நந்திவர்மன்-2
அந்நாள் தென்னிந்தியாவின் அரசியல் ‘பரமபதம்’ போன்றது.
எப்பொழுது ஏணி வரும் எப்போது பாம்பு வரும் என்பது யாருக்கும் தெரியாது.
பல மன்னர்கள் – அவர்களில் யார் யாருக்கு நண்பன் – யார் யாருக்கு எதிரி – என்பது நாளுக்கு நாள் மாறி வரும்.
கொள்கையற்ற கூட்டணிகள்..
கண்ணி வெடி நிறைந்த கானகம் போல மக்கள் வாழ்வு.
நந்திவர்மன் பாண்டிய வெற்றிக்குப் பிறகு.. அரசாட்சியை வலுச் செய்தான்.
அடுத்து என்ன செய்யலாம்?
வேறு என்ன?
‘யுத்தம் செய்’!
இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்க்கன் – நந்திவர்மன் இருவரும் சேர்ந்து சாளுக்கியரை அழித்ததைப் பார்த்தோம். தந்திதுர்க்கன் – வைரமேகன் என்னும் மறுபெயர் உடையவன். அவன் காஞ்சியை வென்றதாகக் கல்வெட்டுக் கூறுகிறது. அந்த வைரமேகனையும் பல்லவ மல்லனையும் காஞ்சியில் கண்டதாகத் திருமங்கை ஆழ்வார் பாடியுள்ளார். எனவே, இருவரும் சமாதான நிலையில் காஞ்சியில் இருந்தனர் என்றே கொள்ளவேண்டும்.
காட்சி ஒன்று விரிகிறது.
காதல் அதில் மலர்கிறது.:
இடம் காஞ்சி:
தந்திதுர்க்கனின் மகள் இளவரசி ரேவா!
நமது கற்பனையில் இளவரசிகள் என்றாலே ‘பேரழகி’ என்று எண்ணம்.
(நமது என்று சொல்லும் போது உங்களையும் சேர்த்துச் சொன்னதுக்குப் போய் இப்படி கோபித்துக் கொள்ளலாமா?
சரி.. என் கற்பனையில்.. திருப்தி தானே?)
ஆனால் இவள் உண்மையிலேயே பேரழகி.
தந்திதுர்க்கன் – காஞ்சி செல்வதாகச் சொன்ன உடனே..
ரேவா : ‘அப்பா நானும் வருகிறேன். காஞ்சியைக் காண எனக்கும் ஆசை”
காஞ்சியைக் காண யாருக்குத்தான் ஆசை இருக்காது?
காஞ்சி – ஓரு கனவு நகரம்.
இரண்டாம் புலிகேசி – காஞ்சி மீது படையெடுத்ததற்குக் காரணம்:
‘காஞ்சியின் மீது அவன் வைத்த காதல்’- என்று கல்கி சொல்கிறார்.
தந்திதுர்க்கன் ரேவாவையும் காஞ்சிக்கு அழைத்துச் செல்கிறான்.
பல்லவ மல்லன் நந்திவர்மன் மாளிகை.
அங்கு ரேவா பல்லவனைக் கண்டாள்.
பல்லவன் பல்லவி பாடாத குறைதான்.
அவனும் நோக்கினான். அவளும் நோக்கினாள்.
இளவரசி – காஞ்சியின் கோலம் காண விழைகிறாள்.
பல்லவனின் ரதத்தில் – ஒரு நகர் வலம்!
நந்திவர்மன் தானே ரதத்தின் சாரதியாக வந்து நகரத்தின் எழிலை இளவரசி ரேவாவுக்கு சுற்றிக் காட்டினான்.
நந்திவர்மன் 27 வயது நிரம்பிய வாலிபன்.
பல்லவ மக்கள் அவனை விரும்பியதின் ஒரு காரணம் – அவனது வசீகரமான வடிவம்.
அழகும் அழகும் சந்தித்தால்?
மன்மதன் அன்று அவ்விடம் ரொம்ப பிஸி.
ஒரு பாடுபட்டு ஹீரோவையும் – ஹீரோயினியையும் சந்திக்க வைத்து விட்டேன்.
