மொழி பெயர்ப்பு சிறுகதை : மலையாளம்
மூலம் : எஸ்.கே. பொட்டேகட்
ஆங்கிலம் : வி.அப்துல்லா
தமிழில் : தி.இரா.மீனா
மொட்டையாக இருந்த ஒரு சிறு குன்றைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்த அந்தச் சிறிய ஆறு பார்ப்பதற்கு ஓர் உருவமற்ற பெரிய குடிசை போலத் தோற்றமளித்தது.
வலிமையான காட்டு மரங்களின் தாழ்வான கிளைகள் பூமியில் சரிந்து கிடந்தன.மரங்களின் அடியில் நெருக்கமாகப் படர்ந்திருந்த கொடிகளால் ஆற்றின் கரை முழுவதும் மறைந்திருந்தது.பகல் நேரத்திலும் கூட பயம் தரும் கருமை பரவியிருந்தது.
அந்தச் சிற்றாற்றின் நடுவில்,ஆழமான பகுதியில் ஒரு பெரும் பாறை மூழ்கியிருந்தது.முதியவர்கள் அதை ’தூக்குப் பாறை ’ என்றே சொல்வார் கள். பழைய நாட்களில் தண்டனைக் குற்றவாளிகளின் தலை அந்தப் பாறையின் மேல்தான் துண்டாடப்படும் என்று சொல்லப்பட்டது.அந்த இடத் தில் தண்ணீரின் நிறம் வித்தியாசமாகத் தெரிவதால் பொதுவாக யாரும் அங்கு நீராடுவதில்லை.
ஆற்றின் அருகிலான குன்றின் அருகில் பேரீச்சை மரம் ஒன்றிருந்தது. அதன் உச்சியில் எரியும் நெருப்பு போன்ற சிவந்த ஒரு குறிப்பிட்ட வகை கொட்டை தெரிந்தது. அது மயக்கம் கொள்ள வைக்கும் ஒரு வித நறு மணத்தை அப்பகுதியில் பரப்பிக் கொண்டிருந்தது.அந்தப் பனையின் அருகே தனியான ஒரு கம்மட்டி மரம் நின்றிருந்தது. மரத்தின் ஒரு பகுதி காய்ந் தும், முருக்கிக் கொண்டும் பாரிச வாயுவால் பாதிக்கப்பட்ட கால் போலி ருந்தது.அதன் கிளைகளில் தொங்கிக் கொண்டிருந்த பழைய கட்டுகள் கருமையான தண்ணீரில் பிரதிபலித்தன.அவை பெரும்பாலும் வீடுகளில் செம்மறியாடுகள், ஆடுகள் மற்றும் பசுக்கள் கன்று போட்ட போது வெளிப்பட்ட நஞ்சுக் கொடிகளாகும்.அருகில், ஈரத்தால் அரிக்கப்பட்டு பெருநோயாளி போலத் தொங்கிக் கொண்டிருந்த ஒரு கிளை, மறைந்து போன மரத்தின் வேர் அடிச்சுவடாக இருக்கலாம். முழுவதும் அரிக்கப் பட்ட நிலையில் , பெரிய கள்ளிச் செடி ஒன்று ஒரு குதிரையின் மெலிந்த விலா எலும்புக் கூடு போலக் காட்சியளித்தது. சுற்றிலும் கொத்துக்களாக இருந்த கென்னா, பல பாம்புகள் தம் தலையைத் தூக்கியது போன்ற தோற்றத்தைத் தந்தது.
மண்டிக் கிடந்த செடிகளினூடே ,ஒரு பெரிய பலாமரம் வானத்தைப் பார்த்து தலை தூக்கி நின்றிருந்தது.
அந்த ஆழமான ஆற்றில், நீர் அதிகம் இல்லாத சிறிய கால்வாய் ஒன்றின் கலப்புமிருந்தது. அங்கு ஒரு தோணி சென்று கொண்டிருந்தது.
அது மதிய நேரம்.சூரியன் நெருப்பாக தகிக்க, ஆற்றுமணல் தொடக் கூட முடியாதவாறிருந்தது.
