

15 நாட்களில் மூன்று இடங்களில் ஒரே காலத்தில் படப்பிடிப்பு முடித்து வெளியான அட்டகாசமான நகைச்சுவைப் படம் என்று கொண்டாடப்படுகிறது பலே பாண்டியா. ஆண்டு:1962. மூன்று முக்கிய வேடங்களில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வெளுத்துக் கட்ட அவரது கால் ஷீட் வெறும் 11 நாட்கள் தான் என்பது அதிர வைக்கும் கூடுதல் செய்தியாக இருக்கிறது. அமெரிக்காவுக்குப் புறப்பட இருந்த அவரிடம் இயக்குநர் – தயாரிப்பாளர் பத்மினி பிக்சர்ஸ் பி ஆர் பந்துலு அவர்கள் அழைத்துப் பேசியவுடன் ஒப்பந்தம் ஆன படம். பந்துலு அவரைப் பற்றியே நிறைய இருக்கிறது பேச ! புகழ் பெற்ற மா.ரா. வசனம். தாதா மிராசி எழுதிய திரைக்கதையின் தன்மை அருமையானது. இள வயதிலே பார்த்த படத்தை, மிக அண்மையில் தொலைகாட்சி சானல் ஒன்றில் சிறிது நேரம் பார்க்க நேர்ந்து வியப்பு மேலும் அதிகரித்தது. அசாத்திய எளிமையில் எப்படி இப்படியொரு வெற்றிப்படம் வழங்க முடிந்தது!
அப்பாவி பாண்டியன், ரவுடி மருது, விஞ்ஞானி சங்கர் ஆகிய மூன்று வேடங்களில் சிவாஜி கணேசன், தனவந்தர் அமிர்தலிங்கம் பிள்ளை மற்றும் கள்ளர் தலைவன் கபாலி இரு வேடங்களில் எம் ஆர் ராதா நடிக்கும் என்று போட்டுத்தான் படத்தின் டைட்டில்கள் ஓடத் தொடங்குகின்றன.
மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன் – ராமமூர்த்தி, கண்ணதாசன், பந்துலு, சிவாஜி, எம் ஆர் ராதா மட்டுமல்ல, தேவிகா, பாலாஜி, சந்தியா (ஆமாம், ஜெயலலிதாவின் அம்மாவே தான்!), எடிட்டர் தேவராஜன், ஒளிப்பதிவாளர் வி ராமமூர்த்தி என ஒட்டுமொத்த டீமின் அசாத்திய பங்களிப்பு தான் முழு வெற்றிக்குக் காரணம்.
‘தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன்’ என்று கதாநாயகன் மிரட்டத் தொடங்கும் காட்சியில் தொடங்கும் படம், வில்லன் பாத்திரத்தின் தற்செயலான தற்கொலையில் முடிகிறது. ஆனால், இப்படியான கதையை ஒவ்வொரு ஃபிரேமிலும் எப்படி அத்தனை ஹாஸ்யமாக நகர்த்திக் கொண்டே செல்ல முடிந்தது என்பது தான் பிரமிக்க வைப்பது. வசனங்கள், பாடல்கள், திடீர் திருப்பங்கள் என அசர வைத்திருப்பார் பந்துலு. படத்தின் எல்லா பாத்திரங்களும் ஒரு வித கோமாளித்தன பாவனையில் தான் அதிகம் காட்சி அளிப்பார்கள். என்ன ஆகுமோ, ஏதாகுமோ என்ற திகில் அம்சங்களுக்கு எல்லாம் கஷ்டப்படாமல், ஆனால் விறுவிறுப்பாக அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை.
முழுவதும் முடிந்தபின் படத்தைத் தாமே பார்க்கையில் சிவாஜி தமது நடிப்பைக் குறித்துத் தாமே என்ன சொன்னார் என்று தெரியவில்லை. அப்பாவி என்றால் அக் மார்க் அப்பாவியாக நடித்திருப்பார். மூன்று வேடங்களிலும் அவரது வசன உச்சரிப்பு கூர்ந்து கவனித்துக் கொண்டாட வேண்டியது.
