மொழி பெயர்ப்பு சிறுகதை : மலையாளம்
மூலம் : தகழி சிவசங்கரம் பிள்ளை
ஆங்கிலம் :சாமுவேல் மத்தாய்
தமிழில் : தி.இரா.மீனா
வெள்ளம்
கிராமத்தின் அந்த மேட்டுப்பகுதி கோயிலால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக் கோயில் தெய்வம் கூட இப்போது கழுத்தளவு வரையான தண்ணீரில் நின்று கொண்டிருந்தது.தண்ணீர் எங்கும் தண்ணீர். அந்தகிராமத்தின் மக்களனைவரும் வறண்ட பகுதிகளைத் தேடிப் போய்விட்டனர். ஒரு வீட்டிற்கு ஒரு படகு சொந்தமாக இருந்தால்,அந்த வீட்டின் உடைமை களைப் பாதுகாக்க யாராவது ஒருவர் அங்கேயே தங்கியிருக்க வேண்டும்.
மூன்று அறைகளைக் கொண்ட அந்த கோயிலின் மாடிப் பகுதியில் அறுபத்தியேழு குழந்தைகள், முன்னூற்றி ஐம்பத்தியாறு முதியவர்கள், நாய்கள்,பூனைகள், ஆடுகள், காட்டுக் கோழிகள் என்று எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து அங்கிருந்தனர்.
சென்ன பறையா அந்தத் தண்ணீரில் ஒருநாள் முழுவதும் இரவு,பகலாக நின்றிருந்தான்.அவனுக்கு என்று படகு இல்லை.அவனுடைய முதலாளிமூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அங்கிருந்து ஓடிவிட்டார். அவனுடைய வீட்டிற்குள் தண்ணீர் புகுவதற்கு முன்பேயே அவன் குச்சிகளையும் தென்னை ஓலைகளையும் சேர்த்து வைத்து ஒரு பரணைக் கட்டிவிட்டான்.வெள்ளம் வேகமாக வடிந்துவிடும் என்ற நம்பிக்கையில் அதைக் கட்ட இரண்டு நாட்கள் எடுத்துக் கொண்டான். அவன் தன் வீட்டை விட்டுப் போய் விட்டால் நான்கைந்து வாழை மரங்கள் ஒரு வைக்கோற்போர் ஆகியவற்றை யாராவது கை தேர்ந்த சாமர்த்தியசாலி கவர்ந்து கொண்டு போய் விடுவான் என்பதாலும் அவன் அங்கேயே தங்கி விட்டான்.முழங்கால் மூழ்கும் அளவிற்கு தரையில் தண்ணீர் நிரம்பியிருந்தது. ஏற்கெனவே கூரை மேலிருந்த இரண்டு வரிசை தென்னையோலைகள் தண்ணீரில் மூழ்கியிருந்தன. உள்ளேயிருந்து சென்னன் கூப்பிட்டுக் கொண்டிருந்தான் ஆனால் அவன் குரலைக் கேட்பதற்கு யார் இருக்கிறார்கள்? கர்ப்பிணியான ஒரு பறைய பெண், நான்கு சிறுகுழந்தைகள், ஒரு நாய், ஒரு பூனை —இவர்களனைவரும் அவனை நம்பியிருப்பவர்கள்.அடுத்த பன்னிரண்டு மணி நேரத்திற்குள் தண்ணீர் கூரையின் மேல் பாய்ந்து விடும் என்பதும் அதுதான் அவர்கள் எல்லோருக்கும் முடிவு என்பதும் அவனுக்கு உறுதியாகத் தெரியும். இந்த மூன்று நாட்களில் மழை சிறிது கூடக் குறையவில்லை. வேயப்பட்டிருந்த கூரையின் ஒரு வரிசையைப் பிரித்து எல்லாத் திசைகளிலும் பார்த் தான்.வடக்கிலிருந்து ஒரு பெரிய படகு மிதந்து வந்து கொண்டிருந்தது. படகோட்டிக்கு கேட்டு விடவேண்டும் என்ற வேகத்தில் மிகப் பெரிதாக கத்தினான்.அதிர்ஷ்டவசமாக நிலைமையைப் புரிந்து கொண்டு அவர்கள் குடிசையை நோக்கிப் படகைத் திருப்பினர். ஒரு சிறிய திறப்பு வழியாகத் தன் மனைவி, குழந்தைகள், பூனை, நாய் அனைத்தையும் ஒவ்வொருவராக வெளியே இழுத்துக் கொண்டு வந்தான்.அதற்குள் படகு அருகில் வந்து விட்டது. குழந்தைகள் அதற்குள் ஏறியபோது “ஹே சென்னச்சா…” என்று மேற்கிலிருந்து யாரோ கூப்பிட சென்னன் குரல் வந்த பக்கம் திரும்பினான்.