மாதவி அம்மா தன் மகனைக் குளிப்பாட்டி , தலையைத் துவட்டி விட்டு, அவன் முகத்தை மெல்ல நீவினாள். கோவணம் என்று அழைக்கப்படும் சிறிய சிவப்பு பட்டு இடைத் துணியை அவனுக்கு அணிவித்தாள்.அது நீண்ட, அகலக் குறைவான துணி .அவன் பிறப்புறுப்பையும், பின்புறத்தை யும் பாதுகாப்பாக மறைத்து, இடையைச் சுற்றி நாடாவால் கட்டுவதாகும். அந்த ஆறு வயதுச் சிறுவன் மிகப் பணிவான தோற்றமுடையவனாக இருந்தான்.தேக்கு மர நிழலின் கீழ் நடந்து அங்குள்ள பாறையில் உட்கார்ந்து தன் கால்களை நீட்டிக் கொண்டான்.
ஐந்து நிமிடங்கள் கழிந்தன.அவன் கால்கள் ஆட்டம் போடத் தொடங்கின. குழந்தைப் பிராயம் என்பது பாதரசத் துளி போன்றது.யாராலும் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடியாது.
அந்தச் சிறுவனின் அகன்ற விழிகள் எங்கும் நிலைக்காமல், பரபரவென்று அலைந்து கொண்டிருந்தன.தன் எல்லா விரல்களும் இருக்கிறதா என்று எண்ணிப் பார்த்து உறுதி செய்து கொண்டான்.தனது ஆட்காட்டி விரலை நீட்டி தனது மூக்கு, முன்நெற்றி, நாசி ஆகியவற்றின் நீளத்தை அளந் தான்.பிறகு தன் ஒரு நாசித் துவாரத்தை மூடிக் கொண்டு ,மற்றொன்றால் சுருதி எழுப்பி ரீங்காரம் செய்தான்.இது போலச் சிறிது நேரம் செய்து விட்டு நிறுத்தினான்.தன் இரு கண்களின் மேல்புறத்தையும் ஒவ்வொரு விரலால் அழுத்திக் கொண்டு சுற்றியுள்ள சிதைவடைந்திருக்கிற நிலப் பரப்பைப் பார்த்தான்.மரங்களும்,புதர்களும் இரட்டையாகத் தெரிவதைப் பார்த்து மகிழ்ந்தான்.திடீரென அவனுக்கு ஒரு யோசனை வந்தது.
“ அம்மா, நான் கால்வாயில் போய் வீடு கட்டி விளையாடட்டுமா ?” அம்மாவைக் கேட்டான்.
“இல்லை,இல்லை, சேற்றில் விளையாடக் கூடாது . உன்னி,அங்கேயே அமைதியாக உட்கார்ந்திரு.மோதிரத்தைத் தொலைத்து விடாதே !”
உன்னி அழகு காட்டினான்.
தன் மடியிலிருந்த அந்த மோதிரத்தை எடுத்தான்.விலையுயர்ந்த சிவப்புக் கல் பதித்த தங்க மோதிரம்.தான் குளித்து முடித்துத் திரும்பும் வரை பத்திரமாக வைத்திருக்கும்படி அம்மா அவனிடம் ஒப்படைத்திருந்தாள்.
தன் ஒவ்வொரு விரலிலும் அவன் மோதிரத்தை போட்டுப் பார்த்தான். இறுதியில் வலதுகை கட்டைவிரலில் போட்ட போது அது கச்சிதமாகப் பொருந்தியது.அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் ,கைகளை மடித்து நெஞ்சில் வைத்து ,கண்களை இறுக மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தான்.
பின்பு கண்களைத் திறந்து நாக்கால் மூக்கின் நுனியைத் தொட முயற்சித் தான். வாயில் காற்றை நிரப்பிக் கொண்டு பாம்பு போன்று ’ புஸ்’ என்று சீறினான். தான் கேள்விப்பட்டிருந்த சில யோகா பயிற்சிகளைச் செய்ய முயற்சித்தான்.
