நடுப்பக்கம் – சந்திரமோகன்

பலகார வகைகள்
Indian Sweets.JPG
மருமகள் தட்டில் கொண்டு வந்து வைத்த தீபாவளி பலகாரமான லட்டும் அல்வாவும் மௌனமாக இருந்த என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது.
சே! சே! பலகாரம் எப்படி சிரிக்கும்.

சிரித்தது என் மன சாட்சி.

இது போல சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தீபாவளியன்று மனைவியிடம் ‘ ஏம்மா! தீபாவளின்ன எப்பவும் லட்டும், அல்வாவும்தானா? வருஷா வருஷம் வித விதமா எவ்வளவு வெடி வருது. அது மாதிரி புதுசா ஏதாவது பண்ணக் கூடாதா” என வம்பிழுத்தது ஞாபகம் வந்தது.

அதற்கு கிடைத்த பதிலை இங்கே கூறப் போவதில்லை.
ஆனால் நான் வகை வகையான பலகாரத்தேடலை மட்டும் இன்றும் நிறுத்த வில்லை.
‘பலகாரம்’ என்பது பண்டைத் தமிழோ?
காலை உணவு சாப்பிட ‘பலகாரம் சாப்பிட வாங்க’ என்றுதான் மலேஷிய தமிழர்கள் இன்றும் அழைப்பார்கள்.
பலகாரங்கள் அதிலும் இனிப்புகளில்தான் எத்துனை வகை. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சுவை.
எனக்கு திடீரென சந்தேகம் வரும். நம் மூதாதையர்கள் என்னவென்ன இனிப்புகள் செய்திருப்பார்கள் என.
சங்க இலக்கியத்தில் அது பற்றி ஏதாவது செய்தி உள்ளதா என எனது குரு சிந்தாமணியைத்தான் கேட்க வேண்டும்.
ஆனால் 120 ஆண்டுகளுக்கு முன்பு என்ன இனிப்புகள் இருந்தன என எனக்கு தெரியும்.
நான் சமீபத்தில் படித்த ஒரு புத்தகம் பிரமனூர் வில்லியப்ப பிள்ளை எழுதிய “பஞ்ச லட்சணத்திருமுக விலாசம்”.
இந்த நூல் 1899 ம் ஆண்டு வெளி வந்த ஒரு  அங்கதம்  (satire) வகை நூலாகும்.
தமிழில் வந்த முதல் நையாண்டி (Lampoon) இலக்கியமாம்.
சுமார் 120 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை முறையை கேலியும் கிண்டலுமாக கூறி இருப்பார் சிவகங்கை மன்னரிடம்
கணக்கு வேலை பார்த்த நூல் ஆசிரியர்.Pittu - Deep Into Sri Lanka
அதில் அன்றைய தினத்தில் இருந்த பலகாரங்களை பற்றி கூறுவார். செய்யுள் நடையில் உள்ள வரிகளை அனைவர்க்கும் புரியும்பொருட்டு சந்தி பிரித்தும், (எனக்கு) புரியாத வார்த்தைகளை நீக்கியும் கொடுத்துள்ளேன். என் சரக்கு எதையும் சேர்க்க வில்லை.
பல சிறு கிளை சம்பவங்களை விவரிக்கும் நூலில் ஒரு பிரதி வாதியை பிடித்து செல்ல கோர்ட் சேவகன் வருவான்.
பிரதிவாதி சேவகனிடம் உறவு கொண்டாடி உணவு அருந்தி செல்லலாம் என கூறி தன் மனைவியிடம் விதம் விதமாக விருந்து தயாரிக்க சொல்வான்.
அதில் கீழே சொன்ன இனிப்பு வகைகளும் சேரும்.
பின்னர் இல்லாத சில சாமான்கள் வாங்கி வருவதாக கூறி சென்று தப்பி விடுவான்.
பிரதி வாதி தன் மனைவியிடம் செய்ய சொன்ன இனிப்பு வகைகள்:
“பச்சரிசி முக்குறுணி பத்தாது.
பற்ற வில்லை யென்று அச்சமயம் மூக்கால் அழுகாதே;
நீயென்ன சின்னஞ் சிறிசோ? தெரியாதா? பின்னும் கேள்
