முன்கதைச்சுருக்கம்: மகத நாட்டரசன் பிம்பிசாரன் புத்தரின் உபதேசங்களில் ஈடுபட்டவன்;
தனது அரண்மனைத் தோட்டத்து அசோகமரத்தடியில் புத்தர்பிரான் அமர்ந்து உபதேசம் செய்த இடத்தில் ஒரு வழிபாட்டு மேடையை அமைத்திருக்கிறான்.
இளவரசன் அஜாதசத்ரு விரும்பியவண்ணம் அவனுக்கு அரசைக் கொடுத்துவிட்டு நகரிலிருந்து சிறிது தொலைவில் வசித்துவந்தான் பிம்பிசாரன். அரசி லோகேஸ்வரி இதனை விரும்பாததால் மிகவும் மனக்கசப்பிற்குள்ளாகி இருந்தாள். அவளுடைய மகன் சித்ராவும் பிட்சுவாகிவிட்டதில் மனம்நொந்து போயிருக்கிறாள்.
ஸ்ரீமதி எனும் நாட்டியமங்கையிடம் உபாலி எனும் பிட்சு யாசகம் வேண்டி வருகிறார். எதைக் கொடுப்பது எனத் திகைப்பவளிடம் உரிய சமயத்தில் கடவுளே அதனைப் பெற்றுக்கொள்வார் எனக் கூறுகிறார். மாலதி என்றொரு கிராமத்துப்பெண் வழிபாட்டுவேளையில் பணிபுரிய ஸ்ரீமதியிடம் வந்து சேர்கிறாள்…..
இனித் தொடர்ந்து படிக்கவும்………….
மாலதி: சகோதரி, நான் அதனை எவ்வாறு கூறுவது? நெருப்பைப்போன்ற ஒரு குரல் காற்றில் வந்தது. ஒருநாள் என் சகோதரன் அதனைச் செவியுற்றான். அவன் பதினெட்டே வயது நிரம்பியவன். நான் அவனது கையைப் பிடித்து நிறுத்தி, “என் சகோதரா, எங்கே செல்கிறாய்?” எனக்கேட்டேன். “அதனைத் தேடிச் (அந்தக் குரலை நாடி) செல்கிறேன்,” என்றான் அவன்.
ஸ்ரீமதி: இன்று கடல் தனது அழைப்பை எல்லா நதிகளின் அலைகளுக்கும் அனுப்பியுள்ளது; ஆகாயத்தில் முழுநிலவு பிரகாசிக்கின்றது. (மாலதியின் கரத்தைப் பற்றிக்கொண்டு) ஆனால் இது என்ன? உன் விரலில் ஒரு மோதிரம்! புழுதியின் விலைக்குத் தேவலோகத்து மலர் ஒருத்தி தன்னையே விற்றுவிட்டாளா?
மாலதி: நான் இதன் கதையை உங்களுக்குக் கூறுகிறேன், அப்போது நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
ஸ்ரீமதி: மிகுதியான துயரம் எனக்கு அனைத்தையும் புரிந்துகொள்ளும் சக்தியை அளித்திருக்கிறது.
மாலதி: நாங்கள் ஏழைகளாக இருந்தபோது அவர் செல்வந்தராக இருந்தார். நான் மௌனமாக அவரை தொலைவிலிருந்தபடியே பார்த்துக் கொண்டிருப்பேன். ஒருநாள் அவர் எங்கள் வீட்டிற்கு வந்து என்னிடம் அன்புசெலுத்துவதாக பகிரங்கமாகக் கூறினார். என் தந்தை,”மாலதி அதிர்ஷ்டசாலி,” என்று கூறினார். நேரம் கூடிவந்தபோதில் அவர் எங்கள் வீட்டு வாசலுக்கு வந்தார் – ஒரு மணமகனின் உடைகளிலல்ல – ஒரு பிட்சுவின் ஆடையணிந்து வந்தார்; என்னிடம் கூறினார்: “நாம் எங்காவது எப்போதாவது சந்திக்க நேரிட்டால், அது இங்கல்ல, ஆனால் விடுதலையின் பாதையில்தான்.”