தற்கொலை முடிவில் இருந்து தம்மைக் காப்பாற்ற முன்வரும் திருடர் தலைவன் கபாலியிடம், வாழ்வதற்கான முன் நிபந்தனைகள் பாண்டியன் விவரிப்பது அசத்தலாக இருக்கும். அதற்குமுன், உயரமான கட்டிடத்தின் உச்சி மாடியிலிருந்து கீழே பார்த்து, ‘மகா ஜனங்களே, என்னைத் தடுக்காதீர்கள், நான் கீழே விழுந்து என் மண்டை உடைத்துக் கொள்வதற்குத் தேவையான இடத்தைத் தாருங்கள்…தள்ளி நில்லுங்கள்” என்று அவர் பேசுவதில் தொடங்குகிறது படம். அங்கே காரில் வந்து இறங்கும் எம் ஆர் ராதா, கூட்டம் நிற்பதன் சூழலைக் கேட்டறிந்து கொண்டு,”ஏண்டா ஒருத்தன் சாகறத பாக்கறதுக்கு இத்தனை கூட்டமா, எது எதுக்குத் தான் கூட்டம் சேர்ரது என்ற விவஸ்தையே இல்லாமப் போச்சு நாட்டிலே” என்று ஒரு பஞ்ச் அடிப்பார். அப்புறம் பைனாகுலர் எடுத்து உயரே பார்க்கும்போது, “யார் இவன் சாகறதுக்கு இந்த லொகேஷனை செலக்ட் பண்ணவன்… எலெக்ஷன்ல எதாவது தோத்துட்டானா?” என்று அடுத்த பஞ்ச்.
பின்னர் சிவாஜியைத் தமது பெரிய பங்களாவுக்கு அழைத்துச் செல்வார், “:ஏன் சார், நீ ஒருத்தன் மட்டும் இருக்கறதுக்கு எதுக்கு இவ்ளோ பெரிய பங்களா… நூறு பேரை இங்கே தங்க வைக்கலாம், இது ரொம்ப மோசம் சார்” என்று சிவாஜி சொன்னது, உஷ் என்று சொல்லும் ராதா, குரலை சன்னமாக ஆக்கிக்கொண்டு, “பங்காளவுக்குள்ளே பாலிடிக்ஸ் பேசக்கூடாது” என்பது அராஜக வெடி பஞ்ச் ! எதற்கு, இத்தனை சிரமப்பட்டு ஒருவனை சாகாமல் காப்பாற்றி அழைத்து வருகிறார் என்பதுதான் கதையே. தனது உத்தம சிஷ்யன் ரவுடி மருதுவும், அப்பாவி பாண்டியனும் ஒரே முக வாகு என்பதால், மருதுவின் பேரில் ஒரு லட்ச ரூபாய் எல் ஐ சி பாலிசி போட்டு, அப்பாவியை காலி செய்துவிட்டு அந்த இன்சூரன்ஸ் பணத்தை அபேஸ் செய்வதுதான் ராதாவின் திட்டம்.
வாத்தியாரே எனும் சென்னை பாஷை திரையில் இடம் பெற்ற குறிப்பிடப்படும் பட்டியலிலும் இந்தப் படத்திற்குத் தனியே இடமுண்டு. படம் முழுக்க, சிவாஜி, ராதாவை சார் சார் என்று அழைப்பதே தனி நகைச்சுவை. முதலில் பைனாகுலர் சார் என்பார். அப்புறம், கபாலி சார் ! காலண்டரை எடுத்து வைத்துக் கொண்டு, முப்பது நாள் ஆயிருச்சே, நீ இன்னிக்கு சாகப் போறியே என்று பொய்யழுகை அழுகிற எம் ஆர் ராதாவிடம், ‘சார் நான் திருந்திட்டேன் சார், சாக மாட்டேன் சார்’ என்று சொல்லிவிட்டு, ‘அக வாழ்க்கைக்கு கீதா, புற வாழ்க்கைக்கு கபாலி’ (அந்த கபாலியை என்ன சுவாரசியமான உச்சரிப்பில் கலக்குவார் கணேசன்) என்று அவர் பங்குக்கு பஞ்ச் வைத்துவிட்டுப் போகும் காட்சி உள்பட அபாரம்.