பச்சைக் கடலை , பசும் பயறு, கோதும்பை, மொச்சை, முளைத் துவரை பந்தி நிறை சாரப் பருப்பு, வாதாம் பருப்பு வந்தன
ஈதெல்லாம் வகை வகையாய் யந்திரத்தில் மாவரைத்து தெள்ளி , மதுரம்(இனிப்பு) புகட்டி , அதை நீ வளமாய் சேர்ப்பாய்;
நிமிடத்தில் நாவினிய சீனிச் சர்க்கரையும் , தேனும் குடங் குடமாய் நான் இச்சணம் அழைத்து நல்குவேன்;-
மானே தண் பூமலி வெண் பூந்தி, பொலிவுறு சிலேபி, லட்டு, மாமதுரம் மிக்க மதுர் பேணி; பாதாம் அல்வா, நெய் உருண்டை, பால் அடை, ரவா லாடு, குஞ்சாலாடு, மோது நொக்கல்
பால்கோவா, சேவு, பணியாரம், தோசை, போளி, வடை, சுகியம், நால் விதமாம் அப்பளம், அதிரசம், சீரா, பர்பி,
முப்பழம் சேர் அல்வா முதலாக
என்ன பலகாரம் உண்டோ யாவும் உன்
கை பக்குவத்தால் நன்னயமாய் முந்தி நடக்கட்டும்.
தே மதுரம் போல் திரட்டுப் பால் பண்ணுவதை
நீ மறந்திடாதே நினைவில் வைப்பாய்;
நறிய செழும் பாயாசத்துக்காகப் பழுதறு கோதுமை ரவை ஆய அதில்
தீம்பாலை அளந்து விட்டுத் தூய பன்னீர்,சுக்கு, சாதிக்காய், துடி சேர் கிராம்புடனே, பக்கரசம் வாதாம் பருப்பு நெய்யும் – ஒங்க நலஞ் சேரும்
கற்கண்டொடு நற் சீனியும் ஒன்றாய் கலந்து, சாரம் தெளிவு பட தாளித்தும்
பக்குவமாய் செய்தால் அண்ணாவுக்கு
அது பிரியமாய் இருக்கும் அன்றோ?
வாய்க்கு ருசியாய் வளமாய் கறி வகையும் ,சீக்கிரம் ஆகட்டும் செழுஞ் சமையல்”
என்று கட்டளை இட்டு “ மாடுலவு ஷாப்பில் சாமான் கொஞ்சம் வேண்டும், அதை ஓடி, இதோ வாங்கி, ஒரு மினிட்டில் – நாடி மிக வாரேன்” என தப்பி விடுவான்.
வீட்டில் ஒன்றுமே இல்லாது , ஏமாற்றியது தெரிந்து சேவகன் புலம்புவதாக கதை செல்லும்.
எனக்கு பழையன பிடிக்கும். எனவே அந்த நூலை ரசித்து படித்தேன். அதிக வட்டிக்கு கடன் கொடுப்பவர்கள் பற்றியும், ஏமாற்றி விற்கும் துணி வியாபாரி, நகை வியாபாரி களைப்பற்றியும் நகைச்சுவையுடன் கூறி உள்ளார்.
பண்டை காலத்தைய இனிப்புகளை என் நண்பர் சிந்தாமணி அவர்கள் பட்டியல் இட்டு அனுப்பியுள்ளார்.
பழந்தமிழர் உண்ட இனிப்புப் பலகாரங்கள்
தேன்பாகில் சமைத்த அடை, தேங்காய்த் துருவலையும், வேகவைத்த பருப்பையும் உள்ளீடாகக்( பூர்ணம்) கொண்டு செய்யப்பட்ட மோதகம்( கொழுக்கட்டை), குங்குமப்பூ மணக்கின்ற தேறல்(தேன்),
இனிப்பு கலந்த பாலில் நனைத்த அரிசி அப்பம்,
இனிப்புப் பால்பருப்பு,
அக்கார அடிசில்,
கரும்புப்பால் அவல்,
இனிப்பு உளுந்தங்களி.
மேலே கூறிய பலகாரங்களை உண்டு சுவைக்க வாய்ப்பும் இல்லை வயதும் இல்லை. படித்தாவது சுவைப்போம்.சைவர், அசைவர் யார்? திரு முருக கிருபானந்த வாரியார் விளக்கம் –
ஆட்டின் கழுத்தை ரத்தம் பெருக கத்தியால் கூறு போடுவதைப் பார்க்கின்ற போது
கண்ணில் நீர் வந்தால் சைவர்; நாக்கில் நீர் சுரந்தால் அசைவர்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.