சேகரும் உட்பட அனைவரும் அறிவார்கள்.
சேகருக்கும், ராதாவுக்கும் அந்தக்காதலுடன் இந்த ரோஸி காதலை ஒப்பிடத்தோன்றியது .
இரண்டும் ஒரு தலைக்காதல். ஐந்தறிவு நாய் தான் காதலித்த காதலி தன்னைக் காதலிக்கவில்லை என்று அறிந்த போது, எங்கிருந்தாலும் தன் காதலி நன்றாக இருக்க நினைத்து அதை விட்டு அமைதியாக விலகிச் சென்றுவிட்டது.
ஆனால் ஆறறிவு படைத்த ஒரு சில மனிதர்கள் தான் காதலித்த பெண் நன்றாக, நிம்மதியாக இருக்கக்கூடாது என நினைத்து அவளை அழிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள்.
காதல் என்பது காத்திருத்தல். தன் காதலி சந்தோஷப்படுவதை பார்த்து விலகி இருந்து சந்தோஷப்படுதல். அதில் க்ரோதம், ஆத்திரத்திற்கு இடமே இல்லை. தான் விரும்புபவர் தன்னை கட்டாயப்படுத்தி விரும்ப வேண்டும் என நினைக்காதிருத்தல்.
இதை ஆறறிவு படைத்த மனிதன் உணரும் நாள் என்று வருமோ?