ரவுடி மருது, ஒரு மல் ஜிப்பா, லுங்கியோடு புகை பிடிப்பது, கபாலியின் திறமையைக் கொண்டாடுவது என்று அப்பாவி பாண்டியனை விடவும் அப்பாவியாக இருக்கும் திருடன் பாத்திரம். (மருது பாத்திரத்தைக் கண்ணீர் திரையிடத் தான் நினைவு கூர முடியும், ஐந்து மாதங்களுக்குமுன் நெஞ்சுவலி ஏற்பட்டு மறைந்துவிட்ட என் சித்தி மகன் சுரேஷ், லுங்கியை இழுத்து செருகிக்கொண்டு சிவாஜி ஒயிலாக நடக்கும் காட்சியைத் திரும்பத்திரும்ப ரசித்து செய்து காட்டுவான் எங்கள் இளமைக் காலத்தில்!).
மனநிலை பிறழ்ந்த பெண்ணை சாலை விபத்தில் காப்பாற்றும் பாண்டியனைத் தமது மகனாகவே ஏற்கும் சுவீகாரத் தந்தையும் ஓர் அப்பாவி. அவரது முகவரி என்ன தெரியுமா: கைலாசபுரம் எஸ்டேட், வைகுண்டம் போஸ்ட்! கதாநாயகியின் முறைப் பையனாக வரும் பாலாஜி மேலடுக்கு அப்பாவி. சிவாஜி, பாலாஜி தமாஷ் சண்டைக் காட்சி ஒன்றும், வெள்ளை கர்ச்சீஃப் உயர்த்தி பாலாஜி சரணடையும் இடமும், அதற்கு அப்புறமும் சிவாஜி வீர வசனம் பேசும் விதமும் படத்தின் இயல்பான போக்கில் நகைச்சுவையை சேர்த்துக் கொண்டே போகும்.
அப்பாவை சமாதானம் செய்ய கொஞ்ச காலம் பொறுத்திடக் கூடாதா என்று கேட்கும் தேவிகாவிடம், அப்பாவி சிவாஜி,”இப்படி பொறுக்கிப் பொறுக்கிப் பொறுக்கியாவே ஆயிடுவேன்” என்று குரலைத் தினுசாக வைத்துக் கொண்டு பேசுவது அசத்தலாக இருக்கும்.
காதலி கீதாவின் (தேவிகா) தகப்பன் அமிர்தலிங்கம் பிள்ளை, இன்னும் அப்பாவி பாத்திரம். அதில் எம் ஆர் ராதா ஏக கலக்கல் செய்திருப்பார். இரண்டு எம் ஆர் ராதாவும் ஒருவரை ஒருவர் மிகப் பெரிய நிலைக்கண்ணாடி இருக்கும் இடத்தில் எதிரும் புதிருமாகச் சந்திக்கும் காட்சி அசாத்தியமானது. அந்தக் காட்சி ஏற்படுத்தும் கலகலப்பு அசாதாரண நகைச்சுவை.
விஞ்ஞானி சங்கர் அதைவிடவும் அப்பாவி. மறதி மிக்க அறிவுஜீவியான பாத்திரத்தில், அவரது தலைமுடியும், ஐ யம் ஸாரி ரேஞ்சில் ஆங்கிலம் கலந்தடிக்கும் வசனங்களும் இன்னும் நகைச்சுவை ரசனையாக இருக்கும். மனைவியின் (சந்தியா) டாம்பீகச் செலவுக்கு ஊர் முழுக்கக் கடன், விஞ்ஞானிக்கு. படத்தின் காட்சியமைப்பில், பரிசோதனைக் கூடம் வெடித்து அவர் எரிந்துபோனார் என்று ஊருக்குச் சொல்லி விடுவாள் மனைவி. கடன் கொடுத்தவர்கள் எல்லாம், ‘எங்களுக்குச் சேர வேண்டிய பங்கு எடுத்து வச்சிருக்கீங்களா?” என்று கேட்கையில், கபட வேடத்தில் அங்கே வந்து நிற்கும் கபாலி, “சாம்பல்ல ஆள் ஆளுக்கு ஒரு பங்கு எடுத்துப் பல் வெளக்கிட்டுப் போங்க” என்று சொல்வது அவருக்கான அடுத்த பஞ்ச் ! உண்மையில், சங்கரைத் தமது தம்பி பாண்டியனாக நடித்து சொத்தில் பங்கை அடிப்பதுதான் சங்கரின் மனைவி திட்டம்.