“அம்மா, இங்கே வெயில் கொளுத்துகிறது.நான் மூங்கில் மரத்தடியில் உட்காந்து கொள்ளட்டுமா ? “ அம்மாவிடம் கேட்டான்.
“ஹூ..ம்” துணிகளைத் துவைத்துக் கொண்டு தன் உலகத்தில் ஆழ்ந்தி ருந்த மாதவி அம்மா ராகமாகச் சொன்னாள்.
எழுந்து நொண்டி போல பாசாங்கு செய்து நொண்டியடித்துக் கொண்டே அவன் மூங்கில் மரத்தடிக்குப் போனான். அம்மாவின் நேரடிப் பார்வையிலி ருந்து விடுபட முடிந்தது.
மதியநேரச் சூரியனின் பிரதிபலிப்பு, மூங்கில் மரத்தின் அடியையொட்டிக் கடப்பதான அந்தக் கால்வாயின் ஒரு சேற்றுத் தண்ணீர்க் குழியில் தெரிந்தது.
ஒரு தட்டான் நீரிலிருந்து எழுவது போல் குதித்து, தண்ணீரின் மேற்பரப் பைத் தொட்டு நீச்சலடித்து , மேலெழுந்து பறந்தது.
தட்டானின் அசைவுகள் உன்னியின் கண்களைக் கவர்ந்தன.கழுத்தை வளைத்து , கண்கள் சாய்ந்திருக்க அவன் அதைப் பார்த்தபடி மிக மெது வாக எழுந்தான்.அது மிகக் கவர்ச்சியான இளம் தட்டான். அதன் வாலில் தெரிந்த சிவந்த மினுமினுப்பு அவனுடைய சிவப்பான கோவணத் துணி போல இருந்தது.தட்டான்களைக் கொண்டு மிகச் சிறிய கூழாங்கற்களைத் தூக்க வைக்கும் வித்தையை அறிந்தவன் அவன்.
தட்டானை நோக்கி அவன் இரண்டடி வைக்க,அது மிக வேகமாக அவன் முன்னால் பறந்து ஒரு செம்பருத்திப் புதரின் மேல் உட்கார்ந்து விட்டது.
தன் வலது கையை நீட்டி,பெரு விரலையும், ஆட்காட்டி விரலையும் சேர்த்து ஒரு ஜோடி இடுக்கி வடிவமாக்கிக் கொண்டு மிக மெதுவாக செம்பருத்திச் செடி புதரை நோக்கிப் போனான்.புதரருகே அவன் நெருங் கிய போது தட்டான் பறந்து விட்டது.அருகிலுள்ள எதிலும் உட்காராமல் போய்விட்டது.
எதுவும் உன்னியை அச்சுறுத்தவில்லை.ஒரு வித உறுதியோடு அவன் அதன் பின்னால் போனான்.
சிறிய காட்டுப்பூக்கள் கொத்தாகப் பூத்திருந்த புதரில் அது இருப்பதை அவன் பார்த்துவிட்டான்.
படர்ந்திருந்த செடிகளினூடே ஊர்ந்து தன் கைகளை அவன் நீட்டிய நேரத் தில் ,அது தான் உட்கார்ந்திருந்த இலையிலிருந்து பறந்து கம்மட்டி மரத் தின் மற்றொரு கிளைக்குப் போய்விட்டது.பிறகு கணப்பொழுதில் அந்த மரத்திலிருந்து பறந்து காடாகப் படர்ந்திருந்த கன்னா செடியில் அமைதி யாக பிரார்த்தனை செய்வது போல உட்கார்ந்து விட்டது
அது ஏறுமாறாகப் பறந்ததைப் பார்த்த உன்னி , தன் கையைத் தூக்கி, உதட்டைக் கடித்து அதைச் சபித்தான்.பிறகு அதை நன்றாகப் பார்ப்பதற்கு வசதியாகக் கண்களை இடுக்கிக் கொண்டான் அது முழுமையாக ஓய்வெ டுக்கும் வரை காத்திருந்தான்.ஆனால் அது அங்கிருந்து பறந்து மரத்தின் இன்னொரு கிளைக்குப் போய்விட்டது.
