குவிகம் வாசகர்களுக்கு வணக்கம்.
“குதூகலம் தரும் குழந்தை பாடல்கள்” என்ற பாடல் தொடரை உங்கள் வீட்டு குழந்தைகளுக்காக வழங்குகிறேன்.
எளிய நடையில் குழந்தைகளுக்கு ஏற்றவாறு ஒவ்வொரு பாடலையும் அமைக்க முயற்சிக்கிறேன். ஒவ்வொரு குவிகம் மாத இதழிலும் ஒன்று, இரண்டு அல்லது மூன்று சிறிய பாடகள் இடம் பெறும். பாடல்களை செல்வி சாய் அனுஷா அழகாக தன கொஞ்சும் குரலில் பாடிய வீடியோக்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்.
பார்த்து, கேட்டு மகிழுங்கள் !
இதுவரை இந்த பாடல் தொடரில் இடம் பெற்றவை:
- பிள்ளையார் பிள்ளையார் – ஜூலை 2020
- அம்மா அப்பா ! – ஜூலை 2020
- ஹையா டீச்சர் ! – ஆகஸ்ட் 2020
- இயற்கை அன்னை ! – ஆகஸ்ட் 2020
- எனது நாடு – செப்டம்பர் 2020
- காக்கா ! காக்கா ! – செப்டம்பர் 2020
- செய்திடுவேன் ! – அக்டோபர் 2020
- மயிலே! மயிலே! மயிலே! – அக்டோபர் 2020
- நானும் செய்வேன்!
எங்கள் வீட்டு வேலைகளை
நானும் செய்வேன் !
அம்மா அப்பா இருவருக்கும்
உதவிகள் செய்வேன் !
வாசல் தெளிக்கப் போகும்போது
தண்ணீர் இறைப்பேன் !
அம்மா கோலம் போடும்போது
புள்ளிகள் வைப்பேன் !
அடுக்களையில் சமைக்கும்போது
பாத்திரம் தருவேன் !
அப்பா காய்கள் நறுக்கும்போது
நானும் கற்பேன் !
வீட்டை சுத்தம் செய்யும்போது
ஒத்தாசைகள் செய்வேன் !
துணிகள் அவர்கள் தோய்க்கும்போது
உலர்த்தவும் செய்வேன் !
தோட்டத்திலே செடிகளுக்கு
தண்ணீர் வார்ப்பேன் !
அப்பா கடைக்குப் போகும்போது
பையை சுமப்பேன் !
சின்னவனாய் இருந்தாலும்
நானும் மனிதன் !
சிறுமியாய் இருந்தாலும்
நானும் பெண்தான் !
அம்மா அப்பா, இதோ வரேன்
நானும் அங்கே !
உங்களுக்கு உதவியாக
என்றும் இருப்பேன் !
- அணிலே ! அணிலே !
அணிலே, அருகில் வந்தே உன்
அன்பை அழகாய் காட்டுகிறாய் !
எங்கே கற்றாய் இந்த பாசம்
எனக்கும் அதனை சொல்லிக்கொடு !
எங்கள் வீட்டில் கொய்யா பழுத்தால்
உடனே உண்ண வருகின்றாய் !
உன் சின்ன வாயால் கடித்துக் கடித்து
எனக்கும் கொஞ்சம் தருகின்றாய் !
இங்குமங்கும் மரத்தில் ஏறி
ஓடிப் பிடித்து ஆடுகிறாய் !
உன்னைப் பார்த்தால் எனக்கும் இங்கே
உற்சாகம்தான் பிறக்கிறதே !
உட்கார்ந்துகொண்டு கொறிக்கும்போது
என் உள்ளத்தை அள்ளிப் போகின்றாய் !
அம்மா உன்னை தேடி வருவாள் –
அதற்குள் நீயும் திரும்பிப் போ !
கீச் கீச் என்று கத்திக் கொண்டே
வீட்டைச் சுற்றி வருகின்றாய் !
அணிலே, அணிலே, நானும் வாரேன் –
உன் விளையாட்டில் என்னைச் சேர்த்துக் கொள் !