அது, தன் வீட்டின் உச்சியில் நின்று கொண்டு கூப்பாடு போட்ட மடையத்தரா குஞ்சப்பன்.சென்னன் தன் மனைவியைப் படகினுள்ளே தள்ளினான். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பூனை புகுந்து கொண்டது. நாயின் நினைவு யாருக்குமேயில்லை.அந்தக் கணத்தில் நாய் வீட்டின் மேற்குப் பகுதிக்குப் போய் அங்குள்ள பொருட்களைத் தானாகவே மோப்பம் பிடித்துக் கொண்டிருந்தது.படகு முன்னே நகர்ந்து போக குடிசையின் தொலைவு விரிந்தது.
குடும்பத்தினர் எப்போதும் சாதாரணமாக எங்கிருப்பார்களோ அந்த இடத்திற்கு வந்த நாய், ஏற்கெனவே போய்விட்ட படகைப் பார்த்தது.அது பறந்து போய் விட்டது போலிருந்தது.எச்சரிக்கை உணர்வில் ஊளையிட்டது. வெறுப்பிலிருக்கிற கையாலாகாத மனிதன் போல அது பலவிதமான ஒலிகளை எழுப்பியது. ஆனால்அதைக் கேட்க யாரிருக்கிறார்கள்?கூரையின் நான்கு பகுதிகளிலும் ஓடி மோப்பம் பிடித்து ஊளையிட்டது. குடிசையில் ஒண்டியிருந்த ஒரு தவளை பயந்து தண்ணீரில் குதித்தது.தவளையின் குதியலால் தண்ணீர் கொப்பளிக்க, நாய் பயந்துபோய் அந்த இடத்தையே பார்த்தது.
உணவைத் தேடி குடிசை முழுவதும் சுற்றிவந்தது.ஒரு தவளை நாயின் நாசிக்குள் தன் சிறுநீரைத் தெறிக்க விட்டு தண்ணீருக்குள் குதித்து விட்டது. நாய் தும்மி, இருமியது.தன் ஒரு உள்ளங்கையால் முகத்தைச் சுத்தம் செய்து கொண்டது.மீண்டும் மழை கொட்ட நாய் பதுங்கிக் கொண்டது. இதற்கிடையே அதன் முதலாளி பத்திரமாக அம்பாழப்புழா போய் விட்டார்.அது இரவு நேரம்.மெதுவாக மிதந்து வந்த ஒரு பெரிய முதலை குடிசையை உரசிக் கொண்டு நகர்ந்தது. நாய் பயத்தில் ஊளையிட்டது. ஆனால் முதலையோ அதைப் பார்க்காமலேயே அந்த இடத்தைக் கடந்து விட்டது.அந்தப் பரிதாபமான விலங்கு குடிசையின் உச்சியில் உட்கார்ந்து கொண்டு கருமையான வானத்தைப் பார்த்து ஊளையிட்டது. அதன் சோக மான அழுகை மிகத் தொலைவிலும் கேட்டிருக்க வேண்டும்.