பலாமரத்தின் கி்ளைகளினூடே சூரிய ஒளி அகலமான வட்டமாகப் பரவி்யிருந்தது. பேரீச்ச மரத்தின் உச்சியில் அந்த சிவப்புக் கொட்டையி்ன் ஒளி தெளிவாகவும், நேராகவும் இருக்க, கள்ளியின் எலும்பு வடிவமும், கம்மட்டி மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த கட்டுக்களும் தெரிந்தன.
பலா மரத்தின் வேரிலிருந்த பொந்தில் திடீரென அசைவு தெரிந்தது. மரத்தின் வேர் பகுதியில் காய்ந்த இலைகளின் அசைவும், சலசலப்பும் ஏற்பட்டது.ஒரு ராஜநாகப் பாம்பு ,எட்டடி ராஜநாகம் என்று பொதுவாகச் சொல்லப்படும் பாம்பு அந்தப் பொந்திலிருந்து மெதுவாக வெளியே வந்தது. மரத்தின் சொர சொரப்பான மரப்பட்டையில் சுருண்டு, நழுவி மற்றொரு புறத்திற்குப் போனது.
பலாமரத்தின் அருகிலிருந்த கம்மட்டி மரத்தில் தட்டான் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தது.உன்னியின் மெல்லிய கைகள் அதை நோக்கி நகர்ந்தன. அந்த நேரத்தில் அவனுடைய உடல் ,ஆத்மா இரண்டின் கவனமும் மரத் தின் கிளையிலேயே ஆழ்ந்திருந்தது.இந்தப் பரந்த உலகில் தட்டானின் சிவப்பு வால் மட்டுமே அவனுக்குத் தெரிந்தது.
சூரிய வெளிச்சம் அவன் கையில் உருகிய வெள்ளியாய் விழுந்தது. மோதிரத்தில் பதிந்திருந்த சிவப்புக் கல் ஒளிர்ந்த போது, இரண்டு சிறிய கண்கள் சிவப்பு ஸ்படிக பட்டன்கள் போன்று மரத்தின் உச்சியி்லுள்ள பழத்தின் பின்னால் பிரகாசிப்பது போலிருந்தது.அந்தப் பாம்பு பழத்தின் நறு மணத்தை உறிஞ்சிக் கொண்டிருந்தது.மோதிரத்திலிருந்த கல்லின் நிறம் பாம்பைக் கவர்ந்தது.கண்கள் ஒளிவிட ,அது தன் தலையை உயர்த்திக் காற்றை உள்வாங்கியது.அதன் முழு உடலும் புடைக்க நெளிந்து தன் தலையை விரித்தது.
அந்தத் தட்டான் ஓய்விடத்திலிருந்து பறக்கவில்லை.உன்னியின் கை தாழ் வாகிச் சரியான அளவுடன் முன்னோக்கி நகர்ந்தது.
திடீரென அந்தத் தட்டான் அசைந்து சிறகடித்து ,மெதுவாக எழுந்து, அந்த இடத்தையே இரண்டு மூன்று முறை வட்டமடித்து மீண்டும் அங்கேயே உட்கார்ந்தது. மதிய வெயிலின் சுகத்தில்,அது மந்திரித்த இடம் போல அதை விட்டு வெளியேற மனமில்லாமல் இருப்பது போலிருந்தது.
அந்த நாகம் இன்னமும் அசையாமல் அந்த மோதிரத்திலுள்ள சிவப்புக் கல்லையே வெறித்துக் கொண்டிருந்தது.
குறடு வடிவத்தில் இருந்த அந்த மென்மையான விரல்கள் காற்றில் விறைத்தன.
