நா சொக்கன்
நா. சொக்கன் (பிறப்பு: ஜனவரி 17) என்கிற “என். சொக்கன்” என்று அறியப்படும் நாகசுப்பிரமணியன் சொக்கநாதன் பெங்களூரில் வசிக்கிறார். மென்பொருள் துறையில் பணியாற்றி வருகிறார். 1990 முதல் எழுதத் தொடங்கிய இவர் தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதுகிறார். பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகள், கூகுள், பெப்சி, அமுல் போன்ற பிரபல நிறுவனங்களின் வெற்றிக் கதைகள் என புனைவு அல்லாத பலதரப்பட்ட படைப்புகளோடு நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும் சில புதினங்களும் எழுதியுள்ளார்.
**** **** ****
இவரது கனவான்களின் ஆட்டம் எனும் சிறுகதை …
இந்தியாவில் கிரிக்கெட் பிரபலமாக இருப்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். ஆனால் எங்கள் ஏரியாவில் பலருக்குக் கிரிக்கெட் ஆர்வம் ஏற்பட்டதற்கு ஒரே காரணம், சச்சினோ, தோனியோ அல்ல, நிஷா! ’சேட்டுப் பொண்ணு’ என்று செல்லமாக அழைக்கப்படுகிற நிஷா.
என்று தொடங்குகிறது.
நடைப்பயிற்சி செய்வோர், கால்பந்து ஆடுவோர், நடிவ்ல் வலைகூடக் கட்டாமல் வாலிபால், பேட்மிட்டன் ஆடுவோர் என காணப்படும் காந்தி பார்க்கில் ஒரு பக்கத்தில் கதை சொல்லியும் அவர் தோழர்களும் கிரிக்கெட் ஆடும் கோஷ்டியினர்.
முதல் முறையாக அந்தப் பூங்காவில் கால் பதிக்கும் நிஷா. நீராக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்கும் கோஷ்டியினரை நோக்கி வருகிறாள்.
ஹாய் எவ்ரிபடி, ஐ யாம் நிஷா’ என்றாள் பக்கா பிரிட்டிஷ் உச்சரிப்பில். நாங்கள் பதில் சொல்லத் தோன்றாமல் திகைத்து நின்றோம். காரணம், ‘காந்தி பார்க்’ முழுக்க முழுக்க சேவல் பண்ணைதான். இங்கே பெண்கள் நுழைகிற வழக்கமே கிடையாது. அதுவும் நிஷாபோல் ஒருத்தி நுனி நாக்கு ஆங்கிலமும் இறுகப் பிடித்த ஜீன்ஸ், டிஷர்ட்டுமாக வந்து நின்றால் என்னத்தைப் பேசுவது? பராக்குப் பார்க்கதான் முடியும். நிஷா அதைப்பற்றிப் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.
நிஷாவிற்கு கிரிகெட் ஆடுவதில் விருப்பமில்லை. வேடிக்கை பார்க்கத்தான் பிடிக்குமாம். தினமும் இவர்கள் ஆடும் இடத்திற்கு வருகிறாள். கையிலிருக்கும் ஆங்கில நாவலை மூடிவைத்துவிட்டு விளையாட்டை ரசிப்பாள்.
டாஸ் போடுவதில் ஆரம்பித்து ஒவ்வொன்றுக்கும் கை தட்டுவாள், பவுண்டரிகளுக்கும் சிக்ஸர்களுக்கும் எகிறிக் குதித்துப் பாராட்டுவாள், அதற்காகவே நாங்கள் அதிகத் தீவிரத்துடன் விளையாட ஆரம்பித்தோம்.
