கிளினிக் ‘பல்புகள்’ !
மருத்துவர்கள் பார்க்கும் மனிதர்களில்தான் எத்தனை வகையான வேடிக்கை மனிதர்கள்!
அன்று கொஞ்சம் நிதானமாக மாலை கிளினிக் வந்தேன் – என் வீட்டுக்குக் கீழ்வீட்டு மாமாவுக்குத் தலை சுற்றல். சுமார் ஒரு மணிநேரம் அவர் என்னைச் சுற்றி வந்ததால், சற்று தாமதமாகி விட்டது. (ஒரு படத்தில் டி.ஏ.மதுரம் ‘தலை சுத்துது’ என்று சொல்ல, உடனே என்.எஸ்.கே., “முதுகு தெரியுதா?” என்பார்! யாருக்கு தலை சுற்றல் என்று சொன்னாலும் இந்த ஜோக் நிச்சயமாக என் நினைவுக்கு வரும்!)
மிகவும் தெரிந்தவர்கள், உறவினர்கள் ‘நோய்’ என்று வீட்டுக்கு வந்தால், அவர்களைப் பார்த்து, மருந்து எழுதிக் கொடுத்த பிறகு, அரை மணி நேரம் உலகளாவிய விவகாரங்கள் பேசிக்கொண்டிருப்பார்கள் – கார்ப்பொரேஷன் குப்பை லாரி குப்பைகளை வாரி இறைப்பதிலிருந்து, ‘ட்ரம்ப்’ ஏன் ஜெயிக்கவில்லை என்பது வரை அலசுவார்கள்! – எல்லாம் முடிந்து போகும்போது, திரும்பவும் ஒரு முறை ப்ரிஸ்கிருப்ஷனைக் காட்டி, “இன்னொரு முறை எப்படிச் சாப்பிடவேண்டும் என்று சொல்லிவிடுங்கள் – எனக்கு மறதி ஜாஸ்தி” என்பார்கள். நிரந்தரமாக ஒட்டிய புன்னகையுடன், திரும்பவும் சொல்லி, அனுப்புகின்ற நேரம், மாமாவைத் தேடிக்கொண்டு மாமி வந்துவிட, “இவருக்கு ஒண்ணுமில்லையே டாக்டர்?” என்ற கேள்விக்கு மீண்டும் ஒரு சுற்று (ஒரு முறை என்று அறிக!) பதில் சொல்லிச் சிரிக்க வேண்டியதிருக்கும்! திரும்பினால், வீட்டுக்காரம்மா எட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார்கள் – நேரமாகிறதே என்ற கவலைதான்! மாமி அகமும் முகமும் மலர, பிரதோஷம் முதல் அன்றைய டிவி சீரியலில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை வரை பேசுவதற்கு ஆள் கிடைத்த மகிழ்ச்சியில் இருக்க, எனக்கு கடிகாரம் பார்த்துத் தலை சுற்றத் தொடங்கிவிடும்!!
உள்ளே நுழைந்த பாட்டிக்கு எண்பது வயதிருக்கலாம் – அரக்கு நிறப் புடவையில் பச்சை நிற பார்டர். காதில் பெரிய பாம்படம், ‘எப்போது வேண்டுமானாலும் விழுந்துவிடுவேன்’ என்று பயமுறுத்தியது.
“கொழந்தைக்குப் பாக்கணும். வந்துகிட்டே இருக்காங்க” என்றபடி எதிரில் வந்து அமர்ந்தார். பின்னாலேயே வந்த அவர் மகன் (அப்படித்தான் இருக்க வேண்டும் – ஐம்பது வயதிருக்கலாம்), பாட்டிக்கருகில் இன்னொரு சேரில் அமர்ந்தார். சிரித்தபடி, நானும் குழந்தைக்காகக் காத்திருந்தேன். யாரையும் காணாததால், ‘வந்துகிட்டு இருக்காங்களா?’ என்று பொதுவாகக் கேட்டு வைத்தேன்.
“யாரு?”
“குழந்தைதான்; பேஷண்ட் வருவதாகச் சொன்னீங்களே”
என்னைப் பூச்சியைப் பார்ப்பதைப் போலப் பார்த்து, காவிப் பல் தெரிய சிரித்த பாட்டி, “இவந்தான் கொழந்தை, என் ரெண்டாவது மகன்” என்றார்.
சில வீடுகளில் குழந்தை என்றே பெயர் வைத்திருப்பார்கள். அப்படி நினைத்துக்கொண்டிருக்கும்போதே, பாட்டி, “பேரு சண்முவம் – என் ரெண்டாவது கொழந்தை” என்றார்.