ஒலியின் கடவுளான வாயு தன் கருணையால்,அந்த அழுகையை எங்கும் எதிரொலிக்கச் செய்தார்.சிலர் அதைக் கேட்டு “ஐயோ, ஒரு நாயை யாரோ வீட்டில் பரிதவிக்க விட்டுவிட்டுப் போய் விட்டார்கள் –வெட்கக் கேடு “ என்று தமக்குள் முனகிக் கொண்டனர். அதன் முதலாளி கரைக்குச்
சாப்பிடப் போயிருக்கலாம். தன் உணவுக்குப் பிறகு அந்த நாய்க்குச் சாப்பாடு எடுத்து வருவது அவர் வழக்கமாக இருக்கலாம். இப்போது, தான்
சாப்பிடும் போது அவருக்கு நாயின் நினைவு வந்திருக்கும். இதுவரை பெரிதாக, நீண்டதாக இருந்த நாயின் ஊளை பலவீனமாகத் தொடங்கியது.
இராமாயணச் சுலோகங்கள் சொல்லும் ஒரு குரல் நாய்க்கு கேட்க அது தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கொஞ்ச நேரம் அமைதியாக
இருந்தது.பிறகு, தன் நெஞ்சம் உடைந்தது போல மீண்டும் ஊளையிடத்தொடங்கியது.
மிக அமைதியாக இருந்த அந்த நள்ளிரவில் இராமாயணச் சுலோகங்கள் ஒலி காற்றில் பரவியது.நாய் மீண்டும் தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு கவனமாக அசைவின்றி நின்று அதைக் கேட்டது. அந்த இனிமை யான ஒலி குளிர்ந்த காற்றில் கலந்தது. அந்தச் சப்தம் தவிர கேட்ட மற்றுமொரு ஒலி என்பது காற்றுதான்.தன் மென்மையான மூக்கு சிவந்தும் வீங்கியும் போனதை நாயால் உணரமுடிந்தது.
மதிய நேரத்தில் இரண்டு மனிதர்கள் சிறிய படகில் அந்த இடத்தைக் கடந்தனர்.நம்பிக்கையோடு அந்த நாய் வாலையாட்டி அவர்களைப் பார்த்துக் குரைத்தது.ஒரு மனிதன் தன் உணர்வைச் சொல்லமுயல்வது போலத் தன் நிலையை உணர வைக்க முயற்சி செய்தது.தண்ணீருக்குள் நின்று்கொண்டு படகிற்குள் குதித்து விடுவது போல போஸ் குடுத்து நின்றது.”ஏய், ஒரு நாய் அங்கே நிற்கிறது “ஒருவன் கத்தினான். அந்தக் குரலில் இருந்த பரிவை உணர்ந்து கொண்டது போல நன்றியுணர்வில் நாய் தன் வாலை யாட்டியது. “ இருக்கட்டும் விடு” என்றான் மற்றொருவன் .இரண்டு முறை படகிற்குள் குதிக்க முயன்றது,ஆனால் படகு போய்விட்டது.
அந்த நாய் மீண்டும் குரைக்கத்தொடங்க படகிலிருந்த ஒருவன் தலையைத் திருப்பிப் பின்னால் பார்த்தான். “ ஐயா “ — இல்லை ,அது அந்த படகோட்டி யின் குரலில்லை; அது அந்த நாயின் மனித முனகல். அந்தக் கோபமான, சோர்வடைந்து விட்ட அழுகுரல் கீரீச்சிடும் காற்றோடு கலந்து நீரலைகளில் எதிரொலித்தது.
கண் பார்வையிலிருந்து படகு மறையும் வரை நாய் படகையே வெறித்து பார்த்துக் கொண்டு நின்றது.உலகத்தையே வெறுத்து விடை பெறுவது
போலக் குடிசையின் முகட்டில் அது ஏறியிருந்தது. மனிதன் மேல் இனிஒரு காலத்திலும் அன்பு காட்டப் போவதில்லை எனத் தனக்குள்ளேயே
அது சொல்லிக் கொண்டிருக்கக் கூடும்.அது குளிர்ந்த தண்ணீரை அளைந் தது. தண்ணீரில் வளைந்து குதியாட்டம் போட்டு போய்க் கொண்டிருந்த ஒரு தண்ணீர்ப் பாம்பைக் குறி வைத்தபடி தலைக்குமேல் பறவைகள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்தது.தன் குடும்பத்தினரை வெளியேற்றுவதற்காக சென்னன் ஏற்படுத்தியிருந்த ஓட்டை வழியாகத்தான் தண்ணீர்ப் பாம்பு உள்ளே வந்திருந்தது.நாய் அதையே கண்காணித்துக் கொண்டிருந்தது.பசியிலும்,சாவு பயத்திலும் இருந்த நாய் பலமாகக் குரைத்தது.நாய் எழுப்பிய அந்த மொழி உலகளாவியது என்பது இப்போது எல்லோருக்கும் புரிந்திருக்கும்.