ஃபுட்பாலும் பாட்மிட்டனும் ஆடிக்கொண்டிருந்தவர்களும் கிரிக்கெட்டிற்கு கட்சி மாற, பூங்கா முழுவதையும் கிரிக்கெட் ஆக்கிரமித்தது. முறையாக அணிக்கு பதினொன்று ஆட்டக்காரர்கள் என்கிற விதிகள் எல்லாம் அமலுக்கு வந்தன. திறமைக்கு மட்டுமே மரியாதை. சரியாக ஆடத் தெரியாதவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
இத்தனை மாற்றத்துக்கும் ஒரே காரணம், நிஷாதான். அவளுடைய கைதட்டலுக்காகவும் பாராட்டுக்காகவுமே ஒவ்வொருவனும் குடம் குடமாக வியர்வை சிந்தினான்
நிஷா யாரிடமும் தனிப்பட்ட ஆர்வம் காண்பிப்பதில்லை. இரண்டு அணிகளுமே ஒன்றுதான். விளையாட்டை ரசிப்பதுதான் முக்கியமாம். மேலும் யார்கர், கவர் டிரை, தூஸ்ரா போன்ற கலைச்சொற்களை உபயோகிக்கிறாள்.
பயிற்சிமட்டுமில்லை, நாங்கள் விளையாடப் பயன்படுத்திய பேட், பந்து, ஸ்டம்ப் எல்லாமே அரைகுறைதான். விக்கெட் கீப்பருக்குக் கை உறைகூடக் கிடையாது. ரன்னர் பேட்டுக்குப் பதிலாக ஒரு ப்ளைவுட் கட்டையைதான் செதுக்கி வைத்திருந்தோம். ஆனால் இதையெல்லாம் தாண்டி, நிஷா எங்களுடைய விளையாட்டை ரசித்தாள்.
தவிர, இந்த ஆட்டக்கரனிடம் ’ஸ்பீட்’, ‘அக்யூரஸி’, ‘ரன்னின் பிட்வீன் விக்கெட்’, ‘ஃபீல்டிங் திறமை’ யாரிடம் அதிகம், யாரிடம் குறைவு என்று எடைபோட்டுப் பேசுகிறாள். இப்படித் தவணை முறையில் அவள் வழங்கிய நிபுணத்துவம் ஆட்டகாரர்களின் ஆர்வத்தை வளர்க்கிறது. நிஷா யாரிடமும் குறிப்பட்ட அக்கரை காண்பிப்பதில்லை. விளையாடுபவர்களும் அவளிடம் அத்துமீறிப் பழகவில்லை. ஆசை இருந்தாலும் தைரியம் இல்லை.
எல்லாம் மாறுகிறது
போன மாதத்தில், தர்மன் வந்தபிறகு. இந்தத் தர்மன் எங்கிருந்து வந்தான் என்று யாருக்கும் தெரியவில்லை. திடீரென்று ஒருநாள் பூங்காவின் தெற்கு மூலையில் ஒரு கூடாரம் முளைத்தது. அதற்கு வெளியே அடுப்பு மூட்டியபடி ஒரு பெண்ணும் அவளுடைய காலைச் சுற்றிக்கொண்டு சில பொடியன்களும் தென்பட்டார்கள். சற்றுத் தொலைவில் பீடி புகைத்தபடி ஒரு கல்லின்மீது உட்கார்ந்திருந்தான் இவன். அழுக்கு உடம்பு, பரட்டைத் தலை, கிழிந்த சட்டை, செருப்பில்லாத கால் என்று அந்தக் காலச் சினிமாவிலிருந்து நேராக இறங்கிவந்த ஏழைபோல இருந்தான்.
விளையாட்டை ஆரம்பிக்க முஸ்தீபுகள் செய்துகொண்டிருக்கும்போது தர்மன் தன்னையும் ஆட்டத்தில் சேர்த்துக்கொள்ளச் சொல்கிறான். இவர்களுக்கு விருப்பமில்லை. எரிச்சலோடு பார்க்கிறார்கள்.
ஏய், நம்ம க்ளப்புக்குப் புது மெம்பர்’ என்றாள், ‘சாரையும் ஆட்டத்துல சேர்த்துக்கலாம், என்ன சொல்றீங்க?’ எங்கள் எரிச்சல் இன்னும் அதிகரித்தது. எங்களையெல்லாம் ‘வாடா, போடா’ என்று விரட்டுகிற நிஷா இந்த அழுக்குப்பயலைப்போய் ‘சார்’ என்கிறாள்.
நிஷாவுக்காக இந்தப் பயலை உப்புக்குச் சப்பாணியாக ஆட்டத்தில் சேர்த்துக் கொள்கிறார்கள். எங்கேயாவது பவுண்டரி லைனில் ஃபீல்டிங் நிறுத்தி வைத்து அவன் பாட்டுக்குப் பந்தைப் பொறுக்கிக்கொண்டு கிடக்கட்டும் என்று விட்டுவிடுகிறார்கள்.
