அதே வாடையோடு கயிற்றுக் கட்டிலில் கவிழ்ந்திருந்தார் அவர். வாரத்தின் கடைசி நாளில் பத்து ரூபாய்கூட தரத் துப்பில்லாத ஜென்மத்தை ‘அவர்’ என்றால் என்ன, ‘அவன்’ என்றால் என்ன? கட்டிடங்களுக்கு பிளம்பிங் செய்வது அவரின் தொழில். ஆயினும் ஒரு பைசா வீடு வந்து சேர்வதில்லை. ஓரத்தில் சின்னமலைக் கரட்டில் இருந்து சூரியன் மெதுவாக உயர்ந்து கொண்டிருந்தது. கொஞ்சம் கீழே நடந்தால் பத்து நிமிட நடையில் டாஸ்மாக் கடை ஒன்று இருக்கிறது. இரவெல்லாம் கும்மாளமிட்டுப் போயிருந்த பெருங்குடி மக்களின் மிச்சங்களின் வாடை காற்றெங்கும் பரவியிருந்தது.
“பாலத்துக்கு அந்தாண்ட பெரிய பிள்ளைங்க படிக்கற ஸ்கூல்ல வேல இருக்குன்னு நேத்தே சார் சொல்லிட்டுப் போனாரு… தொர… போன் பண்ணா எடுக்க மாட்டேங்குறீங்களாமே…”
“இல்ல ஆத்தா… போனுக்கு காசு போடல… அப்பறம் எப்படி பேசறது…” அதிகாரம் இறங்கிப்போய் கெஞ்சிற்று அவர் குரல். ஆத்தா என்று அழைக்கும் போது மனதுக்கு இளக்கமாகத்தான் இருக்கிறது. என்னவோ குறுகுறுவென்று ஓடுகிறது. ஆனால் குடித்துவிட்டு வந்து குடலை வெளித்தள்ளும் நாற்றத்தோடு உறுமும் போது செவிட்டில் அறையலாம் போல வெறி கிளம்புகிறது.
“காசெல்லாம் தர மாட்டேன்… தந்தா நீங்க என்ன செய்வீங்கன்னு எனக்குத் தெரியும்… ரோட்டு கடைக்கார அண்ணன்… கிட்ட போனுக்கு காசு போட்டுக்கங்க…”
அந்தக் கடையையொட்டி கீற்றுப் பந்தலில் சின்னதாய் காய்கறிக் கடை வருமானத்தில் வாழ்க்கை ஓடுகிறது.
“ஸ்கூல் வேலக்கி போனா… வேலய முடிச்சுகிட்டு காசு வாங்கிட்டு வாங்க… அரை நேரம் செஞ்சிட்டு அங்க நோவுது, இங்க நோவுது..ன்னு அட்வான்ஸ் பணத்தை வாங்கிட்டு வந்து… அந்தக் கருமத்த குடிச்சுட்டுக் கெடந்தீங்கன்னா… அவ்ளோதான்…”
மணி ஐந்தரை இருக்கும். ஆறு மணியில் இருந்து எட்டு மணி வரை தான் ஏதோ கொஞ்சம் காய்கறி விற்கும். அதற்குமேல் ஒன்றும் இருக்காது.
வந்து இந்த ஆட்டுக்குட்டிகளை ஓட்டிப் போனால் ரோட்டைத் தாண்டி கொஞ்சம் மேய்ச்சல் நிலம் இருக்கிறது. குட்டிகள் மேய்ந்துவிட்டு வரும் வரை கொஞ்சம் ஓய்வுதான். மறுபடியும் நான்கு மணிக்கு மேல் கொஞ்சம் காய்கறி விற்கும். அதற்குள் குட்டிகளை வீட்டுக்குள் அடைக்க வேண்டும். குட்டிகள் என்றால் நிறைய இல்லை. கருப்பில் மூன்றும் வெள்ளையில் இரண்டுமாய் மொத்தம் ஐந்து.