சகோதரி, என்னை மன்னிப்பாயாக! என் கண்கள் கண்ணீரால் நிறைந்துள்ளன, ஏனெனில் என் இதயம் பலவீனமாக உள்ளது.
ஸ்ரீமதி: பயப்படாதே, சகோதரி, உனது கண்ணீர் தடையின்றிப் பெருகட்டும். உனது விடுதலைப் பாதைக்கு அது வழிவகுக்கும்.
மாலதி: நான் அவரை வணங்கிக் கூறினேன்: “எனது பிணைப்பு இன்னும் வலுவாகவே உள்ளது. நீங்கள் வாக்குறுதி தந்தபடி அந்த மோதிரத்தை எனக்கு அளியுங்கள்.” இதுவே அவர் தந்த அந்த மோதிரம். இது என் விரலிலிருந்து நழுவி எப்போது, என்று நமது கடவுளின் சன்னிதியில் விழுகின்றதோ அப்போது நாங்கள் விடுதலையின் பாதையில் திரும்பச் சந்திப்போம்.
ஸ்ரீமதி: தங்கள் இல்லங்களை (வாழ்க்கையை) அமைத்துக்கொண்ட எண்ணற்ற பெண்கள் இன்று அவற்றை உடைத்தெறிகின்றார்கள். எண்ணற்ற பெண்கள் இன்று துறவிகளின் உடையணிந்து திறந்த சாலைகளில் செல்கின்றார்கள். இது வழியின் (மார்க்கம், பாதை) அழைப்பா அல்லது வழிப்போக்கனின் அழைப்பா? யாருக்குத் தெரியும்? எத்தனைமுறை நான் எனது கைகளைக் கூப்பியவண்ணம், எனது இதயமும் ஆத்மாவும் இணையத் தொழுதிருப்பேன்: “மகாபுருடரே! பெருமைவாய்ந்த தாங்கள் இரக்கமின்றி இருக்காதீர்கள். தாங்களே பெண்களின் கண்களில் நீரைப் பிரளயமாக வரச்செய்துள்ளீர்கள்; அவர்களுக்கு அமைதியை அளிப்பவரும் தாங்களாகவே இருக்க வேண்டும்!”
(ஒருபுறம் திரும்பி நோக்கி) இதோ நமது இளவரசிகள் வருகின்றார்கள்.
இளவரசிகள் உள்ளே நுழைகின்றனர்.
வாசவி: யார் இந்தப்பெண்? எங்கே, நான் அவளைப் பார்க்கட்டும்! தனது தலைமயிரைச் சுருட்டிக் கோபுரம் போலத் தலைமீது வைத்துக்கொண்டு அதன்மீது ஒரு ஜாவா -மலரையும் தனது காதின் மீதான அந்த மயிர்க்கற்றைகளில் அணிந்திருக்கிறாள்! நந்தா, பாரேன், அந்த ஆகண்டா மலர்களாலான மாலை அவளுடைய குழற்கற்றைகளில் எப்படி பின்னிப் பிணைந்துள்ளது என்று பாரேன். அதுவென்ன சிவப்புநிற விதைகளாலான அந்தக் கழுத்துமாலை? எங்கிருந்து அவள் வந்தாள், ஸ்ரீமதி?
ஸ்ரீமதி: அவளுடைய கிராமத்திலிருந்து வந்திருக்கிறாள்; அவள் பெயர் மாலதி.
ரத்னாவளி: ஒரு அபூர்வமான கைப்பற்றப்பட்ட பொருள்! எங்களுடைய ஆத்மாக்களைக் காப்பாற்றுவதை விட்டுவிட்டு, இந்த கிராமத்துப் பெண்களிடம் உன்னுடைய புனிதமான பொருட்களைத் திணிக்கிறாய்.
ஸ்ரீமதி: கிராமத்துப் பெண்களிடம் இவற்றிற்குக் குறைவில்லை, இளவரசி. புழுதியாலும் ஆபரணங்களாலும் களங்கப்படுத்தப்படாத தேவலோகத்தின் எண்ணங்கள் அவர்களிடம் எப்போதுமே உள்ளன; தேவலோகமும் தனக்குரியதைச் சுலபமாக அறிந்து கொள்கின்றது.