இனி அவர்களது காதல் எப்படி வளர்ந்தது என்பதை கூறவேண்டாமா?
அதை வாசகர்களான உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.
சிவாஜி ரசிகர்கள் – ‘ஒரு ராஜா ராணியிடம் வெகு நாளாக’ என்று பாடிக்கொண்டே கற்பனை செய்யுங்கள்.
எம் ஜி ஆர் ரசிகர்கள் – ‘ராஜாவின் பார்வை ராணியின் பக்கம்.” -என்று பாடிக்கொள்ளுங்கள்.
காதல் கடிமணமாயிற்று.
அவளுக்குப் பிறந்த மகனுக்குத் ‘தந்திவர்மன்’ என்னும் பாட்டன் பெயரை இட்டனர்.
பொதுவாக..மற்ற நாட்டு இளவரசியைத் திருமணம் செய்தால் இரண்டு அரசுகளின் உறவு மேலோங்கும்.
ஆனால்-சில நேரங்களில் உறவு பகையை மூட்டும்.
இராஷ்டிரகூட-பல்லவ உறவுகள் முதலில் சுமுகமாகவே இருந்தது.
இராஷ்டிரகூட மன்னன் தந்திதுர்க்கன் கி.பி. 725 முதல் 758 வரை ஆண்டு காலமானான்.
அடுத்து வருவதை நமது வாசகர்கள் நன்கு அறிவர்.
வேறென்ன.. வாரிசுரிமைப் போர் தான்.
முதலாம் கிருஷ்ணன் – இவன் தந்திதுர்க்கனின் சிற்றப்பன்.
தந்திதுர்க்கனுக்கு ஆண் பிள்ளை இல்லாததால், முதலாம் கிருஷ்ணன் தனது முதுமைப் பருவத்தில் அரசனாக ( கி.பி. 758 முதல் 772) இருந்தான்.
கிருஷ்ணனுக்கு இரண்டாம் கோவிந்தன், துருவன் என இரு மகன்கள் இருந்தனர்.
மூத்தவனான இரண்டாம் கோவிந்தன் கி.பி. 772இல் அரசு கட்டில் ஏறினான்.
இவன் தம்பியிடம் அரசை ஒப்புவித்து உலக இன்பங்களில் கருத்தைச் செலுத்தியிருந்தான்.
பிறகு துருவன் தான் அரசனாகச் செய்த சூழ்ச்சியைக் கோவிந்தன் அறிந்து, அவனை நீக்கிப் புதியவன் ஒருவனை அரசியலைக் கவனிக்கப் பணித்தான்.
இந்த ஒழுங்கற்ற முறைகளால் உள்நாட்டில் சிற்றரசர் குழப்பங்களை உண்டாக்கினர்.
துருவன் சிறந்த அரசியல் நிபுணன்.
அவன் தன் முன்னோர் தேடிய அரசு நிலைகுலையும் என்பதை உணர்ந்தான்.
உடனே பட்டந்துறக்கும்படி கோவிந்தனை வற்புறுத்தினான்.
ஆனால், அவ்வற்புறுத்தல் பயன்பெறவில்லை.
துருவன் தனக்கு இசைந்த சிற்றரசரைச் சேர்த்துக்கொண்டு அண்ணனை வெல்ல முற்பட்டான்.
கோவிந்தனும் கங்கபாடி, வேங்கி அரசரைத் தனக்கு துணையாகக்கொண்டான்.
நம் பல்லவ அரசனான நந்திவர்மனும் கோவிந்தன் பக்கம் சேர்ந்து கொண்டான்.
போர் கடுமையாக நடந்தது.
துருவனே வெற்றி பெற்றான்.
துருவன் கி.பி.780இல் இராட்டிரகூடப் பேரரசன் ஆனான். அவன் 794 வரை அரசாண்டான்.
இப்பொழுது புரிந்ததா- நந்திவர்மனுக்கும் – இராஷ்டிரகூடத்திற்கும் பகை வளரக் காரணம் என்னவென்று?
