விதுரர் என்னும் தர்மாத்மா!
பாகவத தர்மம் அறிந்த பன்னிரண்டு ஞானிகளில் முதன்மையானவன் யமதர்மராஜன். மாண்டவ்யர் என்ற ரிஷியின் சாபத்தினால், தாழ்ந்த குலத்தில் பிறக்க நேரிடுகிறது. இது எப்படி ஏற்பட்டது ?
மெளன விரதத்தில் இருந்த மாண்டவ்யர், தவத்தில் இருக்கும்போது, கொள்ளைக்காரர்களைப் பிடிக்க வந்த காவலாளிகள் இவரையும் கொள்ளைக்காரன் என்று பிடித்துச் செல்கிறார்கள் – தன் ஆசிரமத்தில் இருந்த கொள்ளைக்காரர்களைப் பற்றி இவர் வேண்டுமென்றே எதுவும் சொல்லவில்லை என்று அரசன் முன்பு நிறுத்துகின்றனர். மெளன விரதத்தால், அரசனுக்கும் இவர் பதில் சொல்லாததால், கொள்ளைக் காரர்களைப் போலவே, இவரையும் கழுவிலேற்றச் சொல்கிறான் அரசன். தன் தவ வலிமையால், இவர் கழுமரத்திலேயே தவம் செய்தவாறு இருப்பதைத் தெரிந்துகொண்ட அரசன், தன் தவறை உணர்ந்து, அவரை மரத்திலிருந்து இறக்கி, மன்னிப்புக் கேட்கிறான். அரண்மனை வைத்தியர்களைக் கொண்டு வைத்தியமும் செய்கிறான். ஆனாலும் ஒரு ஆணி உடலிலேயே தங்கி, மிகுந்த வலியையும், வேதனையையும் அளித்ததால், யமதர்மராஜனிடம் சென்று, தனக்கு இந்தத் தண்டனை அளிக்கத் தான் செய்த பாவம் என்ன என்று கேட்கிறார். அதற்கு தர்மராஜன் ‘ போன ஜென்மத்தில், தும்பிகளை முள்ளால் குத்தி, பறக்க விட்டீர்கள். அதன் பலன்தான் இந்த தண்டனை ‘ என்கிறான்.
“அப்போது எனக்கு என்ன வயது இருக்கும்?”
“மிகச் சின்ன வயது – சிறுவனாக இருந்த போது”
“பன்னிரண்டு வயதுக்கு முன், ஒரு குழந்தை செய்யும் தவறு, மன்னிக்கக் கூடிய குற்றம்தான் – ஏனெனில், அதற்குப் பின்னால் வன்மமோ, பொறாமையோ, தீய எண்ணங்களோ கிடையாது. தர்மத்தின் தலைவனான நீ, ஒரு சிறிய குற்றத்திற்கு, தேவைக்கு அதிகமான அளவில் தண்டனை வழங்கி விட்டாய். அதன் பலனை நீ அனுபவித்தே தீர வேண்டும். தர்மமும், நியாயமும், சாத்திரங்களும் அறிந்த மனிதனாகப் பிறந்தும், உன் அறிவுரைகள் ஏற்கப்படாத சூழ்நிலைகளிலேயே நீ இருக்க நேரிடும். தாழ்ந்த குலத்தில் பிறந்து, வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் நீ புறக்கணிக்கப் படுவாய்” என்று மாண்டவ்யர் சாபம் இடுகிறார். தன் தவறை உணர்ந்த தர்மராஜனும், இந்த சாபத்தை ஏற்றுக்கொள்கிறார்!
வியாச முனிவரின் கருணை மிகுந்த பார்வையால்,அழகான பணிப்பெண்ணுக்குப் பிறந்தவர் விதுரர். ‘உனக்கு தர்மாத்மாவான மகன் பிறப்பான்’ என அவளுக்கு வரமளிக்கிறார் வியாசர. தர்மராஜன் தன் சாப வினையால், விதுரனாக, மனிதப் பிறவி எடுக்கிறார். (மற்றொரு ரூபம் யுதிஷ்டிரராக தர்மராஜா இருக்கிறார்!).
திருதராஷ்டிரன், பாண்டு ஆகியோருக்கு கொடுக்கப்பட்ட எல்லா பயிற்சிகளும் விதுரனுக்கும் கொடுக்கப்பட்டாலும், திருமணம் மட்டும், அரண்மனை பணிப்பெண்ணின் மகள் கன்யா வுடன் செய்து வைக்கப்படுகிறது! பிறப்பிலிருந்தே புறக்கணிக்கப் பட்டவர் விதுரன்.