இடையே ஆள் மாறாட்டங்கள் வெவ்வேறு பாத்திரங்களைத் திணறடிப்பதும், பதற வைப்பதும் அதிரடி சிரிப்பு வெடிகளாக மாறும். மூன்று சிவாஜிகளும் சந்திக்கும் இறுதிக் காட்சியில் குழப்பங்கள் தீர்வதும், அந்தக்கால தர்மப்படி திருடன் பாத்திரம் இறக்க வேண்டிய நியாயம் நடப்பதும், பாண்டியனைச் சுட நினைத்துத் தனது சிஷ்யன் மருதுவையே சுட்டுவிட்டு, அந்தத் துக்கம் தாளாமல் அதே துப்பாக்கியால் கபாலி தன்னையே மாய்த்துக் கொள்வதுமாக படம் நிறைவுக் கட்டத்தை எட்டி விடுகிறது. திருடர் பாத்திரம் என்றாலும், படத்தைப் பார்ப்பவர்கள் கபாலி பாத்திரத்தையும், மருது பாத்திரத்தையும் நேசிக்கவே செய்திருப்பார்கள், அவர்களது எதிர்பாராத முடிவு நிச்சயம் கலங்க வைக்கும்.
படத்திற்கான பாடல்கள் அத்தனையும் அபார வெற்றி! டி எம் சவுந்திரராஜன், பி சுசீலா இணை குரலில், ‘வாழ நினைத்தால் வாழலாம்’ வானொலியில் அதிகம் ஒலிபரப்பான பாடல்கள் வரிசையில் நிச்சயம் இடம் பெற்றிருக்கும். தனிப்பாடல் ஒன்றிலிருந்து காய்களை வைத்து எடுத்து எழுதிய அத்திக்காய் காய் காய் ஆலங்காய் வெண்ணிலா எப்போதும் கேட்கத் தக்க சுவாரசியமான பாடல். எழுபதுகளில், விவித்பாரதி வர்த்தக ஒலிபரப்பில் தமது சிறப்பு தேன் கிண்ணம் நிகழ்ச்சியில் பாடல்களை வழங்கியபோது கவிஞர் கண்ணதாசன், இந்தப் பாடலுக்கான இணைப்புரையில், அந்தத் தனிப்பாடலில் ஐந்தாறு காய்கள் தான் இருந்தன, இந்தப் பாடலில் இருபதுக்கு மேல் காண முடியும் என்று ரசனையோடு பேசியது இன்னும் காதில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. உள்ளமெல்லா மிளகாயோ (இளகாயோ), ஒவ்வொரு பேர் சுரக்காயோ, கோதையெனைக் காயாதே கொற்றவரைக்காய்…என்று பாடல் முழுவதும் அமர்க்கள சொல் விளையாட்டு காதல் விளையாட்டாக வழங்கப்பட்டிருக்கும். டி எம் எஸ், பி சுசீலா, பி பி ஸ்ரீனிவாஸ், ஜமுனா பாடிய கூட்டுக் கொண்டாட்டம் அது. சிறைக் காட்சிக்காக இடம் பெற்ற ‘யாரை எங்கே வைப்பது என்று’ பாடலை டி எம் எஸ் சிறப்பாகப் பாடி இருப்பார். ‘நான் என்ன சொல்லிவிட்டேன்’ பாடல் இனிமையிலும் இனிமையான கவிதை. பி பி ஸ்ரீனிவாஸ், ஜமுனா குரல்களில் ‘ஆதி மனிதன் காதலுக்குப் பின்’ பாடல் மென்குரல்களின் காதல் கீதம்.
ஆனால், ராக ஆலாபனை, கொன்னக்கோல் சகிதம் அடித்து நொறுக்கி தூள் கிளப்பிய பாடலான, ‘நீயே உனக்கு என்றும் நிகரானவன்’ அசாத்திய சுவை நிரம்பியது. பாடலில் டி எம் எஸ் மற்றும் எம் எஸ் வி குழுவின் ராஜூ போட்டுப் பின்னி எடுத்தது ஒரு ருசி என்றால், பாடல் காட்சியில், எம் ஆர் ராதா, சிவாஜி, பாலாஜி மூவருமே கலக்கி இருப்பார்கள். ஒரு தேர்ந்த பாடகர் போன்ற பாவனைகளோடு சிவாஜி அந்தப் பாடலுக்கு வாயசைப்பது ரசனையின் தனி இன்பம். சோபாவில் இருப்பு கொள்ளாமல் குதித்து குதித்து நிமிர்த்தும் எம் ஆர் ராதாவின் சேஷ்டைகள், கொனஷ்டகள் ஈடு இணையற்றவை.மெல்லிசை மன்னர்கள் கொண்டாடப் பட வேண்டிய மகத்தான இசையை தமிழ்த்திரைக்குக் கொடை அளித்துச் சென்றுள்ளனர். சூப்பர் சிங்கர் இறுதிப் போட்டி ஒன்றில் இளம் பாடகர் திவாகர் இந்தப் பாடலை, மாமா மாப்ளே வரை மிகவும் அருமையாக இசைத்து முடிக்கவும், எஸ் ஜானகி அவர்கள் மேடைக்கே சென்று உச்சி மோந்து பாராட்டிப் பரிசும் வழங்கி, பக்க வாத்திய கலைஞர்களையும் ஆசீர்வதித்து இறங்கிய காட்சி மறக்க முடியாதது.
