ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி அப்ப ஆண்டி அரசனாவானா! ஆம் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்ற எங்கள் அப்பா அரசராகிறாரோ இல்லையோ, எங்களை எல்லாம் ராணி மாதிரி தான் வைத்திருந்தார்.
இப்ப நினைத்தால் கூட ஆச்சர்யமாக இருக்கிறது. எப்படி அவரால் தனது சொற்ப சம்பளத்தை வைத்துக் கொண்டு எங்களை எல்லாம் கரை ஏற்றினாரோ! ம் ஹூ ம். அவர் எங்கே ஏற்றினார்! ஏற்றியது பட்ட மகிஷி அல்லவா !
ஆம் படிதாண்டா பத்தினியாக இருந்த எங்கள் அம்மா, கணவரின் சொந்தங்கள் எல்லாம் பிரிந்த பிறகு, அப்பாவை பதவி உயர்வு ஏற்றுக் கொள்ளத் தூண்டினாள். அதோடு மாற்றலும் வருமென்று தெரிந்து இருந்தாலும் ஐந்து பெண்களை எண்ணி வரப்போகும் நாட்களை சமாளிப்போம் என்ற தைரியத்துடன் இதற்கு ஒப்புக்கொண்டாள். அடடே! சும்மா சொல்லக்கூடாது. ப்ரைம் மினிஸ்டர் ஆக வேண்டியவள். ஜாதகம் தப்பி எங்கள் அம்மா ஆனது எங்களின் பாக்கியம் . எங்களை முன்னே கொண்டு வர பட்ட பாட்டை எழுத ஒரு குயர் நோட் பத்தாது. அடேங்கப்பா! இரவில் நேரம் கழித்து காய்கறி வாங்கப் போவாள். கடைக்காரன் கொஞ்சம் விலை குறைத்து கொடுப்பான் என்று. கடை கடையாக ஏறி இறங்கி பேரம் பேசி பொருட்களை வாங்கி வந்து எங்களை ஒரு குறையும் தெரியாமல் வளர்த்த விதம் எனது மாமியார் வீட்டில் என்னை பாராட்டிய போது தான் புரிந்தது. ஓ அம்மா புராணம் இன்னொரு கதையில் சொல்வேன். அது ஒரு பெரிய அத்யாயம்.
இவ்விதம் தன் சாமத்திரியத்தால் எங்களுக்கெல்லாம் படி அளந்தாள் . ஒவ்வொருவரையும் நிறைய படிக்க வைத்து, நல்ல உத்தியோகத்தில் அமர வைத்து, சிறக்கத் திருமணமும் செய் வித்தாள்.
இதோ நான்காவது நான். திருமணத்திற்கு முன், திருமணத்திற்குப் பின் என்று கோலோச்சாத ராணியாகவே இருந்தேன். என் பிள்ளைகள் திருமணம், அவர்களின் குழந்தைகள் என்று ஆண்டவன் எனக்கு எந்த ஒரு குறையும் வைக்கவில்லை.
நல்ல நல்ல நண்பர்கள், நல்ல சுற்றம், வசதியான வீடு, பொருட்செல்வம், நல்ல சம்பந்திகள் என்று எல்லோரும் எல்லாமும் என்னைச் சூழ்ந்துள்ளன.
60 வயதான நான் என் வாழ்க்கையை எண்ணிப் பெருமிதம் கொள்கிறேன்,வளர்ந்த விதம், நான் வளர்த்த விதம் , நான் செய்த புண்ணியம். ஆனால் இப்பொழுது, ஒவ்வொரு நாள் விடியலும் எனக்கு சன்மானம் என்றேத் தோன்றுகிறது. ஒவ்வொரு பூ மலர்வதும் என்னைச் சந்தோஷப்படுத்தவே என்று தோன்றுகிறது .காலைக் கதிரவனும், மாலை சந்திரனும் இன்னும் என்னை ஆச்சர்யப்படு த்துகின்றன. இரவில் கதை கேட்டுக் கொண்டே மடியில் படுத்துறங்கும் பேரனையும், வீடியோவில் என்னுடன் பல மணி நேரம் உரையாடும் இன்னொரு பேரனையும் விட்டுப் பிரிய மனமில்லாமல் இருக்கிறேன். வாழ்க்கைக்கு அரத்தம் புரிய ஆரம்பித்துள்ளது. ஆனால் நேரம் வந்தால் போகத் தானே வேண்டும்.
அது வரை அது வரை ஒவ்வொரு நாளையும் எனக்கு ஆண்டவன் இடும் பிச்சையாக வணங்குகிறேன். .
அனாயாசேன மரணத்தை வேண்டி நிற்கும் நான் இன்று மேலும் ஒரு நாள் வாழ்வது உலக அதிசயமாக எனக்குப் படுகிறது.
நன்றி ஆண்டவா!