அடையாறு சிக்னலில் அந்த மதிய வேளையிலும் டிராபிக் அதிகமாகத்தான் இருந்தது. ராகவ் கார் ஸ்டீயரிங்கை பிடித்தபடியே மணி பார்த்தான். ரெண்டே முக்கால். மூன்று மணிக்கு க்ளையன்ட் மீட்டிங். இந்த சிக்னல் தாண்டிவிட்டால் பத்து நிமிடத்தில் போய்விடலாம்.
அலுவலகத்தில் வேலைகளை முடித்துவிட்டு கிளம்பும் போதே ரெண்டரை ஆகிவிட்டது. அவன் பாஸ்தான் போவதாக இருந்தது. ஆனால், திடீரென்று ராகவ் ‘ கே ன் யூ ப்லீஸ் கோ? ஐ ஹேவ் ஸம் இம்போர்ட்டண்ட் வொர்க் டு ஃபினிஷ்’ என்று இவன் தலையில் கட்டிவிட்டார்.
‘பாஸ் இஸ் ஆல்வேஸ் ரைட்’ என்ற முன்னோர் வாக்கின்படி உடனே கிளம்பினான்.
கிளம்பின அவசரத்தில் ஏதாவது முக்கியமான பேபர்ஸ் மறந்து விட்டோமோ என்று யோசித்தான். அப்புறம், ஸெல் ஃபோனில் தான் உலகமே இருக்கிறதே , சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைத்துக் கொண்டான்.
ஏதேதோ யோசனையில் ஸ்டீரிங்கில் தாளம் போட்டபடி இருந்தவன் அந்த சத்தம் கேட்டு திரும்பினாான். கார் கதவின் கண்ணாடியை “டொக்”, “டொக்” என்று தட்டினாள் அவள்.
கொஞ்சம் வயதான தோற்றம். மெலிந்த தேகம். மாநிறம். கலைந்த தலைமுடி. சாயம் போன பச்சை நிறத்தில் ஒரு புடவை. கையில் சில கண்ணாடி வளையல்கள். கழுத்தில் பழுப்பேறிய ஒரு மஞ்சள் கயிறு. வாடிய முகம், வியர்வை கோடுகள் என தளர்ந்து போய் பார்க்க பரிதாபமாக இருந்தாள்.
ராகவ் யோசனையோடு கார் ஜன்னலை இறக்கி ‘என்ன’ என்பது போல பார்த்தான். “சார், ப்ளீஸ் ஹெல்ப். என் ஹஸ்பண்ட்ட கேன்சர் இன்ஸ்டிடியூட்ல சேர்த்திருக்கேன். ஹாஸ்பிடல் ரெஜிஸ்ட்ரேஷன்க்கும் மருந்துக்கும் பணம் கட்டணும், டூ செவ்ன்ட்டீ ருபீஸ் ஈச். கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க”, என்றாள்.
அவளைப் பார்த்தவுடன் மனதில் தோன்றிய பரிதாப உணர்ச்சி சட்டென்று மறைந்து அறிவு விழித்துக் கொண்டது. தரமணி, திருவான்மியூர் சிக்னல்களில் பிச்சை எடுக்கும் பலரைப் பார்த்திருக்கிறான்.. அழுக்கு உடை, பரட்டை தலை, கையில் குழந்தை என ரகம் ரகமாக கார் கதவை தட்டி பிச்சைக் கேட்பார்கள் பெரும்பாலும் அதே ஆட்கள் தான் ‘டியூட்டி’ மாறி வருவார்கள்.
இவள் அவர்களில் ஒருத்தியாக இருப்பாளோ? இது ஒரு நூதன முறை ஏமாற்று வேலையோ? ஆனால் இவள் பார்ப்பதற்குப் பிச்சைக்காரி போல இல்லையே? இங்கிலீஷ் எல்லாம் பேசுகிறாளே? இவர் சொல்வது ஒரு வேளை உண்மையாக இருக்குமோ? இவள் கணவர் ஒருவேளை நிஜமாகவே ஹாஸ்பிடலில் இருக்கிறாரோ?
அப்படி இருந்தால் அவரைக் காப்பாற்ற கையில் பணம் இல்லை என்பது எவ்வளவு பெரிய கொடுமை.
மனதில் இயல்பாக தோன்றிய கருணை, புத்தியை அடக்கியது.
கண் எதிரே உதவி கேட்டு நிற்பவளை எப்படி உதாசீனம் செய்வது? இவளுக்கு உதவி செய்யாமல் போனால் அந்த குற்ற உணர்வு என்னை உறுத்தாதா?” என்றெல்லாம் யோசித்தான்.