ரத்னாவளி: தேவலோகத்தின் இன்பங்களை உனது போதனையால்தான் அறிந்து உணர்ந்துகொள்ள வேண்டுமென்றால் நான் அவற்றின் மீதான விருப்பத்தையே விட்டுவிடுவேன்!
நந்தா: அன்புள்ள அஜிதா, பாவம் இந்த ஸ்ரீமதியை இவள் ஏன் எப்போதும் இப்படிக் கிண்டல்செய்து வெறுப்பூட்டுகிறாள்? ஸ்ரீமதி யாருக்கும் போதனை செய்வதில்லையே……
வாசவி: ஓ! அவளுடைய அமைதியில் உலகிற்கான பல போதனைகள் பொதிந்துள்ளன. பார், அவள் எவ்வாறு புன்னகை புரிகிறாள்! அதுவே ஒரு போதனையாகத் தோன்றவில்லையா?
ரத்னாவளி: மிகவும் பொருள்பொதிந்தது! வார்த்தைகளால் விவரித்தால் இவ்வாறு சொல்லலாம்: “தாங்கள், கொடுமையை இனிமையால் அழிக்கலாம்; வீண்வாதத்தை ஒரு புன்னகையால் வெல்லலாம்.”
வாசவி: ஸ்ரீமதி, நீ (இவர்களின் சொற்களிலிருந்து) ஏன் உன்னைக் காத்துக்கொள்ளக் கூடாது? உனது அளவற்ற இனிமை எங்களுக்குத் திகட்டுகின்றது. மற்றவர்களை அவமானப்படுத்துவதனைவிட, கோபம்கொள்ளச் செய்வது எத்தனையோ கருணைமிகுந்ததாகும்.
ஸ்ரீமதி: நான் மிக நல்ல உள்ளம் படைத்தவளாக இருந்தால், கெட்டவளாக இருப்பதைப்போல வேஷம்போட இயலக்கூடும். நிலவுக்குத் தனது நிழலைக் காட்ட உரிமையுண்டானால், நிலவற்ற இரவும் மேகத்தை முகமூடியாக அணியக்கூடாதா என்ன?
அஜிதா: பார்! அந்த கிராமத்துப்பெண் பேச்சற்று நிற்பதனை! அரண்மனைப் பெண்களின் நாக்குகள் (சொற்கள்) தேன்போல இனிமையாக இல்லாமல் கூராகக் குத்துகின்றனவே என எண்ணிக்கொண்டு ஆச்சரியத்தில் அவள் நிற்கிறாள்.
(மாலதியிடம்) உனது பெயரென்ன, குழந்தாய்? நான் அதனை மறந்துவிட்டேன்.
மாலதி: மாலதி.
அஜிதா: நீ என்ன நினைத்துக் கொண்டிருந்தாய் என்று எங்களுக்குச் சொல்.
மாலதி: உங்களுடைய கூர்மையான சொற்களைக்கேட்டு நான் வருந்தினேன்- ஏனென்றால் நான் எனது சகோதரியிடம் அன்புசெலுத்த வந்துள்ளேன். (ஸ்ரீமதியைச் சுட்டிக் காட்டுகிறாள்).
அஜிதா: நாங்கள் அன்பு செலுத்துபவர்களை வேடிக்கையாகக் குத்திக் கிண்டல் செய்வதுண்டு. இது அரண்மனையின் ஒருவிதமான பேச்சுத்திறமை. நினைவில் வைத்துக்கொள்.
பத்ரா: நீ இன்னும் என்னவோ சொல்ல வந்தாய் மாலதி. நீ எங்களைப்பற்றி என்ன நினைக்கிறாய் என அறிய நான் ஆவலாக இருக்கிறேன்.
மாலதி: நல்லது, ஒரு போதுமில்லை. நான் சொல்லவந்தது: “பாடல்களைக் கேட்கும் பொழுதை வீணாக்குகிறீர்களே, உங்களுடைய குரல்களே உங்களுக்கு இனிமையாக உள்ளதா?”