தன் பக்கம் வந்த பந்தை நோக்கி ஓடியவன் எப்போது குனிந்தான், பந்தை எடுத்து வீசினான் என்று கவனிக்குமுன்பே குறி வைத்து வீச, ‘ஸ்டம்ப்’ எகிறி, ‘ரன் அவுட்’ ஆகிறது.
பந்து வீசும்போதும் அசத்துகிறான்
அது நிச்சயம் ‘பவுலிங்’ இல்லை, ‘த்ரோயிங்’தான். ஆனால் அந்த வேகம், யாருமே எதிர்பார்க்காதது. பேட்ஸ்மேன் இலக்கு புரியாமல் எங்கோ மட்டையைச் சுழற்றிவிட்டுத் திணற, பந்து ஸ்டம்பைத் தாண்டி எகிறிப் பின்னால் நின்ற விக்கெட் கீப்பர் மணவாளன் கையைச் சுட்டுவிட்டுப் பறந்தது.
தர்மன் வீசும் பந்துகள் விக்கட்டைச் சாய்க்கிறது. அல்லது பின்னால் ‘காட்ச்’ ஆக மாறுகிறது. மட்டை பிடிக்கும்போது லேசா அடித்த பந்துகளும் ‘சிக்ஸர்’ ‘ஃபோர்’ எனப் பறக்கின்றன.
இவன் வெறும் ‘காட்டடி கோவிந்தன்’தானே? ஏனோ, நிஷாவுக்கு இந்த வித்தியாசம் புரியவே இல்லை. அவனுடைய பரம ரசிகையாகிவிட்டாள். எங்களுக்கெல்லாம் எப்போதாவது போனால் போகிறது என்று கைதட்டல் பிச்சையிடுகிற அவள், தர்மனைமட்டும் ஒரு பக்தையைப்போன்ற பரவசத்துடன் பார்த்துக்கொண்டிருந்ததும் எப்பப்பார் அவனையே பாராட்டிக்கொண்டிருந்ததும் எங்களுக்கு எரிச்சலைத் தூண்டியது.
நிஷாவின் போக்கு மற்றவர்களுக்குப் பொறாமையை ஏற்படுத்துகிறது. ஒருநாள் கதைசொல்லி தர்மனைத் தனியாகப் பார்க்கிறான். பூங்காவிலேயே இருக்கிறாயே, வேலை வெட்டி கிடையாதா என்று கேட்கிறான். அந்தப் பூங்காவில் காவலாளியாக இருக்கிறானாம் வருகின்ற சொற்ப வருமானத்தில் எப்படியோ குடும்பம் நடத்துகிறானாம்.
கதை சொல்லி அப்பாவிடம் பேசுகிறான். அவரது தொழிற்சாலையில் எட்டாயிரம் சம்பளத்திற்கு தங்குமிடத்தோடு காவலாளியாக நியமிக்க வைக்கிறான்.
தர்மனால் அவனுடைய அதிர்ஷ்டத்தை நம்பவே முடியவில்லை. கண் கலங்கப் புறப்பட்டுப்போனான்.
அதன்பிறகு, தர்மன் பூங்காப் பக்கமே வரவில்லை. நாங்கள் நிம்மதியாகவும் கண்ணியமாகவும் கிரிக்கெட் ஆடினோம்.
என்று முடிகிறது.
**** **** **** ****
இது போன்ற நடையில் பல சிறுகதைகள் வந்துவிட்டன. எனினும் இது ஒரு யதார்த்தமான கதை. நிகழ்வுகளும் என்ன ஓட்டங்களும் மிகையின்றி சொல்லப்படுகிறது. கதையின் தலைப்பும் கடைசி வரியும் உள்ளடக்கியிருக்கும் கிண்டல் ரசிக்க வைக்கிறது.
நா. சொக்கன் அவர்களின் யதார்த்த நடை, சிறுகதை எல்லையை மீறாமல் சிறப்பாக
போகிறது.
சபாஷ்.
LikeLike