புயலும்,மழையும் மீண்டும் தொடங்கியது.குடிசையின் அடிவாரத்தில் தொடர்ந்து அலைகள் மோதிக் கொண்டிருந்ததால் கூரை நிலையின்றி
ஆட்டம் காண ஆரம்பித்தது.தண்ணீரிலிருந்து ஒரு நீண்ட தலை வெளிப்பட்டது; அது ஒரு முதலை. கோழிகள் எங்கிருந்தோ ஒத்த குரலில் கூவிக்
கொண்டிருந்தன. ”எங்கிருந்து நாய் அழுவது கேட்கிறது? அதன் சொந்தக்காரர்கள் குடிசையை விட்டு வெளியேறி விட்டார்களா?” நாய்க்கு மீண்டும் மனிதக் குரல்கள் கேட்டது. வாழை மரத்தின் அருகில் ஒரு படகில் வாழைப் பழத் தார்களும்,வைக்கோற்போரும் ,தேங்காய்களும் நிரம்பிக் கிடப்பதை நாய் பார்த்தது.தண்ணீரின் விளிம்பருகே சென்று படகிலிருந்தவர்களைப் பார்த்து கோபமாகக் குரைத்தது.
படகிலிருந்தவர்களில் ஒருவன் வாழை மரத்தின் அருகே சென்றான். “ஜாக்கிரதை ;நாய் தாவிக் குதித்து வந்துவிடும் போலிருக்கிறது.” நாய் குதித்தது, அந்த மனிதன் தன் பிடியைத் தளர்த்தி விட்டுத் தண்ணீரில் விழுந்து விடட்டும் என்ற விதத்தில்.மற்றொருவன் அவன் படகுக்குள் ஏற உதவி செய்தான்.இதற்குள், நாய் தண்ணீரிலிருந்து நீந்தி வெளியே வந்து மீண்டும் குடிசையின் உச்சிக்கு வந்துவிட்டது.
திருடர்கள் வாழையின் ஒவ்வொரு கொத்தையும் வெட்டினார்கள். கோபமாகக் குரைத்துக் கொண்டிருந்த நாயைப் பார்த்து “ பொறு, உன்னை
கவனித்துக் கொள்கிறோம் “என்றனர்.வைக்கோலைப் படகிற்குள் குவித்தனர். கடைசியில் ஒருவன் குடிசையின் உச்சியில் ஏறினான்.நாய் அவன் காலில் பாய்ந்து கால் சதை தன் வாயில் வரும்படி கடித்தது.வேதனை பொறுக்க முடியாமல் அலறி ,அவன் படகிற்குள் குதித்தான். இதற்குள் மற்றொருவன் தன் கையிலிருந்த துடுப்பால் நாயின் தலையில் தாக்கி னான். பலவீனமான குரலில் நாய் ’மொவ் ,மொவ்’ என்றழுதது.சிறிது நேரத்தில் அந்தச் சத்தமும் நின்றுவிடலாம்.நாய் கடித்த வேதனை பொறுக்கமாட்டாமல் படகிலிருந்தவன் பெரிதாகக் கத்தினான்.அருகிலிருந்தவன் அவனைச் சமாதானப்படுத்தினான். மற்றவர்கள் காதில் விழுந்து யாரும் அங்கு வந்து விடக்கூடாது என்று அழுகைச் சத்தத்தைக் குறைக்க வைத்து, படகைச் செலுத்தினான்.தொலைவில் படகு போன திசையைப் பார்த்து நாய் குரைத்துக் கொண்டிருந்தது.இரவாகிவிட்டது .