துருவன் விட்டானில்லை.
அரசனாகி மூன்று வருடங்கள் கழிந்தது.
கி பி 783: துருவன் போர்க்கூட்டணியில் தன்னை எதிர்த்த அனைவரையும் பழி வாங்க நினைத்தான்.
முதலில் கங்க நாட்டின் மீது படையெடுத்து அதை வென்றான்.
கங்க நாட்டு யுவராஜன் சிவமாரனைச் சிறைப்பிடித்து, தன் மகன் ஸ்தம்பாவை அங்கு ஆளுனராக்கினான்.
பின் தன் பார்வையை காஞ்சிக்கு திருப்பினான்.
நந்திவர்மன் இந்தத் தாக்குதலை முறியடிக்க செய்த முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தது.
சமாதானம் கோரினான்.
அதற்குப் பெருவிலை கொடுக்கப்பட்டது.
பல போர் யானைகளைக் கொடுத்து சமாதானம் வாங்கினான்.
நந்திவர்மன் தோல்விகளைக் கண்டு துவள்பவனல்ல.
கங்கநாட்டில் ஸ்தம்பா ஆளுநராக இருந்தாலும் பழைய கங்க மன்னன் ஸ்ரீபுருஷன் அவனுக்கு கீழ் அரசனாக இருந்ததான்.
இராஷ்டிரகூட துருவன் தென்னகத்தை வென்ற பிறகு- வட இந்தியாவில் படையெடுத்துச் சென்றான்.
இதுதான் சரியான நேரம் என்று, நந்திவர்மன் கங்க நாட்டின் மீது படையெடுத்தான்.
ஒரு பழைய கடன் பாக்கி காத்திருந்தது.
முன்னாளில் – கங்க நாட்டு யுத்ததில் பரமேஸ்வர பல்லவன் தனது ‘உக்ரோத்யம் என்னும் வைரம் பதித்த கழுத்தணியை பறி கொடுத்திருந்தான்.
முன்பு பரமேஸ்வர பல்லவன் கதை சொல்லும் போது இதைப்பற்றிக் குறிப்பிட்டிருந்தோம்.
அந்த நகையின் கதை பின்னாள் தொடரும் என்று சொல்லியிருந்தோம். வாசகர்கள் அதை மறக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது).
நந்திவர்மன் கங்க அரசனிடமிருந்து அதைக் கைப்பற்றினான்
நந்திவர்மன் போரில் வெற்றிகள் கண்டாலும் தோல்விகளும் பல கண்டவன்.
உதயசந்திரன்- பல்லவனுக்கு வெற்றிகள் தேடிக்கொடுத்த தளபதி.
ஒரு சிறுகதை சொல்வோம்:
ஒரு நாள் உதயசந்திரன் நந்திவர்மனை அரண்மனையில் சந்தித்தான்:
உப்பரிகையில் இருவரும் அமர்ந்திருந்தனர்.
மாலை வெயில் காஞ்சி நகரின் அழகை மஞ்சளால் அபிஷேகம் செய்திருந்தது.
மன்னனின் நினைவுகள் கனவுலகில் சஞ்சாரமித்தது.
“உதயா! நான் சிறுவனாக இருந்த போது..
கம்புஜதேசத்தில் (இன்றைய கம்பூசியா) இருந்த சம்பா தீவில் (இன்றைய வியட்நாம்) இருந்தேன்.
எனது தந்தை விக்ராந்தவர்மர் பல்லவ அரசின் வழி வழியாக வந்தவர்.
காஞ்சியின் அழகைப் பற்றியும் – நரசிம்ம பல்லவரின் பாராக்கிரமங்களைப் பற்றியும் , பல்லவ திருக்கோவில்களைப் பற்றியும் மிகவும் சிலாகித்துச் சொல்வார்.
அதைக் கேட்டு நானும் காஞ்சியின் காதலனானேன்.
‘மன்னர் வாரிசு’ நிலையில் பல்லவ நாடு எதிரிகளின் கைகளின் சிக்காமல் இருக்க தண்டநாயகர்களும், அறிஞர்களும் கம்புஜதேசம் வந்தனர்.