பத்மினி பிக்சர்ஸ் பதாகையில் 55 படங்களை வழங்கிய பந்துலு அவர்கள். ஆகப் பெரும்பான்மையான படங்களை அவரே இயக்கவும் செய்தவர். ஏராளமான நஷ்டங்களை சந்தித்தும், திரைக்கலையின் மீதான தமது காதலை முறித்துக் கொள்ளவில்லை அவர். வீரபாண்டிய கட்டபொம்மன், கர்ணன் போன்ற அசாத்திய வெற்றிப்படங்கள் பல குவித்தவர். இளம் வயதில், புகழ் பெற்ற ஹம்பி புராதன கட்டிடங்கள் பார்த்தபோதே நினைத்துக் கொண்டாராம், என்றைக்காவது எனது கனவுக் கலையில் அவற்றை மிளிரவைப்பேன் என்று. அதைச் செய்தும் காட்டியவர். சிவாஜியை வைத்து நிறைய எடுத்தவர், ஒரு கட்டத்தில் எம் ஜி ஆரை வைத்துப் படங்கள். ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஜெயலலிதாவை முதன்முறை எம் ஜி ஆரோடு இணையாக நடித்த வைத்தவர். கன்னடத் திரைப்பட உலகம் கொண்டாடிய அவரது நூற்றாண்டு (1911-2011), தமிழ்த் திரையுலகத்தில், கலையுலகில் கண்டு கொள்ளப்படாது கடந்து போனதைப் பற்றிய கட்டுரையைத் தற்செயலாகப் படித்தபோது அத்தனை வேதனை பரவியது நெஞ்சில். அற்புதமான அந்தக் கட்டுரையில் கொட்டிக் கிடக்கின்றன செய்திகள் ( https://www.thehindu.com/features/cinema/a-100-goes-unsung/article2853657.ece )
பலே பாண்டியா படம், எந்தக் காலத்திலும் ரசித்துப் பார்க்கத் தக்க படைப்பு. மனிதர்களுக்குள் எழும் ஆசை தான் படத்தின் சரடு. நியாயமான ஆசை, அநியாயமான ஆசை இரண்டுக்குமான போராட்டம் தான் திரைக்கதை. ஆசையை அழித்து அன்பு ஓங்கி நிற்பது படத்தின் நிறைவான நிறைவுக் காட்சி.
(ரசனை பரவும்…)
கட்டுரையாளர் மின்னஞ்சல் முகவரி: sv.venu@gmailcom
பலே பலே
எத்தனை முறை பார்த்திருந்தும் திகட்டாத “பலே பாண்டியா”, அணு அணுவாய் பிரித்து கதை ஓட்டத்தையும் சரி, நகைச்சுவையான காட்சிகளை அடுக்கியதையும் சரி, இசை பாடல் வரிகளை பிண்ணி பீராயந்ததும், அப்பப்பா…
பலே சொல்ல வேண்டுமே பலமுறை…
மிகவும ரசிக்க தக்க வகையில் சிறப்பாய்வு..
LikeLike
Excellent review. Being Sivaji rasikan in those days I saw this movie atleast 7 times in Madurai. You have analysed it all scenes very minutely.
LikeLike
படத்தை எத்தனை தடவை யாராலும் பார்க்க முடியும். உங்கள் எழுத்துக்களில் இப்போதும் படத்தை பார்க்க முடிந்தது. ‘அத்திக்காய் காய்’ அற்புதமான பாடல். எம் ஆர் ராதாவின் கச்சேரி தனி விருந்து.
LikeLike
அருமை! வேறு வார்த்தைகளே இல்லை.
LikeLike
Pingback: வாசகர் கருத்து | குவிகம்