மிதந்து வந்த ஒரு பசுவின் சடலம் குடிசையருகே சிக்கிக் கொண்டது. நாய் அருகே வந்து அதைப் பார்த்தது, ஆனால் அதன் மேலேற தைரியமில்லை. மெதுவாக அந்தச் சடலம் சிக்கலிலிருந்து விடுபட்டு நீரோட்ட திசையில் நகர்ந்தது. நாய் நூல் பின்னலாக அதற்குள் சிக்கியது. வால் ஆடிக்கொண்டிருக்க சடலத்திற்குள் தன் பற்களைப் புதைத்துக் கொண்டது. அந்த மிகுதியான சதைக்குள் தன்னை இடுக்கிக் கொண்டது. சிறிதுநேரம் சடலம் அடியில் போக, நாய் சில கணம் மறைந்து போனது. அதற்குப் பிறகு புயலின் பெரும் ஊளைச் சத்தம், தவளைகளின் கரகரப்பொலி குரல் , ஆற்றின் அலை சத்தம் ஆகியவற்றை மட்டுமே கேட்க முடிந்தது. நாய் அமைதியாகிவிட்டது ; அதனுடைய பரிதாப அழுகையும், முனகல்களும் கேட்கவேயில்லை.அழுகிப் போன சடலங்கள் ஆற்றில் மிதந்தன, காக்கைகள் தொந்தரவின்றி அவற்றைக் கொத்திக் கொண்டிருந்தன.எங்கும் எல்லாமும் பாழாகிக் கிடக்க ,திருடர்கள் மனம் போனபடி தங்கள் வேலையில் ஈடுபட்டனர்.
சிறிது நேரத்தில் குடிசை சிதைந்தது. முடிவற்ற அந்த நீர் பெரும்பரப்பில் எதையுமே பார்க்க முடியவில்லை.தான் இறக்கும் வரை தன் எஜமான
னின் உடைமைகளை நாய் பாதுகாத்தது .இப்போது முதலைகள் அதைச் சாப்பிட்டு விட்டன. குடிசையும் அழிந்து போனது.
தண்ணீர் குறையத் தொடங்கியது.தன் நாய்க்கு என்ன நேர்ந்தது என்று அறிய சென்னன் தன் குடிசையை நோக்கி நீந்தி வந்தான். ஒரு தென்னை யின் கீற்றடியில் ஒரு நாயின் உடல் சாய்ந்து கிடப்பதைப் பார்த்தான். தன் விரல்களால் சடலத்தின் உடலைப் புரட்டிப் போட்டுப் பார்த்தான்.தன் நாயோ என்று அவனுக்கு சந்தேகமாக இருந்தது.ஒரு காது கடிக்கப்பட்டு , தோல் அரித்துப் போய் அழுகியிருந்ததால் அதன் நிறத்தை அறிவது கூடக்கடினமாக இருந்தது.
நன்றி :
Contemporary Indian Short Stories Series II, Sahitya Academy
தகழி சிவசங்கரம் பிள்ளை : [ 1912 – 1999 ]
ஞானபீட விருது பெற்ற மிகச் சிறந்த மலையாள படைப்பாளியான தகழி முப்பது நாவல்களும் அறுநூறு சிறுகதைகளும் எழுதியுள்ளார். சாகித்ய அகாதெமி விருது பெற்ற அவருடைய செம்மீன் என்ற நாவல் பல இந்திய மொழிகளிலும், அயலக மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவருடைய கதைகள் விவசாயிகள் மற்றும் உழைக்கும் வர்க்கத்தினரின் வாழ்க்கையைப் பிரதிபலிப்பதாக அமைந்தவை.
இக்கதையின் நாயகனாக அமையும் நாய் ’ மனிதன் மீது இனி ஒருகாலத்திலும் அன்பு காட்டப் போவதில்லை ’ என்று தனக்குள் நினைத்துக் கொண்டிருக்கக் கூடும் ’ என்ற சூழலைப் பிரதிபலிப்பது இக்கதையின் கருவும் , கூடவே சேர்ந்து படைப்பாளியின் வெற்றியும்.