வியாச முனிவர் வைத்த பெயர் ‘விதுரன்’ – ‘விதுர்’ என்றால் அறிவு, ஞானம். நீதி, தருமம், நியாயம், நன்னடத்தை போன்ற உயர்ந்த குணங்களைக் கொண்டவர். தன் சகோதரன் திருதராஷ்டிரனுக்கு மந்திரியாய் நல்லாட்சி புரிய உதவியவர். கெளரவர்களிடமும், பாண்டவர்களிடமும் சமமான அன்பையும், அக்கறையையும் கொண்டவர். திருதராஷ்டிரனாலும், துரியோதனனாலும் பலமுறை அவமானப் படுத்தப் பட்டாலும், அவர்களுக்கு நல்ல யோசனகளையும், தர்மத்தையும், நியாயங்களையும் சொல்லியவர். திருதராஷ்டிரனுக்குக் கண்களைப் போல கூடவே இருந்து தர்மத்தை எடுத்துரைத்தவர். இவர் அறிவுரைகளை ஏற்காதபோதும், தன் அண்ணன் மேல் கொண்ட பாசத்திற்காக, புறக்கணிக்கப் படுகிறோம் என்று தெரிந்தும் உடன் இருந்தவர். மகாபாரதத்தில், இவ்வளவு வருத்தங்களும், புறக்கணிப்புகளும் கொண்ட மற்றொரு தர்மாத்மா கிடையாது!
ஶ்ரீகிருஷ்ணன் மீது அளவிலா பக்தியும், மரியாதையும் கொண்டவர். அந்தப் பரந்தாமனால் மிகவும் மதிக்கப் பட்டவர். பாண்டவர்களுக்காகத் தூது வந்தபோது, திருதராஷ்டிரன், துரியோதனாதிகள், பீஷ்மர், துரோணர், கிருபர் போன்றோரின் அழைப்பை கிருஷ்ணன் ஏற்கவில்லை. விதுரனின் விருந்தோம்பலைத்தான் ஏற்றுக்கொள்கிறான். விழுந்து வணங்குபவனைக் கைகளில் தூக்கி, மார்போடு அணைத்துக் கொள்கிறான் கிருஷ்ணன். இரவு முழுவதும் விதுரனுடன் மகிழ்ச்சியுடன் உரையாடிக்கொண்டிருக்கிறான் பரந்தாமன்!
துரியோதனன் பிறந்ததிலிருந்தே அவனுக்கு விதுரனைப் பிடிக்கமல் போனதற்குக் காரணம் இருக்கிறது! பிறந்தவுடனேயே கழுதை போல குரல் எழுப்பினான் துரியோதனன். விதுரன் திருதராஷ்டிரனிடம் சென்று, “அரசே, இது நல்ல சகுனம் அல்ல. இவன் நம் குலத்தையே அழித்துவிடுவான். அதனால் இவனைத் தியாகம் செய்வதே நல்லது” என்கிறார். மேலும் அவர்,” ஒரு குடும்பத்தைக் காக்க, தனியொருவனைத் தியாகம் செய்யலாம். ஒரு கிராமத்தைக் காக்க, ஒரு குடும்பத்தைத் தியாகம் செய்யலாம். ஒரு நாட்டைக் காக்க, ஒரு கிராமத்தைத் தியாகம் செய்யலாம். ஒருவர் தன் ஆத்மாவைக் காக்க, இப்பூவுலைகையே தியாகம் செய்யலாம்” என்கிறார். திருதராஷ்டிரனின் பாசம் கண்ணை மறைத்தது – கெளரவ குலமே அழியக் காரணமானான் துரியோதனன்.
“யதோ தர்மஸ்ததோ ஜய:” -எங்கு தர்மம் உள்ளதோ அங்குதான் வெற்றியும் உள்ளது என்பதை தன் ஒவ்வொரு உரையிலும் வலியுறுத்தும் மஹான் விதுரர்.