** ** **
“செலுவி… போலாமா…”
பக்கத்தில் கிழங்கு விற்கும் பாட்டியின் குரல் அழைத்தது. செல்வி என்ற என் பெயரை செலுவி என்று கசக்கிப்பிழியாமல் இருக்க பாட்டியால் முடியவே முடியாது.
“ஏங்க… எட்டு மணிக்கு வந்துர்றேன்… எங்கயும் போயிறாதீங்க…”
“ம்…மே..” என்ற குரலில் தான் விழித்துக் கொண்டதை சொல்லிற்று ஐந்தில் ஒன்று. கொஞ்சம் சுட்டியாய் இருக்கிறது. அடக்க முடிவதில்லை. பிறக்கும் போதே ஒரு பக்கம் காது மழுங்கிப் போய்… ஒரு காது மட்டும் நீண்டு… நுனி மடங்கி… சற்றே நீண்ட அதன் காதை செல்லமாய் மெல்லத் திருகினேன். என்னையும் அவரையும் தவிர யாருமில்லா இந்த வீட்டில், இந்தக் குட்டிகள்தான் எனக்குப் பேச்சுத் துணை.
ஓடு வேய்ந்த வீட்டின் முன்னிருக்கும் கொஞ்ச இடம் இந்தக் குட்டிகளுக்குதான். எனக்கும் அவருக்கும் எல்லாம் சரியாய் நடந்தாலும் மாதா மாதம் எது நடக்கும் என்று எதிர்பார்க்கிறேனோ அது நடப்பதில்லை. நடக்க வேண்டாம் என்று நினைப்பது மட்டும் சரியாய் நடந்துவிடுகிறது. அடிவயிறு முட்டித்தள்ள கழிவறைக்குள் ரத்தம் சிதறுகையில் பொங்கி வரும் அழுகைக்கு…
என்றைக்காவது விடிவு வரும்.
மற்ற நான்கு குட்டிகளும் விழித்துக் கொண்டன. எழுந்ததும் குட்டிகளுக்கு சாப்பிட ஏதாவது வேண்டும். சொருகி வைத்திருந்த தழையை எடுத்து கொஞ்சம் உதறினேன்.
நன்கு வளர்ந்து விட்டாலோ அல்லது பணமுடை ஏதாவது வந்துவிட்டாலோ விற்றே தீர வேண்டிய நாள் வரும். டவுனில் இருந்து அறுப்புக் கடை ஆள் வந்து வாங்கிப் போகையில்
“அண்ணே… வலிக்காம அறுத்து வுடு…” என்றபடி அனுப்பிவைக்கையில் கண்களில் நீர் துளிர்க்கும். போகமறுத்து கால்களைத் தரையில் ஊன்றியபடி நிற்கும் குட்டியை ‘தரதர’ வென்று இழுத்துப் போகையில், திரும்பி நிற்க, குட்டிகளின் கதறல் காதுகளில் நிறையும்.
“ம்…மே…” ஐந்தும் ஒரே சமயத்தில் கத்திற்று. கூடவே…
“செலுவி…” என்று பாட்டியும்.
“நா… எட்டு மணிக்கு வந்துர்றேன்…” என்று மறுபடியும் அவரிடம் சொல்லிவிட்டு, தெருவில் இறங்கி நடக்கையில் அடிவயிறு ‘சுள்’ ளென்று வலித்தது. மாதத்தின் வரக்கூடாத நாள் வரப்போவதற்கான அறிகுறியில் மனமும் வலித்தது.
** ** **
தட்டி வைத்துக் கட்டியிருந்த குளிக்கும் இடத்திலிருந்து சோப்பின் வாசனை.. அவரின் குரல்…ட்டு மணிக்கு வந்தபோது குட்டிகள் “ம்…மே…” என்று முட்டின. மிச்சம் இருந்த தழைகளை உருவிப் போட்டேன்.