காஞ்சிக்கு மன்னன் இல்லாததைக் கூறி.. என் தந்தையை பல்லவ நாட்டு மன்னனாக வரச்சொன்னார்கள்.
அவர் மறுக்க – என அண்ணன்மார்கள் அனைவரும் மறுக்க – எனக்கு காஞ்சி மேலிருந்த காதலால்..
நான் ஒப்புக் கொண்டு கப்பல் ஏறி..ஸ்ரீவிஜயம்.. கடாரம் வழியாக மாமல்லபுரம் வந்து காஞ்சியை அடைந்தேன்.
அந்நாளிலிருந்து இந்நாள் வரை காஞ்சியைக் காக்க பாடுபட்டிருக்கிறேன்.
உன்னால் பல வெற்றிகள் கிடைத்தது..” – என்று நிறுத்தினான்.
உதயசந்திரன்: ‘அரசே! தாங்கள் பரிவேள்வி செய்ய வேண்டும்’ -என்றான்.
நந்திவர்மன் சோகமாகப் புன்முறுவல் செய்தான்.
“பரிகாசமா?” – என்றான் மன்னவன் – முறுவலைக் குறைக்காமல்.
“அரசே! என்ன கேள்வி இது?” – உதயசந்திரன்.
“பரிவேள்வி என்றால் என்ன தெரியுமா?” – மன்னன்.
“அஸ்வமேத யாகம்” -தளபதி.
“அது தெரியாதா? நான் சந்தித்த வெற்றிகளை விட தோல்விகளே அதிகம்.
கதை இப்படியிருக்கும் போது.. பரிவேள்வி செய்தால் உலகமே என்னை பரிகசித்து எள்ளி நகையாடாதா?” -என்றான் மன்னன்.
‘அரசே இனி நமக்குத் தோல்வி என்பதே கிடையாது. இந்த யாகத்தின் வாயிலாக இந்த உலகுக்கு பறைசாற்ற வேண்டும்” -என்று அடித்துக் கூறினான்.
ஒப்புக்கொண்டான் மன்னன்.
குதிரையை வடக்கே அனுப்பினான்.
அதுவேங்கி நாடு சென்றது.
அதனை ஆண்ட விஷ்ணுராசன் என்னும் கீழைச் சாளுக்கியன் பல்லவன் பெருமையை ஒப்புக் கொண்டான்.
ஆனால் அவனுக்குக் கீழ்ப்பட்ட பிருதிவி-வியாக்கிரன் என்பவன் அக் குதிரையைக் கட்டிவிட்டான்.
உடனே உதயசந்திரன் அங்கு சென்று, அச் சிற்றரசனைப் போரில் முறியடித்து நாட்டைவிட்டுத் துரத்தி மீண்டான்.
தோற்றவனுடைய விலை உயர்ந்த அணிகலன்களைப் பல்லவனுக்குப் பரிசளித்தான்.
அறுபத்தைந்து வருடம் ஆண்ட நந்திவர்மன்- தோல்வி-வெற்றி பல கண்டாலும்..
திருக்கோவில் பணி செய்து – திருமங்கையாழ்வாருடன் நட்பு பூண்டு – இயன்ற அளவு அமைதியை பல்லவ மக்களுக்கு அளித்து -பல்லவ வம்சம் அழியாது காத்தான்.
பொதுவாக எந்த அரசரைப்பற்றியும் கல்வெட்டு- பட்டயங்களில்..
‘அவன் இந்திரன்-சந்திரன்’ என்று புகழ் பாடுவது வழக்கம்.
சிலநேரங்களில் அது நகைப்புக்கும் இடமாகும்.
நந்திவர்மனைப்பற்றி பட்டயங்கள் கூறுவது:
பல்லவ மல்லன்
சிறந்த கல்விமான்
புலவன்:
இசை விருப்பன்
கவி புனைவதில் வால்மீகி போன்றவன்
வில்வித்தையில் இராமன்
அரசியலில் பிரகஸ்பதி
இது எப்படி இருக்கு?
சரித்திரம் தொடர்கிறது…