மறுபடியும், “சார், ப்ளீஸ்.. ஹெல்ப் பண்ணுங்க”, என்றாள் அவள். சிக்னல் பச்சையாவதற்கு இன்னும் சில நொடிகளே இருந்தன. ராகவுக்குள் ஒரு போராட்டமே நடந்து கொண்டிருந்தது.
இல்லாமை என்னுமொரு
பொல்லாத பாவியாய்
எந்நேரமும் இடருராமல்
ஏற்காமல், ஏற்பவர்க்கு
இல்லை என்று உரையாமல்
கற்பகவல்லியம்மை பதிக வரிகள் அவன் மனதில் ஓடின.
சட்டென்று முடிவு செய்து தன் பாக்கெட்டிலிருந்து ஒரு ஐநூறு ருபாய் தாளை எடுத்து அவளிடம் நீட்டினான்.
அதைக் கையில் வாங்கியவள் “தேங்க்ஸ்” என்று சொல்லுவதற்குப் பதிலாக “சார் , ஐநூறு பத்தாது. ஆஸ்ப்பிட்டல்க்கு 270, மருந்துக்கு 270” என்றாள்.
அவசரத்தில் தனக்குக் கணக்கு மறந்து போனது அப்போது தான் உரைத்தது. அதற்குள் சிக்னல் போட்டு வண்டிகள் நகர ஆரம்பித்திருந்தன. மேலும் ஒரு நூறு ருபாய் தாளையும் கொடுத்து விட்டு அவள் நன்றிக்குக் காத்திராமல் வண்டியைக் கிளப்பினான்.
வழியெல்லாம் நடந்ததைப் பற்றியே யோசித்துக் கொண்டு இருந்தான் . மனதில் பொங்கிய கருணையெல்லாம் வடிந்து புத்தி மறுபடியும் வேலை செய்யத் தொடங்கியது.
சே !! இது என்ன முட்டாள்தனம் !! முன்ன பின்ன தெரியாதவங்க கேட்டா, அப்படியே 600 ருபாய் எடுத்துக் கொடுத்துடறதா? அவங்க சொல்றது உண்மையா பொய்யான்னு எல்லாம் விசாரிக்க வேண்டாமா? முதல்ல கொடுத்த ஐநூறு பத்தாதுன்னு அப்புறம் ஒரு நூறு வேற. சரியான ஏமாளி நான், என்று ராகவிற்குத் தன் மீது கோபம் கோபமாய் வந்தது.
நல்ல வேளை, அதற்குள் க்ளையன்ட் ஆஃபீஸ் வந்து விட்டது. காரைப் பார்க் செய்துவிட்டு, வந்த வேலையை நினைவுப் படுத்திக் கொண்டு நடந்ததை மறக்க முயன்றான்.
ஆனால் அது அவ்வளவு சுலபமாக இல்லை.
வலிய தானே போய் ஒரு பெருஞ்சுமையை தலையில் ஏற்றிக் கொண்டது போலிருந்தது.
எதற்காக இந்த கோபம்? யார் மீது வெறுப்பு? அவள் மீதா, தன் மீதா? அறுநூறு ரூபாய் கொடுத்ததற்கா? இல்லை ஏமாந்து போனதற்கா? இல்லை இரண்டிற்கும் சேர்த்தா? தெரியவில்லை.
“என்ன ஏதோ யோசனைலேயே இருக்கீங்க?“ இரவு உணவின் போது அமுதா கேட்டாள்.
மதியம் நடந்ததைச் சொல்லலாமா என்று ஒரு கணம் தோன்றிய எண்ணத்தைச் சட்டென்று மாற்றிக் கொண்டான்.
வேண்டாம், இப்போது சொன்னால் அவள் ஒன்று சொல்ல நான் ஒன்று சொல்ல தேவையில்லாமல் ஒரு விவாதம் ஆரம்பிக்கும். அதற்கெல்லாம் எனக்குத் தெம்பில்லை என்று நினைத்து “ஒன்றுமில்லை” என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொன்னான்.
அவளும் அதற்கு மேல் எதுவும் வற்புறுத்திக் கேட்கவில்லை.
முன்பெல்லாம் இருவருமாக வெளியே போகும் போது யாராவது பிச்சை கேட்டால் , ராகவ் கொடுக்காமல் வர மாட்டான்.
கோவில் வாசலில், கடைத் தெருவில், ரோட்டில், சிக்னலில் என்று எங்கும், கையேந்தும் எவருக்கும், அவன் இல்லை என்று சொன்னதில்லை.