“துண்டு வுட்டுட்டு வந்துட்டேன்… எடுத்துட்டு வா…” என்றழைத்தது. அதிகாரமற்ற குழைவும் இழைவுமான குரல். எதற்கென்று எனக்குத் தெரியாதா?
என் முகம் அவருக்கு எல்லாவற்றையும் உணர்த்தியிருக்க வேண்டும். ரோட்டுக் கடையில் இட்டிலிகளை வாங்கி வந்து.. தின்றுவிட்டு வெளியே புறப்பட்டார். நல்ல… இதமான மனிதர்தான்… அந்தக் கருமம் உள்ளே இறங்காத வரை…
ரோட்டுக்கு அந்தப் பக்கம் மேய்ச்சல் நிலமிருக்கிறது. குட்டிகளை இழுத்துப் போய்வர உடலில் இப்போதைக்குத் தெம்பில்லை கண்கள் என்னையுமறியாது சொருகிற்று.
** ** **
எவ்வளவு நேரம் தூங்கினேன் என்று தெரியவில்லை.
“செலுவி…” என்ற பாட்டியின் கலவரமான குரல் என்னை எழுப்பிற்று. முன்பக்கம் இருந்த காலி இடத்துக்கு வைத்துக் கட்டியிருந்த தட்டிக்கதவு ஒருக்களித்துத் திறந்திருந்தது. குட்டிகளைக் காணவில்லை.
வேகமாய் ஓடித் திறக்க, சற்றே பெரிய காது ரத்தத்தில் மூழ்கியபடி, குட்டி நெஞ்சு உடைந்து போய் சாலையில் துடித்துக் கொண்டிருந்தது. பக்கத்தில் ஒரு மோட்டார் சைக்கிளும் அதில் வந்த மூன்று பேரும்… ‘திருதிரு’ வென்று விழித்துக் கொண்டிருக்க… “அய்யோ…” என்று நெஞ்சைப் பிடித்தபடி கத்தினேன்.
“என்னத்துக்கு இவ்ளோ வெசையா போவீங்க….”
“ஆட்டுக்குட்டின்னாலும் புள்ளக்குட்டின்னாலும். ஏத்திட்டுப் போயிடுவானுங்க…”
நான் தூங்கும் முன் என் காலில் முட்டிய குட்டி என் கண்முன்னால் கண் பிதுங்கி செத்திருந்தது. எனக்குப் பிடிக்காத ரத்தம் அதன் தலைக்குக்கீழ் சாலையில் உறைந்திருந்தது.
தொகையியொன்றைக் கொடுத்து விட்டு, மோட்டார் சைக்கிள் குட்டியைத் தூக்கிக் கொண்டு போய்விட எனக்கு அழுகை பொங்கிற்று.
** ** **
காலையில் அத்தனை சொல்லியும் முழுதாய் வேலையை முடிக்காது காசு வாங்கி அந்தக் கருமத்தை நிரப்பிக் கொண்டு வரும் அவரைப் பார்க்கப் பார்க்க பற்றிக் கொண்டு வந்தது எனக்கு. மணி மூன்றுக்கு மேல் இருக்கும். சுவரில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டிருக்கையில் தட்டிக் கதவைத் திறந்து கொண்டு அவர் வருவது தெரிந்தது.
“அரை நேரத்துக்கு… மேல… வேல… தோது வர்ல… டவுனுக்கு சாமான் வங்கப் போனேன்… அப்படியே இதயும் வாங்கிட்டு வந்தேன்… சகாயமா கெடச்சுது… கொழம்பு வச்சிரு…”
தடுமாறியபடி வந்த குரலில்… கையில் இருந்த பிளாஸ்டிக் பையில் இருந்து…
“தீச்சுப்புட்டான்… ஆனா வெட்டல… நாம வெட்டிக்கலாம்…”
என்றபடி சற்றே பெரிய காதுடன் இருந்த குட்டியின் தலையை எடுத்து அவர் வெளியே வைக்க…
“அய்யோ…” என்றபடி அலறிச் சரிந்தேன்
Sir, very nice story and reality too.
LikeLike