இளவரசிகள் நகைக்கின்றனர்.
வாசவி: நல்லது, ஒரு போதுமில்லை! நல்லது, ஒரு போதுமில்லை! இந்தப் புதுவிதமான வியப்பிடைச்சொல்லைக் கேட்க நமது இலக்கணப் பண்டிதரைத் தான் கூப்பிடவேண்டும்.
ரத்னாவளி: நல்லது, ஒரு போதுமில்லை! வாசவி! அரச மகுடத்தின் தலைசிறந்த ரத்தினமே!
வாசவி: நல்லது, ஒரு போதுமில்லை! ரத்னாவளி! நிலவின் மயக்கும் எழில் படைத்தவளே! என்னவொரு மொழிப்புலமை!
மாலதி: (ஸ்ரீமதியிடம் திரும்பி) அவர்கள் என்னிடம் கோபம் கொண்டுவிட்டார்களா?
நந்தா: பயப்படாதே, மாலதி. கல்மழையைச் சொரியும்போது ஆகாயம் மலர்களிடம் கோபம் கொள்வதில்லை: அவற்றை ஆகாயம் வருடிச்செல்லும் முறை அதுவே.
ஸ்ரீமதி: (பாடுகிறாள்)
இரவின் மௌனமான அமைதியில் என்ன ரகசியம் என்னை வந்தடைந்தது!
நான் அறியேனே!
அது விழித்திருத்தலா, அது உறங்கியிருத்தலா?
நான் அறியேனே!
நான் வீட்டில் பணிபுரிகிறேன், நான் தெருவில் சுற்றியலைகிறேன்.
ஆனால், என் இதயத்தில் இது என்ன குரல் இசைக்கின்றது?
நான் அறியேனே!
சொல்லவொணாத வலியில் என் நெஞ்சம் நடுங்குகின்றதே!
அது பயமா? அது வெற்றியா?
திரும்பத் திரும்ப அது என்னிடம் கரைகின்றதே
“வந்து விடு!”
அது எதிரொலிப்பது என் இதயத்திலா அல்லது ஆகாயத்தின் ஆழங்களிலா?
நான் அறியேனே!
வாசவி: உன் கண்களில் நீர் நிறைந்துள்ளதே, மாலதி. அவளுடைய பாடலைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்?
மாலதி: என் சகோதரி அந்த அழைப்பைக் கேட்டிருக்கிறாள்.
வாசவி: என்ன அழைப்பு?
மாலதி: எந்த அழைப்பு எனது சகோதரனை அலையச் செய்ததோ, எந்த அழைப்பு என்… (தயங்குகிறாள்)
வாசவி: எனது என்ன?
ஸ்ரீமதி: சும்மாயிரு, அன்பே மாலதி! மேலே ஒன்றும் கூறாதே; உன் கண்ணீரைத் துடைத்துக்கொள். இது அழுவதற்கான இடமல்ல.
வாசவி: அவளை ஏன் நிறுத்தினாய், ஸ்ரீமதி? எங்களுக்குச் சிரிக்க மட்டும்தான் தெரியும் என நீ எண்ணுகிறாயா?
பத்ரா: சிரிப்பினால் ஒரு உயரத்தை எட்ட இயலாது என்று எங்களுக்குத் தெரியும்.
மாலதி: இளவரசிகளே, இன்று காற்றில் ஒலித்துக் கொண்டிருக்கும் குரலைத் தாங்கள் கேட்டீர்களா?
நந்தா: இல்லை, குழந்தாய், காலை வெளிச்சம் தாமரை தன் இதழ்களை விரிக்க உதவும்; ஆனால் அரண்மனையின் சுவர்களைத் திறக்க உதவாது.
அரசி லோகேஸ்வரி உள்ளே நுழைகிறாள்; இளவரசிகள் எழுந்து அவளை வணங்குகின்றனர்.
(தொடரும்)
சரளமான நடை.அருமையான மொழிபெயர்ப்பு… சகோதரியின் பணி தொடர வாழ்த்துக்கள்…
LikeLike