நல்ல வேளை, ஐம்பது வயதுக் குழந்தையை இடுப்பில் தூக்கி வராமல் இருந்தாரே – நம்ம ஊர்த் தாய்ப்பாசம் நம்மை வியக்கத்தான் வைக்கிறது!
சில பேஷண்டுகள், தன் கம்ப்ளைண்டுகளை ஒரு தாளில் (ஏ4 ஷீட்டில் இரண்டு பக்கத்துக்குக் குறையாமல் 1,2,3, என்று வரிசைப்படி, நுணுக்கி நுணுக்கி எழுதியிருப்பதுதான் வழக்கம்!) எழுதி வந்து கேட்பார்கள் – இவர்களுக்கு நிச்சயமாக ‘ஆங்ஸைடி’ எனப்படும் படபடப்பு நிலை இருப்பது உறுதி! ஒன்று ஒன்றாகக் கேட்டு, ‘டிக்’ செய்வார்கள் – ‘இரவில் கீரை சாப்பிடலாமா?’ என்பதிலிருந்து, ‘சர்க்கரை வியாதிக்கு எவ்வளவு வெந்தயம் சாப்பிட வேண்டும்?’ என்பது வரை கேள்விகளை அடுக்குவார்கள். பொறுமை கடலினும் பெரிது என்பதற்கேற்ப, சிரித்தபடியே முடிந்த வரையில் பதில் சொல்வது பழகிப்போய்விட்டது! எல்லாம் முடிந்து, வெளியே சென்று, மீண்டும் உள்ளே வந்து, “ஒன்று மறந்து விட்டது – இந்த மருந்துகளினால் ‘சைட் எஃபெக்ட்’ ஒன்றும் இருக்காதே?” என்று கேட்டு, பதிலுக்குக் கூடக் காத்திருக்காமல், தலையை ஆட்டியபடியே சென்று விடுவர்!
எப்போதும் இப்படிக் கேள்விக் கணைகளைத் தாளில் தாங்கி வரும் பெண்மணி ஒருமுறை கையில் ஹாண்ட்பேக் இல்லாமல் வந்தார். ‘ஆஹா, தப்பித்தோம் இன்று’ என்று நினைத்த சந்தோஷம் நிலைக்கவில்லை. ‘அடடா, கைப்பையை மறந்து விட்டேனே’ என்றவர், ஒரு சில நொடிகளில், ‘நல்ல நல்லவேளை, எதற்கும் இருக்கட்டும் என்று, ஒரு காப்பி எடுத்து வைத்துக் கொண்டது நல்லதாய்ப் போயிற்று’ என்று சொல்லி, எதிர்ப்பக்கம் திரும்பி ஒரு பேப்பரை எடுத்து, கேள்விகளை வாசிக்கத் தொடங்கினார் – உண்மையிலேயே எனக்குத் தலை சுற்றத் தொடங்கியது!
கைக் கட்டைவிரலில் அடி பட்ட நண்பருக்குக் கட்டு போட்டபிறகு, ‘நான் ஃபுட் பால் ஆடமுடியுமா?’ என்று கேட்டார். நான் சற்று வியப்புடன், ’கையில், அதுவும் கட்டை விரலில்தானே அடி; ஃபுட் பால் தாராளமாக ஆடலாம்’ என்றேன். அவர் சிரித்தபடியே, ’எனக்கு ஃபுட் பால் ஆடத்தெரியாதே’ என்று ஜோக் அடித்தார். ‘ஙே’ என்று முழித்தேன்!
எதிரில் வந்து அமர்ந்து, ‘என்ன உடம்புக்கு?’ என்று கேட்டவுடன், “நீதான், பட்சிக்கிறியே, இன்னான்னு கண்டி பிடியேன்” என்று என்று சவால் விடும் அப்பாவிகளைப் பார்த்திருக்கிறேன்!
“சார் எனக்குக் கண்ணெல்லாம் எரியுது, வாய் காயுது, உடம்பெல்லாம் வலிக்குது – ‘ஜாக்ரன் ஸிண்ட்ரோம்’ ஆ இருக்கும்ன்னு நெனைக்கிறேன் (கூகிள் சாமியிடம் பாடம் கேட்டு வந்திருக்கிறார் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி!), கொஞ்சம் செக் பண்ணி சொல்றீங்களா?” என்னும் அறிவு ஜீவிகளும் வருவதுண்டு!
டாக்டர்களைப் பற்றிய ஜோக்குகள் பிரபலமானவை! எப்போதும் ‘ஸ்ட்ரெஸ்’ ஸுடன் பணி புரியும் டாக்டர்களுக்கு இப்படிப்பட்ட பேஷண்டுகள் கொஞ்சம் ரிலீஃப் கொடுப்பார்கள் என்பது எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை தலைவலியையும் கொடுப்பார்கள் என்பது!.