குண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்

முன் கதைச் சுருக்கம் :பூம்புகார் நகரத்துப் பெருங்குடி வணிகனின் அருமை மகள் பத்திரை.
கொலைத் தண்டனை விதிக்கப்பட்ட காளன் என்ற கொடிய கள்வன் மேல் காதல் கொண்டாள்.
தந்தையின் அறிவுரையும் கேட்காமல் தன் காதலில்  பிடிவாதமாக இருந்தாள்.
அவள் கண்ணீரால் கரைந்த வணிகன் வேறு வழியில்லாமல் கொலைத் தண்டனையிலிருந்து காளனை விடுவிக்க முற்படுகிறான்………...   
குண்டலகேசி கதை | Gundalakesi story - YouTube
தந்தை உரைத்த  ஆறுதல்“விழிபுனல்  மண்ணில்  விழுந்தோட
மொழிபல    பேச    முயலாதே
பழிபல எண்ணிப் பதைத்தாலும்
வழிபல   தந்தை  வகுப்பேனே”             தந்தை கூறுவதுA0111

“பூந்தளிர் அன்னாள், என்றன்
      பொன்மகள் கண்கள்  நீரை
ஏந்திடும் நிலையைக் கண்டேன்
      எரிதழல்  மெழுகாய் ஆனேன்.
மாய்ந்திடக் காளன்,  வீரர்
        வாளினை வீசும் முன்னே
வேந்தனைச் சென்று காண்பேன்
       விரைவனே கோயில் இன்னே!

       ( கோயில் — அரசன் மனை)
        ( இன்னே – இப்பொழுதே)

மண்ணிலே உள்ள செல்வம்
       வாய்த்திடும் போதும், பெற்ற
பெண்ணவள் தாயும் இல்லாள்,
       பெருந்துயர் உற்று வாடிக்
கண்ணிலே நீர்சொ ரிந்தால்,
       காண்பவன் தந்தை கொல்லோ!
வெண்ணிறக் குடையோன் மன்னன்
       விதியினை மாற்றச் செய்வேன்!”

அரசனைக் கண்டு விடுதலை வேண்டுதல்

கண்டனன் பெண்ணின் துன்பம்,
     கடிதினில் தேரில் ஏறிக்
கொண்டனன், அரண்ம னையைக்
     குறுகினன் வேந்த னுக்கு
விண்டனன் நிகழ்ந்த வற்றை.
      வேண்டினன் விடுத லையை.
பண்டுதொல் மரபில் வந்த
       பார்பதி சீற்றம் கொண்டான்.

              ( பார்பதி — அரசன்)

சீற்றத்துடன் அரசன் கூறுவது

கன்றினுக் காகத் தேரின்
     காலிலே மகனைக் கொன்றும்,
அன்றொரு  புறவுக் காக
      அரிந்துதன் தசையைத் தந்தும்,
நன்றறம்  காத்த மன்னர்
      நலிவிலாக் குடியில் வந்தேன்
என்றுநீ  அறியாய் போலும்,
      என்முனே வராதே போ!போ!

பித்தெனப் பெண்ணைப் பெற்றாய்,
     பெருங்குடி வணிக னோநீ?
கத்தியும் பொன்னே   என்று
     கண்ணிலே குத்த லாமோ?
இத்தரை   காக்கும் மன்னன்
     என்முறை பிழைக்க லாமோ?
புத்தியும் கெட்டுப் போனாய்
       போவென வெகுண்டு சொன்னான்!

.             வணிகன் நயவுரை!

வணங்கிய வணிகன் சொன்னான்,
     ” வாழ்கநின் கொற்றம் மன்னா!
இணங்கியே ஏற்றுக் கொண்டேன்
      இயம்பிய கருத்தும் நன்றே!
பிணங்கிடும் மகளைக் கண்டு
     பெற்றவன் என்ன செய்வேன்?
உணங்கிடும் உள்ளத் தோன்நான்
     உரைப்பதைச் சற்றுக் கேளாய்!

     ( உணங்கிடும் – வருந்திடும்)

குலமுறை அறிவேன், உன்றன்
     கோதறு குணமும், நீதி
நிலவிடும் தன்மை மற்றும்
      நேர்மையும் அறிவேன் மன்னா!
சிலமுறை விதியின் சூழ்ச்சி
       தெரிந்திடாப் பேதை ஆனேன்.
அலமரும் என்னைக் காக்க
     ஆருளர் உன்னை விட்டால்?

கொற்றவன் தந்தை ஆவான்
     குடிகளுக் கென்று முன்னோர்
சொற்றனர். பத்தி ரைக்குச்
     சுற்றமும் தாயும் இல்லை.
உற்றதோர் தந்தை போல
     உதவிட வேண்டும் நீயே.
மற்றவன் திருந்தி வாழ
     வாய்ப்பினை நல்கு வாயே!”

                   விடுதலை!

தள்ளரும் உலகின் தன்மை
     சாற்றியே வணிகன் நெஞ்சை
அள்ளிடும் விதத்தில் கூற,
     அரசனும் சினத்தை விட்டுக்
கள்வனின் விடுத லைக்குக்
     கட்டளை இட்டான். வாழ்வில்
துள்ளிடும் விதியின் ஆட்டம்
     தொடங்கியே தொடர்ந்த தம்மா!

( தொடரும்)

 

 

9 responses to “குண்டலகேசியின் கதை – 4- தில்லை வேந்தன்

  1. அருமையான நடை. அற்புதமான எழுத்தாற்றல்!அருசுவை விருந்து!தொடருட்டும் உன் கவிதை!! C

    Like

  2. கத்தியும் பொன்னே என்று கண்ணிலே குத்தலாமா
    துள்ளிடும் விதியின் ஆட்டம் தொடங்கியே
    அருமையான வரிகள். அருமையான சொல்லோட்டம்.
    கவிஞருக்கு வாழ்த்துக்கள்.

    Like

  3. அழகான நடை. அற்புதமான சொல்லாற்றல்.மனதுக்கு மிக இதம்.தொடர்க உன் எழுத்துப்பணி.

    Like

  4. கத்தியும் பொன்னென்று
    கண்ணிலே குத்தலாமா

    துள்ளிடும் விதியின் ஆட்டம்
    தொடங்கியே

    அருமையான வரிகள
    கவிஞரின் அருமையான கருத்தோவியம்

    Like

  5. வாழ்வில்
    துள்ளிடும் விதியின் ஆட்டம்
    தொடங்கியே தொடர்ந்த தம்மா!

    Thamizhin mel , ungalirukkum alumaiye thani.
    Miga arpudham anna..

    Like

  6. Pingback: வாசகர் கருத்து | குவிகம்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.