தவத்திற் சிறந்த தவமுனி மைத்ரேய மகரிஷி, பாண்டவர்களின் நிலைக்கு வருந்தி, துரியோதனனை எச்சரிக்கிறார். ‘துரியோதனா, பாண்டவர்களைச் சமாதானப் படுத்து. இல்லையென்றால் பூண்டோடு நீங்கள் அழிவது உறுதி” என்கிறார். “நான் எதற்கும் அஞ்சாதவன்” என்று சபையில் தன் தொடையைத் தட்டி அவரை அவமதிக்கிறான் துரியோதனன். கோபம் கொண்ட மைத்ரேயர், “எந்தத் தொடையைத் தட்டிப் பேசினாயோ, அதன் வழியாகவே உன் உயிர் பிரியும்” என்று சாபம் இடுகிறார். அப்போதும் விதுரர், மகரிஷியிடம் இந்த சாபத்திற்கு என்ன விமோசனம் என்று கேட்டு, துரியோதனனைக் காக்கவே முயற்சி செய்கிறார். கெளரவர்களையும், பாண்டவர்களையும் சமமாகக் கருதினாலும், பாண்டவர்களின் பக்கம் தர்மமும், நியாயமும் இருக்கவே, ஒவ்வொரு இக்கட்டிலும் விதுரர் பாண்டவர்களைக் காப்பாற்றவே செய்கிறார்.
விதுரர் எவ்வளவோ தர்ம உபதேசங்களை எடுத்துரைத்த போதிலும், திருதராஷ்டிரனுக்கு மனதில் நிம்மதி ஏற்படவில்லை. மேலும் விஷயங்களைக் கேட்கிறார். அப்போது விதுரன்,” நான் ஒரு அடிமையின் வயிற்றில் பிறந்தவன் – சுதன் – தெரிந்திருந்தாலும், தத்வ உபதேசம் செய்யும் தகுதி எனக்குக் கிடையாது” என்கிறார். ஞானியாக இருப்பவரும் சாஸ்திர நெறிமுறைகளைக் காப்பாற்ற வேண்டியது அவசியமாகின்றது என்பதை உணர்த்தும் விதமாக விதுரன் நடந்துகொள்கிறான். பிரம்மாவின் புதல்வர் ஸனத்ஸுஜாதர் என்கிற ரிஷி மூலம், திருதராஷ்டிரனின் சந்தேகங்களைத் தீர்த்து வைக்கிறார். ‘விதுர நீதி’யும், ‘ஸநத்ஸுஜாதீயம்’ ம் எல்லோராலும் ஆழ்ந்து கற்கப் பட வேண்டியவை!
தருமர் அரியணை ஏறியதும், விதுரர் சில காலம் சென்று, திருதராஷ்டிரன், காந்தாரி ஏனையோருடன் வனவாசம் சென்று விடுகிறார். தலையில் ஜடாமுடியுடன், திகம்பரராக ஆகிவிடுகிறார். யுதிஷ்டிரர் வனத்திற்கு வந்து, அவருக்குப் பூஜைகள் செய்து, தன்னுடன் வரும்படி கேட்டுக்கொள்கிறார். ஆனால் விதுரர் ஒரு சித்தராய், சித்தி அடையும் நிலையில் இருந்தார். தன் யோக பலத்தால், யுதிஷ்டிரரின் பிராணனுடன் ஐக்கியமாகி, அவரது உடலில் பிரவேசித்து விடுகிறார். கானகத்தில், உயிர்ற்ற மரத்தைப் போல விதுரரின் சரீரம் நின்றுவிடுகிறது!
தர்மராஜாவின் மற்றொரு பாதியில், இணைந்து விடுகிறார் தர்மாத்மா விதுரர்!
தர்மம், நீதி, நியாயம், புறக்கணிக்கப் பட்டாலும் சகோதரர்களிடம் பாசம், நடுவு நிலைமை, ஆபத்தில் சமயோசிதமான உதவி, உலக வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய தர்மங்கள் பற்றிய தெளிவு என ஒரு முழுமையான பாத்திரப் படைப்பு விதுரர்!
(வாசிக்க வேண்டிய புத்தகங்கள் : மஹாபாரதத்தில் முக்கிய பாத்திரங்கள் – கீதா ப்ரெஸ், கோரக்பூர், The serpent’s Revenge by Sudha Murthy – Puffin Books, மகாபாரதம் -பிரபஞ்சன், நற்றிணை பதிப்பகம், தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம் – இந்திரா சவுந்தர்ராஜன், தாமரை ப்ரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடட்)
ஜெ.பாஸ்கரன்.
Very nice
LikeLike