‘பொண்ணுக்கு கல்யாணம் யா, மடிப்பிச்சை போடுங்க “
“கண்ணுச்சாமி ஐய்யா, சபரி மலைக்கு மாலை போட்டிருக்கு, காணிக்கை கொடுங்கய்யா”
வித விதமான தேவைகள் … வேண்டுதல்கள் …
என்ன சொல்லிக் கேட்டாலும், ராகவ் அஞ்சோ பத்தோ கொடுக்காமல் வரமாட்டான். சில சமயங்களில் அது ஐம்பது , நூறு எனப் போவதும் உண்டு, ஆனால் இந்த விஷயத்தை பொறுத்த வரை அமுதாவின் பார்வையே வேறு.
“ராகவ், இதெல்லாம் என்கரேஜ் பண்ணாதே. இதுல ரொம்ப பேர் பிராடு பேர்வழிங்க. இது ஒரு பெரிய இல்லீகல் நெட்ஒர்க் , தெரியுமா” என்பாள்.
“இதுல என்ன பெரிய தப்பு ? நான் குடுக்கிற பத்து இருபதுல என்ன பிரச்சனை வரும் ? அவங்க வயித்துப் பசிக்குப் பிச்சை எடுக்கிறாங்க. இந்த உலகத்தில பசி எல்லாருக்கும் ஒண்ணுதானே. பசிக்கறபோது சாப்பிட பணம் இல்லங்கறது எவ்வளவு பெரிய கொடுமை, யோசிச்சிப் பார்”.
“அப்படி இல்ல ராகவ். பசிக்கறவங்களுக்கு உதவி பண்ணனும்னா சாப்பாடு வாங்கிக்கொடு. பணம் கொடுக்காதே. உன் நல்லா மனசை, செய்யற உதவிய அவங்க சுயலாபத்துக்குப் பயன்படுத்தி உன்னை ஏமாத்தறாங்க, புரிஞ்சிக்கோ ” என்பாள்.
அவள் சொல்வதிலும் கொஞ்சம் நியாயம் இருப்பது போல் தோன்றியது. ஆனால்,பிச்சை கேட்பவர்களுக்கு எல்லாம் சாப்பாடு மட்டும் வாங்கிக் கொடுத்துத் தீருமா? உணவைத் தாண்டியும் மனிதனுக்குத் தேவைகள் இருக்கத்தானே செய்கின்றன ? பணம் இல்லாமல் இந்த உலகில் என்ன தான் நடக்கும்?
ஆனாலும் அமுதா சொன்னதற்காக உணவு பொட்டலங்கள் வாங்கி, பூக்காரப் பாட்டி, இளநீர் விற்கும் தாத்தா, குப்பை அகற்றும் கார்பரேஷன் தொழிலாளிகள் என்று எல்லோருக்கும் கொடுப்பான். அதை வாங்கும்போது அவர்கள் கண்களில் தெரியும் சந்தோஷம் அப்படியே மனதை நிறைத்துவிடும்.
சில சமயம் வினோத அனுபவங்களும் ஏற்பட்டதுண்டு.
ஒருமுறை பிஸியாக குப்பையைக் கிளறிக் கொண்டிருந்த ஒருவரிடம் உணவு பொட்டலத்தை நீட்டிய போது, ” என்ன சார் இது, சாப்பாடா ? வெறும் இட்லினா வேண்டாம் ” என்று சொல்லிவிட்டு பிறகு அதைத் திறந்து பார்த்து , ‘ஓ கேசரி , பொங்கல் எல்லாம் இருக்கா’, என்று வாங்கிக்கொண்டார்.
யார் சொன்னது, “பெகர்ஸ் காண் ட் பி சூஸெர்ஸ்” என்று.
ஆனாலும் அவன் கேட்ட அதட்டல் தோரணையில் கொஞ்சம் ஆடித்தான் போனான். இதை வந்து அமுதாவிடம் சொன்ன போது அவள் விழுந்து விழுந்து சிரித்தாள்.
அடுத்தடுத்துத் தோன்றிய எண்ண அலைகளில் தொலைந்து போய், அப்படியே உறங்கிப் போனான்.
காலையில் அலுவலகம் செல்லும் போது, தன்னிச்சையாக அந்த சிக்னலில் கண்கள் அவளைத் தேடின. ஆனால் மனதுக்குள், கடவுளே, நான் அவளைப் பார்க்கக் கூடாது என்றும் நினைத்துக் கொண்டான்.