ஒரு குறிக்கோளோடு உன்னியின் விரல்கள் நகர்ந்தன.இம்முறை அவை முன்னோக்கிப் போகவில்லை.அவன் தன் வியூகத்தை மாற்றிக் கொண் டான்.அவன் கை மெதுவான வட்ட வீச்சாக வலது புறத்தில் பாம்பின் வாய் இருக்கும் திசையில் நகர்ந்தது.உன்னியின் கை அசைவைத் தொடர்ந்து, கல்லின் பிரகாசத்தைப் பார்த்தபடி பாம்பு மிக மெதுவாகத் தன் தலையைத் திருப்பியது. மின்னும் அந்த சிவப்புக் கல் லேசாக முன்னே வர ,அதை முட்டுவதற்குத் தயாராகத் தலையைப் பின்னுக்கிழுத்தது. சூரிய ஒளியின் மயக்கத்தில் தட்டான் செங்குத்தாகப் பறந்தது. விரல்கள் மயிரிழையில் தட்டானைத் தொட்டன…ஒரு கணம் பேரமைதி…கண்ணிமை மூடுவது போல விரல்கள் ஒன்றாகின. தட்டானின் வால் , காய்ந்த ஓலை போல ஒரு சலசலப்போடு விரல்களுக்கிடையே வந்து, சிறகுகள் படபடத்தபோது உன்னி ஒரு சப்தமேற்படுத்தி விட்டு மின்னலைப் போல மறைந்து போனான். ஒரு கணத்தில் எல்லாம் முடிந்து விட்டது.
ஒரு ரப்பர் பாம்பைப் போல ராஜநாகம் திரும்பி ஒரு சுற்றுச் சுற்றியது. முழுவதும் முட்டாளானதிலும்,வெறுப்பிலும் ,அதன் தலை சுருங்கியது. தன் நாக்கை வெளியே நீட்டி,சறுக்கியபடி மரத்தை விட்டிறங்கியது. கம்மட்டி மரத்திலுள்ள கட்டுக்களை வெறுப்பாக முகர்ந்து , தரையில் இறங்கி, தொழுநோயாளி போலிருந்த மரத்தின் வேரில் நகர்ந்து, கள்ளியைக் கடந்து , கன்னா தண்டுகளினூடே மறைந்தது.
————————————–
நன்றி : Contemporary Indian Short Stories Series III Sahitya Akademi 2016
எஸ்.கே .பொட்டேகட் [ 1913 –1982 ]
சங்கரன் குட்டி பொட்டேகட் என்றழைக்கப்படும் எஸ்.கே .பொட்டேகட் [மலையாள இலக்கிய உலகின் மிகச் சிறந்த படைப்பாளிகளில் ஒருவர். 1980 ம் ஆண்டு Oru Desathinte Katha [The Story of a Locale] என்ற படைப்பிற்காக ஞானபீட விருது பெற்ற இவர், நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்ற பன்முகப் படைப்பாளி. இவரது படைப்புகள் ஆங்கிலம், இத்தாலி, ருஷ்யம், ஜெர்மன் ,செக் முதலிய அயலக மொழிகளிலும், பல இந்திய மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. பெரும்பான்மை நாடுகளுக்கு பயணித்து அற்புதமான பயண இலக்கிய நூல்களைத் தந்தவர்.
’ஆற்றின் கரையில் ” என்ற இந்தச் சிறுகதை துடிப்பான ஒரு சிறுவனின் இயல்பான மனநிலையையும்,அதன் பின்னணியிலான செயல்பாட்டையும் பிரதிபலிப்பதாகும். தட்டானைப் பிடிக்க விரும்பும் சிறுவனின் அணுகு முறை, ராஜநாகம் தீண்டி அவன் இறப்பது என்று சிறுகதையின் கருவை இரண்டு வரிகளுக்குள் அடக்கி விடலாம். ஆனால் இச்சிறுகதையின் ஒரு வார்த்தையைக் கூட நம்மால் விலக்கி விட முடியாது என்று ஆணித் தரமாகச் சொல்லுமளவிற்கு வார்த்தைப் பிரயோகங்கள் இயற்கையான நிகழ்வுகளோடு யதார்த்த உணர்வுகளாக வெளிப்பட்டிருக்கின்றன.’ ஒரு சோறு பதமாக ’ பொட்டேகட்டின் இச்சிறுகதை அமைந்திருக்கிறது என்பது மிகையல்ல.