அலுவலகத்தில் வேலை சரியாக இருந்தது. ஆனாலும் இடை இடையே நான் நேற்று செய்தது சரியா என்ற கேள்வி மனதை அரித்துக் கொண்டே இருந்தது.
ஒரு கட்டத்தில், இந்த கேள்விக்குத் பதில் தெரிந்து மனம் சமாதானம் ஆகாவிட்டால் வேலையைத் தொடர முடியாது போல இருந்தது.
காலண்டர் சாயங்காலம் மீட்டிங் ஒன்றும் இல்லை என்று சொல்லியது. நல்லதாய் போச்சு.
அம்மாவைப் பார்த்து விட்டு அப்புறம் வீட்டுக்குப் போகலாம் என்று முடிவு செய்து காரை எடுத்தான்.
நீ இன்னிக்கு வருவனு தோனிச்சுடா என்றபடியே வரவேற்றாள் அம்மா. எப்படி தெரியும் என்ற கேட்க நினைத்து பின் ஒன்றும் சொல்லாமல் சிரித்தான்.
சூடான காபியின் நறுமணம் காற்றில் மிதந்து வந்தது. அந்த வாசனையை அப்படியே உள்ளிழுத்தான்.
காபியை சுவைத்தபடியே நடந்ததை எல்லாம் சொல்லி முடித்தான்.
அம்மா பொறுமையாக கேட்டுக் கொண்டாள்.
பிறகு, ஒரு கணம் அவனை ஆழமாகப் பார்த்து, “ராகவா, இந்த உலகத்தில பெரிய விஷயம் என்ன தெரியுமா?
அன்பும் கருணையும் தான்.
அந்த அம்மா உன் கிட்ட யாசகம் கேட்ட போது உன் இதயத்தில ஒரு நிமிஷம் அன்பும் கருணையும் வந்துது பார், அது தான் நிஜம். அது தான் கடவுள்.
அவங்க நல்லவங்களா கெட்டவங்களா, என்ன ஏமாத்தினாங்களா, நான் பண்ணினது சரியா, தப்பா, இதெல்லாம் மாறிக்கிட்டே இருக்கற மனசோட ட்ரிக்ஸ். இன்னிக்கு சரின்னு தோணும், நாளைக்கே தப்புனு தோணும்.
நீ அதுக்கு ரொம்ப முக்கியத்துவம் குடுக்காதே. இறந்த காலமும் எதிர் காலமும் நம்ம மனசுல தான் இருக்கு. நிஜத்துல இல்ல.
அதனால நீ அத உன் தலையில சுமக்க வேண்டிய அவசியம் இல்ல, புரிஞ்சுதா?“ என்றாள்.
அவள் சொன்ன விதத்தில் வாழ்வின் அத்தனை சூட்சுமங்களும் புரிந்தது போல் இருந்தது. மனம் நொடியில் லேசாகியது.
அதன் பிறகு அவன் அதை மறந்தே போனாள்.
சில வாரங்களுக்குப் பிறகு ஒரு நாள் மதியம் ஆஃபீசிலிருந்து கிளம்பி வீட்டிற்குப் போய்க் கொண்டிருந்தான்.
அடையார் சிக்னலில் நின்ற போது, அவனுக்கு முன்னால் இருந்த காருக்கு அருகில் ஒரு பெண் நின்றிருந்தாள். தள்ளி இருந்ததால் முகம் சரியாகத் தெரியவில்லை.
இனம் புரியாத ஒரு உணர்வு சட்டென்று மனதில் படர்ந்தது.
“இறந்த காலமும் எதிர் காலமும் நம்ம மனசுல தான் இருக்கு. நிஜத்துல இல்ல. அதனால நீ அத உன் தலையில சுமக்க வேண்டிய அவசியம் இல்ல, புரிஞ்சுதா.”
அம்மாவின் வார்த்தைகள் மனதில் ஒலித்தன.
ராகவ் எஃப் எம்மை பெரிதாக்கி விட்டு சிக்னலை நோக்கி விரைந்தான்
********
இறந்த காலமும் எதிர் காலமும் நம்ம மனசுல தான் இருக்கு. நிஜத்துல இல்ல. அதனால நீ அத உன் தலையில சுமக்க வேண்டிய அவசியம் இல்ல, புரிஞ்சுதா.”
பகவான் வாக்கு
LikeLike
Lovely Deepa Mahesh, especially I like the climax as you had left it to the reader. Please keep up the good work.
LikeLike
Pingback: வாசகர் கருத்து | குவிகம்